தெலுகு சிறுகதை – ஒல்கா எழுதிய “துணை”

கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்திருக்கிறார். சரளமாகச் செல்லும் சிறுகதை. சுலபமாக யூகிக்க முடிந்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.

துணை – ஒல்கா

மாலை ஐந்து மணியைத் தாண்டிவிட்டது. அலுவலகத்தில் எல்லோரும் போய்விட்டார்கள் என்று ப்யூன் வந்து சொன்ன பிறகு வேறு வழியில்லாதவனாய் கங்காதரன் எழுந்துகொண்டான். குளிர்காலம் என்பதால் சீக்கிரமாகவே இருள் கவிழ்ந்துக் கொள்ளத் தொடங்கியது. அந்த இருட்டைப் பார்க்கும் போது கங்காதரனின் மனம் முழுவதும் வேதனை சூழ்ந்துகொண்டது. இருண்டுபோன முகத்துடன் அந்த இருட்டைப் பார்த்தபடி அப்படியே நின்றுகொண்டிருந்தான்.

வீட்டுக்கு எதற்காக போக வேண்டும்? வீட்டில் தூசியும் ஒட்டடையும் தவிர வேறு என்ன இருக்கு? பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே போய் தனியாக காபியை கலந்துகொண்டு குடிப்பது என்ற பயங்கரமான அனுபவத்தை பெறுவதற்கு வேலைமெனக்கட்டு போவானேன்? அந்த காபியை ஏதோ ஒரு ஓட்டலில் சர்வர் கொண்டு வந்து தந்தால் பத்து பேருக்கு நடுவில் அமர்ந்து சாப்பிட்டால் வேலை முடிந்துவிடுமே.

கடந்த ஒரு மாதகாலமாய் செயல்படுவது போலவே அன்றும் அலுவலகத்திலிருந்து நேராக ஓட்டலை நோக்கி நடந்தான்.

மாலைவேளை என்பதால் ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. பத்து நிமிடங்களுக்கு மேல் நின்ற பிறகுதான் உட்கார இடம் கிடைத்தது. அந்த இடமும் ஜோடியாக உடகார்ந்திருந்தவர்களுக்கு எதிரே இருந்தது. கங்காதரன் போய் உட்கார்ந்து கொண்டதும் ஏதோ இடையூறு ஏற்பட்டு விட்டது போல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள்.

‘நின்று நின்று கால் கடுக்கிறது. என்னால் முடியாது சாமி’ என்று மனதில் நினைத்துக்கொண்டே, இருக்கையில் அமர்ந்து தண்ணீரைக் குடித்தான். பிறகு சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கும் பரபரப்பாக இருந்தது. கலகலவென்று பேச்சுக்கள், வாதவிவாதங்கள், சிரிப்பு அலைகள் … ஓட்டல் முழுவதும் சந்தடியாக இருந்தது. அந்த சந்தடியை பார்க்கப் பார்க்க தனிமை மேலும் அதிகமாகிவிட்டது போலிருந்தது கங்காதரனுக்கு. அந்தத் தனிமையை முழுவதுமாக அனுபவித்துக்கொண்டே டிபன் காபியை சாப்பிட்டு முடித்தான். பார்க்கில் ஒரு மரத்தின் கீழே இரண்டு மணி நேரம் வேண்டாத யோசனைகளில் செலவழித்துவிட்டு மெதுவாக வீட்டுக்குக் கிளம்பினான்.

ஆறடுக்கு அபார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் இருந்தது கங்காதரனின் பிளாட். இப்பொழுது உடனே வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்தவனாய் லிப்ட்டை நோக்கிப் போகாமல் படிகளை எண்ணிக்கொண்டே ஐம்பத்தி இரண்டு படிகளையும் மெதுவாக ஏறினான்.

இனி வேறு வழியில்லை என்பது போல் பூட்டைத் திறக்கப் போகும் சமயம், பக்கத்து வீட்டிலிருந்து பெரிதாக அழுகைக் குரல் கேட்டது.

என்ன நடந்திருக்குமோ என்று பரபரப்புடன் அந்தப் பக்கம் போனான்.

பக்கத்து பிளாட்டில் மக்கள் கும்பலாக கூடியிருந்தாரகள். எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னால் போனான் கங்காதரன்.

அந்த வீட்டில் குடியிருக்கும் ராகவனின் மனைவி விஜயலக்ஷ்மி ஹோவென்று கதறிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து எல்லோரும் பேசிக் கொண்டதிலிருந்து விஷயம் புரிந்தது. விஜயலக்ஷ்மியின் கணவன் ராகவன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு வரும் போது விபத்து ஏற்பட்டு அங்கேயே உயிர் போய் விட்டதாம்.

விஜயலக்ஷ்மியைப் பார்க்கும் போது இரக்கமாக இருந்தது கங்காதரனுக்கு.

இந்த அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது சனி பிடித்துக்கொண்டுவிட்டதா என்ன? இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் மனைவி சுசீலா பிளட் கேன்சரில் இறந்துபோய் விட்டாள்.

இப்பொழுதோ இந்தக் கொடுமை! கண்களிலிருந்து வெளியேறப் போன கண்ணீரைத் துடைத்துக்கொண்டான் கங்காதரன்.

இருவரின் பிளாட்டுகளும் அடுத்தடுத்து இருப்பதோடு கங்காதரனின் குடும்பத்திற்கும் ராகவனின் குடும்பத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இருவருக்கும் ஏறத்தாழ ஒரே வயது. ராகவன் வங்கியில் ஆபீசராக இருந்தான். கங்காதரன் L.I.C. யில் ஆபீசர். ஒரே ஹோதா ஒரே சம்பளம். விஜயலக்ஷ்மி தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். சுசீலா பிரைவேட் கம்பெனியில் பணி புரிந்து வந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் இந்த அபார்ட்மெண்டில் பிளாட் வாங்கிக் கொண்டார்கள். கங்காதரன் உடனே சொந்த வீட்டிற்கு குடி வந்துவிட்டான். ஆனால் ராகவன் ஒரு வருடம் வரை வாடகைக்கு விட்டு விட்டு போன வருடம்தான் குடிவந்தான். இந்த ஒரு வருடத்தில் இரு குடும்பங்களுக்கும் இடையில் ஒரளவுக்கு பழக்கம் ஏற்பட்டு விட்டது. இருவரும் விவரங்களை பரிமாறிக் கொண்டார்கள். மிக முக்கியமான சின்னச் சின்ன உதவிகளை பரஸ்பரம் செய்து கொண்டாரகள். இரு இல்லத்தரசிகளுக்கு இடையில் கூட நல்ல நட்பு மலர்ந்தது. தம் கணவன்மார்களிடம். அடுத்தவரைப் பற்றி குறை சொல்லாமல் இரண்டு நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லக் கூடிய பண்பு இருவரிடமும் இருந்ததால் எப்போதாவது எதிர்பட்டால் கல்மிஷம் இல்லாத முறுவலுடன் குசலம் விசாரித்துக் கொள்வார்கள். இருவரும் வேலைக்குப் போகிறவர்கள் என்பதால் மேலும் நட்பு வளரும் அளவுக்கு ஓய்வு நேரம் இருக்கவில்லை.

அது போறாது என்று சுசிலாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ராகவனுக்கு இரண்டு மகன்கள். பெரியவன் பெங்களூரிலும் சின்னவன் திருவனந்தபுரத்திலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் மணமாகி குழந்தைகளும் இருந்தார்கள்.
கங்காதரனுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். இருமகன்களும் நல்ல வேலையில் அமர்ந்துவிட்டார்கள். திருமணமும் முடிந்து விட்டது. மகள் சியாமளாவுக்கு போன வருடம்தான் மணம் முடித்தான். கங்காதரனுக்கு பேரன் பேத்தி இன்னும் பிறக்கவில்லை.

கங்காதரனுக்கும் ராகவனுக்கும் இன்னும் நான்கு வருடங்கள் சர்வீஸ் இருந்தது. அதற்குள் ராகவனை யமன் கொண்டு போய்விட்டான்.

விஜயலக்ஷ்மியின் நிலைமையைப் பார்க்கும் போது கங்காதரனுக்கு வருத்தமாக இருந்தது. தனிமை வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்குமோ அவன் உணர்ந்துதான் இருந்தான். ஆண்மகனாய் இருப்பதால் எப்படியோ காலத்தைத் தள்ளிக் கொண்டு வருகிறான். தனிமை வாழ்க்கை தனக்கே இவ்வளவு நரகமாக இருக்கும் போது பாவம் பெண்ணாக இருப்பவள் எப்படித் தனியாக இருப்பாள்?

மகன்கள் இருவரும் இந்த நான்கு வருடங்களும் லீவ் போட்டோ அல்லது வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டோ தங்களிடம் வரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் தனக்குத்தான் அதில் விருப்பம் இல்லை. போய் மூன்று நான்கு மாதங்கள் கழிந்ததும் மருமகள்கள் ‘எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கிழவனுக்கு சிசுரூஷை செய்வது?’ என்பது போல் பார்க்கக் கூடும். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அது மனித இயல்பு. சும்மா வேலைவெட்டி இல்லாமல் வெறுமே உட்கார்ந்துகொண்டால் தனக்கும் பொழுது போகாது. அடிக்கடி சுசீலாவின் நினைவு வருவதோடு அடக்க முடியாத துக்கமும் ஏற்படும். எப்போ பார்த்தாலும் அழுகை மூஞ்சியுடன் இருக்கும் மாமனாரை எத்தனை நாட்களுக்குத்தான் மருமகள்கள் ஆதரிப்பார்கள்? நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைத்த கங்காதரன் தொடர்ந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான்.

‘இப்பொழுது இந்த அம்மாள் மகன்களிடம் போய் விடுவாள் போலும். தனியார் பள்ளியில் டீச்சர் வேலை என்பதால் வாலண்டரி ரிடையர்மெண்ட் போன்ற சலுகைகள் இருக்க வாய்ப்பு இல்லை. வேலையை விட்டு விட்டு போக வேண்டியதுதான்.’ இரக்கத்துடன் பார்த்தான்.
விஜயலக்ஷ்மியைச் சமாதானப்படுத்த யாராலும் முடியவில்லை. மகன்கள் வரும்போது பொழுது விடிந்துவிடும். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்கியது. கடைசியில் ரொம்ப நெருக்கமானவர்கள் பத்து பேர் வரையிலும் இருந்தார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் கங்காதரன். ரொம்ப நேரம் நின்று கொண்டே இருந்ததால் கால்கள் கடுக்க ஆரம்பித்தன. மெதுவாக தன் விட்டுக்கு வந்த கங்காதரன் இரண்டு தூக்க மாத்திரைகளை போட்டுக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான்.

பதிமூன்று நாட்கள் கழிந்து விட்டன. நடுவில் ராகவனின் மகன்களுடன் ஒருமுறை பேசியதுடன் சரி. கங்காதரன் மறுபடியும் அவர்கள் வீட்டுக்குப் போகவேயில்லை. அன்று சுபசுவீகாரம் நடந்தது. கங்காதரனையும் அழைத்திருந்தார்கள். அவன் போன போது கடைசி பந்தி முடியும் நேரம். ராகவனின் பெரிய மகன் அசோகனிடம் பேசிக்கொண்டே கங்காதரன் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டான். ராகவனின் இன்சூரென்ஸ் பணம் கூடிய சீக்கிரம் கிடைப்பதற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாக வ.¡க்களித்தான்.
சாப்பாடு முடிந்த பிறகு ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அசோகன் “அம்மா!” என்று உள்பக்கம் திரும்பி அழைத்தான். விஜயலக்ஷ்மி வந்தாள்.

முதலில் விஜயலக்ஷ்மியை நிமிர்ந்து பார்க்கவும் கங்காதரனுக்கு பயமாக, சங்கடமாக இருந்தது. குங்குமம் இல்லாத வெறுமையான நெற்றியுடன் சோகமாக காட்சி அளிப்பாள் என்று எதிர்பார்த்தான். நிமிர்ந்து பார்த்த பிறகு வியப்பு அடைந்தான். விஜயலக்ஷ்மியிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. நெற்றியில் எப்போதும் போல் ஸ்டிக்கர் பொட்டும், கழுத்தில் தங்கச்சங்கலியும் கருகுமணி மாலையும் இருந்தன. இருகைகளிலும் வழக்கமாக அணியும் ஜோடி தங்க வளையல்கள்.

ஏனோ தெரியவில்லை. கங்காதரன் ஆழமாக பெருமூச்சு விட்டான்.

“அம்மாவை எங்களுடன் வரச்சொன்னால் வர மறுக்கிறாள்.” அசோகன் சொன்னான்.

சின்ன மகன் பிரசாதும் வந்து உட்கார்ந்துகொண்டான்.

“இப்போ லீவ் போட்டால் ஸ்கூல் குழந்தைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும். இன்னும் நான்கு மாதங்கள்போனால் கோடை விடுமுறை வந்துவிடும். அப்பொழுது வருகிறேன் என்று சொல்கிறேன். ஏதாவது ஒரு வேலையில் மூழ்கிப் போய் கவலையை மறக்கணுமே ஒழிய அங்கே போய் சாவகாசமாக அழுதுகொண்டு இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்” என்றாள் விஜயலக்ஷ்மி.

“உங்க அம்மா சொல்வது சரிதான். ஓய்வாக உட்கார்ந்திருப்பது நல்லது இல்லை. சுய அனுபவத்தில் சொல்கிறேன். உங்க அம்மாவுக்கு எப்படி விருப்பமோ அப்படியே இருக்கட்டும்.” கங்காதரன் சொன்னான்.

விஜயலக்ஷ்மி கூட மகன்களிடம் போகாமல் இருந்ததில் தன்னுடைய முடிவு சரி என்பது போலவும், அதற்கு வலு சேர்ந்துவிட்டது போலவும் கங்காதரனுக்குத் தோன்றியது.

நான்கு நாட்களுக்குப் பிறகு விஜயலக்ஷ்மியின் இரு மகன்களும் குடும்ப சமேதமாக கிளம்பிப் போய்விட்டார்கள்.

விஜயலக்ஷ்மி தனிமையை எப்படி எதிர்கொள்கிறாளோ பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் கடந்த பத்து நாட்களாய் கங்காதரன் தினமும் வீட்டுக்கு சீக்கிரமாக வந்துகொண்டிருந்தான். தன்னைப் போலவே தனியாய் பால்கனியில் விளக்கைக் கூடப் போடாமல் உட்கார்ந்திருப்பாளோ என்று நினைத்தான். விஜயலக்ஷ்மி பால்கனிக்கு யதேச்சையாக வந்து போனாளே ஒழிய அங்கேயே உட்காரவில்லை. வீட்டுக்கு சினேகிதிகளோ, உறவினர்களோ வந்து போவதாகவும் தெரியவில்லை. “எப்படித்தான் பொழுதை போக்குகிறாளோ?” என்று சில சமயம் கங்காதரனுக்குத் தோன்றும்.

ஒருநாள் காலையிலேயே அவள் வீட்டிற்குப் போய் “ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தான்.
ஆனால் மேலும் பதினைந்து நாட்கள் கழிந்த பிறகும் விஜயலக்ஷ்மி எதுவும் கேட்கவில்லை.

அன்று மாலை விஜயலக்ஷ்மியின் பிளாட்டைத் தாண்டி தன்னுடைய பிளாட்டிற்கு வரும் போது ஏதோ இசைக்கருவியின் சத்தம் கேட்டது. மகன்கள் யாராவது வந்திருப்பார்களோ என்று நினைத்துக்கொண்டே காலிங் பெல்லை அழுத்தினான்.

விஜயலக்ஷ்மி கதவைத் திறந்தாள்.

“வாங்க … வாங்க” என்று வரவேற்றாள்.

“என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?” கேட்டான் கங்காதரன், தரையில் விரித்த பாயின் மீது புதிதாக தென்பட்ட வயலினைப் பார்த்துக்கொண்டே.

“சின்ன வயதில் கற்றுக்கொணட பாட்டு எவ்வளவு தூரத்திற்கு நினைவு இருக்கு என்று பார்க்கிறேன். இன்னிக்கித்தான் இதை வாங்கிக் கொண்டு வந்தேன். நாளை முதல் பாட்டு கிளாசுக்கு போகலாம்னு.” முறுவலித்துக் கொண்டே வயலினை அவன் கையில் தந்தாள்.
அதை எப்படி பிடித்துக் கொள்வது என்று கூடத் தெரியாத கங்காதரன் உடனே திருப்பித் தந்துவிட்டான், கைக்குழந்தையை தூக்கத் தெரியாதவன் தாயிடம் உடனே கொடுத்து விட்டது போல்.

“குடிக்க தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டுக்கொண்டே எடுத்து வருவதற்காக உள்ளே போனாள்.

ஹால் முழுவதும் பார்வையைச் சுழற்றினான் கங்காதரன். எங்கேயும் எந்த மாற்றமும் தென்படவில்லை. ராகவன் இருந்தபோது எப்படி இருந்ததோ இப்பவும் அப்படியே இருந்தது, துப்புரவாய் பளிச்சென்று.

கண்ணாடி டம்ளரில் தண்ணீருடன் சிறிய தட்டில் டிபனையும் கொண்டுவந்தாள். டிபனை சாப்பிட்டுக் கொண்டே குசலம் விசாரித்தான். ஏதாவது உதவி தேவை என்றால் கேட்கச் சொல்லி மறுபடியும் சொன்னான். ஆனால் உதவி தேவையாக இருப்பது அவளுக்கு இல்லை தனக்குத்தான் என்று அவனுக்குப் புரிந்துதான் இருந்தது.
டிபனை சாப்பிட்ட பிறகு கையைக் கழுவிக் கொள்ளும் சாக்கில் சமையல் அறைக்குள் சென்றான். சமையலறையும் எந்தக் குறையும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. ‘இவளுக்கு வாழ்க்கையில் எந்த குறையும் இல்லையா? ராகவனின் மரணம் இவள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா? சுசீலா இறந்துபோனதும் தன் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போய்விட்டதே? ராகவன் மீது இவளுக்கு அன்பு இல்லையோ?’ என்று சந்தேகப்பட்டான்.

ஆனால் ஹாலில் ராகவனின் போட்டோவுக்கு அப்பொழுதுதான் கொண்டு வந்து போட்டாற்போல் இருந்த மல்லிகைப்பூ மாலையை, எதிரே ஃபிளவர் வேஸில் புதிதாக வைக்கப்பட்டிருந்த மலர்களை, அவனுடைய பொருட்களையெல்லாம் கவனமாக பாதுகாத்து வந்த முறையை பார்க்கும் போது அன்பு இல்லையென்று அவனால் சொல்ல முடியவில்லை. தன் வீட்டில் சுசீலாவின் போட்டோ தூசி படிந்து இருப்பது நினைவுக்கு வந்தது. வித்தியாசம் எங்கே இருக்கிறது? கணவனை இழந்த பெண், அநாதையாய்க் கிடந்து திண்டாடிக்கொண்டு இருக்கவேண்டியவள் மலர்ந்த முகத்துடன் வளையம் வருவதோடு பாட்டும் வயலினும் கற்றுக்கொள்கிறாள். வீட்டை எப்போதும் போல் திறமையாக நிர்வாகம் செய்கிறாள்.

தான் ஒரு ஆணாய் இருந்தும் ஏன் என்று கேட்பார் இல்லாமல் தவித்து வருகிறான். வீடு காடாய் மாறிவிட்டதோடு வாய்க்கு பிடித்த சாப்பாடு கூட கிடைக்காமல், நித்தியபடி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறான். தன் வீடு இப்படி மாறிவிட்டதற்குக் காரணம் சுசீலாவின் இழப்பினால் ஏற்பட்ட வேதனையா அல்லது அந்த வேலைகளை சுயமாக செய்துகொள்ளத் தெரியாத இயலாமையா?

இன்று காலையில் எல்லா பித்தான்களும் இருக்கும் சட்டைக்காக அலமாரி முழுவதும் தேடினால் ஒன்று கூட கிடைக்கவில்லை. கடைசி பித்தான் இல்லாத சட்டை ஒன்றை தேடி கண்டுபிடித்து குண்டூசியை பயன்படுத்தி தற்காலிகமாக நிலைமையை சமாளித்தான்.
பித்தான்களை தைக்க வேண்டுமென்று எப்போதும் சட்டைகளை தைக்கும் டைலரிடம் சட்டைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போனான். அந்த டைலர் ஏதோ இழிவான காரியத்தை செய்யச் சொல்லிவிட்டாற் போல் முகத்தை வைத்துக் கொண்டு “முடியாது சார்” என்று மறுத்துவிட்டான். அது போன்ற கடைகளில் பித்தான்கள் போனாலோ, தையல் பிரிந்து போனாலோ ரிப்பேர் செய்து தரமாட்டார்களாம். எங்கே செய்வார்கள் என்று விசாரிக்கணும். சட்டைகளை எல்லாம் மறுபடியும் வீட்டுக்குச் சுமந்துகொண்டு வந்தான்.

இப்படி நடந்துகொண்டிருந்த போது சுசீலாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். தனக்கு மட்டும் பித்தான்களை தைக்கத் தெரிந்திருந்தால் இன்று சுசீலாவை நினைத்து அவ்வளவு நேரம் வருத்தப்பட்டிருப்பானா? விஜயலக்ஷ்மி வருத்தப்படாமல், வேதனைப்படாமல் இருப்பதற்குக் காரணம் அவளுடைய சாமர்த்தியம்தானா? பெண்கள் எல்லோருமே இப்படித்தானோ?

யோசிக்க யோசிக்க பொருளாதார ரீதியாய் பிரச்னைகள் இல்லாத பெண்கள் கணவன் இறந்துபோனாலும், மனைவியை இழந்த கணவர்களைப் போன்ற அநாதைகள் இல்லை என்று தோன்றியது.

எப்போதும் போல் அவர்களால் வாழமுடியும். ஆண்களைப் போல் தினப்படி வாழ்க்கையில் பிறர் மீது ஆதாரப்படாமல் இருப்பதால் அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது. மேலும் வேலைச் சுமை குறைவதால் நிம்மதியாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டான்.

சுசீலா இருந்தபோது தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக இருந்தது!

எழுந்ததுமே காபி.

குளித்துவிட்டு வந்ததும் சுடச்சுட சாப்பாடு.

மாலை வேளையானால் வயிறு முட்ட வகைவகையாய் டிபன்.

கேட்ட போதெல்லாம் காபி, டீ போன்ற பானங்கள்.

ஆபீசில் யார் மீது கோபம் வந்தாலும் சுசீலாவைத் திட்டி அந்தக் கோபத்தைத் தணித்துக்கொள்வான். சுசீலா யாரிடமும் சொல்லமாட்டாள், எதிர்த்துப் பேச மாட்டாள் என்ற தைரியத்தில் மற்றவர் மீது உள்ள கோபத்தை அவள் மீது காட்டுவது கங்காதரனின் வழக்கமாக இருந்தது. இரவு வேளைகளில் அலுத்துக்கொள்ளாமல் தன்னுடைய கால்களையும் பிடித்துவிடுவாள்.

எல்லாவற்றிற்கும் சுசீலாவைச் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கிறான். அவளானால் அநியாயமாக தன்னை இப்படி தவிக்கவிட்டு விட்டுப் போய்விட்டாள். நினைக்கும் போதே துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது கங்காதரனுக்கு.

அந்த துக்கத்திலும் தான் வருத்தப்படுவது தனக்காகத்தானே ஒழிய சுசீலாவுக்காக இல்லை என்று தோன்றியது. தன்னுடைய கஷ்டங்களை நினைத்து தான் அழுதுகொண்டிருக்கிறானா? இறந்து போன பிறகு சுசீலா சுவர்க்கத்தில் சுகமாக இருந்து வருகிறாளோ? பெண்கள் தாம் இறந்து போனால் சுவர்க்கத்திலும், கணவன்மார்கள் இறந்துபோனால் இந்த பூவுலகத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களோ?

யோசித்து யோசித்து மூளையே குழம்பிவிடும் போலிருந்தது கங்காதரனுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயற்சி செய்தான்.

மேலும் பத்துநாட்கள் கழிந்த பிறகு விஜயலக்ஷ்மியை குசலம் விசாரிக்கப் போனபோது மறைமுகமாக இந்த விஷயத்தை பிரஸ்தாபித்தான்.

“நீங்கள் எப்படித் தாங்கிக்கொள்வீர்களோ என்று பயந்தேன். பரவாயில்லை. தைரியமாகவே இருக்கீங்க” என்றான்.

விஜயலக்ஷ்மி பதில் எதுவும் சொல்லவில்லை.

“சுசீலா இல்லாத என் நிலைமைக்கும், ராகவன் இல்லாத உங்கள் நிலைமைக்கும் ரொம்ப வேறுபாடு இருப்பது போல் தோன்றுகிறது. வாழ்க்கைத் துணையாய் இருந்த நபரை இழப்பது, அந்த வேதனை இருவருக்கும் ஒன்றுதான் என்றாலும் …”

“நம் இருவருடைய இழப்பு ஒன்று இல்லை” என்றாள் விஜயலக்ஷ்மி அவன் பேச்சை இடைமறித்துக்கொண்டே.

கங்காதரன் வியப்புடன் பார்த்தான்.

“என் கணவரை நான் நேசித்ததற்கும், நீங்கள் உங்க மனைவியை நேசித்ததற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உங்கள் மனைவி எல்லா விதமாகவும் உங்களுக்கு ஒத்துழைப்பு தந்தாள். உங்களுடைய தேவைகளை கவனித்துக்கொண்டாள். அவள் இல்லாமல் போனது உங்களுக்கு ரொம்ப குறையாய் இருந்திருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குறையை உணர்ந்துகொண்டிருப்பதால் அந்த இழப்பின் சோகத்திலிருந்து இன்னும் உங்களால் வெளியேற முடியவில்லை. ஆனால் என் கணவர் என்றுமே எனக்கு ஒத்துழைப்பு தந்தது இல்லை. அவருக்கு நான் சிசுரூஷை செய்திருக்கிறேனே தவிர அவர் எனக்கு ஒன்றுமே செய்ததில்லை. என் விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொள்ள அவர் என்றுமே முயற்சி செய்ததில்லை. தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், விருப்பு வெறுப்புகளை காட்டிக்கொள்ளவும் அவருக்கு நான் பயன்பட்டேன். கடைசியில் சாப்பாடு விஷயத்திலும் அவருடைய விருப்பம்தான். ஏன் அப்படிச் சேய்தேன் என்றால் சிறுவயது முதல் நான் அப்படி வளர்க்கப்பட்டேன். எனக்கு பதினெட்டு வயது முடிந்ததோ இல்லையோ அதற்குள் திருமணம் ஆகிவிட்டது. அன்றிலிருந்தே அப்படித்தான். எதிரில் இருப்பவர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டால் எனக்கு என்னவோபோல் இருக்கும். அதிலும் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழவேண்டியவர்கள். அதனால் எதுவாக இருந்தாலும் அவருடைய விருப்பம் போலவே செய்து வந்தேன். என் இரு மகன்களும் சுபாவத்தில் அவரையே கொண்டு பிறந்தார்கள். அவர்களை மாற்ற என்னால் முடியவில்லை. மூன்று ஆண்களும் என் தோள்கள் மீது ஏறி உட்கார்ந்திருப்பது போல் பாரமாகத் தோன்றும். மகன்களுக்கு திருமணம் முடிந்து போன பிறகு கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைத்தது. இவர் போன பிறகு என்னுடைய வாழ்க்கை எனக்கு மிஞ்சியது. இப்பொழுது எது செய்தாலும் அது எனக்காகத்தான். என்னைப் பிடித்து அழுத்த எந்த சுமைகளுமே இல்லை. எனக்காகவே வாழத் தொடங்கிவிட்டேன். இதோ இந்த இசையை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.”

“பெண்கள் எல்லோருமே இப்படித்தானோ?” கங்காதரன் கேட்டான். தான் இறந்துபோய் சுசீலா உயிரோடு இருந்திருந்தால் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

“அதைப் பற்றி எனக்குத் தெரியாது. தாங்களே ஒரு சுமையாய் ஆண்களின் தோளில் தொங்கும் பெண்கள் சிலர் இருப்பார்களோ என்னவோ. ஆனால் அவர்களின் எண்ணிக்கைக் குறைவு என்று நினைக்கிறேன். பெண்கள் சுமக்கும் பாரம் யார் கண்ணிலும் படாது. வீட்டில் எல்லோருடைய தேவைகளையும் கவனித்துக்கொள்வதற்காக அவள் உழைக்கும் உழைப்பு, அதனால் எல்லோருக்கும் ஏற்படும் மனநிம்மதி …. இதற்கு யாராலும் விலையை முடிவு செய்யமுடியாது. எல்லோருடைய ஆவேசங்களுக்கு ஒரு அணைக்கட்டாக இருந்துகொண்டு, குடும்பத்தாரின் வேதனைகளுக்கு ஒரு வடிகாலாக, வீட்டின் நித்திய வாழ்க்கைச் சக்கிரத்திற்கு ஒரு கடையாணியாக செயல்பட்டு வரும் இல்லத்தரசியின் திறமை, அவள் உழைப்பின் மதிப்பு உங்களுக்குப் புரியாது. ரொம்ப பேர் பெண்களுக்கு தாம் இந்த அளவுக்குச் செய்கிறோம் என்று தெரியாது.” அவள் நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனாள்.

‘இவள் இவ்வளவு நன்றாகப் பேசுவாள் என்று இத்தனை நாளாக தெரியாதே.’ நினைத்துக்கொண்டான் கங்காதரன். அவள் டீச்சராக இருப்பது நினைவுக்கு வந்தது. எதையும் விளக்கமாகச் சொல்வது பழக்கமாகிவிட்டது போலும்.

“இத்தனைக்கும் நான் சொல்ல வந்தது என்னவென்றால் அநாதை எண்ற சொல் பெண்கள் விஷயத்தில் பொருந்தாது. உண்மையான அநாதைகள் மணைவியை இழந்த கணவன்கள்தான்.” முறுவலுடன் சொன்னாள் விஜயலக்ஷ்மி.

‘உண்மைதான்.’ நினைத்தான் கங்காதரன். தன் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். நாளைக்கு இவள் மகன்களிடம் போனாலும் தான் ஒரு சுமை என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத வகையில் வாழமுடியும். தான் அப்படியில்லை. தானே ஒரு பெரிய சுமை.

யோசனையில் ஆழந்துபோன கங்காதரன் விஜயலக்ஷ்மி எழுந்து உள்ளே போனதை கவனிக்கவில்லை.

விஜயலக்ஷ்மி அவன் இருந்த நிலையைப் பார்த்து விட்டு “என்ன? என் பேச்சு உங்களை ரொம்பவும் பாதித்துவிட்டது போலிருக்கே?” என்றாள்.

“இல்லை இல்லை. சரி. நான் போய் வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே எழுந்துகொள்ளப் போனான்.

“எங்கே போகப் போறீங்க? ஓட்டலுக்குத்தானே. இந்த வேளை எங்கள் வீட்டிலேயே சாப்பிடலாம். உங்களுக்கும் சேர்த்து அரிசி களைந்து போட்டு விட்டு வந்தேன்” என்றாள்.

மேலும் அரைமணி நேரம் பேசி பொழுதை போக்கிவிட்டு இருவரும் சாப்பிட்டார்கள். விஜயலக்ஷ்மியின் கைச்சமையலை சாப்பிடும் போது செத்துவிட்ட நாக்கிற்கு மறுபடியும் உயிர் வந்துவிட்டாற் போலிருந்தது கங்காதரனுக்கு. சுசீலா போன பிறகு மறுபடியும் இவ்வளவு நல்ல சாப்பாட்டை சாப்பிடவில்லை. திருப்தியாக சாப்பிட்டான். விஜயலக்ஷ்மிக்கு திரும்பத் திரும்ப நன்றியைத் தெரிவித்து விட்டு தன் வீட்டுக்குப் போனான்.

வீடு முழுவதும் கன்னாபின்னாவென்று பொருட்கள் இரைந்துக் கிடந்தன.

‘இந்த வேலைக்காரிக்கு எத்தனை தரம் சொன்னாலும் வீட்டை இப்படி குப்பையும் கூளமுமாக வைத்திருக்கிறாள். எங்கே பார்த்தாலும் தூசியும் ஒட்டடையும். சுசீலா எப்படித்தான் இந்தப் பெண்ணுடன் சமாளித்தாளோ? அவள் இருந்த வரையில் வீடு பளிச்சென்று சுத்தமாக இருந்தது. தனக்கு அது போன்ற சூழ்நிலை வேண்டும். சுத்தமாக இருந்து பழகிப்போய்விட்டது. ஆனால் அந்த சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள தனக்குத் தெரியாது. ச்சீ … ச்சீ … வாழ்க்கையே நரகமாகிவிட்டது.’ தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்ட பிறகுதான் தூக்கம் வந்தது கங்காதரனுக்கு.
………………………………………………………………………………………….

நான்கைந்து மாதங்கள் போவதற்குள் கங்காதரனுக்கும் விஜயலக்ஷ்மிக்கும் இடையே நட்பு வளர்ந்தது.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவ்வபொழுது காலையிலோ மாலையிலோ டிபனையும் சாப்பிட்டு வந்தான். விஜயலக்ஷ்மி கற்றுக்கொண்ட இசையை சுமாராக ரசிக்கும் அளவிற்கு இசைஞானத்தை வளர்த்துக் கொண்டுவிட்டான்.

“அப்போ எதற்காக காத்துக் கொண்டிருக்கணும்? அவளையே திருமணம் செய்துகொண்டுவிடேன்.”

தன்னைப் பார்க்க வந்த நண்பன் ஜானகிராமனிடம் கங்காதரன் தனக்கும் விஜயலக்ஷ்மிக்கும் இடையே ஏற்பட்ட நட்பைப் பற்றிச் சந்தோஷமாக சொல்லிக்கொண்டிருந்த போது அவன் இந்த வார்த்தையைச் சொன்னான்.

“ச்சீ … ச்சீ… இதென்ன பேச்சு?” என்றானே தவிர அது அவ்வளவு சொல்லத் தகாத வார்த்தையாகத் தோன்றவில்லை கங்காதரனுக்கு.

நாள் ஆக ஆக அது நல்ல யோசனைதானோ, ஒருக்கால் அதைவிட நல்ல யோசனை வேறு இருக்கமுடியாதோ என்ற எண்ணம் ஏற்பட்டு போகப் போக ஸ்திரபட்டு விட்டதோடு நம்பிக்கையும் வந்தது.

மேலும் ஆறுமாதங்கள் கழிந்தன. சுசீலாவின் வருஷாப்தீகம் வந்தது. குழந்தைகள் ஊரிலிருந்து வந்தார்கள். மகள் வீடு முழுவதையும் சுத்தம் செய்து ஒழுங்குப் படுத்தினாள். மகன்கள் வேண்டியதை வாங்கி வந்தார்கள். உறவினர்கள் வருஷாப்தீகத்து அன்று வந்துவிட்டுப் போனார்கள். விஜயலக்ஷ்மி தன்னால் முடிந்த உதவியைச் செய்தாள்.

கங்காதரனின் மகள் விஜயலக்ஷ்மியிடம் வந்து “நான் வந்தபோது வீடு வீடாக இல்லை. சுடுகாடாய் காட்சி தந்தது. அந்த வீட்டில் அப்பாவைப் பார்க்கும் போது அழுகைதான் வந்தது. எங்களிடம் வரச்சொன்னால் மாட்டேன் என்கிறார். தனியாய் எப்படி வாழப் போகிறாரோ என்னவோ” என்று கண்ணீர் வடித்தாள்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்ற பிறகு விஜயலக்ஷ்மியின் கணவன் ராகவனின் வருஷாப்தீகம் வந்தது. இரு மகன்களும், மருமகள்களும், பேரன் பேத்தி எல்லோரும் வந்தார்கள். மகன்களும் மருமகள்களும் வீட்டுப் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை கவனித்துக்கொண்டார்கள். விஜயலக்ஷ்மி பேரன் பேத்தியுடன் பொழுதைப் போக்கினாள்.

அந்த காரியமும் முடிந்துவிட்டது.

மகன்கள் தாயை தங்களுடன் வரச்சொல்லி கங்காதரனின் முன்னிலையில் மற்றொரு முறை கெஞ்சினார்கள். அறிவுரைச் சொல்லச் சொல்லி கங்காதரனிடம் கேட்டுக்கொண்டார்கள்.

“அவர் என்ன சொல்லப் போகிறார்? அவருடைய குழந்தைகளே அவரைக் கெஞ்சி கேட்டுக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிப் போய்விட்டார்கள்” என்றாள் விஜயலக்ஷ்மி முறுவலுடன்.

“அவராவது ஆண்பிள்ளை. மேலும் பத்தாயிரத்திற்குக் குறையாத சம்பளம். நீங்க சம்பாதிக்கும் இரண்டாயிரத்திற்காக இங்கே தனியாக …….”

சின்ன மகன் பிரசாதின் வார்த்தைகள் இன்னும் முடியக் கூட இல்லை. விஜயலக்ஷ்மி “பிரசாத்!” என்று உரத்தக் குரலில் கத்தினாள்.

எல்லோரும் திகைத்துப் போனார்கள்.

“சம்பளம் குறைவாகவே இருந்தாலும் என் வேலை எனக்கு உசத்தி. என் வேலையை நான் விடமாட்டேன். உயிரோடு இருந்த வரையில் அவரும் இதே பாட்டை பாடிப் பாடிப் போய்ச் சேர்ந்தார். இப்போ நீங்க ஆரம்பித்து விட்டீங்களா? நான் எங்கேயும் வரமாட்டேன். யாரிடமும் இருக்க மாட்டேன். ரிடையர் ஆன பிறகு ட்யூஷன் சொல்லித் தந்து பிழைத்துக் கொள்கிறேன். உடம்பில் தெம்பு குறைந்து என் வேலைகளை நானே செய்து கொள்ள முடியாதபோது செத்தாலும் சாவேனே தவிர யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன்.”

கணவர் இறந்த அன்று எவ்வளவு அழுதாளோ மறுபடியும் அந்த அளவுக்கு அழுதாள் விஜயலக்ஷ்மி.

மகன்கள் மருமகள்கள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டார்கள்.

“உங்க அம்மாவுக்கு இப்போ மனசு சரியாக இல்லை.” கங்காதரன் சமாதானப் படுத்த முயன்றான்.

“நாங்க அப்படி என்ன சொல்லக் கூடாத வார்த்தையைச் சொல்லிவிட்டோம்? மகன்களைச் சார்ந்திருப்பது கெளரவக் குறைவு எப்படி ஆகும்? அவ்வளவு நிஷ்டூரமாக பேசுவானேன்?” குறைப்பட்டுக் கொள்வதுபோல் சொன்னார்கள்.

அவர்களுடைய வருத்தம் அவர்களுடையது. ஆனால் மாறிக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் போக்கிற்கும் மதிப்புகளுக்கும் தனிப்பட்ட நபரின் வருத்தங்களை, வேதனைகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வேகமாக சுழன்றுக் கொண்டிருக்கும் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்ட மனிதர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். அப்படி மாற முடியாதவர்கள் அமைதியற்று தவிப்பார்கள்.

விஜயலக்ஷ்மியின் மகன்கள் தாய் மீது கோபத்துடனே கிளம்பிப் போனார்கள்.

“நீங்க ரொம்பவும் தான் ரியாக்ட் ஆகிவிட்டீங்க. அவர்கள் மட்டும் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்கள்?” கங்காதரன் சொன்னான்.

“என் வேலையைக் குறைவாகப் பேசினார்கள். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் என்னை விட பத்து மடங்கு அதிகமாக சம்பாதித்தார். உண்மைதான். அவர் படித்த படிப்பு அப்படிப்பட்டது. இப்பொழுது என் மகன்கள் என்னை விட பன்மடங்கு சம்பாதிக்கிறார்கள். அதுவும் உண்மைதான். ஆனால் எனக்கு தைரியம் தருவது என்னுடைய வேலைதான். அவர்களுடைய வேலையில்லை. அவரும் இப்படித்தான். வீட்டில் எந்தச் சின்ன பிரச்னை வந்தாலும் பீத்தல் வேலை. முதலில் அதை விட்டுவிடு என்று சொல்வார். வேலையை விட்டு விடாமல் இருப்பதற்கும், அதை அவருடைய வசவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் நான் எவ்வளவு பாடுபட வேண்டியிருந்ததோ யாருக்கும் தெரியாது.” விஜயலக்ஷ்மியின் விழிகளில் நீர் தளும்பியது.

காங்காதரன் “அடடா … மறுபடியும் நீங்க வருத்தப்படறீங்க” என்று பதட்டமடைந்தான்.

“அது போறாது என்று ஆண்மகன் என்பதால் உங்களால் தனியாக இருக்கமுடியும் என்று சொன்னார்கள் கவனித்தீங்களா? உண்மையில் நம் இருவரின் வாழ்க்கையைப் பார்த்தால் நான்தான் தைரியமாக, நிம்மதியாக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.”

“உண்மைதான். நான் அனுபவித்து வரும் நரகம் அவர்களுக்குத் தெரியாது. எதற்காக இப்படி வாழ்கிறேனோ அதுவும் தெரியாது. குழந்தைகளிடம் போய் இருப்பதிலும் விருப்பம் இல்லை. சுசீலா என்னை கஷ்டத்தில் தள்ளிவிட்டு போய் விட்டாள். பாவம் அவளுக்கும் தெரியாதாய்இருக்கும். இல்லாவிட்டால் இந்த கஷ்டத்திலிருந்து தப்பித்து கொள்ளும் வழியைக் கூட தானே செய்துவிட்டு போயிருப்பாள்.” இந்த முறை கண்ணீர் வடிப்பது கங்காதரனின் பங்காயிற்று.

விஜயலக்ஷ்மி கங்காதரனுக்கு ஆறுதல் சொல்லி உரையாடலை திசைதிருப்பினாள்.

‘மொத்தத்தில் ராகவனை விட நானே தேவலை. சுசீலாவை வேலையை விட்டுவிடச் சொல்லி ஒருநாளும் சொன்னதில்லை. அவளுடைய வேலையைத் தாழ்த்திப் பேசியதும் இல்லை.’ அன்று இரவு கங்காதரன் தூங்கப் போகும் முன் நினைத்துக் கொண்டான். அதனால் விஜயலக்ஷ்மியிடம் தனக்கேதோ நெருக்கம் ஏற்பட்டுவிட்டது போல் தோன்றியது. மனதில் லேசாக மகிழ்ச்சி பரவ நிம்மதியாக உறங்கிவிட்டான்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இருவரின் நட்பு மேலும் வளர்ந்தது. ஒருநாள் இரவு விஜயலக்ஷ்மி பரிமாறிய உணவை திருப்தியாக் சாப்பிட்டுவிட்டு பாக்கை போட்டுக் கொண்டே “நாம் இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இப்படி இருக்கணும்? திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்தால் என்ன?” என்றான், தன் வாழ்க்கையில் மிகத் துணிச்சலான காரியத்தை செய்யப் போவதாக நினைத்துக் கொண்டே.

விஜயலக்ஷ்மி ஒரே ஒரு விநாடி வியப்பு அடைந்து அதற்குப் பிறகு ஐந்து நிமிடங்கள் வரையில் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள்.

கங்காதரனின் முகம் கன்றிச் சிவந்து விட்டது. சிரித்துச் சிரித்து கண்களில் தளும்பிய நீரைத் துடைத்துக்கொண்டே கங்காதரனின் பக்கம் பார்த்த விஜயலக்ஷ்மி அப்படிச் சிரித்ததற்குக் கொஞ்சம் பச்சாதாபமடைந்தாள்.

கங்காதரன் அங்கிருந்து எழுந்து போகவும் சக்தியில்லாதவனாய் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்க்கும் போது விஜயலக்ஷ்மிக்கு இரக்கமாய் இருந்தது. அவனுடைய வேதனையை குறைக்க நினைத்தாள்.

“சாரி. உங்களை வருத்தப்பட வைக்கணும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. உங்களுடைய எண்ணத்தைப் பற்றி நான் ஏளனமாகவும் நினைக்கவில்லை. அந்த வார்த்தையை நீங்கள் நம்பியாக வேண்டும். நான் சிரித்தது நீங்கள் அப்படிக் கேட்டதற்காக அல்ல. நீங்க சொன்னீங்களே தனியாக இருக்கிறோம் என்று. நான் தனியாளாய் இருப்பதாக நினைக்கவில்லை. தனிமையிலிருந்து வெளியேறிவிட்டதாக நினைக்கிறேன். அவ்வளவு ஏன்? இதற்கு முன்பு எனக்கு உங்களைப் போன்ற நண்பர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு இருந்தது இல்லை. இசையுடன் ஒன்றிப் போக நேரமோ அவகாசமோ இருந்ததில்லை. முன்பு என் எண்ணங்களை, ரசனைகளை மறைத்து வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்தேனோ என்னவோ. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை.”

கங்காதரனுக்கு அவன் இருந்த நிலைமையில் அவள் சொன்ன வார்த்தைகள் சரியாக புரியக் கூட இல்லை. எப்படியோ தெம்பை வரவழைத்துக்கொண்டு கிளம்புவதற்காக எழுந்துகொண்டான்.

“ப்ளீஸ் …. உட்காருங்கள். உங்கள் ஐடியாவைப் பற்றிப் பேசுவோம்.” விஜயலக்ஷ்மி சொன்னாள். “நீங்கள் என்னை ஒரு பெண்ணாக மாத்திரமே உணர்ந்து இந்தத் திருமண பிரஸ்தாபனையைக் கொண்டு வந்ததாக நான் நினைக்கவில்லை, சரிதானே.”

“மிகவும் சரி. எனக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. வெறுமே ஒரு துணையை வேண்டி..” அவசர அவசரமாக பதிலளித்தான்.

“அந்தத் துணை உங்களுக்கு எதற்காக தேவையோ சரியாக அதே காரணத்திற்காக எனக்குத் துணை வேண்டியதில்லை.”

புரியாதவன் போல் பார்த்தான்.

“ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இல்லையா. இந்த வயதில் எனக்காக நான் வாழவேண்டுமென்று நினைக்கிறேன். வேறு யாருக்காகவோ அட்ஜெஸ்ட் செய்துகொண்டு வாழவேண்டிய தேவை எனக்கு இல்லை. உங்களுக்கு சிசுருஷை செய்துகொண்டு வாழணும் என்ற எண்ணம் அசலுக்கே இல்லை.”

“சிசுருஷையா?” கங்காதரன் குழப்பத்துடன் பார்த்தான்.

“சிசுருஷையேதான். ஒரு ஆணுக்குத் துணையாய் இருக்கணும் என்றால் சிசுருஷைதான் என்பது என்னுடைய எண்ணம். உங்கள் வீட்டைப் பார்த்தாலே உங்களுக்கு எந்த விதமான துணை தேவையோ சுலபமாக புரிந்துகொள்ளமுடியும்.”
கங்காதரன் பத்து நிமிடங்கள் வரையில் யோசித்துக் கொண்டே இருந்துவிட்டு திடீரென்று எழுந்து கிளம்பிப் போனான்.

அன்று இரவு முழுவதும் கங்காதரனுக்கு உறக்கம் வரவேயில்லை. எவ்வளவு யோசித்தாலும் விஜயலக்ஷ்மி சொன்னதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. விஜயலக்ஷ்மி தன் வீட்டை ஒழுங்குப் படுத்தி, தனக்கு சமைத்துப் போட்டு, தன்னுடைய நலனை கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லாமல் எதற்காக கல்யாணம் செய்துகொள்ள நினைத்தான்? யாராக இருந்தாலும் எதற்காக கல்யாணம் செய்துகொள்வார்கள்? அதனால் தானே விஜயலக்ஷ்மி அது போன்ற சிசுருஷைகளை செய்வதில் விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டாள். எந்தப் பெண்ணாக இருந்தாலும் எதற்காக செய்யவேண்டும்? தனக்கு வேண்டியது நல்ல வேலைக்காரியா? நல்ல துணையா? தன்னுடைய யோசனையும் தவறு என்று தோன்றவில்லை. விஜயலக்ஷ்மி சொன்னதிலும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

மறுநாள் கங்காதரனின் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா பத்துமுறை கங்காதரனின் வீட்டுக்கும் விஜயலக்ஷ்மியின் வீட்டுக்குமாய் அலைந்து ஒட்டடை கொம்பு, விளக்கமாறு அது இது என்று சில பொருட்களை எடுத்துக்கொண்டு போனாள். அன்று கங்காதரன் ஆபீசுக்குப் போகவில்லை.

மாலையிலும் விஜயலக்ஷ்மியின் வீட்டுக்குப் போகாமல் கடைத் தெருவுக்குப் போய் ஏதேதோ பொருட்களை வாங்கி வந்தான்.

நான்கு நாட்களாக கங்காதரன் வராதது விஜயலக்ஷ்மிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐந்தாவது நாள் கங்காதரனின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.

உள்ளே போய் பார்த்தால் வீடே மாறிவிட்டாற் போல் காட்சி தந்தது. ரொம்ப சுத்தமாக பளிச்சென்று இருப்பதோடு அந்தந்த பொருட்கள் அதனதன் இடத்தில் இருந்தன. கங்காதரன் சமையல் செய்துகொண்டிருந்தான்.

விஜயலக்ஷ்மியுடன் “இன்னிக்கு உங்களுக்கு சாப்பாடு எங்கள் வீட்டில்தான்” என்று சொல்லிவிட்டான். “என்னுடைய சமையல் உங்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ. ஏதாவது குறையிருந்தால் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளணும்” என்று சொல்லிக்கொண்டே பரிமாறினான்.

“பரவாயில்லை. நன்றாகவே இருக்கு.” சர்டிபிகேட் கொடுத்தாள் விஜயலக்ஷ்மி. கூடவே சில சமையல் குறிப்புகளையும் சொல்லித் தந்தாள்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் விஜயலக்ஷ்மியின் வீட்டில் கங்காதரன் சாப்பிட்டால், இரண்டு நாட்கள் கங்காதரனின் வீட்டில் விஜயலக்ஷ்மி சாப்பிட்டாள். இரண்டு நாட்கள் இருவருமாய் சேர்ந்து வெளியே ஏதாவது ஓட்டலில் சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரும் சேர்ந்து சமையல் செய்து பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்.

ஆறுமாதங்கள் இப்படியே கழிந்துவிட்டன.

கங்காதரனின் மகளுக்கு மகன் பிறந்தான். அவளுக்கு இது தான் தலைப் பிரசவம். செய்தியைக் கேட்டதும் கங்காதரன் அடைந்த உற்சாகத்திற்கு அளவேயில்லை. தாத்தாவாகிவிட்டோம் என்று ரொம்பவே சந்தோஷப்பட்டான்.

விஜயலக்ஷ்மியுடன் கடைத்தெருவுக்குச் சென்று பேரனுக்கு உடைகள், தங்கச்சங்கிலி அது இது என்று நிறைய பொருட்களை வாங்கினான். மகள் இருந்த ஊருக்குக் கிளம்பிப்போனான். புண்யாவசனம் முடியும் வரையில் அங்கேயே இருந்தான். பேரனுக்கு தன் பெயரைச் சூட்டுவதாக சொன்னபோது மறுத்துவிட்டு ‘சுசீல்’ என்று மனைவியின் பெயர் வரும் விதமாக வைக்கச்சொன்னான். பதினைந்து நாள் விடுமுறையை சந்தோஷமாக கழித்துவிட்டான்.

ஊரில் நடந்த விசேஷங்களை உடனே விஜயலக்ஷ்மியிடம் சொல்லியாக வேண்டும் போலிருந்தது கங்காதரனுக்கு. ரயிலில் வரும்போது பேரனைப் பற்றி விஜயலக்ஷ்மியிடம் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயங்களை மறந்துப் போய் விடுவோமோ என்று பயந்து சட்டைப் பையில் இருந்த டைரியில் குறித்துக்கொண்டான். தான் போய்ச் சேரும்போது விஜயலக்ஷ்மி இருக்கமாட்டாள். ஸ்கூலுக்குப் போயிருப்பாள். மாலை வரையிலும் காத்திருக்கணும். மாலையிலும் நேராக வீட்டுக்கு வருவாளோ இல்லை எந்த பாட்டுக் கச்சேரிக்காவது போவாளோ என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

விஜயலக்ஷ்மியின் வீடு பூட்டியிருக்கவில்லை.

கங்காதரன் தன் வீட்டுக்குப் போகாமலேயே விஜயலக்ஷ்மியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.

விஜயலக்ஷ்மி கதவைத் திறந்தாள். கங்காதரனைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.

“இதென்ன? இப்படி இளைச்சுட்டீங்களே?” என்றான் கங்காதரன் வியப்புடன்.

“என்னைத் தனியாக விட்டு விட்டு போயிட்டீங்க இல்லையா. கவலையினால் இளைத்துவிட்டேன். நீங்க போனது முதல் தனியாக சாப்பிட உட்கார்ந்தால் ஒரு வாய் சாப்பாடு கூட உள்ளே போகவில்லை. சரியான தூக்கமும் இல்லை. ஏன் இப்படி என்று எனக்கே தெரியவில்லை.”

விஜயலக்ஷ்மியின் வார்த்தைகள் புரிவதற்கு கங்காதரனுக்கு முழுசாக ஐந்து நிமிடங்கள் தேவைப்பட்டன.

அதற்குள் விஜயலக்ஷ்மி காபி கொண்டு வந்தாள். காபி டம்ளரை வாங்கி மேஜை மீது வைத்து விட்டு அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“நீங்கள் சொன்னது உண்மைதானா? நான் இல்லாத போது தனிமையாக உணர்ந்தீங்களா?”

“உண்மைதான். உங்கள் மீது ஆணை.” மனோகரமாய் சிரித்தாள் விஜயலக்ஷ்மி.

கங்காதரன் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடி விட்டான். அப்படியே விஜயலக்ஷ்மியை அணைத்துக் கொண்டான்.


தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள், எழுத்துக்கள்