கடல் சாகசக் கதைகள் என்றால் நினைவு வருவது ரஃபேல் சபாடினி, பாட்ரிக் ஓ’ப்ரையன், மற்றும் சி.எஸ். ஃபாரஸ்டர்தான். அவர்கள் வரிசையில் டட்லி போப் எழுதும் ராமேஜ் நாவல்களையும் நிச்சயமாக வைக்கலாம்.
ராமேஜ் பெரிய பிரபு குடும்பத்தில் பிறந்தவன். பெரும் பணக்காரக் குடும்பம் வேறு. நெப்போலியன் காலத்தில் கடற்படையில் சேர்ந்தவன். அவன் அப்பாவும் புகழ் பெற்ற அட்மிரல், சில பல பிரச்சினைகளால் கடற்படையிலிருந்து விலக வேண்டியதாகிவிட்டது. அந்தப் பிரச்சினைகள் இவனுக்கும் பல எதிரிகளை கடற்படையில் உருவாக்கி இருக்கிறது. ராமேஜின் பெரிய பலம் அவன் துணைவர்கள். அவனோடு எப்போதும் பணியாற்றும் மாஸ்டர் சவுத்விக், டாக்டர் பவன், கடற்படை வீரர்கள் ஜாக்சன், ஸ்டாஃப்போர்ட், ரோஸ்ஸி எல்லாரும் திறமையானவர்கள், அவனுக்காக உயிரையே கொடுப்பார்கள். கடல்புறாவின் அமீர், கூலவாணிகன் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
முதல் நாவலில் – Ramage – அவன் ஒரு சாதாரண லெஃப்டினன்ட். அவனுடைய மேலதிகாரிகள் எல்லாரும் கொல்லப்பட அவன் தலைவனாகிறான். ஒரு சின்ன படகில் வோல்டெரா என்ற சின்ன நாட்டின் அரசியை நெப்போலியனின் படைகளிடமிருந்து மீட்டு ஆங்கில கடற்படையிடம் ஒப்படைக்கிறான். அவனுடைய எதிரிகள் அவன் கோழை என்று ஒரு கோர்ட் மார்ஷியல் நடத்த நெல்சனின் உதவியோடு தப்பிக்கிறான். அரசியும் அவனும் காதலில் விழுகிறார்கள். அதற்குப் பிறகு பல போர்க்களங்கள், சண்டைகள்.
சாண்டில்யனின் நாவல்களோடு ஒப்பிட்டால் இவை உண்மையிலேயே சாகசங்கள். சாண்டில்யனின் எழுத்துக்கள் அனைத்து அவர் படித்த புத்தகங்களிலிருந்து வந்தவையே. அவர் குதிரை மீது ஒரு நாளும் ஏறி இருக்கமாட்டார், காய்கறி நறுக்கக் கூட கத்தியை பயன்படுத்தி இருக்கமாட்டார், சென்னையிலேயே வாழ்ந்தாலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கூட சுற்றிப் பார்த்திருக்க மாட்டார். டட்லி போப் போன்றவர்கள் ஓரளவாவது கப்பல்களில் சுற்றி, விவரிக்கப்படும் இடங்களைப் பார்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவரால் காற்றையே நம்பி இருந்த பாய்மரக் கப்பல்களின் காலத்தை நம்பகத்தன்மையோடு விவரிக்க முடிகிறது. Tacking போன்றவற்றை ஓரளவாவது புரிய வைக்க முடிகிறது. கப்பல்களின் இட நெருக்கடியை, பீரங்கிகளை எப்ப்டி வைத்து போரிட வேண்டும் என்பதை, கப்பல் காப்டன்களின் சர்வாதிகாரத்தை, அவர்களின் தனிமையை எல்லாம் நம்பும்படி சொல்ல முடிகிறது.
பதின்ம வயதில் படிக்க வேண்டிய புத்தகங்கள். இப்போதும் படிக்கலாம். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் Governor Ramage RN (1973) அல்லது Ramage’s Diamond (1976) படியுங்கள். முன்னதில் ஒரு convoy எப்படி செல்ல வேண்டும் என்பது நன்றாக விவரிக்கப்படுகிறது. பின்னதில் கப்பல்களின் உதவியோடு பீரங்கிகள் மலை மீது ஏற்றப்படுகின்றன.
அனுபந்தம் – இது வரை வந்த ராமேஜ் நாவல்கள்
- Ramage (1965): முதல் கதை இதுதான். ராமேஜ் ஒரு கப்பலில் சின்ன அதிகாரி. போரில் மேலதிகாரிகள் எல்லாரும் இறந்துவிட, பொறுப்பு ராமேஜ் தலையில் விழுகிறது. இத்தாலியின் ஒரு சின்ன அரசின் ராணி கியான்னாவைக் காப்பாற்ற வேண்டும். அவனது டீம் -மாலுமி சவுத்விக், வீரர்கள் ஜாக்சன், ஸ்டாஃபோர்ட், ராஸ்ஸி – இங்கே பாதி உருவாகி விடுகிறது. கியான்னாவுடன் காதல், ராமேஜின் அப்பா மீது உள்ள விரோதத்தால் ராமேஜின் மீது கோழைத்தனத்துக்காக கோர்ட் மார்ஷியல் என்று கதை போகிறது.
- Ramage and the Drumbeat (aka Drumbeat) (1968): செயின்ட் வின்சென்ட் கடற்போரில் நெல்சன் புதிய முறைகளில் போரிடுகிறார். ராமேஜ் அதைப் புரிந்து கொண்டு தன் சிறு கப்பலை ஸ்பெயினின் ஒரு பெரிய கப்பல் மீது இடிக்கிறான். ராமேஜின் கப்பல் சுக்குநூறானாலும் பெரிய கப்பலுக்கு ஏற்படும் சேதங்களால் அது தப்ப முடியவில்லை.
- Ramage and the Freebooters (aka The Triton Brig) (1969)
- Governor Ramage RN (1973): போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன் செல்லும் வணிகக் கப்பல்கள். அதில் ஒரு எதிரிக் கப்பல் நுழைந்துவிடுகிறது…
- Ramage’s Prize (1974)
- Ramage and the Guillotine (1975): ஃப்ரான்சுக்கு ஒற்று வேலை செய்யப் போகிறான்.
- Ramage’s Diamond (1976): மேற்கிந்தியத் தீவுகளில் ஃப்ரான்சின் அதிகாரத்தில் இருக்கும் ஒரு தீவு. அதை ராமேஜின் கப்பல் முற்றுகை இடுகிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஆளில்லாத தீவையும் கைப்பற்றி அதில் ஒரு மலையின் மீது பீரங்கியை ஏற்றுகிறார்கள்.
- Ramage’s Mutiny (1977)
- Ramage and the Rebels (1978)
- Ramage Touch (1979)
- Ramage’s Signal (1980): மத்தியதரைக் கடலில் பல சிக்னல் டவர்களை ஃப்ரான்ஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ராமேஜ் இவற்றைக் கைப்பற்றி தவறான சிக்னல்களைக் கொடுத்து எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுகிறான்.
- Ramage and the Renegades (1981): கியான்னாவும் ராமேஜும் பிரிகிறார்கள். தென்னமரிக்கா பக்கத்தில் ஒரு ஆளில்லாத தீவை இங்கிலாந்தின் வசப்படுத்த ராமேஜ் அனுப்பபடுகிறார். அங்கே கடற்கொள்ளையர் ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கப்பலை கைப்பற்றி இருக்கிறார்கள். ராமேஜ் கப்பலை மீட்கிறான், தன் மனைவி சாராவை முதல் முறையாக சந்திக்கிறான்.
- Ramage’s Devil (1982): இங்கிலாந்து-ஃப்ரான்ஸுக்கு நடுவில் ஏற்பட்ட சமரசம் உடைந்து மீண்டும் போர்! ஆனால் ராமேஜும் சாராவும் தேனிலவுக்காக அப்போது ஃப்ரான்சின் ஒரு பழைய பிரபு குடும்பத்து வீட்டில் தங்கி இருக்கிறார்கள். ஒரு சின்னக் கப்பலைக் கைப்பற்றி தப்புகிறார்கள். அந்தப் பிரபு ஒரு சிறைத் தீவுக்கு அனுப்பப்பட, ராமேஜ் அவரை மீட்கிறான்.
- Ramage’s Trial (1984): போன நாவலில் மனைவியை இங்கிலீஷ் சானலில் ஒரு சின்னக் கப்பலில் விட்டுவிட்டு ராமேஜ் விரைய வேண்டி இருக்கிறது. மனைவி இங்கிலாந்து திரும்பவில்லை, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மன உளைச்சலோடு ராமேஜ் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து திரும்பும்போது ஒரு மூத்த காப்டன் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறான். ராமேஜ் அந்தக் காப்டனை கைதில் வைக்கிறான். மூத்த அதிகாரியை அவமதித்த குற்றத்துக்காக கோர்ட் மார்ஷியல் நடக்கிறது. அதிகாரிக்கு மன்நிலை பிறழ்ந்துவிட்டது தெரிய வந்து ராமேஜ் விடுதலை ஆகிறான்.
- Ramage’s Challenge (1985): ராமேஜுக்கு இந்த முறை இத்தாலியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மூத்த கப்பற்படை, ராணுவ அதிகாரிகளை விடுவிக்கும் பணி. மனைவி சாராவையும் விடுவித்துக் கொள்கிறான்.
- Ramage at Trafalgar (1986): இந்த முறை நெல்சனின் அணியில் சேர்ந்து ட்ரஃபால்கர் போரில் பங்கேற்கிறார்கள்.
- Ramage and the Saracens (1988):
- Ramage and the Dido (1989)
ஆஃப்ரிக்க கடல் கொள்ளையர்கள் சிசிலியிலிருந்து ஆட்களை கடத்தி அடிமைகள் ஆக்குகிறார்கள். நட்பு நாடான இங்கிலாந்தின் கேப்டன் ராமேஜ் அடிமைகளை மீட்கிறார். கியான்னா திரும்பி வருகிறாள்.
தொகுக்க வேண்டிய பக்கம்: சாகச நாவல்கள்
தொடர்புடைய சுட்டி: டட்லி போப் – விக்கி குறிப்பு