எம்.ஏ. சுசீலாவின் தமிழ்த்துறை அனுபவங்கள்

m_a_ susilaஇரண்டு வருஷங்களுக்கு முன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த எம்.ஏ. சுசீலாவிடம் “இன்றைய தமிழ் பட்டப் படிப்பில் என்னென்ன மாதிரி தமிழ் நாவல்கள், சிறுகதைகள் இடம் பெறுகின்றன?” என்று கேட்டிருந்தேன். அவரது சுவாரசியமான பதிலை இங்கே தருகிறேன்.

10,15 ஆண்டுகளுக்கு முன்னால் பல்கலைக்கழகமே பாடத் திட்டத்தை வகுத்தது. தற்போது பெரும்பாலான கல்லூரிகள் தன்னாட்சி பெற்றுவிட்டதால் அந்தந்த இடங்களில் பணி புரிவோரின் ரசனை,வாசிப்பு ஆகியவற்றுக்கு ஏற்பவே பாடத் திட்டத்தில் நாவல் மற்றும் சிறுகதைகள் அமைந்து போகின்றன. அகிலன், ஜெயகாந்தன், நா.பா.வோடு காலம் உறைந்து விட்ட பேராசிரியர்களே பெரும்பான்மை என்பது ஒரு பேரவலம். அது என்னைக் கூச்சத்தில் நெளிய வைக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் முத்துசண்முகம் துறைத் தலைவராக வந்தபின் விரைவான சில மாற்றங்கள் ஏற்பட்டன.75-85 காலகட்டத்துப் பல்கலைப்பாடங்களில் பல நவீனபடைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்க்கப்பட்டு, அவர்களை நேரில் வருவித்துக் குறிப்பிடத்தக்க சில கருத்தரங்குகளும் நிகழ்த்தப்பட்டன. காலப்போக்கில் கல்வி சந்தையாக்கப்பட்டு கற்பிப்போரும் அதை ஒரு தொழிலாகவே பார்க்கத் தொடங்கி வாசிப்புப் பழக்கமும் வெகுவாகக் குறையத் தொடங்கிய பிறகு நிலைமை எல்லா இடங்களிலும் மோசம்தான். அடுத்த தலைமுறையின் உற்சாகமான வாசகப் பேராசிரியர்கள் பெருகும்போதுதான் ஆரோக்கியமான நிலை ஏற்படக்கூடும் என நம்பலாம். நான் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவிலும்,தன்னாட்சிக் கல்லூரிப் பாடத்திட்டக் குழுவிலும் பணியாற்றிய நாட்களில் நவீன நாவல் மற்றும் சிறுகதைகளைப் போராடிப் போராடிப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறேன். ஜெயமோகனின் ரப்பர், அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் சிறுகதைகள் ஆகியவற்றை இடம் பெறச் செய்ததும் உண்டு. அவை சரியான புரிதலுடன் போய்ச் சேராத அவலம் கண்டு மனம் வெதும்பியும் இருக்கிறேன். விதிவிலக்காகச் சிலரின் நல்ல முயற்சிகளால் ஒரு சில இடங்களில் மாற்றமும் வந்துகொண்டுதான் இருக்கிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரி ஓர் உதாரணம். சிவில் சர்விஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகப் படிப்பவர்களுக்குக் கூடக் காலாவதியாகிப் போன எழுத்துக்களே பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு வகையில் என் அனுபவத்தில் தமிழிலக்கியத்தை B.A.,M.A.,எனப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களை விடவும் பிற துறை சார்ந்த மாணவர்களே சமகால எழுத்துக்களில் ஆர்வம் காட்டி வாசித்ததையும்,தாங்களும் எழுதவேண்டுமென முயன்றதையும் (நானுமே வேதியியல் படித்துவிட்டு முதுகலை நிலையில் தமிழுக்குச் சென்றவள்தான்.) பார்த்திருக்கிறேன். இயன்றவரையில் நூல்களைச் சுட்டிச் சொல்லியும்,நானே எடுத்துத் தந்தும் அவர்கள் அந்த எழுத்துக்களைச் சென்று சேர உதவியிருக்கிறேன். சமகாலப் படைப்புலகில் குறிப்பிட்ட தடம் பதித்து வரும் உமாமஹேஸ்வரியின் (எங்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த என் மாணவி) படைப்பாக்க வளர்ச்சிக்கு ஒரு வகையில் நானும் ஒரு சிறு தூண்டுதல் என்பதும் ’யாரும் யாருடனும் இல்லை ‘என்ற அவரது நாவல் எனக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு தகவலுக்காக…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்