2014 சென்னை புத்தகக் கண்காட்சியில் அருணா

2011ல்தான் முதலில் புத்தகத் திருவிழாவிற்குப் போனேன். ஆர்வி படுத்தியதால் அதைப் பற்றி சுமாரான பதிவொன்றும் எழுதினேன். போன வருடம் வளைகுடாப் பகுதியில் இருந்ததால் போக முடியவில்லை, இம்முறை சதாப்தியில் டிக்கெட் முன்பதிவு செய்து நானும் அனுவும், நண்பர்களுக்கும் தகவல் சொல்லி கண்காட்சியின் கடைசி வீக்கெண்டில் போனோம். ரியாதிலிருந்து வந்திருந்த கோபியும், சாமும், சென்னை என்ற நரகத்திற்கு சாம்பிளாக இருக்கும் சென்ட்ரலுக்கு வந்திருந்தார்கள். நேராக கண்காட்சிக்கே 12 மணிக்கெல்லாம் போய்விட்டோம். மதியமாதலால் கூட்டம் அதிகம் இல்லை. அரங்கிற்கு நுழையும் போதே எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனும், ஈரோடு பாரதி புத்தகாலய இளங்கோவும் எதிர்பட்டார்கள். பேச்சு, கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள், புத்தக விலையேற்றம், ஜெயமோகனின் வெண்முரசு என்று போனது. மிக நாட்களாக பதிவில் இல்லாத கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை இந்த முறை தமிழினி பதிப்பித்திருக்கிறது என்றார்.

சந்தியா பதிப்பகம்தான் முதலில் சென்றோம். வண்ணதாசனின் அறிமுகத்தை படித்ததிலிருந்து நான் வாங்க வேண்டும் என்று எண்ணிய, தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் வாங்கினேன். மலையாளத்தில் இதைப்பற்றி வந்திருக்கும் பரிணயம் என்ற படத்தை பல வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். மிக நல்ல படம். தாத்ரிக்குட்டி தன் காலத்தை மீறிய பெண்ணியவாதி என்றே நான் நினைக்கிறேன். யூமா. வாசுகியின் மற்றுமொரு மொழிபெயர்ப்பான ரோமாபுரி யாத்திரையை சாம் மிக பலமாக சிபாரிசு செய்தார், ஜெ.மோ பரித்துரைத்த பா.சரவணனின் கலிங்கத்துப் பரணி உரையையும் வாங்கினேன். சந்தியாவில் வாங்கியவை

 • ஒரு சிறு இசை – வண்ணதாசனின் சமீபத்திய சிறுகதை தொகுப்பு
 • என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ் கவிதை தொகுப்பு
 • தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் – மலையாள மூலம் ஆலங்கோடு பாலகிருஷ்ணன், தமிழில் யூமா. வாசுகி
 • கலிங்கத்துப் பரணி – டாக்டர் பா.சரவணன்
 • ரோமாபுரி யாத்திரை – மலையாள மூலம் பாரேம்மாக்கல் கோவர்ணதோர், தமிழில் – யூமா வாசுகி
 • ஆலய பிரவேச உரிமை – பி.சிதம்பரம் பிள்ளை, தமிழில் பேராசிரியர் சிவ. முருகேசன்
 • செவ்வி – நேர்காணல்கள் – பேரா. தொ. பரமசிவன்
 • நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா
 • நினைவு அலைகள் – டாக்டர் தி.சே.செள. ராஜன்
 • தமிழ் நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் (தொகுப்பு) – ஏ.கே.செட்டியார்

நானும் அனுவும் வேறு வேறு புத்தகங்களையே வாங்குவது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தோம். அனு பெரும்பாலும் கட்டுரை தொகுப்புகளும், கவிதை தொகுப்புகளும் வாங்கினார்.

பின்னர் வம்சி சென்றோம். லட்சுமணப் பெருமாளின் எழுத்துக்களைப் பற்றி நிறைய நண்பர்கள் சொன்னாலும் இதுவரை படித்ததில்லை. அவரின் முழுக் கதை தொகுப்பை வாங்கினேன். வெகு நாட்களாக ஆசைப்பட்ட சுமித்ராவும். வம்சியில் 300 ரூபாயில் விற்கும் அறத்திற்குக் கூட hard copy cover போடாமல் இருப்பது ரொம்ப டூ மச்.

வம்சியில் வாங்கியவை:

 • லட்சுமண பெருமாள் கதைகள்
 • அறம் – ஜெயமோகன்
 • மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன – பாரததேவி
 • சுமித்ரா – மலையாளத்தில் கல்பற்றா நாராயணன், தமிழில் கே.வி. ஷைலஜா
 • கடைகளின் வரிசை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுதிறது என்றார் சாம். இதில் கண்டிப்பாக Murphy’s law உள்ளது. சந்தியா, தமிழினி எல்லாம் வரிசையின் கடைசியில். கூட்டம் கூடக் கூட நிற்க முடியாத சூடும் வெக்கையும்.

  எழுத்து பதிப்பகத்தில் வெள்ளையானை வாங்கினோம். 400 ரூபாயாக இருந்தாலும் மிக நல்ல பதிப்பு. வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு வருவதற்குள் கவிதை கருத்தரங்கு ஆரம்பித்து விட்டது. வெளியில் ஓலை கொட்டகையின் கீழ் அமர்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்து கவிதைக்கு இவ்வளவு ரசிகர்களா தமிழில் என ஒரு நிமிடம் துணுக்குற்றதென்னவோ உண்மை. அரங்கில் அடித்த வெயிலில் இருந்து விடுபட்டு கூட்டிவந்திருக்கும் வயதான அம்மா, அப்பா, சிறு பிள்ளைகளுக்கு பால் ஐஸ் வாங்கித்தந்து உட்கார வைக்க, சுயம் காதலியுடன் அமெரிக்க கார்ன் சாப்பிட ஏதுவான இடம் இது என்று உணர்ந்த வாசகப் பரப்பை தமிழ் பெற்றிருக்கிறது என்று புரிந்த போது சிறிது ஆசுவாசம் ஏற்பட்டது. மேடையில் எக்கசக்க பெண் கவிதாயினிகள் நடுவில் வண்ணதாசன், மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா, சாம்ராஜும். பெரும்பாலான பெண் கவிதாயினிகள் மிக நீண்ட கவிதைகளை கமா, புல்ஸ்டாப் போன்ற தொந்தரவுகள் இன்றி படித்துக் கொண்டேஏஏஏ போனார்கள், ஈழக் கவிதாயினிகளும். சுவிட்சர்லாண்டிலிருந்து வந்திருந்தவர் தன் புறச்சூழலிற்கு எந்த வித தொடர்பும் இல்லாமல் அவர் அக உலகத்திற்குள்ளேயே நீண்ட கவிதைகளைப் படித்தார். கவிஞர் பிருந்தாவின் ஒரு கவிதை பரவாயில்லை ரகமாக இருந்தது. மனுஷ்யபுத்திரனின் கவிதை (அது கவிதையா எனத் தெரியவில்லை) கூட்டத்தை கொஞ்சம் எழுப்பியது. மேடையில் படிக்கக் கூடிய கவிதைகளுக்கு தேவையான brevityயையும், நேர்த்தியான வாசிப்பையும் நிகழ்த்தியவர் வண்ணதாசன் மட்டுமே. அவர் நிஜமாகவே கவிஞர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாமின் முறைக்காக நானும் கோபியும் காத்திருந்தோம். மற்றொரு கவிதாயினி வந்து பீறிடும் விந்து, நடுங்கும் தொடைகள் என்று படிக்க ஆரம்பித்து, கை தட்டியே ஆக வேண்டும் என்று கூட்டத்தை வேறு வற்புறுத்தினார். நட்பிற்காக நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைதான் ஆனாலும் இதற்கு மேல் முடியாது என்று முடிவெடுத்து நானும் கோபியும் வெளிநடப்பு செய்தோம். பெண்ணிய உடல்சார் அரசியல், ஈழம் போன்றவைகளைப் பற்றி இனியும் பேச வேண்டுமா என நினைக்கும் ஒரு தரப்பு உள்ளது. அது என் தரப்பு அல்ல. அவை நம் சமகாலத்தின் மிக முக்கிய பேசுப் பொருள்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் மிக அரதப்பழசான மொழியில், குரலில், சென்றடைபவர்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி எழுதப்படும் இவை நீண்ட ஏக்கத்தையே அளிக்கின்றன. இவர்கள் எல்லாம் தனிமனித சமுதாய அரசியலை, புது வார்ப்பில் கலை ஆக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ள அம்பையையும், ஷோபா சக்தியையும் ஒரு முறை படித்து விட்டு வருவது நல்லது.

  தமிழினியில் மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தமிழினி வசந்தகுமார் எல்லாரும் இருந்தனர். சு. வேணுகோபாலின் கூந்தப்பனை வாங்க வேண்டும் என்று எடுத்தேன். வசந்தகுமார் அவர்கள் பால்கனிகள், ஆட்டமும் வாங்குங்கள் என்றார். நாஞ்சில் நாடன் அவரின் சிற்றிலக்கியங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். தமிழினியில் வாங்கியவை:

  • சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில் நாடன்
  • மணல் கடிகை – எம். கோபாலகிருஷ்ணன்
  • பெயரற்றது – சயந்தன்
  • நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி
  • கூந்தப்பனை, ஆட்டம், பால்கனிகள் – சு. வேணுகோபால்

  கோபியின் நண்பர் கவிஞர் ராஜ சுந்தரராஜன் அவர்களை தமிழினியில் சந்தித்தோம். அனு அவருடைய நாடோடித் தடம் வாங்கினார். கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் எது என்பதற்கு நிறைய பேர் கண்மணி குணசேகரனின் வந்தாரங்குடியையும், அ.மியின் யுத்தங்களுக்கிடையேயையும் சொன்னார்கள். வந்தாரங்குடி பதித்து வரவில்லை. நர்மதாவில் யுத்தங்களுக்கிடையே வாங்கினோம்.

  மேலும் சுற்றி உயிர்மையில் ஆடு ஜீவிதமும், அடையாளத்தில் ஆர். சூடாமணியின் நாகலிங்க மரம், மருதாவில் கீரனூர் ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பையும் மார்கெரித் யூர்ஸ்னாரின் கீழை நாடுக் கதைகள் (தமிழில் ஸ்ரீராம்) வாங்கினோம்.

  மத்தியானம் பார்த்த சுமாரான மைதானம் சாப்பாட்டு குப்பைகளால் நிறைக்கப்பட்டு கால் வைக்க இடமில்லாமல் இருந்தது. சுஜாதா சொல்வதைப் போல தமிழர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வந்ததின் முதல் கடமையான சாப்பாட்டில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார்கள்.

  மறு நாள் காலச்சுவடு போனோம். ட்ராஸ்கி மருதுவின் கோட்டோவியத்தில் தமிழ் பொதுவெளியில் பங்கேற்ற பெண்களின் ஓவியக் காலண்டர் சிறப்பாக இருந்தது. காலச்சுவட்டில் வாங்கியவை:

  • பூக்குழி – பெருமாள் முருகன்
  • உப்பிட்டவரை – ஆ.சிவசுப்பிரமணியன்
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே: சினிமா கட்டுரைகள் – தியோடர் பாஸ்கரன்
  • காயசண்டிகை, பட்சியன் சரிதம் – இளங்கோ கிருஷ்ணன் கவிதை தொகுப்பு
  • சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை, கவிதை தொகுப்பு
  • மதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் சுகுமாரன்
  • ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி, தமிழில் குளச்சல் மு. யூசுப்
  • மீஸான் கற்கள் – மலையாள மூலம் புனத்தில் குஞ்ஞப்துல்லா, தமிழில் குளச்சல் மு. யூசுப்
  • வெல்லிங்டன் – சுகுமாரன்
  • திருடன் – மணியம்பிள்ளை

  வண்ணதாசன், கலாப்ரியா, சந்தியா நடராஜன், நாஞ்சில் நாடன், கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், தமிழினி வசந்தகுமார், ராஜசுந்தரராஜன், சொல்வனம் ரவிசங்கர், தினமணி சிவகுமார், நட்பாஸ் ஆகியவர்களுடனும் கண்காட்சிக்கு வந்திருந்த நண்பர்கள் சீனு, அரவிந்த், தனசேகர் ஆகியோருடனும் புத்தகங்களைப் பற்றி மட்டுமே 2 நாட்கள் பேசியதும், வாங்கிய புத்தகங்களை ஒரு வாரமாக எடுத்து எடுத்து பார்த்து சந்தோஷப்படுவதும் ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கும் பொழுது கிடைக்காத சந்தோஷங்கள்.

  சந்தியா நடராஜனுடனான நீண்ட உரையாடல் சுவாரசியமாக இருந்தது. ரவிசங்கர் பிரக்ஞையில் அம்பையுடன் சேர்ந்து வேலை செய்ததைப் பற்றி சொன்ன அதே மூச்சில் நீங்களும் எழுதிக் கொடுங்க என்றார். கேலி பண்ணுகிறாரா என்று கூர்ந்து பார்த்தேன். சீரியசாகவே சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ் எழுத்து சூழலை நினைத்து சட்டென்று எனக்கு கவலை வந்தது. கடைக டையாக எங்களைக் கூட்டிப் போய் இல்லை என்று பதிப்பகத்தார் சொன்னால் அவர்களிடம் பேசி கிளம்பும் முன் வேண்டிய புத்தகம் அனைத்தும் வாங்க உதவிய சாமுடன் புத்தகம் வாங்கக் கிளம்புவதே அலாதியான அனுபவம். கண்டிப்பா படிக்க வேண்டிய புத்தகம் அருணா இது, தமிழ்ல வந்திருக்கிற முக்கியமான புத்தகம் என்றே பெரும்பாலும் அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களுக்கு முன்னுரையாக சொல்வார். அவர் அப்புத்தகத்தை ஏற்கனவே படித்தும் இருப்பார்.

  2011ல் வாங்கியவைக்கான பட்டியல் சிலிகான் ஷெல்ப் வலைத்தளத்தில் கொடுத்திருக்கிறேன். அதில் யுகத்தின் முடிவில் மட்டுமே இன்னும் படிக்கவில்லை. பருவம் முழுமையாகப் படிக்க ஒரு sabbaticalக்காக காத்திருக்கிறது. அது கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கிறது. புத்தக அலமாரியில் வைக்காமல் ஹாலில் உள்ள மேஜையின் கீழ் இறைத்து வைத்திருக்கிறேன். படித்து விட்டே உள்ளே எடுத்து வைக்க வேண்டும் என்று. முழுமுதல் சோம்பேறியான என்னால் முடியாது என்றாலும் குறைந்தது ஒரு சிறு அறிமுகமாவது படிக்கும் புத்தகங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். Insha allah.

  தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பக்கம்