குயில் பாட்டு

bharathiஇரண்டு மூன்று வாரங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதி எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்தேன். முதன்முதலில் குயில் பாட்டு படித்த நாட்கள் நினைவு வந்தன. மீண்டும் தேடி எடுத்துப் படித்தேன். What a delightful romp!

எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். சாதாரணமாக எனக்குக் கவிதை புரிவதே இல்லை. ஆயிரம் லட்சம் கவிதை படித்தால் ஒரு கவிதை மனதைத் தொடும். அத்தனை கவிதை படிக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. ஆனால் பாரதியே எனக்கு quintessential கவிஞன். சிறு வயதிலிருந்தே பாரதி மஹாகவி என்று மூளைசலவை செய்யப்பட்டிருப்பதால்தான் இப்படி நினைக்கிறேனா, உண்மையிலேயே பாரதி பெரிய கவிஞன்தானா, தமிழிலிருந்து மொழிபெயர்த்தாலும் பாரதி கவிஞனாகத் தெரிவானா என்றெல்லாம் எனக்கே சந்தேகம் உண்டு. But who gives a damn? பாரதியே எனக்குப் பெரிய கவிஞன். நான் படித்த (மிகக் குறைந்த) அளவில் கம்பனை விட, தாகூரை விட பாரதியே என் உள்ளத்துக்கு நெருக்கமானவன். பாரதியின் கவிதைகளைத்தான் நான் முழுவதாகப் படித்திருக்கிறேன், கம்பன் எல்லாம் கொஞ்சம்தான் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். ஏதோ நாஞ்சில் தயவு, கொஞ்சம் ஜடாயு தயவு, கொஞ்சம் பள்ளித் தமிழ் புத்தகங்கள் தயவு.

பாரதியின் கவிதைகள் எனக்கு எப்போதுமே உத்வேகம் அளிப்பவை. ஆனால் கவித்துவம் எனக்குப் பெரிதாகத் தெரிந்து குயில் பாட்டிலும் வசன கவிதைகளிலும்தான். பாஞ்சாலி சபதமும் கண்ணன் பாட்டும் ஆங்காங்கே என் உள்ளத்தைக் கவர்ந்தாலும் குயில் பாட்டையே நான் பாரதியின் மிக உயர்ந்த கவிதையாகக் கருதுகிறேன். அதை முதல் முதல் படிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லித் தீராது. பிற்காலத்தில் Alice in the Wonderland, எட்வர்ட் லியரின் நான்சென்ஸ் கவிதைகள், சுகுமார் ரேயின் (சத்யஜித் ரேயின் அப்பா) ஹா ஜா போ லா ரா, நான் படித்த முதல் பி.ஜி. வுட்ஹவுஸ் புத்தகம் Right Ho Jeeves, பெர்னார்ட் ஷாவின் Arms and the Man ஆகியவற்றைப் படிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியையே இதற்கு நெருக்கமானதாகச் சொல்லலாம். இவற்றில் தெரியும் joie de vivre – தமிழில் குதூகலம் என்று சொல்லலாமா? – இலக்கியத்தில் மிகவும் அபூர்வமானது, படிக்கப் படிக்கத் திகட்டாதது.

ஏதோ ஒரு புத்தக முன்னுரையில் இது வரை இதனைப் படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது என்று எழுதி இருந்தார்கள். அது குயில் பாட்டுக்கும் முழுதும் பொருந்தும்.

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதேனும் சற்று இடமிருந்தால் கூறீரோ

என்று பாரதியே சொல்லி இருந்தாலும் குயில் பாட்டில் வேதாந்தம் தேடுவது எனக்கு உவப்பானதல்ல. அதை இப்படியே ஜாலியாகப் படிப்பதுதான் உத்தமம்.

எனக்கு மிகவும் பிடித்த பகுதி குரங்கிடம் குயில் பாடுவதுதான். அதுவும் “வானரர் போலாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?” என்ற வரி! ஐயா, நீ கவிஞன்! என் போன்றவர்களுக்கு கூட அந்தக் கற்பூர வாசனையை தெரிய வைத்துவிட்டாய்!

சும்மா வளவளவென்று இழுப்பானேன்? நேராக அந்தப் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள்.

பேடைக் குயிலிதனைப் பேசியது: – “வானரரே!
ஈடறியா மேன்மையழகேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க்கெல்லாந் தலைவரென மானிடரே,

எண்ணி நின்றார் தம்மை; எனிலொருகால் ஊர் வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனியழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனியிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டு மயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்

ஆசை முகத்தினைப் போலலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குதிக்கும் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே

வானரர் போலாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் –
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்….


தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்