ஜெயமோகன்
மாதம்: திசெம்பர் 2013
விஷ்ணுபுரம் விருது 2013
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அறிவிப்பு
தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு முதல் விருதுத் தொகை ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்) நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல் – ஆகியவற்றில் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
900 393 1234
விஷ்ணுபுரம் விருது இதுவரை:
2010-ஆம் ஆண்டு – ஆ. மாதவன்
2011-ஆம் ஆண்டு – பூமணி
2012-ஆம் ஆண்டு – தேவதேவன்
2013-ஆம் ஆண்டு – தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்: ஓர் எளிய அறிமுகம்:
தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.
தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்.
இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.
தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு. இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப் பதிப்பாக வெளியிடவிருக்கிறது.
தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்:
- காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
- நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
- பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
- மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
- இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
- குடை நிழல் (நாவல், 2010)
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், தெளிவத்தை ஜோசஃப்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மீண்டும் பொங்கல் வாக்கில் ரெகுலராக எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் – touchwood.