இன்று புதிதாய்…

dilbert

ரொம்ப பிசியாக இருக்கும்போதுதான் நிறைய வேலை செய்ய முடியும் என்று எனக்கு ஒரு தியரி உண்டு. அதை நம்பித்தான் மீண்டும் தொடங்குகிறேன். 🙂

புது வருஷத்தில் அதைச் செய்யப் போகிறேன் இதைச் செய்யப் போகிறேன் என்று ஆகாசக் கோட்டை கட்டுவதும் அது நிறைவேறாமல் போவதும் கல் தோன்று மண் தோன்றாக் காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் விஷயம்தான். அதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பி நான் புது வருஷம் ஆரம்பித்து 14 நாட்களுக்குப் பிறகு ஆகாசக் கோட்டை கட்ட ஆரம்பிக்கிறேன். (தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக நான் ஏற்பதில்லை. :-))

படிக்க நிறைய இருக்கிறது. மனதில் உற்சாகம் இருக்கிறது. எப்போதும் கையில் ஒரு புத்தகமும் இருக்கிறது. ஆனால் படிக்க இருக்கும் நேரம் குறைந்து கொண்டே போகிறது. அதனால் இந்த வருஷத்திலிருந்து குறிக்கோளுடன் படிக்க வேண்டும். எண்ணிக்கையை விட தரத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்தத் தளம் புத்தகங்களைப் பற்றிப் பேச. ஆனால் நான் ஒருவனே பேசிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது முத்துகிருஷ்ணன் குரல் கொடுக்கிறார், அவ்வளவுதான். உள்ளூர்/வெளியூர் குழும உறுப்பினர்களான பக்ஸ், ராஜன், பாலாஜி, விசு, சுந்தரேஷ், நித்யா, காவேரி, பத்மநாபன், அருணா இன்னும் மாட்டிக் கொள்ளும் எல்லாரையும் ஒரு பதிவாவது எழுத வைக்க வேண்டும். எல்லாரும் பங்கேற்றால் – அது எத்தனை சின்ன பங்காக இருந்தாலும் சரி – சுமையாகத் தெரிவதில்லை.

எழுத வேண்டும். மனதில் இன்னும் ஒரு டஜன் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. உட்கார்ந்து எழுத முடியவில்லை. சோம்பேறித்தனம், starting trouble என்னவோ ஒன்று.

மொழிபெயர்க்க வேண்டும். அதற்கும் மனதில் ஒரு பட்டியல் இருக்கிறது.

அழியாச்சுடர்களைப் பார்த்து வியந்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ இணையத்தில் பல தளங்களில் தமிழ் சிறுகதைகள் கிடைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு அட்டவணை தயாரிக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில் நுட்ப அறிவு எனக்குப் பத்தாதுதான். இருந்தாலும் நண்பர்கள் உதவமாட்டார்களா என்ன?

வருஷாவருஷம் பட்டியல் போட்டு அதில் பாதி கூட படிப்பதே இல்லை. அதனால் இந்த வருஷம் மூன்றே மூன்று புத்தகம் படித்தால் போதும் மிச்சம் எல்லாம் போனஸ் என்று நினைத்திருக்கிறேன்.War and Peace, Bridge on Drina மற்றும் Woman in the Dunes. மாதாமாதம் ஒரு க்ளாசிக்கையாவது படிக்க வேண்டும் என்று ஆசை; மூன்று மாதங்களுக்கு ஒன்று படித்தால் திருப்தி அடைந்து கொள்வேன்.

வயதாக ஆக ஒரு பிரச்சினை உருவாகிறது. நல்ல பொழுதுபோக்குப் புத்தகங்கள் கிடைப்பதே இல்லை. ஒரு முறைதான் ஷெர்லக் ஹோம்ஸை கண்டுபிடிக்க முடியும், இன்னொரு ஹோம்ஸுக்கு எங்கே போவது? இன்று பிரபலமாக இருக்கும் டான் பிரவுன், டக்ளஸ் ப்ரெஸ்டன், ஜெஃப்ரி டீவர், லீ சைல்ட் உள்ளிட்ட பலரும் எனக்கு மொக்கை ஆகிவிட்டார்கள். இரண்டு மூன்று பேரையாவது இந்த வருஷம் கண்டுபிடிக்க வேண்டும். மாதம் ஒன்றிரண்டு நல்ல த்ரில்லர்களையாவது படிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழ் புத்தகங்கள் வாங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். இந்த வருஷமாவது என்னை நானே நவீனப்படுத்திக் கொண்டு இணையம் மூலம் புத்தகம் வாங்க வேண்டும்.

இந்த இரண்டு மூன்று மாதத்தில் மிகவும் திருப்தி அளித்த விஷயம் தமிழ் ஹிந்து தளத்தில் எழுதிய “மகாபாரத ஆக்கங்கள்” கட்டுரைதான். இந்தத் தளத்தில் வந்த ஒரு பட்டியலை முழுமையாக்க விரும்பி அதை எழுதினேன். அதற்கு வந்த மறுமொழிகளைப் பார்த்தால் நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்று தெரிகிறது. மீண்டும் விரிவுபடுத்த வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: References

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.