என் வாழ்வில் இரண்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை. ஒன்று சென்னையின் 1974-இல் விஸ்வநாத் 97 ரன்கள் அடித்த டெஸ்ட் மாட்ச். அப்போது எனக்கு பத்து வயது கூட இருக்காது. கிராம வளர்ப்பு. கில்லி, கோலி, பம்பரம், கபடி எல்லாம் தெரியும். பாட்மிண்டன், வாலிபால் இரண்டும் பார்த்திருக்கிறேன். கிரிக்கெட் பேர் மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். சென்னைக்கு எப்போதாவது போவோம். மாட்ச் ஆரம்பித்த அன்று என் பெரியப்பா என்னை அவரது நண்பர் வீட்டு டெலிவிஷனில் மாட்ச் பார்க்க அழைத்துப் போனார். ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்லிப், ஷார்ட் லெக், கல்லி, ஸ்க்வேர் கட் என்று கேட்கும்போது ஒன்றும் புரியவில்லை, ஏதோ மந்திரம் ஜெபிப்பது போல இருந்தது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. விஸ்வநாத் வேறு லெவலில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆண்டி ராபர்ட்ஸை எதிர்கொள்ளும் திறமை அன்று வேறு யாருக்கும் இல்லை. அதைப் புரிந்து கொள்ள கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் எதுவும் தெரிய வேண்டியதில்லை.
அன்றிலிருந்து என் மனதுக்கு மிக நெருக்கமான கிரிக்கெட் வீரராக விஸ்வநாத்தை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். காவஸ்கரும் சந்திரசேகரும் கபிலும் ஸ்ரீகாந்த்தும் சச்சினும் திராவிடும் கங்குலியும் தோணியும் கும்ப்ளேயும் என்னதான் விளையாடினாலும் விஸ்வநாத்தின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
இந்த உணர்வை ஸ்ரீராம் தயானந்த் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரை மிக அற்புதமாகக் காட்டுகிறது. குள்ளா (விஸ்வநாத்துக்கு வைத்த செல்லப் பெயர்) மீது இந்தக் கட்டுரையாளருக்கு உள்ள அபிமானம், 20-30 ரன்களே அடித்தாலும் அதிலேயே மனம் திளைப்பது, எல். சிவராமகிருஷ்ணன் சென்சுரி அடித்து விஸ்வநாத் விளையாடுவதைப் பார்க்க முடியாமல் செய்தபோது வந்த எரிச்சல் என்று ஒரு தீவிர ரசிகனின் மனநிலையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
விளையாட்டு பற்றி பொதுவாக தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆங்கிலம்தான். அதுவும் என் தலைமுறைக்காரர்களுக்கு விளையாட்டு எழுத்து அறிமுகம் ஆனது ஹிந்து பத்திரிகை மூலம்தான். நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது! புனைவுகளோ வெகு அபூர்வம். கிரிக்கெட் பற்றி சுஜாதா இரண்டொரு கதைகள் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். அவற்றில் பேப்பரில் பேர் சிறுகதை எனக்குப் பிடித்த ஒன்று.
பின்குறிப்பு: இரண்டாவது மறக்க முடியாத விளையாட்டு நிகழ்ச்சி? அமெரிக்கா வந்த அன்று (1992 டிசம்பர்) ஹோட்டல் அறையில் டிவி சானல்களை மாற்றிக் கொண்டிருந்தேன். அமெரிக்கன் ஃபுட்பால் என்றால் என்னவென்றே தெரியாது. ஜோ மான்டானா என்ற quarterback சில வருஷங்களுக்குப் பிறகு உடல்நிலை தேறி மீண்டும் ஆடும் முதல் ஆட்டம் அது. யார் வென்று கொண்டிருக்கிறார்கள் என்பதே சரியாகப் புரியாவிட்டாலும் மான்டானா விளையாடுவது வேறு லெவல் என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது….
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
தொடர்புடைய சுட்டி: ஸ்ரீராம் தயானந்தின் கட்டுரை
2 thoughts on “விளையாட்டு எழுத்து – குண்டப்பா விஸ்வநாத் பற்றி”