காந்தி மறைவு செய்தி

Gandhiஇந்தத் தளத்தில் இந்த சுட்டி சரியா என்றெல்லாம் கேட்காதீர்கள். காந்தி மறைந்ததைப் பற்றி 1948 ஜனவரி 31 அன்று ஹிந்துவில் வந்த செய்தி.

அதில் இருக்கும் pdf சுட்டிக்குப் போனால் கோட்சே காந்தியைக் கொல்ல 1944இலிலேயே இரண்டு முறை முயன்றிருப்பது தெரிகிறது!

என் மகாபாரதச் சிறுகதை

தமிழ் ஹிந்து தளத்தில் வெளிவந்திருக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்!

அதிசயத் தற்செயல் நிகழ்ச்சியாக ஜெயமோகனின் சத்யவதியும் மீனவர் ரத்தத்தைப் பற்றி வெண்முரசில் பேசுகிறாள். ஆனால் அதில் வரும் பீஷ்மர் வனவாசிகளின் ரத்தம். என் சிறுகதை உங்களுக்குப் பிடித்திருந்தால் வெண்முரசை தவற விடாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மகாபாரதச் சிறுகதை – துரோண கீதை
மகாபாரதச் சிறுகதை – கிருஷ்ணனைப் பிடிக்காதவன்

என் சரித்திரம் (தமிழ் ஆடியோ புத்தகம்)

Image
Itsdiff வானொலி ஸ்ரீ ஸ்ரீநிவாஸாவின் ஒலிப் புத்தகம் – தமிழில்
ImageImage
என் சரித்திரம் – தமிழ் தாத்தா Dr. உ வே சா
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர் Dr. உ வே சா.தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர் இவர்.

இவரின் பிற ஒலி புத்தகங்கள்:

கு. அழகிரிசாமியின் சிறுகதைத் தொகுதி பட்டியல் தேவை

Gowri_Kribanandanஇந்தத் தளத்து வாசகர்களுக்கு கௌரி கிருபானந்தனின் பேர் தெரிந்திருக்கும். தமிழிலிருந்து தெலுகுக்குகும் தெலுகிலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

ku. azhagirisamiஇப்போது கௌரிக்கு ஒரு புது அசைன்மெண்ட். சாஹித்ய அகாடமி விருது பெற்ற கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு சிறுகதைத் தொகுதியை தெலுகில் மொழிபெயர்க்க வேண்டும். கௌரியிடம் அழகிரிசாமியின் எல்லா சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று இருக்கிறது. ஆனால் அன்பளிப்பு சிறுகதைத் தொகுதியில் என்னென்ன சிறுகதைகள் வெளியாகின என்று தெரியவில்லை.

கௌரி என்னைக் கேட்டார். என் பிரதியைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அக்கம்பக்கத்து நண்பர்களைக் கேட்டேன். சிலரிடம் புத்தகம் இல்லை, புத்தகத்தை வாங்கியவர்கள் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். சரி படிப்பவர்கள் யாரிடமாவது இருக்கலாமே என்று இங்கேயும் கேட்டு வைக்கிறேன். யாரிடமாவது புத்தகம் இருந்தால் என்னென்ன சிறுகதைகள் உள்ளன என்று சொல்லுங்கள். சிறுகதைகளை தட்டச்சிட எல்லாம் வேண்டாம், பேர் தெரிந்தால் போதும்.

கல்கி எழுதிய விமரிசனத்திலிருந்து அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள் என்று மூன்று சிறுகதைகளின் பேர் மட்டும் இப்போதைக்குத் தெரிகிறது.

நல்ல இலக்கியம் பக்கத்து மாநிலம் வரை போக சின்ன உதவியாவது செய்தால் நல்லது – ராமர், அணில் இத்யாதி கமெண்டை இங்கே நிரப்பிக் கொள்ளுங்கள்.

கௌரி தரும் தகவல்: சிறுகதைகளின் பட்டியல்
1.அன்பளிப்பு
2.தேவஜீவனம்
3.எங்கிருந்தோ வந்தார்
4.ஏமாற்றம்
5.ராஜா வந்திருக்கிறார்
6.ஞாபகார்த்தம்
7.அழகம்மாள்
8.திரிவேணி
9.இரண்டு பெண்கள்
10.இரண்டு ஆண்கள்
11.சாப்பிட்ட கடன்
12.கல்யாண கிருஷ்ணன்
இரண்டாம் பதிப்பு :1988
மூன்றாம் பதிப்பு: 1998
உரிமைப்பதிவு: திருமதி கு. அழகிரிசாமி, M-29/1, 25 வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை 90
விலை ரூ.50
தேன்மழைப் பதிப்பகம்,
34, கொத்தவால் தெரு, ஆலந்தூர், சென்னை- 600 016

தொகுக்கப்பட்ட பக்கம்: அழகிரிசாமி பக்கம், கௌரி பக்கம்

ஜெயகாந்தனின் ஒரு பழைய பேட்டி

jeyakanthanதிண்ணை இணைய இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3) தன் பல புத்தகங்களைப் – ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜயஜய சங்கர, அக்னிப்பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரிசுக்குப் போ, ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, ரிஷிமூலம் பற்றிப் பேசுகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

சிறுவர் பாடல்

நான்கரை வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தபோது முதல் முதலாகக் கற்றுக் கொண்ட பாட்டு இதுதான்.

ஒரு ஈயாம். அதற்கு அதன் பேர் என்னவென்று மறந்துவிட்டதாம். அது ஒரு கன்றுக்குட்டியிடம் போய் தன் பேர் என்ன என்று கேட்டதாம்.
        கொழுகொழு கன்றே என் பேரென்ன?

கன்றுக்குட்டி எனக்குத் தெரியாது, என் அம்மாவிடம் கேள் என்றதாம். உடனே ஈ அந்தப் பசுவிடம் சென்று கேட்டதாம்.
        கொழுகொழு கன்றே கன்றின் தாயே என் பேரென்ன?

அந்தப் பசு எனக்குத் தெரியாது, என்னை மேய்க்கும் இடையனிடம் கேள் என்றதாம். உடனே அந்த இடையனிடம் கேட்டதாம்.
        கொழுகொழு கன்றே கன்றின் தாயே மாடு மேய்க்கும் இடையா என் பேரென்ன?

இப்படியே தொடரும் பாட்டு:

கொழுகொழு கன்றே
கன்றின் தாயே
மாடு மேய்க்கும் இடையா
இடையன் கைக்கோலே
கோல் வளர்ந்த கொடிமரமே
கொடிமரத்துக் கொக்கே
கொக்கு வாழும் குளமே
குளத்தங்கரை மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைச்சட்டியே
சட்டி செய்த மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரை
என் பேரென்ன?

அந்தக் குதிரை ஈஈஈஈஈஈஈ என்று கனைத்தாம். உடனே அந்த ஈக்கும் அதுதான் தன் பேர் என்று ஞாபகம் வந்துவிட்டதாம், சுபம்!

இந்த மாதிரிப் பாட்டுகளெல்லாம் இப்போதும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா இல்லை பாபா ப்ளாக் ஷீப்தானா? இதை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்றால் சோகம்தான். சோகத்தைக் குறைத்துக் கொள்ள நல்ல வழி இப்படிப்பட்டவற்றைத் தொகுப்பது. அதனால் நினைவிருப்பதை பின்னூட்டமாக எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலவும்

சுஜாதா நாடகங்கள்

sujathaசுஜாதாவின் சில பல நாடகங்களை சமீபத்தில் படித்தேன்.

அவரது ட்ரேட்மார்க் பலங்கள் பலவும் இவற்றில் தெரிகின்றன. ஒரு சில வாக்கியங்களில் ஒரு மனிதனின் காரக்டரையே புரிய வைத்துவிடுவது, மெல்லிய நகைச்சுவை, நல்ல பாத்திரப் படைப்பு, கூர்மையான வசனங்கள், கொஞ்சம் துள்ளல் உள்ள கதைப்போக்கு எல்லாம் இருக்கின்றன. தமிழில் இவரை விட சிறப்பாக யாரும் நாடகம் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் சுஜாதா இப்சனோ பெர்னார்ட் ஷாவோ இல்லை. அவருடைய நாடகங்களில் பொதுவாக பெரிய தரிசனங்கள் இல்லை. நியாய அநியாயக் கேள்விகள் இல்லை. அனேகமாக எல்லா நாடகங்களிலும் என்ன நடக்கும் என்று தெரிகிறது. சபா சர்க்யூட்டுக்குப் புரிய வேண்டும் என்ற constraint இருந்திருக்கிறது. அவருடைய பலம் என்பது புரட்சிகரமான கதை, நம்மை உலுக்கக் கூடிய ஒரு கேள்வி, மனிதனின் குணத்தை உரித்து உண்மையாகக் காட்டுவது போன்றவை அல்ல. “சம்பிரதாயக் கதைகளில்” சின்னச் சின்ன நகாசு வேலைகள், அதிகமான நம்பகத்தன்மை ஆகியவைதான்.

சின்னச் சின்ன ஓரங்க நாடகங்களில்தான் அவரது கலை உணர்வு உண்மையாக மிளிர்கிறது. சுஜாதா மாதிரி எழுத்தாளருக்கெல்லாம் சின்ன கான்வாஸ்தான் உத்தமம். அவரால் பாத்திரங்களின் தன்மையை சுருக்கமாக நாலு வரி வசனத்தில் காட்டிவிட முடியும். சின்னதாகக் கோடு போட்டே பெரிய கதைகளைச் சொல்லிவிட முடியும். அதுதான் அவரது ஸ்பெஷாலிடி. மனிதர்களை கூர்மையாக அவதானித்து ஓரிரு குணாதிசயத்தைக் காட்டி நம்மை மிச்சத்தை யூகித்துக் கொள்ள விட்டுவிடுவார். உதாரணமாக “மாறுதலில்” வரும் கொஞ்சம் வயதான நாடகம் பார்ப்பவர். அவர் அனேகமாக அதிகாரம் செலுத்த கொஞ்சம் வாய்ப்பு உள்ள அரசு அலுவலராக இருக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர், பூர்ணம் அவரை எப்படி சித்தரிப்பார் என்றெல்லாம் கண் முன்னால் ஓடுகின்றன! நாடக சூழலையும் – அது சின்ன ஹோட்டலாக இருக்கட்டும், ஒரு ரயிலாக இருக்கட்டும் அவரால் கொண்டுவந்து விட முடியும். பிரயாணம், வந்தவன், சரளா, வாசல் போன்றவை ரத்தினங்கள். வாசல் போன்ற குறுநாடகங்களில் ஒரு அற்புதமான joie de vivre தெரிகிறது. இது சாத்தியப்படுவது மிக அபூர்வம். எனக்குத் தெரிந்து Arms and the Man, மற்றும் The Importance of Being Earnest இரண்டிலும்தான் இது நடந்திருக்கிறது.

ஆனால் இந்த நாடகங்கள் படிக்க இல்லை நடிப்பதற்கு எழுதப்பட்டவை. நாடகமாகப் பார்க்கும்போது என்ன நடக்கும் என்று தெரிவது பெரிய குறையாகத் தெரியாது என்று நினைக்கிறேன். அநேக நாடகங்களில் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம் ஒன்றாவது இருக்கிறது. அதுவும் பூர்ணம் விஸ்வநாதன்-சுஜாதா காம்பினேஷன் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கும். அதுவும் பிராமணப் பின்புலம் உள்ள நாடகமாக இருந்தால் இன்னும் விசேஷம். ஆனால் நான் பார்த்த ஊஞ்சல் டிவிடியில் பூர்ணம் சொதப்பிவிட்டார்.

அவரது “பெரிய” நாடகங்களில் நான் சிறந்ததாகக் கருதுவது ஊஞ்சல். ஒரு காலத்தில் ஜீனியஸ் என்பதை எப்படி எதிர்கொள்வது? சச்சின் டெண்டுல்கருக்கும் விஸ்வநாதன் ஆனந்துக்கும் இனி மேல் என்ன? புகழும் பணமும் கௌரவமும் சுயத்தின் மீது இருக்கும் பெருமிதமும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருப்பதைப் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது? எதிர்காலத்தில் சாதனைகள் இல்லை, இருந்தாலும் நேற்றைய சாதனைகளின் தரத்தை இனி மேல் எட்ட முடியாது என்பதை ஏற்றுக் கொள்வது சுலபம் இல்லை. அந்த வீழ்ச்சியை, வாழ்வின் தேவைகளுக்காக சமரசம் செய்து கொள்வதை (பஸ் டிக்கெட் போடுவது குரூரமான காட்சி), நேற்றைய பெருமித நினைவுகளிலேயே வாழ்வதை சுஜாதா மிகவும் பிரமாதமாகக் கொண்டு வந்திருப்பார்.

அதற்கு அடுத்தப்படியாக சொல்லக் கூடியது டாக்டர் நரேந்திரன். ராஷோமான் டெக்னிக்குக்காகவே பார்க்கலாம். படிப்பதை விட பார்ப்பது உத்தமம். இந்த மாதிரி பாத்திரங்களெல்லாம் பூர்ணம் விஸ்வநாதனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

கடவுள் வந்திருந்தார் ஒரு லைட்டான நாடகம். ஒரு ரிடையர் ஆன மத்திய வர்க்கக் குடும்பத் தலைவர் வீட்டுக்கு வேற்று கிரகவாசி வருகிறான். அவர் கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறான். அதனால் விளையும் குழப்பங்கள்தான் நாடகம். நகைச்சுவைதான் நோக்கம். ஆனால் எஸ்.வி. சேகர் மாதிரி ஜோக் தோரணம் இல்லை. இது உண்மையிலேயே நாடகம், வேறு லெவல். பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த ரிடையர் ஆன பாத்திரம் பூர்ணத்துக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். சமீபத்தில் பாரதி மணி நடித்தது நன்றாக இருந்தது என்று கேள்வி.

அடிமைகளில் அவர் மனிதர்களை உரித்துக் காட்ட முயற்சித்திருக்கிறார். யூகிக்க முடிந்தாலும் படிக்கலாம். தன் பணத்தால் குடும்பத்தினரை அடிமையாக வைத்திருக்கும் பெரிய மனிதர் இறக்கிறார், முன்னாள் அடிமை அவர் பணத்துக்கு வாரிசு. என்ன நடக்கும் என்று சுலபமாக யூகிக்கலாம். இதிலும் பெரிய மனிதர் பாத்திரம் பூர்ணத்துக்காகத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இவை இரண்டையும் நான் அடுத்த லெவலில் வைப்பேன்.

பாரதி இருந்த வீடும் பூர்ணத்துக்காகவே எழுதப்பட்டதோ என்று தோன்றுகிறது. இன்று ஏறக்குறைய cliche ஆகிவிட்ட கேள்விதான் – வயதான, பணம் இல்லாத அப்பா இரு மகன்களுக்கிடையே பந்தாடப்படுகிறார், எப்படி சமாளிப்பார்? இதையும் பார்ப்பது பெட்டராக இருக்கும். நல்ல நடிகர்களால் இந்த நாடகத்துக்கு உயிர் தர முடியும். அன்புள்ள அப்பாவும் அதே வயதான அப்பா கேள்வியைத்தான் இன்னொரு குடும்பப் பின்னணியில் பார்க்கிறது. இதையும் பார்ப்பதுதான் பெட்டராக இருக்கும்.

சிங்கமய்யங்கார் பேரனில் கதை சுகமில்லை. முடிச்சும் சரி, தீர்வும் சரி, காலேஜ் நாடகம் போல இருக்கிறது. பெரிய கான்வாஸ் என்றால் நிறைய விவரங்கள் வேண்டும், கொஞ்சம் சொதப்பிவிட்டார்.

இந்த 7 நாடகங்களைத் தவிர அவர் 15 குறுநாடகங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் பிரயாணம், வந்தவன், சரளா, வாசல் போன்றவை மாணிக்கங்கள்.

பிரயாணம் எனக்குப் பிடித்த நாடகங்களில் ஒன்று. நடிப்பதற்கு பிரமாதமான ஸ்கோப் உள்ள நாடகம். அந்த கணபதி ஐயரும், பிக்பாக்கெட்டும், சைட் அடிக்கும் கல்லூரி மாணவனும் அருமையான பாத்திரங்கள். கதை என்று ஒன்றும் பிரமாதமாக இல்லை, ஆனால் அது முக்கியமே இல்லை. ஒரு microcosm சித்தரிக்கப்படுகிறது, தத்ரூபமாக.

வந்தவன் எனக்குப் பிடித்த இன்னொரு நாடகம். இதிலும் அந்த ஹோட்டல் ஐயர், ஆஹா! பசி என்று வந்தவன் கடைசியில் பேசும் வசனமும் அருமையானது. இதைப் பற்றி நான் மதிப்பீடு எழுதும் நேரத்தில் நீங்கள் படித்தே விடலாம், படியுங்கள்! ஓரங்க நாடகம்தான், முடிந்தால் நடித்தும் பாருங்கள்!

சரளா நான் சிறு வயதில் படித்து ரசித்த நாடகங்களில் ஒன்று. கல்கியோடு இலவச இணைப்பாக வந்ததை ரொம்ப நாள் பத்திரமாக வைத்திருந்தேன். சுஜாதா டென்னசி வில்லியம்ஸ் ரேஞ்சில் எழுதுகிறார் என்று நினைத்தது இதைப் படித்தபோதுதான். சமீபத்தில் அவரது நாடகங்களின் தொகுப்பைப் படித்தபோது இது எட்வர்ட் ஆலன் பேக்கர் என்பவர் எழுதிய Dolores என்ற நாடகத்தின் தழுவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

வாசல் ஒரு அபாரமான நாடகம். எல்லாருக்கும் பிடித்த மாமா, (அப்பாவுக்கு மட்டும் பிடிக்காது) வீட்டுக்கு வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டுப் போவதை மிக அற்புதமாக தத்ரூபமாக சித்தரித்திருப்பார்.

கதை கேளு பெண்ணே, கதை கேளு! மற்றும் பெட்டி நாடகங்களின் முக்கியத்துவம் பாத்திரங்கள்தான். சும்மா நாலு வரியில் பெரிய சித்திரமே தீட்டிவிடுகிறார்.

முதல் நாடகம் (ஒரு கொலை) மற்றும் மாறுதல் இரண்டும் உத்திகளுக்காக எழுதப்பட்ட நாடகங்கள். பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முயல் என்ற நாடகமும் Rabbit Trap என்ற நாடகத்தின் தழுவலாம். படிக்கலாம். பார்ப்பது இன்னும் பெட்டராக இருக்கும்.

கிருஷ்ணா! கிருஷ்ணா! இயந்திரமயமாக்குதலின், தொழில் முன்னேற்றத்தின் விளைவுகளைக் காட்டுகிறது. இன்று இது ஒரு cliche.

சேகர் அவருடைய favorite தீம் ஆகிய robot. பார்க்கும்போது எல்லாரும் சிரிப்பார்கள், laugh track மாதிரி இருக்கும், நாமும் கொஞ்சம் சிரித்து வைப்போம் என்று நினைக்கிறேன்.ஆகாயம் இன்னொரு SF என்று முயற்சி. சரியாக வரவில்லை.

மறுமணம் சில ஸ்டாக் கேரக்டர்களை – ஆண்பிள்ளை வேண்டும் என்று துடிக்கும் கணவன், சோகத்திலிருக்கும் மனைவி, “புரட்சிகரமான” வழி காட்டும் டாக்டர் – காட்டுகிறது.

மந்திரவாதி, இடையன் மகள் போன்றவற்றின் பாயின்ட் என்ன என்று எனக்குப் புரியவில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நாடகங்களில் சுஜாதா உண்மையான இலக்கியம் படைக்க முயன்றிருக்கிறார். பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறார். அவரது எழுத்துகளில் இந்த நாடகங்கள் குறைந்த சதவிகிதமாக இருக்கலாம். (7 “பெரிய நாடகங்கள், 15 “சின்ன” நாடகங்கள்”) ஆனால் அவர் வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் அல்ல என்றூ நிறுவுவதில் இவற்றுக்குப் பெரும் பங்குண்டு.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: தமிழ் நாடகங்கள், சுஜாதா

தொடர்புள்ள சுட்டிகள்:

மின்னூல்கள் (pdf கோப்புகள்):

மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் – சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் நான் மீள்பதிக்கும் பதிவு இது. யாராவது மாட்டுப் பொங்கல் கதைகளை கொடுப்பார்களா என்று பார்க்கிறேன், ஒருவரும் வரமாட்டேன் என்கிறீர்களே!

மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் என்ற குறுநாவல்தான் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்‘ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை என்பதும் ஒரு நல்ல ஜல்லிக்கட்டு சிறுகதை.

உங்களுக்கு நினைவிருக்கும் நல்ல மாட்டுப்பொங்கல், பொங்கல், ஜல்லிக்கட்டு கதைகள் பற்றி எழுதுங்களேன்!

பிற்சேர்க்கை:
இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது,

சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சமும் எனக்கு மிகப் பிடித்தது. வாடிவாசல் புற உலகில் வெற்றி கொள்ளும் ஒருவனின் எண்ணம் முற்றிலும் அவன் அக உலக ஓட்டத்தை ஒட்டியே இருக்கும். ஜீவனாம்சத்தில் புழக்கடையைத் தாண்டாத பெண்ணின் மனமும் செயலும் வீட்டிற்கு வெளியேயே எப்பொழுதும் சுற்றி வருகிறது. இரண்டையும் அடுத்தடுத்த நாட்களில் படித்த பொழுது ஒரு வேளை இதை அவர் திட்டமிட்டே ஒரு contrast ஆக எழுதினாரோ என எண்ணத் தோன்றியது.

அவரின் சரசாவின் பொம்மை சிறுகதையை நான் வெகு நாட்களாகத் தேடி வருகிறேன்.

மொழிபெயர்ப்பு நன்றாக வர வேண்டும் என வாழ்த்துவோம். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


தொடர்புடைய சுட்டிகள்:
நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்
வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்
வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்

இன்று புதிதாய்…

dilbert

ரொம்ப பிசியாக இருக்கும்போதுதான் நிறைய வேலை செய்ய முடியும் என்று எனக்கு ஒரு தியரி உண்டு. அதை நம்பித்தான் மீண்டும் தொடங்குகிறேன். 🙂

புது வருஷத்தில் அதைச் செய்யப் போகிறேன் இதைச் செய்யப் போகிறேன் என்று ஆகாசக் கோட்டை கட்டுவதும் அது நிறைவேறாமல் போவதும் கல் தோன்று மண் தோன்றாக் காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் விஷயம்தான். அதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பி நான் புது வருஷம் ஆரம்பித்து 14 நாட்களுக்குப் பிறகு ஆகாசக் கோட்டை கட்ட ஆரம்பிக்கிறேன். (தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக நான் ஏற்பதில்லை. :-))

படிக்க நிறைய இருக்கிறது. மனதில் உற்சாகம் இருக்கிறது. எப்போதும் கையில் ஒரு புத்தகமும் இருக்கிறது. ஆனால் படிக்க இருக்கும் நேரம் குறைந்து கொண்டே போகிறது. அதனால் இந்த வருஷத்திலிருந்து குறிக்கோளுடன் படிக்க வேண்டும். எண்ணிக்கையை விட தரத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்தத் தளம் புத்தகங்களைப் பற்றிப் பேச. ஆனால் நான் ஒருவனே பேசிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது முத்துகிருஷ்ணன் குரல் கொடுக்கிறார், அவ்வளவுதான். உள்ளூர்/வெளியூர் குழும உறுப்பினர்களான பக்ஸ், ராஜன், பாலாஜி, விசு, சுந்தரேஷ், நித்யா, காவேரி, பத்மநாபன், அருணா இன்னும் மாட்டிக் கொள்ளும் எல்லாரையும் ஒரு பதிவாவது எழுத வைக்க வேண்டும். எல்லாரும் பங்கேற்றால் – அது எத்தனை சின்ன பங்காக இருந்தாலும் சரி – சுமையாகத் தெரிவதில்லை.

எழுத வேண்டும். மனதில் இன்னும் ஒரு டஜன் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. உட்கார்ந்து எழுத முடியவில்லை. சோம்பேறித்தனம், starting trouble என்னவோ ஒன்று.

மொழிபெயர்க்க வேண்டும். அதற்கும் மனதில் ஒரு பட்டியல் இருக்கிறது.

அழியாச்சுடர்களைப் பார்த்து வியந்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ இணையத்தில் பல தளங்களில் தமிழ் சிறுகதைகள் கிடைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு அட்டவணை தயாரிக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில் நுட்ப அறிவு எனக்குப் பத்தாதுதான். இருந்தாலும் நண்பர்கள் உதவமாட்டார்களா என்ன?

வருஷாவருஷம் பட்டியல் போட்டு அதில் பாதி கூட படிப்பதே இல்லை. அதனால் இந்த வருஷம் மூன்றே மூன்று புத்தகம் படித்தால் போதும் மிச்சம் எல்லாம் போனஸ் என்று நினைத்திருக்கிறேன்.War and Peace, Bridge on Drina மற்றும் Woman in the Dunes. மாதாமாதம் ஒரு க்ளாசிக்கையாவது படிக்க வேண்டும் என்று ஆசை; மூன்று மாதங்களுக்கு ஒன்று படித்தால் திருப்தி அடைந்து கொள்வேன்.

வயதாக ஆக ஒரு பிரச்சினை உருவாகிறது. நல்ல பொழுதுபோக்குப் புத்தகங்கள் கிடைப்பதே இல்லை. ஒரு முறைதான் ஷெர்லக் ஹோம்ஸை கண்டுபிடிக்க முடியும், இன்னொரு ஹோம்ஸுக்கு எங்கே போவது? இன்று பிரபலமாக இருக்கும் டான் பிரவுன், டக்ளஸ் ப்ரெஸ்டன், ஜெஃப்ரி டீவர், லீ சைல்ட் உள்ளிட்ட பலரும் எனக்கு மொக்கை ஆகிவிட்டார்கள். இரண்டு மூன்று பேரையாவது இந்த வருஷம் கண்டுபிடிக்க வேண்டும். மாதம் ஒன்றிரண்டு நல்ல த்ரில்லர்களையாவது படிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழ் புத்தகங்கள் வாங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். இந்த வருஷமாவது என்னை நானே நவீனப்படுத்திக் கொண்டு இணையம் மூலம் புத்தகம் வாங்க வேண்டும்.

இந்த இரண்டு மூன்று மாதத்தில் மிகவும் திருப்தி அளித்த விஷயம் தமிழ் ஹிந்து தளத்தில் எழுதிய “மகாபாரத ஆக்கங்கள்” கட்டுரைதான். இந்தத் தளத்தில் வந்த ஒரு பட்டியலை முழுமையாக்க விரும்பி அதை எழுதினேன். அதற்கு வந்த மறுமொழிகளைப் பார்த்தால் நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்று தெரிகிறது. மீண்டும் விரிவுபடுத்த வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: References

பேசாமொழி பதிப்பகம் தொடக்கம் & முதல் நூல் வெளியீட்டு விழா

Print

———————————————————————————————————-
முதல் நூல்: இலங்கையின் கொலைக்களம் – ஆவணப்பட சாட்சியம் – யமுனா ராஜேந்திரன்.
———————————————————————————————————-

நாள்: 18-01-2014, சனிக்கிழமை

இடம்: புக் பாய்ன்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை. (தினமலர் அலுவலகத்திற்கு அருகில்)

நேரம்: மாலை 5 மணிக்கு.

கவிதா நிகழ்வு: கவிஞர் தமிழ்நதி, தீபச்செல்வன்.

உரையாளர்கள்: தோழர் தியாகு, இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் பாமரன், இயக்குனர் ராம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, இயக்குனர் பாலாஜி சக்திவேல், மனித உரிமையாளர் கண. குறிஞ்சி, ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்

தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான இந்த “பேசாமொழி” பதிப்பக முயற்சிக்கு நண்பர்கள் திரளாக வந்திருந்து தங்கள் ஆதரவை நல்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் வருக…

தொடர்புக்கு: 9840698236

—————————————————————————————————————
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால் ஒரு இயக்கம் தொடர்ச்சியாக செயல்படவும், அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரவும், சில கட்டமைப்பு வசதிகள் அவசியம். அதுவும் தமிழ் நாடு மாதிரியான, மாற்றங்களை எளிதில் விரும்பாத மோசமான சமூகத்தில் இயக்கத்திற்கென எவ்வித கட்டமைப்புகளும் இல்லாமல் செயல்படுவது அத்தனை எளிதல்ல. நல்ல சினிமா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தால், அதை பிரசுரிக்க இங்கே எந்த பத்திரிகையும் இல்லை. காரணம், எல்லா பத்திரிகைகளும் மோசமான சினிமாவின் நிழல்களாகவே இருக்கிறது, இந்த மோசமான வணிகக்குப்பைகளை எதிர்த்து எந்த பத்திரிகையும் வெற்றிகரமாக செயல்பட முடியாது. சிற்றிதழ்கள் இருக்கிறது என்று நினைத்தால், சிற்றிதழ்களுக்கும் நிறைய சச்சரவுகளை ஏற்படுத்தும் கட்டுரைகள்தான் அதிகபட்ச தேவையாக இருக்கிறது, ரசனை வளர்ப்பது பற்றியோ, நுண்கலைகள் பற்றிய புரிதலை வளர்க்கவோ எந்த சிற்றிதழும் முன்வருவதில்லை. எல்லா சிற்றிதழ்களுக்கும் நிறையவே குழு அரசியல் இருக்கிறது. அவரவருக்கு தனித் தனி சித்தாந்தங்கள் இருக்கலாம், அதில் தவறில்லை, ஆனால் குழு அரசியல் இருப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அத்தனை நல்லதல்ல.

இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு முக்கியமான ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ் ஸ்டுடியோவிற்கு என்று தனியாக, நான் நினைத்ததை காட்டிலும், அருமையான அலுவலகமும், தமிழ் ஸ்டுடியோவில் இருந்தே, நாங்கள் நினைக்கும் கட்டுரைகளை புத்தகமாக கொண்டு வரவும், இயக்க செயல்பாடுகளையும், அதன் சித்தாந்தகளையும் பிரசுரிக்கவும், எந்த சமரசமும் இன்றி செயல்பட எங்களுக்கென ஒரு பதிப்பகமும் உருவான ஆண்டு இந்த ஆண்டுதான். பேசாமொழி பதிப்பகம் தொடக்க விழாவும், பேசாமொழி பிரசுரித்த முதல் புத்தகமான யமுனா ராஜேந்திரனின் “இலங்கையின் கொலைக்களம்” புத்தக வெளியீட்டு விழாவும், எதிர்வரும் 18 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள, புக் பாய்ன்ட் அரங்கில் நடைபெறவுள்ளது.

நண்பர்களுக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம், ஆனால் எவ்வித பிரதிபலனையும் பாராமல் இயங்கும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்து வேறுபாடுகள் எல்லாம், என்னுடைய எழுத்தோடுதான், தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளோடு இல்லை என்பதும் எனக்கு தெரியும், எனவே தமிழ் ஸ்டுடியோவின் இந்த புதிய முயற்சியை, முக்கியமான முன்னெடுப்பை நண்பர்கள் நிச்சயம் வரவேற்று ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் என்னால் அறைகூவல் விடுக்க முடியாது. புத்தகம் உண்மையாகவே, முக்கியமான புத்தகமென்றால், அதன் உள் சரடுகள் அத்தனை தீவிரமனாது என்றால், அது தானாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். டார்வினின் கோட்பாடு, இதற்கும் பொருந்தும். இப்படி ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது என்பதை எல்லாருக்கும் அறிவிப்பது ஒன்று மட்டுமே என்னுடைய வேலை. அதை நான் செவ்வனே செய்து விடுவேன். இந்த பதிப்பக முயற்சியும், பேசாமொழி மாத இதழும், தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கான முக்கியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன். இந்த கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு தமிழ் ஸ்டுடியோ அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதும் எனது எண்ணம்.

இந்த நேரத்தில், இந்த பதிப்பக முயற்சியை சாத்தியப்படுத்திய, நண்பர் ராஜசிம்மனுக்கு நன்றி சொல்வதற்கு பதில் அவரை பேசாமொழி பதிப்பகத்தின் பங்குதாரராகவே இணைத்துக்கொண்டேன். முதல் புத்தகமாக, தன்னுடைய புத்தகத்தை பதிப்பிக்கக் கொடுத்த, ஒத்த சிந்தனையுள்ள நண்பரான யமுனா ராஜேந்திரன் எப்போதும் என்னுடைய நன்றிக்குரியவர். செய்து முடிப்பதுதான் என்னுடைய வேலை, அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், நண்பர்களின் கையில்.

விழாவிற்கு அனைத்து நண்பர்களையும் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்