தமிழில் பெண் எழுத்தாளர்கள்

இந்தச் சுட்டிதான் இந்தப் பதிவை எழுதக் காரணம். தமிழில் பல பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்த குங்குமம் தோழிக்கு ஒரு ஜே!

ஆனால் இந்த ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்ற பிரிவே மிகவும் செயற்கையாகத்தான் தெரிகிறது. பெண்களைப் பற்றி ஒரு பெண் எழுதுவதைப் போல ஒரு ஆணால் எழுத முடியாது என்பதெல்லாம் முட்டாள்தனம். சாபவிமோசனத்தை, பொன்னகரத்தை விடவா ஒரு பெண்ணிய சிறுகதை?

வசதிக்காக பெண்(ணிய) எழுத்து என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் எனக்கு ஒத்து வருவதில்லை. விகடன், குமுதம், கல்கியில் பெண்களின் துயரம் பற்றி பக்கம் பக்கமாக தொடர்கதைகள் வரும். அதைப் படித்து வெறுத்துப் போன ஒரு கோஷ்டி என் தலைமுறையில் இருக்கிறது. சின்ன வயதில் சிவசங்கரி மீது எக்கச்சக்க கடுப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று வயதான பிறகு மீள்பரிசீலனை செய்யும்போது சிவசங்கரி முயற்சி செய்திருக்கிறார், ஆனால் தோல்வி என்று தெரிகிறது. எப்பப் பார்த்தாலும் உயரமான வெள்ளை நிற ரிம்லெஸ் கண்ணாடி அணிந்த ஆண்கள் பற்றி வர்ணிக்கும் இந்துமதி எப்படித்தான் தரையில் இறங்கும் விமானங்கள் என்ற ஒரே ஒரு இலக்கியம் நயம் உள்ள கதையை எழுதினார் என்று நான் வியந்திருக்கிறேன். லட்சுமி, அனுராதா ரமணன், கமலா சடகோபன் போன்றவர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட். உரைநடையே இப்படி என்றால் கவிதையைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண் கவிஞர், குட்டி ரேவதி, சல்மா, கனிமொழி என்றால் நான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடுவேன்.

உருப்படியாக எழுதியவர்கள் அவ்வளவு பிரபலம் ஆகாத கிருத்திகா (வாசவேஸ்வரம்), ஹெப்சிபா ஜேசுதாசன் (புத்தம் வீடு) மாதிரி சிலரே. நான் இது வரை விரும்பிப் படித்த ஒரே பெண்ணிய எழுத்தாளர் அம்பை மட்டுமே. ஓங்கி ஒலிக்கும் குரல்தான்; ஆனாலும் இலக்கியம்தான். வாசந்தியைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். வாசந்தி தவிர்த்த மற்றவர்களை நான் ஒரு இருபது வயதுக்கு அப்புறமே படித்திருக்கிறேன். இருபது வயதுக்கு மேல் அஞ்சலி எழுதவோ, இல்லை வேறு ஏதோ காரணத்துக்கோ சிவசங்கரியையும் இந்துமதியையும் படிக்கும்போது கடுப்பு அதிகம்தான் ஆகிறது.

இந்த prejudice-ஆல் நான் பொதுவாக பெண் எழுத்தாளர்களை தவிர்த்தே வந்திருக்கிறேன். அதிலும் ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள் அவ்வளவு மோசமில்லை என்று கேள்வி. இருந்தாலும் ஒரு தயக்கம். எனக்கு குங்குமம் தோழியின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ளது. ஒன்று இரண்டு சிறுகதைகளைப் படித்துவிட்டு பிறகு முடிவு செய்து கொள்ளலாம்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

9 thoughts on “தமிழில் பெண் எழுத்தாளர்கள்

 1. அம்மாவிற்கு நூலகத்திலிருந்து எடுத்துவரும்போது இவர்களை எல்லாம் படித்ததுண்டு. யோசித்து யோசித்து பார்க்கின்றேன், ஒரு கதை கூட மனதில் வரமாட்டேன் என்கின்றது. அக்காலகட்டத்தில் படித்த ஒன்றிரண்டு ராஜேஷ் குமார் கதை கூட நினைவில் இருக்கின்றது, இது எல்லாம் ஓடிவிட்டது. சமீபத்தில் கூட சிவசங்கரி விகடனில் ஒரு கதை எழுதியிருந்தார். சும்மா நாமும் ஒரு அதிர்ச்சியை தருவோம் என்று எழுதினார் போல. வாஸந்தி – ஏதோ ஒரு அரசியல் பத்திரிக்கையில் இருந்தாரல்லவா?

  அனுராதா ரமணன், வாரமலரில் எழுதிக் கொண்டுவந்தார். பாலகுமாரன் பாணியில் வாசகர் கையை பிடித்து, தலையை தடவி ஆசீர்வாதம் செய்யும் பாணியில் எழுதிக் கொண்டுவந்தார். கடைசியில் அன்புள்ள அந்தரங்கம் பகுதியில் கள்ளக்காதல்களுக்கு தீர்வு சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்களின் நியாயத்தையும் சொல்கின்றார் என்று ஒரு நல்ல பெயர்.

  பெண்கள் அதிகம் கவிதை எழுத போய்விடுகின்றார்கள் ஏனோ? இவர்களின் கவிதையை எல்லாம் படித்தால், பயமாக இருக்கின்றது. ஆணாக பிறந்தது தப்போ? இந்த ஒரே காரணத்திற்காக நம்மை நரகத்தில் எண்ணைக் கொப்பறையில் வாட்டுவார்கள் என்று பீதியடைய செய்கின்றது.

  உமாசந்திரன் ஒரு பெண் எழுத்தாளர் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் 🙂

  Like

 2. ஆர்வி,

  “பொன்னகரம்”, “சாப விமோசனம்” பட்டியலில் பெண்ணியக் கதைகளாக சுஜாதாவின் “ரேணுகா”, “மாஞ்சு” வைக்கப்பட வேண்டும். “எப்போதும் பெண்” என்று அவர் நாவலாக எழுதியது வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். தொடராகக் கலைமகளில் வந்தது; ஒவ்வொரு வாரமும் ஒரு செயற்கையான சஸ்பென்சைத் தர வேண்டிய கட்டாயம்; The bane of serialization! (சிறுகதைகளில் தான் அவரது எழுத்தின் பலமும், இலக்கியத் தரமும் இருந்தது)

  GP

  Like

 3. // பெண்களைப் பற்றி ஒரு பெண் எழுதுவதைப் போல ஒரு ஆணால் எழுத முடியாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.//

  வயிற்றுக்குள் ஒரு குழந்தை புரள்வதை, தன் காலால் உதைப்பதை ஒரு ஆண் எழுத்தாளரால் உணர்ந்து எழுத முடியுமா சார்!

  Like

 4. உரைநடையே இப்படி என்றால் கவிதையைப் பற்றி கேட்கவே வேண்டாம்.//…இதில் உண்மை சற்று குறைந்திருப்பதாக மனதில் படுகிறது எனக்கு. இப்போது இருக்கும் இளம் ஆண் கவிஞர்களின் கவிதைகள் எல்லாமே தரமானது இல்லை…ஒன்று காதல், இன்னொன்றும் அதே காதல்…என்கிற ரீதியில் தான் இருக்கிறது.

  நானும் ஒரு கவிஞர்தான். அதுவும் பெண் கவிஞர். இயற்கையையும் சமூகத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  நீங்கள் கூறிய ஒரு கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்போது இருக்கும் பெண் கவிஞர்கள் நிறைய பேர் உடலின் அங்கங்களையும் கிளர்ச்சி கொள்ளும் தலைப்புகளையும் கொண்டிருந்தால் உடனே நம் இலக்கிய வாழ்வு இமயத்திற்கு போய்விடும் என்கிற ஆசையில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

  நல்ல பெண் கவிகளை யாரும், முக்கியமாக ஆண் சமூகம் கொண்டாடுவதில்லை. பெண்களை பாலியலின் தொடர்பு இழையாய் மட்டுமே பார்த்து அப்படி எழுதுபவர்களை தூக்கிவிட்டு, பெண்களின் நல்ல பல எழுத்துக்களை நசுக்கிவிடுகிறார்கள். இது அறியாத அந்த பெண்களும் மீண்டும் புகழுக்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சியாகவே இருந்துவிடுகிறார்கள்.

  http://www.ahilas.com

  Like

 5. அன்புள்ள அகிலா, // உரைநடையே இப்படி என்றால் கவிதையைப் பற்றி கேட்கவே வேண்டாம்… // அது என் கவிதை அலர்ஜிக்கான கமெண்ட்; பெண் கவிஞர் கவிதை என்றில்லை, கவிதை என்றால் அலர்ஜி. ஆயிரம் கவிதை படித்தால் எனக்கு ஒரு கவிதை தேறுகிறது, அதனால் கவிதை என்றால் ஓடிவிடுவேன். போன வாரம் தம் பிடித்து “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்” படித்தேன். தாங்க முடியவில்லை!

  GP, எனக்கு ரேணுகா நினைவில்லை, ஆனால் மாஞ்சு நிச்சயமாக சிறந்த சிறுகதை – சிறந்த பெண்ணிய சிறுகதை.

  Liked by 1 person

  1. வெகு காலத்திற்கு பின் இந்த காமெண்ட்டை வாசிக்க முடிந்ததற்காக மன்னிக்க வேண்டுகிறேன். இன்று நான் நாவல், சிறுகதைகள், திறனாய்வுகள் என்று சுழன்றுக் கொண்டிருக்கிறேன்.
   என்னைப் பொறுத்தவரை பெண்ணெழுத்து என்பது பெண்ணின் பார்வையில் உலகம் என்பதையேக் குறிக்கிறது. என்னுடைய சிறுகதை தொகுப்புகள் ‘மிளகாய் மெட்டி’, ‘மண் சட்டி’ மற்றும் நாவல், ‘தவ்வை’ என்பன எல்லாம் இம்முறையில் எழுதப்பட்டவைதான். நீங்கள் குறிப்பிட்டது போல் பழைய பெண் படைப்பாளிகளின் எழுத்துமுறை மாறிவிட்டது. வாசித்து பார்த்தால் தெரிந்துகொள்வீர்கள். இன்னும் வணிக அளவில் வருமானம் ஈட்டிக்கொள்ள பல பெண்கள் நாவல்கள் எழுதிக்குவிக்கிறார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.
   நல்ல படைப்புகளை வாசித்து பார்த்து சொல்லலாமே.. 🙂

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.