எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நிலைமை கவலைகிடம் என்ற தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
அவருக்கு யூலஜி பற்றி ஒரு கருத்து உண்டு. மனிதர் யூலஜி என்றால் பாராட்ட வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாது என்று கூறியிருக்கிறார். அதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணவும் செய்திருக்கிறார். அண்ணாவின் யூலஜியில். அதை பல முறை இங்கே நாம் பதிந்திருக்கிறோம்.
ஜெயாகாந்தன் சந்தேகமில்லாமல் தன் கருத்துகளை முன்வைத்த ஒரு சமுதாய முற்போக்கு எழுத்தாளரே. அந்த முற்போக்கு எழுத்தில் எழுந்த நன்மைகள் சந்தேகமில்லாமல் பல. சந்தேகமில்லாமல் சில தீமைகளும் உண்டு. அந்த விளக்கங்கள் எல்லாம் இன்னொரு சமயம். ஆனால் என்னைக் கவர்ந்த எழுத்துக்களில் அவருடைய எழுத்துக்களும் உண்டு.
அவர் இன்னும் எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மிக “சிறிய” வயதில் நிறுத்திக் கொண்டார். கவனம் சிதறி வாழ்க்கைப் போராட்டத்தில் அரசியலுடன் சமரசம் செய்து அரசியலிலும் சில சமரசங்கள் செய்துள்ளார். ஆனால் தேவையிருக்கிறது. Free will என்று ஒன்று உண்மையில் உள்ளதா?
அவர் உடல்நலம் தேறி மீண்டும் எழுத்துலகை அலங்கரிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்… என்று சொன்னால் மருத்துவமனையிலிருந்து எழுந்து வந்து என்னுடைய பின்னங்கழுத்தில் ஒரு அடி வைப்பார். அது அவருக்குப் பிடிக்காத முகஸ்துதி என்பதால் இதைச் சொல்கிறேன்: முடிவு என்பது நாம் நம்மின் அகத்தையும் புறத்தையும் பிரயோகம் மற்றும் துர்ப்பிரயோகப் படுத்தியதால் இயற்க்கைக்கு கட்ட வேண்டிய வரி. அந்த வரியை நாம் கட்டித்தான் ஆக வேண்டும். வரியை பின்னகர்த்தாலும் (postpone). ஆனால் இயற்கை அதை வசூலிக்காமல் விடாது. எனவே உடல் நலம் தேறினாலும் தேறாவிட்டாலும் மேலும் கஷ்டங்கள், உபாதைகள் அனுபவிக்கக்கூடாது என்று மட்டும் ஆசைப் பட்டுக் கொள்கிறேன். 80 வயதில் (மனதால் தாங்க முடியும் என்றாலும்) உடல் தடுமாறும்.