தமிழில் பெண் எழுத்தாளர்கள்

இந்தச் சுட்டிதான் இந்தப் பதிவை எழுதக் காரணம். தமிழில் பல பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்த குங்குமம் தோழிக்கு ஒரு ஜே!

ஆனால் இந்த ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்ற பிரிவே மிகவும் செயற்கையாகத்தான் தெரிகிறது. பெண்களைப் பற்றி ஒரு பெண் எழுதுவதைப் போல ஒரு ஆணால் எழுத முடியாது என்பதெல்லாம் முட்டாள்தனம். சாபவிமோசனத்தை, பொன்னகரத்தை விடவா ஒரு பெண்ணிய சிறுகதை?

வசதிக்காக பெண்(ணிய) எழுத்து என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் எனக்கு ஒத்து வருவதில்லை. விகடன், குமுதம், கல்கியில் பெண்களின் துயரம் பற்றி பக்கம் பக்கமாக தொடர்கதைகள் வரும். அதைப் படித்து வெறுத்துப் போன ஒரு கோஷ்டி என் தலைமுறையில் இருக்கிறது. சின்ன வயதில் சிவசங்கரி மீது எக்கச்சக்க கடுப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று வயதான பிறகு மீள்பரிசீலனை செய்யும்போது சிவசங்கரி முயற்சி செய்திருக்கிறார், ஆனால் தோல்வி என்று தெரிகிறது. எப்பப் பார்த்தாலும் உயரமான வெள்ளை நிற ரிம்லெஸ் கண்ணாடி அணிந்த ஆண்கள் பற்றி வர்ணிக்கும் இந்துமதி எப்படித்தான் தரையில் இறங்கும் விமானங்கள் என்ற ஒரே ஒரு இலக்கியம் நயம் உள்ள கதையை எழுதினார் என்று நான் வியந்திருக்கிறேன். லட்சுமி, அனுராதா ரமணன், கமலா சடகோபன் போன்றவர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட். உரைநடையே இப்படி என்றால் கவிதையைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண் கவிஞர், குட்டி ரேவதி, சல்மா, கனிமொழி என்றால் நான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடுவேன்.

உருப்படியாக எழுதியவர்கள் அவ்வளவு பிரபலம் ஆகாத கிருத்திகா (வாசவேஸ்வரம்), ஹெப்சிபா ஜேசுதாசன் (புத்தம் வீடு) மாதிரி சிலரே. நான் இது வரை விரும்பிப் படித்த ஒரே பெண்ணிய எழுத்தாளர் அம்பை மட்டுமே. ஓங்கி ஒலிக்கும் குரல்தான்; ஆனாலும் இலக்கியம்தான். வாசந்தியைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். வாசந்தி தவிர்த்த மற்றவர்களை நான் ஒரு இருபது வயதுக்கு அப்புறமே படித்திருக்கிறேன். இருபது வயதுக்கு மேல் அஞ்சலி எழுதவோ, இல்லை வேறு ஏதோ காரணத்துக்கோ சிவசங்கரியையும் இந்துமதியையும் படிக்கும்போது கடுப்பு அதிகம்தான் ஆகிறது.

இந்த prejudice-ஆல் நான் பொதுவாக பெண் எழுத்தாளர்களை தவிர்த்தே வந்திருக்கிறேன். அதிலும் ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள் அவ்வளவு மோசமில்லை என்று கேள்வி. இருந்தாலும் ஒரு தயக்கம். எனக்கு குங்குமம் தோழியின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ளது. ஒன்று இரண்டு சிறுகதைகளைப் படித்துவிட்டு பிறகு முடிவு செய்து கொள்ளலாம்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்