பொருளடக்கத்திற்கு தாவுக

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள்

by மேல் செப்ரெம்பர் 18, 2013

appusamiseethap_paattiஒரு காலத்தில் – பத்து வயது இருக்கலாம் – இவற்றை படித்து சிரித்திருக்கிறேன். அப்புசாமியும் ஆஃபிரிக்க அழகியும், மாணவர் தலைவர் அப்புசாமி, அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும் ஆகிய மூன்றையும் இந்த சீரிஸில் சிறப்பானவை என்று சொல்லலாம். இப்போது படித்தால் சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. குமுதத்தின் பக்கங்களை நிரப்ப ஒரு முயற்சி, அவ்வளவுதான். தமிழில் அவ்வளவாக இல்லாத நகைச்சுவை genre முயற்சிகள் என்பதுதான் இவற்றின் முக்கியத்துவம். கல்கி, தேவன், எஸ்விவி மூவரைத் தவிர வேறு யாரும் இந்த genre-இல் வெற்றி அடைந்ததாக எனக்குத் தெரியவில்லை. அதுவும் எஸ்விவியைப் படித்து பல வருஷங்கள் ஆகிவிட்டன, இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. நாடோடி, துமிலன் போன்றவர்களுக்கு இவர் பரவாயில்லை, சாவி, இவர், கடுகு ஆகியோர் ஏறக்குறைய ஒரே தரத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ja_raa_sundaresanஅப்புசாமியும் ஆஃப்ரிக்க அழகியும்: இதுதான் முதல் அப்புசாமி படைப்பு என்று நினைவு. எழுதப்பட்ட காலத்தில் புதுமையாக இருந்திருக்கும், அந்தப் புதுமை அப்போது பலரை ஈர்த்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆஃப்ரிக்க இளவரசி இடீலி அப்புசாமியின் குறுந்தாடியைப் பார்த்து காதல் வசப்படுகிறாள்.

மாணவர் தலைவர் அப்புசாமி: கல்லூரி மாணவர்கள் நினைத்தால் ஊர்வலம், போராட்டம் என்று கிளம்பிய காலத்தில் எழுதப்பட்ட கதை. தற்செயலாக மாணவர் ஊர்வலத்தில் அப்புசாமி பங்கேற்று, தலைவராகி…

அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும்: பேல் பூரி வாங்கித் தராத கோபத்தில் அப்புசாமி பாட்டியை அரேபிய ஷேக்குக்கு விற்றுவிடுகிறார். அங்கே சீதாப்பாட்டி ஷேக்குக்கு மந்திரி ஆகிவிடுகிறாள். அப்புசாமியோ ஷேக்கின் எதிரிக்கு தளபதி ஆகிறார். ஷேக்கின் வெளிநாட்டு பிரயாண திட்டத்தை திருடித் தருகிறார். ஆனால் எல்லாரும் சீதாப்பாட்டியின் தந்திரத்தால் ஷேக்கிடம் மாட்டுகிறார்கள். பிறகு கிஸ்சின்ஜர் வந்து சமாதானம் செய்து வைக்கிறார், அப்புறம் பாட்டியும் தாத்தாவும் எஸ்கேப்!
அந்த காலத்தில் இதை படித்து சிரித்திருக்கிறேன், இப்போது நாஸ்டால்ஜியாதான் இதை திருப்பி படிக்க காரணம். சுகப்படவில்லை. ஜெயமோகன் இதை சிறந்த வணிக எழுத்துகளில் ஒன்றாகக் கருதுகிறார்.

சீதாப்பாட்டியின் சபதம் நாவலில் இரட்டை வேஷம் வேறு. இவர் மாதிரியே உருவம் உள்ள மணவாள முதலியார் வில்லனாக வருகிறார்.

இதைத் தவிர நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். எல்லாமே குமுதத்தில் வந்தவைதானா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் வீரப்பன் காட்டில் அப்புசாமி, அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும், அப்புசாமி படம் எடுக்கிறார், அப்புசாமியும் அற்புத விளக்கும் போன்றவை அனுபவம் மிக்க ஜ.ரா.சு. இவ்வளவு மோசமாக எழுத வேண்டாம் என்று நினைக்க வைக்கின்றன. இவற்றை எஸ்.ஏ.பி. அனுமதித்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது.

பொதுவாக நாவல்களுக்கு சிறுகதைத் தொகுப்புகள் பரவாயில்லை. வழக்கமான ஃபார்முலாதான், படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம், எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை என்றாலும் டைம் பாஸ். கமான் அப்புசாமி கமான், அப்புசாமி பரீட்சை எழுதுகிறார், அப்புசாமி செய்த கிட்னி தானம், அப்புசாமியும் பாரதி நாற்காலியும், பியூட்டி பார்லரில் அப்புசாமி, கூழுக்கொரு கும்பிடு, அம்மா வாரம் என்று சில சிறுகதைகள் நினைவு வருகின்றன.

பாக்கியம் ராமசாமி என்ற புனைபெயரில் எழுதிய ஜ.ரா. சுந்தரேசன் குமுதம் துணை ஆசிரியர்களில் ஒருவர். எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் டீமில் முக்கியமானவர். சொந்தப் பேரிலும் – ஜ.ரா. சுந்தரேசன் – சில சமயம் எழுதுவார். அவர் எழுதி நான் படித்த வேறு சில நாவல்களைப் பற்றி:

பிரமாதமான, நல்ல நாவல் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஆனால் இருப்பதில் சிறந்த நாவல் என்றால் பூங்காற்றுதான். ஒரு இசைக்கலைஞனை ஹீரோவாக வைத்து எழுதப்பட்ட நாவல். இதைத் தவிர குங்குமம் என்ற உப்பு சப்பில்லாத நாவல், தொடர்கதையாக வந்திருக்கிறது. கதையின் சிறந்த அம்சம் மனநிலை பிறழ்ந்த தாயின் சித்திரம். ஜ.ரா.சு.வின் அம்மாவே மனநிலை பிறழ்ந்தவர்தானாம். அம்மாவால்தான் புத்தகத்தை எழுதினாராம். அந்த ஒரு காரணத்தால்தான் இந்தக் கதையை இருப்பதில் சிறந்ததாகக் கருதுகிறேன். மற்றபடி கதம்பாவின் எதிரி (வெட்டி தொடர்கதை. சின்ன வயது திருமணம், திருமணம் மறந்தே போதல், கணவனோடேயே காதல், வில்லன் தான்தான் பழைய கணவன் என்று சொல்லிக் கொண்டு நுழைவது…), பாசாங்கு (வயதான கணவன் தன இளம் வயது மனைவியை மீண்டும் கச்சேரி செய்ய வைப்பதற்காக குருடனாக நடிக்கிறான், கொஞ்ச நாளில் அவள் மீது சந்தேகம்…) எல்லாம் வேஸ்ட்.

அவரது சில சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

நண்பர் ரெங்கசுப்ரமணி குறிப்பிடுவது போல சில டைம் பாஸ் நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். (ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?, பீரோவின் பின்னால்). மேலும்
ரெங்கசுப்ரமணி சொல்லி புஷ்பா தங்கதுரை ஸ்டைலில் ஜ.ரா.சு. எழுதிய மனஸ் என்ற நாவலையும் படித்தேன். பெண் ஓரினச் சேர்க்கை, காம வெறி பிடித்த பெண் என்று போகிறது. அவர் இளைஞராக இருந்த காலத்தில் இந்த மாதிரி எழுத்து போர்னோக்ராஃபி என்று மதிக்கப்பட்டிருக்குமோ என்னவோ.

ஜ.ரா.சு. என்ற எழுத்தாளரை இலக்கியப் படைப்பாளி என்ற விதத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனால் தமிழ் பரப்பிலக்கிய வரலாற்றில் குமுதத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நகைச்சுவை genre-இல் முயற்சித்தவர் என்ற அளவில் நிச்சயமாக அவருக்கு ஒரு இடம் உண்டு.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
அப்புசாமிக்கு ஒரு தளம்
ஜ.ரா.சு.வின் வாழ்க்கைக் குறிப்பு
விக்கி குறிப்புத்
தென்றல் மாத இதழில் ஜ.ரா.சு. (Registration Required)
முதல் அப்புசாமி கதை

6 பின்னூட்டங்கள்
 1. இக்கதையை அதே நாஸ்டால்ஜியா தொந்தரவால் வாங்கினேன். அங்கங்கு புன்னகைக்க முடிந்தது. சிறுவயதில் ரசித்து படித்தது. மற்ற கதைகளை வாங்க நினைத்தேன். பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கடினம் என்பதால் விட்டு விட்டேன்.

  இவர் தன் சொந்த பெயரில் அ மற்ற புனைப் பெயரில் எழுதியதில் கிளுகிளுப்பு கலந்து எழுதியிருந்தார். புஷ்பா தங்கதுரைக்கு போட்டியாக எழுதியிருக்கின்றார். கதை பெயர் எல்லாம் நினைவில்லை. இரண்டு மூன்று சிறுகதைகள்.

  விகடனில் வாரா வாரம் ஏதாவது ஒரு டாபிக் எடுத்துக் கொண்டு எழுதிவந்தார். அது கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. (ரவாதோசை சாப்பிடுவது எப்படி, வீட்டிலிருக்கும் இயந்திரங்கள், பர்டே (சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன்) பார்ட்டி, கொசுக்கடியிலிருந்து தப்புவது எப்படி ……) கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிக்க வைக்காவிட்டாலும், எரிச்சல் வராது, கொஞ்சம் சிரிப்பு வரும், பொழுது போகும்.

  Like

  • ரெங்ககசுப்ரமணி, ஜ.ரா.சு. புஷ்பா தங்கதுரை ஸ்டைலில் எழுதினாரா? ஆச்சரியமாக இருக்கிறதே? சின்ன வயதில் எப்படித் தவறவிட்டேன்? 🙂

   Like

Trackbacks & Pingbacks

 1. ஏமாற்றிய ஜெயமோகன் | சிலிகான் ஷெல்ஃப்
 2. முதல் அப்புசாமி கதை | சிலிகான் ஷெல்ஃப்
 3. ரா.கி. ரங்கராஜன் | சிலிகான் ஷெல்ஃப்
 4. அஞ்சலி – பாக்கியம் ராமசாமி/ஜ.ரா.சு. மறைவு | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: