துப்பறியும் கதைகளில் அறம் – டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி

துப்பறியும் சாகசக் கதைகளில் நமக்கு உள்ள எதிர்பார்ப்புகள் குறைவு. முதல் தேவை கதை விறுவிறுவென்று போக வேண்டும். இரண்டாவது தேவை லாஜிகல் ஓட்டைகள் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அவற்றை கவனிக்க நேரம் இருக்கக் கூடாது, அவ்வளவுதான். அவற்றைத் தாண்டி மேலும் பலங்கள் தென்படும்போது கதைகள் பொதுவாகப் பிடித்துப் போகின்றன.

Dick_Francisஎனக்குப் பிடித்த சாகசக் கதை எழுத்தாளர்களில் டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு இடம் உண்டு. 30, 35 கதை எழுதி இருப்பாரோ என்னவோ, அதில் எனக்கு ஒரு பத்து கதைகளாவது தேறும். அவரது முக்கியமான பலம் அவரது நாயகர்கள் – எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள்தான் – வலிமையான அற உணர்வு, honor code உள்ளவர்கள். ஒரு செயல் தன்னுடைய அறத்தை மீறுவது என்று உணர்ந்தால் என்ன விலை கொடுத்தாலும் அந்தச் செயலைச் செய்ய மாட்டார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் கலங்கமாட்டார்கள், அதை தீர்க்க முயற்சி எடுப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள், ஆனால் உணர்ச்சிகளுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும் என்று அறிந்த அதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு கூர்மையான அறிவுடையவர்கள். அவர்களுடைய அற உணர்வில் கருணை போலவும் ஒன்று தெரியும். தண்டனை தருவதை விட, பழி வாங்குவதை விட பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். அது கருணை அல்ல, கணக்கு. இந்த வில்லனுக்கு முழு தண்டனை பெற்றுத் தந்தால் அதற்கு தானும் தன்னவர்களும் இப்போதும் எதிர்காலத்திலும் என்ன விலை தர வேண்டி இருக்கும், அந்த விலையைத் தருவது சுலபமாக கஷ்டமா என்ற கணக்கு. சுருக்கமாகச் சொன்னால் தன்னை, தன் honor code-ஐ நன்றாகப் புரிந்து கொண்ட செயல் வீரர்கள்.

ஃப்ரான்சிசைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை என்பதால் மீண்டும் ஒரு முறை. குதிரைப் பந்தயம் பல மேலை நாடுகளில் பெரிய தொழில். ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி – அதுவும் steeplechase ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். பலதரப்பட்டவர்கள் ஹீரோவாக வருவார்கள். ஆனால் எல்லாருக்கும் குதிரை பந்தய பின்புலம், அதுவும் steeplechase பின்புலம் இருக்கும். குதிரை வாங்க கடன் கொடுத்த வங்கி அதிகாரி, குதிரைப் பந்தயம் பற்றி எழுதும் பத்திரிகையாளர், குதிரை ரேஸ் உலகத்தில் துப்பறிபவர், ஜாக்கிகளை ஒரு ரேஸ் கோர்சிலிருந்து இன்னொன்றுக்கு commuter plane ஒன்றில் அழைத்துச் செல்லும் விமான ஓட்டி, குதிரை தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர் இத்யாதியினர். சில சமயம் ஹீரோ ஃப்ரான்சிசைப் போலவே ஒரு ஜாக்கியாகவும் இருப்பார். அப்படி ஜாக்கியாக இருந்தால் அவர்களது வாழ்வின் அர்த்தமே குதிரைகளை பந்தயத்தில் ஓட்டுவதாகத்தான் இருக்கும்.

ஃப்ரான்சிஸ் ஃபார்முலாவில் நாயகன் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்கும் காட்சி ஒன்று இருக்கும். பல நாவல்களில் அதுவே புத்தகத்தின் உச்சக்கட்டம். அடி என்றால் உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை. Nerve-இல் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு கூரையிலிருந்து தொங்கவிட்டுவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ விஸ்கியை raw ஆக இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி இருக்கும்.

ஃப்ரான்சிசின் நாயகர்கள் எப்போதும் தங்கள் honor code-ஐ உணர்ந்தவர்கள், அதிலிருந்து பிறழமாட்டார்கள் என்று சொல்லி இருந்தேன். ஒரு விதிவிலக்கு உண்டு. சிட் ஹேலி. ஹேலி அளவு கடந்த விரக்தி, பயம் ஆகியவற்றால் சில சமயம் தன் அறத்தை உடைக்கிறான், ஆனால் மீண்டும் ஒவ்வொரு முறையும் திரும்புகிறான். ஹேலி தேரின் சக்கரங்கள் பூமிக்கு அரை அடி மேலேயே இருக்கும் யுதிஷ்டிரன் இல்லை. தோல்வி, தன் அறத்தை மீறுவது என்றால் அவனுக்கு என்ன என்று தெரியும். அதிலிருந்து மீண்டு வரும் redemption சித்திரம் அவனது பாத்திரப் படைப்பை மேலும் உயர்த்துகிறது. Redemption இந்தக் கதைகளின் முக்கிய ஓட்டம் இல்லைதான், இருந்தால் அடிநாதமாக அது இருப்பது ஹேலி கதைகளை மேலும் உயர்த்துகிறது.dick_francis_whiphand

பொதுவாக ஃப்ரான்சிசின் நாயகர்கள் ரிபீட் ஆகமாட்டார்கள். ஹேலி விதிவிலக்கு. நான்கு நாவல்களின் நாயகன். ஃப்ரான்சிசின் மகன் ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் அப்பாவின் plot ஒன்றை வைத்து இப்போது புதிதாக Refusal என்று ஹேலி நாவல் ஒன்றை எழுதி இருக்கிறாராம் இருக்கிறார். பொதுவாக ஃபீலிக்ஸ் அப்பா தரத்தில் எழுதுவதில்லை. ஆனால் அவர் எழுதிய கதைகளில் இதுவே மிகச் சிறந்தது.

எனக்கு மிகவும் பிடித்த ஹேலி நாவல் Whiphand (1979).

ஹேலிக்குப் பெரிய பின்கதை உண்டு. ஹேலி ஒரு காலத்தில் நம்பர் ஒன் ஜாக்கி. பரம ஏழைப் பின்புலத்திலிருந்து துவங்கி பணம், புகழ், அழகான மேல்குடி குடும்ப மனைவி ஜென்னி என்று எல்லா விதத்திலும் வெற்றி. ஜாக்கிகளின் வாழ்வில் கீழே விழுவது, அடிபடுவது, எலும்புகள் உடைவது எல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். ஜென்னியால் அந்த டென்ஷனைத் தாங்க முடியவில்லை. குதிரைப் பந்தயத்தில் பங்கேற்பதை நிறுத்தும்படி மன்றாடுகிறாள். கடைசியில் விவாகரத்தே ஆகிவிடுகிறது. விவாகரத்து ஆன ஆறாவது மாதத்தில் ஒரு குதிரைப் பந்தய விபத்தில் ஹேலியின் ஒரு கை நரம்புகள் துண்டிக்கப்படுகின்றன. பேருக்குத்தான் கை, அதை பயன்படுத்த முடியாது. ஜாக்கி வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது. (பிற்காலத்தில் கை துண்டிக்கவே படுக்கிறது, prosthesis பயன்படுத்த வேண்டி இருக்கிறது.) ஹேலியின் ஒரே நண்பன், மற்றும் mentor ஜென்னியின் அப்பா, அவனது முன்னாள் மாமனார், அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ். தன் இரண்டாவது வாழ்க்கையில் ஹேலி துப்பறிபவனாக – அதுவும் குதிரைப் பந்தய உலகத்தில் தலையாயத் துப்பறிபவனாக – பரிணமிக்கிறான்.

எனக்குப் பிடித்த Whiphand கதையில் ஹேலி நம்மை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான் என்றால் வில்லன்களுக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும் அளவுக்கு முன்னேறி இருக்கிறான். ஜார்ஜ் என்ற ஒரு முக்கிய ட்ரெய்னரின் குதிரைகள் – ரேஸ்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் சில குதிரைகள் எதிர்பாராத விதமாகத் தோற்கின்றன. சில சமயம் நடப்பதுதான், அதனால் ஜார்ஜ் உட்பட யாருக்கும் பெரிய சந்தேகம் ஏற்படவில்லை. ஜார்ஜின் மனைவி ரோஸ்மேரி ஹேலியை ஜார்ஜுக்குத் தெரியாமல் துப்பறியச் சொல்கிறாள். முக்கியமாக அடுத்த குதிரையைக் காக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். ஹேலிக்கே இங்கே ஏதோ வில்லத்தனம் நடக்கிறது என்று பெரிதாக சந்தேகம் இல்லை. இருந்தாலும் அங்கும் இங்கும் விசாரிக்கிறான். வில்லன் ட்ரெவர் பெட்டிங் ப்ரோக்கர், பயப்படுகிறான். ஹேலியை நீ இதைத் தொடர்ந்தால் உன் இன்னொரு கையையும் வெட்டிவிடுவேன் என்று பயமுறுத்துகிறான்.

ஒரு கை இல்லை என்ற நிலையை சமாளித்து மீண்டும் வாழ ஆரம்பிக்க ஹேலிக்கு சில வருஷங்கள் ஆனது. இரண்டு கையும் இல்லை என்ற நிலையை எதிர் கொள்ள முடியாத ஹேலி இங்கிலாந்தை விட்டே ஓடிவிடுகிறான். ஹேலி காக்க வேண்டிய குதிரை தோற்கிறது.

ஆனால் ஓடி ஒளிந்து கொண்டு தன்னால் வாழ முடியாது, அப்படி வாழ்வது தன்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கையே இல்லை என்பதை ஹேலி ஓரிரு வாரத்தில் புரிந்து கொள்கிறான். மீண்டும் வருகிறான். ட்ரெவர் மட்டுமில்லை, வேறு சில வில்லன்களும் அவன் பின்னால். வழக்கம் போல அடி விழுகிறது. நாயகர்கள் எப்போதும் வெல்லத்தானே வேண்டும்? வில்லன்கள் தோற்கிறார்கள், ட்ரெவர் ஜெயிலுக்குப் போக வேண்டியதில்லை என்றாலும் அவன் தொழில், பணம் எல்லாம் அழிகிறது.

புத்தகத்தின் கடைசி காட்சியில் ட்ரெவர் ஹேலியின் இன்னொரு கையை வெட்ட அவன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறான். ஹேலியால் தப்பிக்க முடியாது. என்ன முடிவு என்பதை வெள்ளித்திரையில் காண்க. 🙂

ஹேலி கதைகளில் ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

dick_francis_odds_againstஇதற்கு முந்தைய கதையான Odds Against (1965) ஹேலியின் குதிரைப் பந்தய விபத்துடன் ஆரம்பிக்கிறது. குதிரை ஓட்டுவதே வாழ்வின் அர்த்தம், அதற்காக மனைவியையும் விவாகரத்து செய்யலாம் என்று வாழ்ந்த ஹேலிபெரும் விரக்தி அடைகிறான். ஒரு துப்பறியும் நிறுவனத்தில் பேருக்கு வேலை செய்கிறான். Depression. இரண்டு வருஷம் இப்படியே சாரமில்லாத வாழ்வு. கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது. முதல் காட்சியில் அவன் சுடப்படுகிறான். உயிருக்கு ஆபத்தில்லை. (நாயகன் இல்லையா?) அந்த நிகழ்ச்சி அவனுக்கு மீண்டும் வாழ இச்சை தருகிறது. சார்லஸ் வாழ்வில் மீண்டும் சுவாரசியம் வர அவனுக்கு ஒரு வில்லனைக் காட்டுகிறார். அந்த வில்லன் ஒரு ரேஸ்கோர்ஸை இடித்து அங்கே ரியல் எஸ்டேட் தொழில் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனைத் தடுக்கும் முயற்சியில் மெதுமெதுவாக ஹேலி வாழ்வுக்குத் திரும்புகிறான். நாவலின் முடிவில் வில்லன் அந்த உபயோகமற்ற கையை போட்டு அடிக்கும் அடியில் கையை வெட்டிவிடுகிறார்கள். கதையின் சிறந்த இடம் தன் கையைப் பற்றிய இழிவுணர்ச்சியை ஹேலி எதிர்கொள்ளும் விதம்தான். அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் முகத்தின் ஒரு பாதியில் பெரும் தீக்காயம். அவர்கள் இருவரும் தங்கள் பயங்களை மற்றொருவர் உதவியுடன் எதிர்கொள்கிறார்கள்.

இரண்டு கதைகள் படிக்க வேண்டுமென்றால் இதையும் பரிந்துரைப்பேன்.

இதைத் தவிர Come to Grief (1995) மற்றும் Under Orders (2006) என்று இரண்டு ஹேலி நாவல்கள் எழுதி இருக்கிறார். படிக்கலாம், போர் அடிக்காது, ஆனால் சாகச நாவல்கள் மட்டுமே.

ஹேலி நாவல்களைப் பரிந்துரைப்பேன் என்றாலும் ஒரே ஒரு ஃப்ரான்சிஸ் நாவல் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeitதான் (1968). Nerve (1964) இன்னொரு சிறந்த சாகச நாவல். Enquiryயையும் (1969) இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

அறம், honor code உள்ள துப்பறிபவர்களைப் பற்றி எழுதிய மற்றவர்களில் டாஷியல் ஹாம்மெட் மற்றும் ரேமண்ட் சாண்ட்லரைக் குறிப்ப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஷெர்லாக ஹோம்ஸ் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
Forfeit
Nerve
Enquiry