வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்

asokamithranஹிந்து பத்திரிகையில் அசோகமித்ரன் எழுதி இருக்கும் கட்டுரை. கட்டுரை அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. பிறகு எதற்காக இந்தப் பதிவு என்கிறீர்களா?

சமீப காலமாக வாசிப்பு அனுபவம் என்பது அவரவருக்கு மட்டுமே புரியக் கூடியது, மற்றவர்களுக்கெல்லாம் புரிய வைத்துவிட முடியாது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதில் என்ன இழவுக்காக சிலிகான் ஷெல்ஃபும் இன்னொன்றும், படித்தோமா, அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே என்று அவ்வப்போது அலுத்துக் கொள்கிறேன். பாருங்கள், அசோகமித்ரன் மாதிரி மேதையே தன் வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர வைக்க முடியவில்லை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?

விமரிசனத்தின் குணமே அதுதானே? ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இன்னும் பல நூறு வருஷங்கள் படிக்கப்படும், நடிக்கப்படும். கோடி கோடிப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் நாடக விமர்சனங்களை யார் சீந்துவார்கள்? படைப்பு முக்கியம், விமரிசனம் என்பது சும்மா முதுகு சொரிவதுதான். தன் வாசிப்பு அனுபவத்தை மற்றவருக்கு சொல்ல வேண்டும் என்ற அரிப்புதான். அதன் முக்கியப் பங்களிப்பே நல்ல படைப்பு இது என்ற தகவலை அடுத்தவருக்கு சொல்லுவதுதான். அசோகமித்ரனின் இந்தக் கட்டுரையின் takeaway என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது, தமிழ் படிக்கத் தெரியாத நண்பர்களுக்கு வாங்கித் தரலாம் என்பதுதான்.

ka.naa.su.படித்திருக்கிறீர்களா என்ற க.நா.சு. புத்தகத்தைப் பற்றி பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன்னால் சாயாவனம், சில புதுமைப்பித்தன் கதைகள், சில ஜெயகாந்தன் நாவல்கள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றைப் படித்திருந்தாலும் க.நா.சு. பரிந்துரைகளைப் படிக்கும் முன்னர் தமிழில் நல்ல உரைநடை இலக்கியம் உண்டு என்று நான் உணர்ந்ததில்லை. அந்தப் புத்தகம் என் கண்களைத் திறந்தது. அதற்குப் பிறகுதான் நான் தமிழில் இலக்கியப் படைப்புகளைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன். ஆனால் க.நா.சு. குறிப்பிட்ட பல புத்தகங்கள் – இதய நாதம், நாகம்மாள், கரித்துண்டு – எனக்கு பெரும் இலக்கியப் படைப்புகள் அல்ல. அழகிரிசாமியின் சிறுகதைத் தொகுப்பில் நல்ல சிறுகதைகளைத் தேட வேண்டி இருக்கிறது. நான் அவரோடு முழுமையாக இசைவது புதுமைப்பித்தன் விஷயத்தில் மட்டும்தான். என்னை விடத் தேர்ந்த வாசகர் என்று நான் கருதும் க.நா.சு. பரிந்துரைக்கும் பல இலக்கியப் படைப்புகள் என்னைப் பொறுத்த வரையில் வெற்றி பெறாதவையே என்றால் அவரது படிப்பு அனுபவம் எனக்கு கைகூடவில்லை, என் படிப்பு அனுபவம் அவருக்கு கைகூடவில்லை என்றுதானே பொருள்?

ஆனால் அதே நேரத்தில் படித்திருக்கிறீர்களா என்னைப் பொறுத்த வரையில் ஒரு seminal புத்தகம்தான். அந்தப் புத்தகத்திலிருந்து நான் பெரும் இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லைதான்; ஆனால் தமிழில் பெரும் இலக்கியங்கள் உண்டு என்று தெரிந்து கொண்டேன். சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு அவரது தாக்கத்தை விட பல மடங்கு குறைந்தது என்று திடீரென்று புரிந்தது. சாண்டில்யனும் அகிலனும் சிவசங்கரியும் வாசந்தியும்தான் பிற முக்கியத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது வெறும் டைம் பாஸ், சிலருக்கு சிகரெட், வெற்றிலை பாக்கு, எனக்கு தமிழ் புத்தகங்கள் என்ற இளக்காரப் பார்வை இந்தப் புத்தகத்தை சுப்ரபாரதிமணியன் நடத்திய செகந்தராபாத் புத்தகக் கண்காட்சியில் வாங்கி அங்கேயே கீஸ் பள்ளித் தாழ்வாரத்தில் உட்கார்ந்து புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தபோதே செத்துவிட்டது.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாரிடமும் இதே விளைவை ஏற்படுத்துமா என்ன? நான் அன்றிருந்த மனநிலையில், எனக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவம் இந்தப் புத்த்கத்தை என் அளவில் உயர்த்துகிறது. இது எல்லாருக்கும் பொருந்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.

என்றாவது, யாராவது ஒருவராவது, இந்தத் தளத்தின் மூலம் சில நல்ல புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன், அவற்றைப் படித்தேன் என்று சொன்னால் இந்தத் தளம் வெற்றி பெற்றிருக்கிறது என்று உணர்வேன்.

வாடிவாசல், அசோகமித்ரன் என்று ஆரம்பித்து படித்திருக்கிறீர்களா, க.நா.சு. சிலிகன் ஷெல்ஃப் என்று முடித்திருக்கிறேன். யாராவது எடிட்டர் இருந்தால் தலைப்பை மாத்துய்யா என்று கடிந்து கொள்வார். 🙂


தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புள்ள சுட்டிகள்:
வாடிவாசல் பற்றி ஆர்வி
படித்திருக்கிறீர்களா புத்தகம்
என் அலுப்புக்கு ஜெயமோகன் பதில்

12 thoughts on “வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்

  1. அன்புள்ள ஆர்.வி. தங்களுக்கு ஏற்பட்ட இந்த சோர்வும் அலுப்பும் இப்போது என்னிடமும் தெரிகிறது. யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சில கட்டத்திற்கு மேல் இந்த அலுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. பிறகு ஒரு கட்டத்தில் மீண்டும் உற்சாகமாகச் செயல்படுவது நேர்கிறது. இப்படியாக நம் வாழக்கை அனைத்துமே திரும்பத் திரும்ப நிகழும் செயல்களால் உருவானவையே.செயலும், செயலினால் அலுப்பும், அலுப்பினால் செயலின்மையும், செயலின்மையால் வெறுமையும், வெறுமையினால் மீண்டும் செயலும் என்பதாகவே நம் வாழக்கை நடக்கிறது. நம்மால் செய்யக்கூடியதெல்லாம் அதன் போக்கில் செல்வதுதான் என உணர்கிறேன்.

    Like

  2. அன்புள்ள ஆர்.வி., சிலிக்கான் ஷெல்ப்பும், அழியாச்சுடர்களும், ஜெயமோகனும் இல்லையெனில் பாலகுமாரனையும், சுஜாதாவையும் நான் தாண்டியிருக்கவே மாட்டேன் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். படித்ததை பகிர முடியாமல் போகும் துன்பம் போல் வேறெதுவுமில்லை. உங்களால் இது முடிகிறது. எங்கோ எவரோ என்றோ இதை படித்து அவர்களின் அடுத்த கட்ட இலக்கிய தேடலுக்கு நகர்வார்கள் என நம்புவீர்களாக!

    Like

  3. ஆர்.வி. – வாடிவாசல் அற்புதமான ஒரு குட்டி நாவல். மனிதனுக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் நிகழும் போராட்டத்தை மிகவும் நுட்பமாகச் சொல்லியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ஹெமிங்க்வேயின் The Old Man and the Seaயோடு இணைத்துப்பார்க்கக்கூடிய படைப்பு.

    அசோகமித்திரன் தமிழில் எழுதியிருந்தால், அதைப்பற்றி இன்னும் சிறப்பாக எழுதியிருப்பாரோ என்னவோ – அவரது ஆங்கிலக் கட்டுரைகளில் அவரது தமிழ் எழுத்துகளின் நயம் ஏனோ வருவதேயில்லை.

    மற்றபடி, அதிகம் எதிர்வினையாற்றியதில்லை எனினும், உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களில் நானும் ஒருவன். உங்கள் மூலமாகப் பல நூல்களைக் கண்டடைந்துள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    Like

  4. டியர் ஆர்வீ,

    உங்கள் தளத்தில் நான் மறுமொழி இட்டு ரொம்ப நாளாகி விட்டது.

    ஆனால் நான் தினமும் தவறாமல் படிக்கும் தளத்தில் இதுவும் ஒன்று.
    ஒரு நாள் கூட படிக்காமல் தவற விட்டது இல்லை.

    நீங்கள் எழுதுவதை விட்டு விடாதீர்கள்.
    விடாமல் எழுதுங்கள்.

    இந்தத் தளம் வெற்றி பெற்றிருக்கிறது என்று உணருவதற்கு
    389,411 ஹிட்ஸ் ஒன்றே இதற்கு சாட்சி.

    – விமல்

    Like

  5. ஆர்வி,

    உங்களின் உரத்த சிந்தனையும், கேசவமணியின் எதிர்வினையும் அருமை.

    புத்தக விமர்சனம் அழிந்து விடாது என்றுதான் நினைக்கிறேன்;

    (புத்தகங்களைப்பற்றி குழுவாக அமர்ந்து பேசுவதும், எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பற்றி உரையாற்றுவதும் பேட்டி அளிப்பதும் என்று வாரத்தில் மூன்று நாட்கள் சக்கை போடு போடும் C_SPAN Book TV பார்த்திருக்கிறீர்களா?)

    அசோகமித்திரனின் கட்டுரை நாளிதழ்களில் எழுதுவதில் உள்ள சங்கடங்களைத்தான் காட்டுகிறது; புத்தக விமர்சனம் குறிப்பிட்ட நூறு அல்லது இருநூறு வார்த்தைகளுக்குள் அடங்க வேண்டும். (Editors!) புத்தகம் வாங்குபவர்களுக்கு விலை என்ன, எத்தனை பக்கங்கள், யார் பதிப்பித்தது போன்ற தகவல்கள். என்ன எழுதப்பட்டுள்ளது என்று சுருக்கி உரைக்க வேண்டும். அது போக இல்லக்கியத்தன்மையை அலசலாம்.

    இந்த மாதிரி எழுத்தில், சுருங்கச்சொல்லி விளங்க வைத்ததில் மன்னராக இருந்தார் சுஜாதா!

    geep

    Like

  6. இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட கேசவமணி, முகுந்தராஜ், கண்ணன், விமல், GP அனைவருக்கும் நன்றி! உங்கள் மறுமொழிகள் என் அலுப்பை ஓரளவு ஆற்றுகின்றன. குறிப்பாக முகுந்தராஜ், கண்ணன் இருவரும் இந்தத் தளத்தின் மூலம் சில புத்தககங்களை கண்டடைந்ததாக எழுதி இருக்கிறீர்கள். அது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    விமல், you were missed.

    GP, புத்தக விமர்சனம் அழியாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இன்று வாசிக்கப்படும் விமர்சனம் நாளை மறக்கப்பட்டுவிடும் என்றுதான் வரலாறு காட்டுகிறது.

    Like

  7. சார் இன்னிக்கி நீங்க விமர்சனம் எழுதுகின்றீர்கள். இன்று நான் படிக்கின்றேன், நாளை என் மகள் படிப்பாள், பின் அவள் மகள் படிப்பாள், அதனால் இது எல்லாம் கடமை சார், கடமை (சிவாஜி ஸ்டைலில் படித்துக்கொள்ளுங்கள்)

    மனதில் தோன்றுவதை எழுதி வைப்பதில் ஒரு அல்ப சந்தோஷம். இதுவும் இல்லை என்றால் படிப்பது பின், அதை நம் தலையில் போட்டுக்கொண்டு உழப்பிக் கொண்டே இருப்பது என்று போய், கடைசியில் எங்காவது தனியாக பேசுவது என்ற நிலை வந்து தொலைக்கும் என்ற பயம் எனக்கு உண்டு. எழுதி வைப்போம், என்றாவது பின்னால் வரும் சந்ததிகள் படித்து பயன் பெறுமல்லவா? ஒன்றுமில்லை என்றால், யாருக்காவது படித்துவிட்டு எரிச்சல் வந்தால் கூட போதும் (எந்த உணர்ச்சியும் தோன்றாமல் எழுதுவதற்கு சும்மா இருக்கலாம்).

    எழுதுவது நம் கடமை / உரிமை. படிப்பது? அது மற்றவர்களின் கடமை 🙂

    கிண்டலை விட்டு பார்த்தால், இணையத்தில் வம்புக்காக அலைபவர்கள்தான் அதிகம். அப்படிபட்ட வம்பு வழியாகத்தான் நான் ஜெ. மோ தளத்தில் நுழைந்தேன். இப்போது வம்புகளோடு கொஞ்சம் சீரீயசான விஷயங்களையும் படிக்கின்றேன். அந்த சில பேர்களுக்காக இது போன்ற தளங்கள் தேவை.

    Like

    1. ரெங்கசுப்ரமணி, அப்படி எல்லாம் விமர்சனத்தை மகளும் பேத்தியும் படிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் படிப்பதே அதிகப்படி. 🙂

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.