தமிழ் ஹிந்து தளத்தில் மேலும் ஒரு சிறுகதை

ஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி!

சிறுகதை கொஞ்சமாவது உருப்படியாக உருவாக உதவியவர்கள் எம்.ஏ. சுசீலா மேடம், விசு மற்றும் முகின் மற்றும் ஜடாயு. சுசீலா இந்தக் கதையின் முதல் வடிவம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்று சொன்னார். அவர் சொன்ன பிறகு மீண்டும் படித்துப் பார்த்தேன், எனக்கும் அப்படித்தான் தோன்றியது. மாற்றி எழுதியே தீர வேண்டும் என்று தெரிந்தது.

முதலில் சிறுகதைக்கு “முகநக நட்பது” என்று பேர் வைத்திருந்தேன். ஜடாயு மிகவும் வெளிப்படையான பெயர், வேறு மாற்ற முடியுமா என்று கேட்டார். “ஆயிரம் துச்சாதனர்” கொஞ்சம் பரவாயில்லை. ஜடாயு

கர்ணனின் குடும்பம், பேரக் குழந்தைகள் பற்றியெல்லாம் பைரப்பா “பருவ”த்தில் எழுத்யிருக்கிறார். சூதர்களின் சமூக அந்தஸ்து, அவர்கள் ஒரு குழுவாக இயங்குவது எல்லாம் வரும். உங்கள் கதை எழுப்புவது ஒரு சுவாரஸ்யமான ஊகம். அத்தகைய ஊகத்திற்கு வியாச பாரத்தில் இடமும் இருக்கிறது

என்று சொன்னது சரி ஐடியா ரொம்ப மோசமில்லை என்று கொஞ்சம் நம்பிக்கை தந்தது.

Visuவிசு மிகத் தெளிவாக சில கருத்துகளை சொல்லி இருந்தான். அது எழுத ஆசைப்படும் எல்லாருக்குமே உதவும் என்று இங்கு பதிக்கிறேன்.

உங்கள் கதையை படித்தேன். உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. சிக்கலில்லாத, நேரிடையான எளிய கதை. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை “அறிய” முடிகிறது. (உதா: த்யுதிக்கு வருத்தமே இல்லை. பானுமதிக்கு வருத்தம், காட்டமுடியவில்லை. துச்சாதனனுக்கும், சகுனிக்கும் வெளிப்படையாகவே வருத்தம்). தூணைப் பிளந்து வந்த சீயம் உவமை நன்றாக இருந்தது.

எனக்கு கதையை “உணர” வேண்டும். அதற்கு காட்சிப்படுத்துதல் நிறைய உதவும். உதாரணம்: அந்த அரண்மனை, அவர்கள் அனிந்த உடைகள், ஆபரணங்கள், அமரும் ஆசனங்கள், சேடியர்/காவலர் அறிவிக்கும் முறைகள்,… கதையின் நீளம் அதிகரித்துவிடும் சாத்தியம் இருக்கிறது. பரவாயில்லை, எழுதுங்கள். தேவைப்பட்டால் சிறுகதைக்கு பதிலாக குறுநாவலாக தலைப்பிட்டுக்கொள்ளலாம்.

மேலும் புதிய உவமைகள் தேவை.

முடிந்த வரை இதுபோன்ற வரிகளை தவிர்க்கவும். (கொலைவெறி) “துச்சாதனன் உன் மீது கொலை வெறியில் இருக்கிறான்.”

அதே போல, இந்தக் கதை மரபான, ஏற்கனவே தெரிந்த ஒரு முடிவை மீண்டும் சொல்வது போல இருக்கிறது. (கர்ணனுக்கும் துரியனுக்கும் உள்ள நட்பின் ஆழம்). மாற்று சாத்தியங்கள் கதையில் வெளிப்படவில்லை; கதையை படித்ததற்குபின் மனதில் விரியும் கதை என எதுவும் இல்லை. ( நீங்கள் கடைசியில் சேர்த்திருக்கும் அடிக்குறிப்பு, ஒரு நல்ல மாற்று வாசிப்பு சாத்தியத்தை உள்ளடக்கியது.)

மாற்று சாத்தியங்கள் பற்றி விசு சொல்வது சரியே, முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் அந்த மாற்று சாத்தியங்கள் மனதில் கதையாக உருவாகவே இல்லை என்பதுதான் பிரச்சினை.

முகின் அடித்த சில கமெண்டுகள்.

தொடக்கத்தில் உள்ள “அதிகாரி”களை எடுத்துவிட்டு அந்த கால வார்த்தைகளை போடவும். எனக்கு “அதிகாரி வந்தா சல்யூட் அடிக்க தெரியாதா ராஸ்கல்” என்ற வடிவேலு ஜோக் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கிறது.
…”ஓடோடி வருகிறாரம்மா உன் கணவர்!” நடிகை சாவித்திரி பேசுவதைப் போல உள்ளது. அதைப் போல தான் “ஏனடா கர்ணா..பாரடா கர்ணா” இன்ன பிற.

தமிழ் ஹிந்து தளத்தில் Karna’s Wife: The Outcast’s Queen என்று ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் சேர்க்கப்பட்டிருக்கிறது. நான் இது வரை இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. யாராவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்