ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”

இது ஒரு மீள்பதிவு. முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை பற்றி சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருப்பதால் மீண்டும் பதித்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.

அதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, கேஸ் முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.

வழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

ராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ்சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ ஹரிபாபுவின் காமிரா.

காமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.

ஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா? பயங்கர சைக்கோத்தனமாக இருக்கிறது.

ரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா? நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினால்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் எம்பராஸ் செய்ய வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். இது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.

ரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போலீசுக்குத் தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன அட்ரஸ் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.

புத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:

 1. ராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதி முக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.
 2. ராஜீவ் கொல்லப்படுவதை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், ஃபோட்டோ எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
 3. தமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா லெவலிலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
 4. வைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை soft ஆகத்தான் நடத்தி இருக்கிறார்கள்.
 5. எனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்

11 thoughts on “ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”

 1. இந்த புத்தகம் படித்தபோது எனக்கு தோன்றியது என்னன்னா,இதையே ஒரு பிக்ஷன் கதையாக யாரவது எழுதி இருந்தால்,நான் கதையில் மட்டமான லாஜிக் என்று சொல்லிஇருப்பேன்.அதெப்படி இத்தனை பேர் இருக்கும் போது வெடிகுண்டு பூமாலையை அவ்வளவு ஈசியா கூட்டத்துக்கு கொண்டு வந்திருக்க முடியும்.அதெப்படி ராஜீவ் மட்டுமே செத்தார்,கூட இருந்த மத்த தலைவர்கள் எல்லாம் சாகலை.அதெப்படி மரகதம் பத்தி யாரும் எதுவும் பேசலை.அதெப்படி முகவுக்கு தேர்தலில் தோல்வி வரும்னு தெரிஞ்சும் சும்மா இருந்தார்.அதெப்படி ராஜீவ் ஹெலிகாப்டர் பிரச்சினையால் லேட்டா வருவது,போலீஸ்க்கு தெரியலை,ஆனா புலிகளுக்கு தெரிஞ்சிருக்கு.கதைக்காக வேணும்னே அங்கே ஒரு கேமராவை போட்டுட்டு போனது மாதிரி இருக்குதே.இப்படி எல்லாம் காரணம் சொல்லி இருப்பேன்.

  ஆனால் இத்தனையும் உண்மையாக நடந்திருக்கிறது என்றால் நம்பித்தான் ஆக வேண்டி உள்ளது.

  some times truth is stranger than fiction.

  Like

 2. ஆம். நல்ல ஆவணம். சமீபத்தில் தான் படித்தேன்.

  RV, ஃபோட்டோவில் கமெண்ட்ஸ் எதோ தமிழ் ஃபெனட்டிக் எழுதியிருப்பது போலிருக்கிறது. ….detonate himself…?

  Like

 3. //சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? //

  போட்டோக்களை ஆதாரமாக மேலிடத்துக்கு அனுப்பத்தான் வேறு எதற்கு?

  நானும் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். கார்த்திகேயனின் நூலையும், சுப்ரமண்யசாமி எழுதிய வெர்ஷனையும், (சுதாங்கன் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தா. பாண்டியன் இது பற்றி எழுதிய புத்தகத்தையும் முழுமையாகப் படித்திருக்கிறேன் (காயம் பட்டவர்களில் தா. பாண்டியனும் ஒருவர்)

  படித்ததில் தெரிந்து கொண்டது:

  ராஜீவ் மரணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு சக்திகள் விரும்பியிருக்கின்றன.

  குறிப்பிட்ட சில அயல்நாட்டினருக்கு ராஜீவுக்கு ஆபத்து ஏற்படும் என்று முன்பே தெரிந்திருக்கிறது.

  அவர்களில் ஒரு சிலர் (யாஷர் அராஃப்த் மாதிரி) ராஜீவுக்கு அதுபற்றி எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்

  ஆனால் ராஜீவ் அவற்றில் அக்கறை காட்டவில்லை. அல்லது தனக்கு அப்படி நிகழாது என்ற நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்.

  இந்தியாவில்/ தமிழகத்தில் ஒரு சிலருக்கு “ஏதோ நடக்கப் போகிறது” என்பது முன்பே தெரிந்திருக்கிறது. சில ‘சக்திகள்’ மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை அவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் கடைசி நேரத்தில் தங்களை தற்காத்துக் கொண்டு விட்டனர்.

  ராஜீவ் மரணத்தால் வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல; உள்நாட்டு சக்திகளும் ஆதாயம் அடைந்திருக்கின்றன. அதை விரும்பியிருக்கின்றன.

  என்னுடைய கேள்வி எல்லாம், ரகோத்தமன் ஏன் இந்த நூலில் உள்ள விவரங்களை விசாரணையின் போதே பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பதுதான்.

  எனிவே நல்ல புத்தகம்தான். நான் மேலே குறிப்பிட்ட மற்ற புத்தகங்களையும் சேர்த்துப் படித்தால் முழுமையான ஒரு வெர்ஷன் கிடைக்கும். அது ராஜீவ் கொலையைப் பற்றி மிக விரிவான ஒரு அறிமுகமாக இருக்கும்.

  Like

 4. ஷ்யூர்வா, உண்மை, முற்றிலும் உண்மை.
  பக்ஸ், ஃபோட்டோவை மாற்றிவிட்டேன்.
  பாஸ்டன் பாலா, என் பதிவிற்கு சுட்டி தந்தற்கு நன்றி!
  ரமணன், // போட்டோக்களை ஆதாரமாக மேலிடத்துக்கு அனுப்பத்தான் வேறு எதற்கு? // என்ன சார், ராஜீவ் இறந்தால் பேப்பரில் ஃபோட்டோ வராமலா போய்விடும்?
  // ரகோத்தமன் ஏன் இந்த நூலில் உள்ள விவரங்களை விசாரணையின் போதே பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பதுதான். // ரகோத்தமன் தன் பணியின் கட்டுப்பாடுகள் காரணமாக பிரபாகரன் மறைவுக்கு முன் எதையும் சொல்ல முடியவில்லை என்று புத்தகத்தில் விளக்குகிறார். அதாவது கேஸ் நடக்கிறது, அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிடிபடாதவரை எதையும் சொல்லக்கூடாது என்று விதிமுறைகள் இருக்கின்றனவாம்.

  Like

 5. காங்கிரஸ், அதிமுக கூட்டணி வெற்றிக்காக நடந்த அந்தக்கூட்டத்தில் ஜெயலலிதாவும் கலந்துகொள்வதாக இருந்ததாகவும் கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்துச்செய்யப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது. அதற்கு முந்தைய கூட்டம் வரையில் ராஜீவுடன் கலந்துகொண்ட சோனியா ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்கு வராமல் டெல்லி திரும்பி விட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மையென்பது தெரியவில்லை. அப்படிப்பார்த்தால் ராஜீவின் மரணம், ராஜீவைத்தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இல்லாவிட்டால் ராஜீவ் அருகிலேயே நின்றிருக்க வேண்டிய மூப்பனார் எல்லாம் எங்கோ நின்றிருந்தது எப்படி?.

  இந்தச்சதி எவ்வளவு பயங்கரமாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நினைத்தால் இப்போதும் திகில் ஏற்படுகிறது. கையில் மாலையுடன் தனு நிற்கும் காட்சியும், உடல் சிதறுண்டு ராஜீவ் கிடக்கும் காட்சியும் ஜென்மத்துக்கும் நம் கண்களை விட்டு அகலாது.

  Like

  1. சாரதா, சோனியா முந்தைய கூட்டத்துக்கு வந்ததாக இந்தப் புத்தகத்தில் இல்லை. ஜனார்த்தன் ரெட்டி விமானம் தாமதம் ஆனதால் விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிட்டார் என்று வருகிறது.

   Like

 6. உண்மை. விசாரணை நினைத்தாற்போல செல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார். சாட்சியம் ஏதுமின்றித் துவங்கி அல்லது ஒரு காமிராவில் தொடங்கி கொலையாளிகள் வரை சென்றது மிகப்பெரிய விஷயம். பெங்களூரில் சிவராசன் குழுவினரைப் பிடிக்க அனுமதி கொடுக்கத் தயங்கியதைக் கடுமையாகச் சாடியிருப்பார்.

  இந்தப் புத்தகம் பற்றிய எனது பார்வை http://kadaisibench.wordpress.com/2013/04/01/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE/

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.