பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. இன்று புத்தகத் தவிர்த்துரை! பாலகுமாரனின் இதிகாசம், தொன்மம், மகான்களின் வாழ்க்கை, அமானுஷ்யக் கதைகளைப் அனேகமாகத் தவிர்த்துவிடலாம்.
பாலகுமாரன் படைப்புகளில் வெகு சிலவே இலக்கியம். அவர் தொன்மங்கள், இதிகாசங்கள், மகான்கள் பற்றி எழுதுவதெல்லாம் அனேகமாக இலக்கியத் தரத்தோடு இருக்காது. முதல் காரணம் அலுப்புத் தட்டுவதுதான். சுவாரசியம் என்பது குறைவாகவே இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் உபதேசமாக பொழிந்துவிடுவார். நிறைய அலட்டல், pretentiousness தெரியும். ஏதோ கோவிலில் போரடிக்கும் கதாகாலட்சேபம் கேட்பது போல இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இவை மறுவாசிப்புகள், மறு ஆக்கங்கள், ஏன் சுவாரசியமான கதைகள் கூட அல்ல. பக்த விஜயம் (பக்தி இயக்கத்தின் பெரும் தலைகளின் வாழ்க்கைக் குறிப்புகள் – நாமதேவ், சோகாமேளர், துக்காராம், மீராபாய், கோராகும்பார், சாந்த சக்குபாய், ஜனாபாய்…) கூட இவரது பல மகான்களின் கதைகளை விட படிக்கக் கூடிய விதத்தில் இருக்கும். இவற்றின் ஒரே பயன் நமக்கே மறந்து போயிருக்கும் சில தொன்மக் கதைகளை நினைவு கூர்வதுதான். தொன்மங்களில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் நான் கையில் கிடைப்பதை விடாமல் படித்திருக்கிறேன். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட நான் பரிந்துரைக்க மாட்டேன்.
இவற்றைத் தவிர அமானுஷ்யக் கூறு உள்ள கதைகளை நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார். பொதுவாக அவை மகா மோசமாக இருக்கும். மந்திரங்களின் மகிமைகள், அந்தணர்கள் (பிராமணர்கள் இல்லை அந்தணர்கள்) வேதம், யோகம், பூஜை, மந்திரம் இத்யாதியை கருத்தோடு பேண வேண்டிய அவசியம், ஏதோ ஒரு குரு அல்லது கடவுள் வழிநடத்திப் போவது என்று ஒரு தீம் வரும். பல சமயம் குழந்தைத்தனமாக பிரார்த்தனை செய், ஆத்தாவுக்குப் படையல் வை, கணபதி உச்சிஷ்ட மந்திரம் ஜபி, உனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற ரேஞ்சில்தான் கதை இருக்கும். அவரது சொந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும், அதை அம்புலி மாமாத்தனக் கதைகளில் எழுதுவார். இவற்றில் அநேக கதைகள் தவிர்க்க வேண்டியவையே. Wish fulfilment, அவர் கண்ட பகல் கனவு எல்லாம் கதையாகிவிடுமா? சில சமயம் இந்தக் கதைகளில் பிற கூறுகள் இணைந்து வரும், உதாரணமாக மஞ்சக்காணியில் பட்டிமன்றக் காட்சிகள், எம்ஜிஆர் ஒரு ஊனமுற்ற பெண் வீட்டுக்குப் போய் பசும்பால் குடித்த காட்சிகள். அவை மட்டுமே கொஞ்சமாவது சுமாராக இருக்கும்.
ஆனால் இவற்றிலும் ஒரு ஜெம் உண்டு. என்னருகில் நீ இருந்தால் கச்சிதமான, சிறப்பான கதை. ராஜராஜ சோழனின் படைத்தலைவன் காரி குளிப்பாகை இப்போது தாம்பரத்தில் பிறந்திருக்கிறான். அவனுக்கு ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர். இதற்கு நான் எழுதி இருக்கும் கதை சுருக்கம் சரியில்லை, நேராக புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். இதை பாலகுமாரனின் சரித்திரக் கதை என்றும் வகைப்படுத்தலாம். இப்படி ஒரு முத்துக்காக நூறு மாத நாவல் படிக்க வேண்டி இருப்பது பெரிய கஷ்டம்!
இன்னும் ஒரு படிக்கக் கூடிய கதை நினைவு வருகிறது. கதை பெயர்தான் மறந்துவிட்டது. (கடல் பாலம்? கடலோரக் குருவிகள்?) அம்மன் வழிபாடு பற்றி ஒரு கதை. ஆரம்பத்தில் ஏதோ பைப்பிலிருந்து தண்ணீர் இழுப்பதோடு ஆரம்பிக்கும். இறுதியில் அம்மன் சிலையோடு ஓடிவிடுவார்கள். புடவை கட்டிக் கொண்டு அம்மனை வழிபடுவது என்றெல்லாம் வரும்.
கீழே கண்ட குறிப்புகள் புத்தகங்களைத் தவிர்க்கத்தான்.
இதிகாசக் கதைகள்
உத்தமன்: பரசுராமர், விஸ்வாமித்திரர் தொன்மங்களைத் திருப்பிச் சொல்கிறார். படிக்கலாம். இதிகாசக் கதைகளில் எதையாவது படித்தே ஆக வேண்டும் என்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.
பட்டாபிஷேகம்: மீண்டும் விஸ்வாமித்திரர் தொன்மம். விஸ்வாமித்ரர் வசிஷ்டரோடு பிணங்கி பிரம்ம ரிஷியானது, மற்றும் பாலகாண்டத்து ராம லட்சுமணர்களை வழி நடத்தியது. இதையெல்லாம் படிப்பதை விட காலட்சேபம் கேட்கலாம்.
கடவுள் வீடு: மகாபாரதப் பித்து உள்ள எனக்கே அலுப்பு தட்டும்படி எழுதி இருக்கிறார். விதுரனின் கதை, எக்கச்சக்க உபதேசம்.
கிருஷ்ண அர்ஜுனன்: கிருஷ்ணன் ஒரு கந்தர்வனின் தலையை தன காலடியில் வீழ்த்துவதாக சபதம் செய்ய அவனைக் காப்பாற்றுவதாக அர்ஜுனன் வாக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணனோடு போர் புரிவதாக ஒரு கதை உண்டு. அதை எழுதி இருக்கிறார், தவிர்க்கலாம்.
என்னுயிர்த் தோழி: வசுதேவர்-தேவகி-கம்சனைப் பற்றி ஒரு மாத நாவல். தவிர்க்கலாம்.
அம்பையின் கதை: அம்பையின் கதையேதான், சொல்லும்படி ஒரு விஷயமும் இல்லை. தவிர்க்கலாம்.
பெண்ணாசை: பீஷ்மர் கதையை ஜாதியை வைத்து மறு வாசிப்பு செய்திருக்கிறார். அதாவது சத்யவதியின் படகுக்கார ஜாதியினர் க்ஷத்ரியர்களால் நசுக்கப்பட்டதாகவும், அவர்களின் துயர் தீர்க்கவே தங்கள் ரத்தம் உள்ள வாரிசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டதாகவும், இதை பீஷ்மரும் புரிந்துகொண்டதாகவும் கதை. சரியாக வரவில்லை. கல்யாணம் ஆனபிறகு சத்யவதி க்ஷத்ரியர் தவிர்த்த மற்ற ஜாதியினருக்கு ஏதாவது செய்ததாக பாரதத்தில் இருந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மை கூடி இருக்கும். பஸ்ஸில் படிக்கலாம்.
இதை விட நான் எழுதிய “மீன்வாசம்” சிறுகதை நன்றாக இருக்கும். ஜெயமோகன் எழுதி வரும் வெண்முரசிலும் க்ஷத்ரியர்-பரதவர் பற்றி எல்லாம் வருகிறது. அது மலை என்றால் என் கதை சமவெளி, இது மடு.
தனிமைத் தவம்: – கீசக வதம் கதை.
செம்மை: பாரதப் போரைத் தடுக்க வழி உண்டா என்று கண்ணன் கேட்க, சகதேவன் உன்னைக் கட்டிப் போட்டால் தடுக்கலாம் என்று சொன்னானாம், செய்தும் காண்பித்தானாம். அதை போரடிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார்.
கர்ணனின் கதை: – கர்ணனைப் பற்றியும் ஒரு கதை உண்டு, பெரிதாக சொல்ல எதுவுமில்லை.
திருவடி: வாமன அவதாரக் கதையை இவ்வளவு தூரம் அலுப்புத் தட்டும்படி யாரும் சொல்லி நான் பார்த்ததில்லை. அலட்டல் வேறு நிறைய தெரிகிறது.
நாரதர் கதைகள்: எல்லா கதைகளிலும் நாரதரைப் புகுத்தி கடுப்படிக்கிறார். பசுவைப் பற்றி படித்துவிட்டு வந்த மாணவனிடம் தென்னைமரம் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால் பசுவைப் பற்றி எழுதிவிட்டு தென்னைமரத்தில் அந்தப் பசுவை கட்டினார்கள் என்று முடித்துவிட்டானாம். அந்த மாதிரி எந்தக் கதையாக இருந்தாலும் நாரதர் வந்து விசாரித்தார் என்று எழுதிவிடுகிறார்.
கதை கதையாம் காரணமாம்: பல் தொன்மக் கதைகளை மீண்டும் சொல்கிறார்.
தொன்மக் கதைகள்
ஆலமரம்: பாடகச்சேரி ராமலிங்கம் பற்றி ஒரு கதை
அன்பரசு: மாணிக்கவாசகர்தான் கதையின் ஹீரோ. நரியை பரியாக்குவதும் மீண்டும் நரியாக்குவதும்தான் கதையின் முக்கிய நிகழ்ச்சி. லாஜிக் இல்லை. குதிரை வாங்கினால் அதைக் கண்டு மற்ற மன்னர்கள் பொறாமைப்படுவார்கள், குதிரை வாங்க வரி விதித்து மக்கள் கஷ்டப்படுவார்கள் என்றெல்லாம் யோசிக்கும் மணிவாசகர் மற்ற அரசுகளை பயமுறுத்த 1008 தேர், சக்கரம் வீசும் தனிப்படையை மட்டும் உருவாக்குவாராம். ஏன்யா அப்போது பிற மன்னர்கள் பொறாமைப்படமாட்டார்களா இல்லை படைக்கு சம்பளம் கொடுக்க வரி எல்லாம் வேண்டாம், நேராக என்னிடமிருந்தே வாங்கிக் கொள்ளலாம் என்று சிவபெருமான் சொன்னாரா? திருவிளையாடல் புராணத்தையோ, பெரிய புராணத்தையோ நேரடியாக படிக்கலாம், இதை தவிர்த்து விடலாம்.
சக்ரவாஹம்: துகாராம் கதை
என் கண்மணித் தாமரை: பெயர் சரிதானா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அபிராமிபட்டர் பற்றிய கதை. இதுதான் இந்த மாதிரி கதைகளில் சிறந்தது. That’s not saying much.
காதல் அரங்கம்: உறங்காவில்லி-பொன்னாச்சி கதை.
காதற்பெருமான்: அருணகிரிநாதரின் கதை. பஸ்ஸில் படிக்கலாம்.
முதிர்கன்னி: அவ்வையின் கதை போரடிக்கும் விதத்தில்
ஒரு சொல்: ஒரு legend உண்டு – முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட ஒரு பெண் மீண்டும் வந்து தன் கணவன் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறாள். கற்பிழந்த பெண்ணாயிற்றே என்று குழப்பம். கடைசியில் ஒரு “மகானிடம்” கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் ராமா ராமா ராம என்று மூன்று முறை சொல்லி குளத்தில் முங்கி எழுங்கள் என்று. மகானின் கூட இருப்பவர் கோபிக்கிறார், ராம நாமத்தின் சக்தி அறியாதவனா நீ, மூன்று முறை எதற்கு, ஒரு முறையே போதுமே என்று. இந்த நிகழ்ச்சியை போதேந்திரர் பார்ப்பதாக பாலகுமரான் இந்த கதையை எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.
பேய்க்கரும்பு: பட்டினத்தார் கதையை வைத்து போரடிக்கிறார்.
பொன்வட்டில்: தொண்டரடிப்பொடியாழ்வார்
புருஷ வதம் கதை பெயர் நினைவில்லை. பழையனூர் நீலி. நீலியை விட்டுவிட்டு அவள் கணவன் புவனபதியின் பிரதாபம்தான் பெரிதாக இருக்கிறது. தவிர்த்துவிடுங்கள்.
பெரிய புராணக் கதைகள்: அனேகமாக நேரடியாக பெரிய புராணக் கதைகளை திருப்பி சொல்கிறார். சில சமயங்களில் கோணத்தை மாற்றுகிறார். எடுத்துக்காட்டாக சிறுத்தொண்டர் கதையை வீட்டு வேலைக்காரி சொல்கிறார். இப்படி கோணத்தை மாற்றுவது நல்ல ஐடியா, ஆனால் அதை சரியாக செயல்படுத்த வேண்டுமே? என்னை பெரிதாகக் கவரவில்லை.
சிநேகிதன்: சுந்தரர் நாயன்மார்களில் சுவாரசியமானவர். அவருக்கு மட்டும் சிவன் தூது போவானேன்? அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போல உதவி செய்வானேன்? இந்த சுவாரசியமான விஷயத்தை போரடிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார்.
தங்கக் கை: சேஷாத்ரி சுவாமிகள் பற்றி கொஞ்சம்.
அமானுஷ்யக் கதைகள்
சொர்க்கம் நடுவிலே: கலந்து கட்டி அடிக்கிறார். இறப்புக்குப் பிறகு என்ன என்ற பௌராணிக யூகங்களை எழுதி இருக்கிறார். ஒன்றும் பிரமாதப்படுத்திவிடவில்லை என்றாலும் அந்தத் தளத்தைத் தொட்டவர்கள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து சம்பத்தின் இடைவெளி மட்டுமே.
திருப்பூந்துருத்தி: இந்தப் புத்தகத்திலும் குறிப்பிட வேண்டிய அம்சம் அனேகமாக இறந்து உயிர் பிழைக்கும் ஒருவனின் out of body அனுபவங்கள் மட்டுமே. ஆனால் உடனே சாமியார், கூடுவிட்டுக் கூடு பாய்வது என்று போய்விடுகிறார்.
காசும் பிறப்பும்: இது ஓரளவு பிரபலமான நாவல். அவர் கண்ட பகல் கனவு மட்டுமே. சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் தான் கர்நாடகத்தில் ஒரு விவசாயியாக, தஞ்சாவூரில் ஒரு நாதஸ்வரக்காரனாக, திருப்பதியில் ஒரு வேத விற்பன்னனாக, ஒரு சாமியாராகப் பிறந்திருந்தால் வாழ்க்கை எப்படிப் போயிருக்கும் என்று யோசித்து அதை தன் நான்கு பிறவிகளாக எழுதி இருக்கிறார். Pretentiousness, அலட்டல் அதிகம். தவிர்க்கலாம்.
மஞ்சக்காணி: எம்ஜிஆர் அரசியல், supernatural ஆவி, காமம் என்று பல ஃபேவரிட் தீம்கள் இணைந்து வருகின்றன. பட்டிமன்றத்தில் தூள் பரத்தும் மாதவி; காதலன்+முறைப்பையன் செல்வா; செல்வாவின் அமைச்சர் அப்பா; அப்பா கைவிட்ட செல்வாவின் அம்மா; அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் அலையும் ஆவிகள் என்று கதை போகிறது. படிக்கலாம். குறிப்பாக மதுரையில் எம்ஜிஆர் ஒரு ஊனமுற்ற பெண் வீட்டுக்குப் போய் பசும்பால் குடித்த காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன.
ஆயிரம் கண்ணி: ஒரு சின்ன neighborhood. அங்கே ஆயிரம் கண்ணி அம்மனின் கோவில். கோவிலில் கும்பிடுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதை என்று எழுதுகிறார்.
அருகம்புல்: ஆவியாக இருக்கும் ஒரு அம்மா இன்று வீடு கட்டும்/இடிக்கும் இருவரை சேர்த்து வைக்கிறாள். தவிர்க்கலாம்.
அவரும் அவளும்: சீனிவாசன் ஊர் ஊராய் சுற்றுவாராம். போகிற ஊரில் எல்லாம் யாராவது வந்து வீட்டுக்குக் கூட்டிப் போய் உபசரிப்பார்களாம். இதில் ஒரு கோவில் புராணம் வேறு. வாசகர்கள் மேல் என்ன கோபமோ இவ்வளவு மோசமாய் எழுதுகிறார்.
தாசி: இந்த ஜன்மத்தில் பியூட்டி பார்லர். போன ஜன்மத்தில் தாசி. பாலகுமாரனுக்கு இந்த தாசி obsession விடாது.
எட்ட நின்று சுட்ட நிலா: பாபு ஞானி ஆகிவிடுகிறான். அவன் குடும்பத்தில் யாரும் நல்ல வழியில் போகவில்லை. அக்கா ஊர் மேய்கிறாள், அப்பா கோவில் சொத்தை திருடுகிறார்… தவிர்க்கலாம்.
பூசுமஞ்சள்: மஞ்சள் வியாபாரம் செய்து வாழும் குடும்பம் ஒன்று விட்ட அண்ணனால் ஏமாற்றப்படுகிறது. அப்பா இறக்க, அம்மா ஏறக்குறைய சூனியம் வைத்து அண்ணன் குடும்பம் அழிகிறது. இதெல்லாம் ஒரு கதையா? பாலகுமாரன் வீணாக தன் தனிப்பட்ட மத, அமானுஷ்ய நம்பிக்கைகளை பரப்புகிறார்.
புஷ்பக விமானம்: பல கதைகளை கலந்து கட்டி அவியலாக்கி கெடுத்துவிட்டார். பட்டிக்காட்டு வேளாளர் குடும்பத்திலிருந்து டாகடர் ஆகும் பையனின் கதை, வீராயி என்ற நாட்டார் தெய்வம், தலித் ஜாதியினர் ஒடுக்கப்படுதல் என்று பல கோணங்கள். தவிர்க்கலாம்.
வாலிப வேடம்: பத்மினி என்ற பெண்ணின் மேல் சமயபுரம் மாரியம்மன் வருகிறாள். அதனால் முரளி என்ற, எம்.எஸ். சுவாமிநாதனிடம் வேலை செய்யும் ஒரு வாலிபனின் வாழ்க்கை மாறுகிறது. திருமங்கலக்குடி என் ஒன்று விட்ட சித்தியின் ஊர். சித்தி கல்யாணத்துக்கு சிறு வயதில் அங்கே போயிருக்கிறேன். இந்த கதையின் தளம் அந்த ஊர்தான். நாஸ்டால்ஜியா! தவிர்க்கலாம்.
தேடிக் கண்டுகொண்டேன் என்ற அபுனைவையும் பற்றி இங்கேயே எழுதிவிடுகிறேன். பல ஊர் கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறார்.
ஸ்ரீரமண மஹரிஷி பற்றியும் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால் தொன்மம், மகான், இதிகாசம், அதிசய நிகழ்ச்சிகள் பற்றிய பாலகுமாரன் கதை என்றால் தவிர்த்துவிடுங்கள் – என்னருகே நீ இருந்தால் தவிர.
தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்