சாண்டில்யனின் எல்லா புனைவுகளையும் படித்து டிக் மார்க் போட்டுவிட வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. தனியாக பதிவு போடும் அளவுக்கு வொர்த் இல்லாத புத்தகங்களைப் பற்றி இங்கே சிறு குறிப்புகள் எழுதி இருக்கிறேன்.
ராஜயோகம்: ராஜ யோகம், சேரன் செல்வி ஆகியவற்றோடு சேர்த்து ஒரு trilogy. தமிழில் இது அபூர்வமான முயற்சி. வாசப் என்ற (யுவன் சுவாங், மார்க்கோ போலோ, இபின் பதூதா மாதிரி) ஒரு சரித்திர ஆசிரியன் மற்றும் பயணி குலசேகரப் பாண்டியனுக்கு பின் எழுந்த வாரிசு சண்டையை பார்க்கிறான். பஸ்ஸில் படிக்கலாம். யார் இந்த வாசப்?
நிலமங்கை: மாலிக் காஃபூர் படையெடுத்த காலத்தில் பாண்டிய அரியணைப் போட்டியைப் பற்றிய கதை. வீரபாண்டியனை சேர அரசன் ரவிவர்மனின் மகள் நிலமங்கை பல அபாயங்களிலிருந்து காப்பாற்றி மணம் செய்து கொள்கிறாள்.
சேரன் செல்வி: மாலிக் காஃபூர் திரும்பினாலும் அமீர் குஸ்ரோ கான் இன்னும் தென்னிந்தியாவில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிக்கிறான். அவன் முயற்சிகளை முறியடிக்கும் சேரன் ரவிவர்மனின் சாகசங்கள். ரவிவர்மன் தன் மருமகன் வீரபாண்டியனோடும் இந்த முயற்சியில் போரிட வேண்டி இருக்கிறது.
அவனிசுந்தரி: கோவூர் கிழாரின் சில பாடல்களை வைத்து நலங்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் ஆகியோரை வைத்து ஒரு குறுநாவல். தவிர்க்கலாம்.
இந்திரகுமாரி: கதம்ப குல மன்னன் ரவிவர்மன் பலாசிகா நகரத்தைக் கைப்பற்றுகிறான். தவிர்க்கலாம்.
கடல் ராணி: கனோஜி காலத்தில் அரபிக் கடலில் நடந்த ஒரு சிறு போரை மையமாக வைத்து ஒரு கதை. டைம் பாஸ்.
கடல் வேந்தன்: கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்ற மன்னன் ஒரு கடல் போரில் யவனர்களை தோற்கடித்தானாம். அந்தப் பின்னணியில் ஒரு கதி. தவிர்க்கலாம்.
கவர்ந்த கண்கள்: ராமானுஜர் பற்றிய குருபரம்பரை கதைகளில் வில்லிதாசன் கதையும் ஒன்று. வில்லிதாசன் தன் மனைவி பொன்னாச்சியின் கண்களின் அழகில் மயங்கி இருந்தாராம்; ராமானுஜர் உனக்கு அதை விட அழகிய கண்களை காட்டுகிறேன் என்று அரங்கனின் கண்களைக் காட்டி, வில்லியை வைஷ்ணவ மார்க்கத்தில் திருப்பினாராம். இந்த legend-ஐ சாண்டில்யன் கதையாக எழுதி இருக்கிறார். டைம் பாஸ்.
மங்கலதேவி: கொஞ்சம் நீளமான கதை ஒன்று (மங்கலதேவி – பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் ஒரு கோட்டையை கைப்பற்றுகிறான்), கொஞ்சம் சின்னக் கதைகள் மூன்று (ஒன்று பாஜிராவ்-மஸ்தானி காதல் பற்றி, ஒன்று கதம்ப ராஜ வம்சத்தை ஸ்தாபித்த மயூர சன்மன் பற்றிய ஒரு தொன்மக் கதை, இன்னொன்று ஆமூர் மல்லனை ஒரு சோழ இளவரசன் வீழ்த்தியதைப் பற்றி நக்கண்ணையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை வைத்து எழுதியது). டைம் பாஸ்.
மாதவியின் மனம்: சமுத்திரகுப்தன் காஞ்சி பல்லவன் விஷ்ணுகோபன் மேல் படையெடுத்து வந்த வரலாற்றுப் பின்புலம். என்னவோ பிரமாத சதி என்று பில்டப் எல்லாம் கொடுத்து உப்பு சப்பில்லாத ஒரு சதியைக் கொடுத்திருக்கிறார்.
மோகனச் சிலை: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்த சம்பவத்தை வைத்து ஒரு சாகசக் கதை. டைம் பாஸ்.
மூங்கில் கோட்டை: மாந்தரஞ் சேரல் இரும்பொறை தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பினான் என்று ஏதோ ஒரு சங்கப் பாடல் இருக்கிறது. அதை கதையாக்கி இருக்கிறார்.
நாகதேவி: சாண்டில்யன் நல்ல நாளிலேயே தில்லைநாயகம். இதில் இரண்டு நாயகிகள். இரட்டைப் பிறவிகள். அவள் என்று நினைத்து இவளைத் தடவுவதும் இவள் என்று நினைத்து அவளைத் தடவுவதும் அவள் என்று சொல்லிக் கொண்டு இவள் வருவதும் இதேதான் கதை பூரா. படுத்துகிறார்.
நீலரதி: களப்பிரர் காலம். அச்சுத விக்ராந்தன் ராஜா. அதைத் தவிர வேறு ஒரு வரலாறும் இல்லை. ஒரு கறுப்பு வெள்ளை எம்ஜிஆர் ராஜா ராணி படம் பார்ப்பது போல ஒரு கதை.
நீலவல்லி: முத்துக் களவை துப்பறியப் போகும் பாண்டிய இளவரசன் வீரநாராயணன் சேரன் மகளையும் சந்தித்து மணக்கிறான். நடுவில் இரண்டு மூன்று அத்தியாயம் அந்தக் காலத்துக்கு போர்னோவாக இருந்திருக்க வேண்டும்.
நீள்விழி: நந்திவர்ம பல்லவனுக்கும் பாண்டிய மன்னன் ஜடிலனுக்கும் பெண்ணாகடத்தில் போர் நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கமான கதை. தவிர்க்கலாம்.
பல்லவபீடம்: பல்லவ அரசன் சிவஸ்கந்தவர்மனின் சாகசங்கள். தவிர்க்கலாம்.
பல்லவ திலகம்: பல்லவ அரசன் தந்திவர்மன் நான் வளர்ந்த கிராமம் ஒன்றின் அருகே மிகப் பெரிய ஏரி ஒன்றை வெட்டியவன். அதனால் அவனைப் பற்றி கொஞ்சம் தேடிப் பிடித்து படித்திருக்கிறேன். ராஷ்டிரகூடர்களிடம் அவன் தோற்றது வரலாறு. ஆனால் சாண்டில்யனின் கதாநாயகன் தோற்கலாமா? அதனால் தந்திவர்மன் வென்றதாகவும் ஆனால் ராஷ்டிரகூட அரசனிடம் நீயே ஜெயித்ததாக கல்வெட்டு வெட்டிக் கொள் என்று சொன்னதாகவும் எழுதி இருக்கிறார். மனிதர் ரூம் போட்டு யோசித்திருக்கிறார்!
ராஜபேரிகை: சந்தாசாஹிப் நாயக்கர் வம்ச கடைசி ராணி மீனாட்சியை பொய் சத்தியம் செய்து கொடுத்து ஏமாற்றினார் என்று சொல்வார்கள். ராணியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரன் அவனைப் பழிவாங்குவதாக கதை. பின்புலத்தில் ராபர்ட் கிளைவ், டூப்ளே, ஆங்கில அரசு அமைவதின் முதல் படி. ராணி மீனாட்சியின் ஆவி கிளைவுக்கு உதவுவதாக கதையை அமைத்திருக்கிறார். ரொம்ப பேச்சு. எல்லாரும் என்னவோ டீக்கடைப் பேச்சு போல அடிவெட்டு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில்தான் உள்ளே போவது ரொம்ப சிரமம் என்று கப்பலைப் பற்றி நாயகன் பேச படிப்பவர்களுக்கு எங்கே உள்ளர்த்தம் புரியாமல் போய்விடப் போகிறதோ என்று நாயகி வெட்கப்படுவாள். டைம் பாஸ்.
ராஜதிலகம்: பல்லவர் சாளுக்கியர் போர்கள் மிகவும் குழப்பமானவை. புலிகேசி தான் மகேந்திரவர்மனைத் தோற்கடித்தேன் என்றும் மகேந்திரவர்மன் தான் புலிகேசியைத் தோற்கடித்தேன் என்றும் கல்வெட்டி இருக்கிறார்கள். புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் மகேந்திரவர்மனின் பேரன் பரமேஸ்வரவர்மன் போரும் இப்படித்தான் இருவருமே வென்றதாக இருக்கிறது. சாண்டில்யன் முதலில் விக்ரமாதித்தன் வென்றான், பிறகு பரமேஸ்வரவர்மன் என்று தன் கதையை எழுதி இருக்கிறார். விறுவிறுப்பாகப் போகிறது. தொடர்கதையாக நிச்சயம் படிக்கலாம்.
ராஜ்யஸ்ரீ: ஹர்ஷர் தன் தங்கை ராஜ்யஸ்ரீயின் கணவர் கிருகவர்மனை வஞ்சகமாகக் கொன்றவர்களை பழி தீர்த்து வட இந்தியாவின் சக்ரவர்த்தி ஆனார் என்பது சரித்திரம். முக்கால்வாசி நேரம் கிருகவர்மன் ராஜ்யஸ்ரீயைத் தடவுவதை விலாவாரியாக விவரிக்கிறார், கடைசி கால் பாதியில் சரித்திரத்தை சேர்த்து முடித்து விடுகிறார். தவிர்க்கலாம்.
சித்தரஞ்சனி: கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களின் தலைவனான நாகபாணனை வென்று சாதவாகன அரசை நிறுவினான் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு கதை. சுமார்.
வசந்தகாலம்: பெருஞ்சேரல் இரும்பொறை அதியமான் நெடுமான் அஞ்சியைத் தோற்கடித்தான் என்ற பின்னணியை வைத்து போலி சாமியார் கோஸ்வாமி, ஒரு வழக்கமான காதல் எல்லாம் சேர்த்து கதையாக்கி இருக்கிறார்.
மதுமலர்: சாண்டில்யன் எழுதிய அபூர்வமான சமூகக் கதை. ஐம்பதுகளில் எழுதப்பட்டிருந்தால் நல்ல சினிமாக் கதையாக இருந்திருக்கும். ஜமீந்தார் பதவி+பணத்துக்காக மனைவியை மறக்கும் அப்பா, மூத்த தாரத்து மகன், இளைய தாரத்து மகன், இரண்டு பேரும் விரும்பும் ஹீரோயின் என்று சில ஸ்டாண்டர்ட் சினிமா காரக்டர்களை வைத்து எழுதப்பட்டது. இன்றைக்கு ஒரு curiosity value-வுக்காக மட்டுமே படிக்கலாம்.
நங்கூரம்: இன்னொரு சமூகக் கதை. ஸ்டீரியோடைப் பாத்திரங்கள். கிராமத்து மனிதர் பட்டணத்துக் கவர்ச்சியில் சீரழிந்து திருந்தும் கதை. ஐம்பதுகளுக்கு நல்ல வணிகக் கதை.
செண்பகத் தோட்டம்: இதுவும் ஐம்பதுகளுக்கு ஏற்ற கதை. கிராமத்திற்கு வரும் டாக்டர் தான் காதலிக்கும் பெண்ணுக்காக கொலைப்பழியை ஏற்கிறான். பிறகு உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து சுபம்!
புரட்சிப்பெண்: தீவிரவாதி சரபசாஸ்திரி, காந்தி பக்தர்கள், சுதந்திரப் போராட்டப் பின்னணியில் ஒரு சமூகக் கதை. ஒரே ஆச்சரியம் இதற்கு சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதிப் பாராட்டித் தள்ளி இருப்பதுதான். சத்தியமூர்த்தியின் ரசனை இவ்வளவு மோசமாக இருக்க வேண்டாம்.
எம்.ஏ. சுசீலா சிறந்த வாசகி. பல முக்கிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவ்வப்போது கதைகளும் எழுதுகிறார். (சில கதைகளில் பிரச்சார நெடி தூக்கல் என்பது என் எண்ணம், தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கைதான் – உதாரணம்: கண் திறந்திட வேண்டும்) கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்ப் பேராசிரியர்கள்/பேராசிரியைகள் என்றாலே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவது நல்லது என்ற என் தப்பபிப்ராயத்தை மாற்றியவர் அவர்தான். என்றாவது அவர் மெச்சும்படி ஒரு கதை எழுத வேண்டும்…
சுசீலாவின் ஆய்வுகளில் விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் என்றால் நமக்கெல்லாம் பிரதாப முதலியார் சரித்திரம் தெரியும்; மிஞ்சிப் போனால் கமலாம்பாள் சரித்திரமும் பத்மாவதி சரித்திரமும் தெரியும். சுசீலா தேடிக் கண்டுபிடித்து படித்து, அதைப் பற்றி உரை நிகழ்த்தி, புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்!
அவரிடம் தொணதொணத்து வாங்கிய பதிவு கீழே…
என் அனுபவப் பகிர்வுகள்-பேராசிரியராக…
அறிமுகம்
பிறந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழா, தமிழில் எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியை. வீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். இளமையிலேயே படிப்பதில் ஆர்வம். புத்தகங்களுடனான உறவு அதிகம். தமிழ் மீடியத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தபின் கல்லூரியில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்த நான், பின்பு தமிழில் முதுகலை பயில நினைத்ததற்குக் காரணம் இந்தப் பின்னணிதான். எம்.ஏ., தமிழ் முடித்தவுடன் 1970இல் மதுரை பாத்திமா கல்லூரியில் வேலை கிடைத்தது. எனது முனைவர் பட்டப் படிப்பு எல்லாம் வேலை பார்த்துக் கொண்டே படித்ததுதான். ஆசிரியையாகப் பணிபுரிந்தாலும் படைப்பிலக்கியத்தின் மேல் நிறைய ஆர்வம்.
1979-இல் நான் எழுதிய முதல் சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கால இடைவெளி விட்டு விட்டு [வேலை,வீட்டுப்பொறுப்பு காரணமாய்] 70க்கு மேற்பட்ட சிறுகதைகள்
நூல் வடிவத்தில். இது வரை 4 சிறுகதைத் தொகுப்புகள், 4 கட்டுரைத் தொகுப்புகள், நூல்கள், தஸ்தயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, ’அசடன்’என 2 மொழிபெயர்ப்புகள் என்று 10 நூல்கள்.
2007-ஆம் ஆண்டிலிருந்து வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதிலும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
தமிழ்ப் பேராசிரியராக என் பங்களிப்பு:
வெட்டுப்புலி புகழ் தமிழ்மகனுக்கு அளித்த ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் பிரசுரிக்கப்படாமல் விடுபட்டு, அவரது வலையில் வெளியானதிலிருந்து
பேராசியர் பணி காலத்தில் நீங்கள் செய்த முக்கிய பங்களிப்பாகக் கருதுவது?
உண்மையில் என் பங்களிப்பின் தாக்கத்தை மதிப்பிட வேண்டியது என் மாணவர்கள்தான்…!
மொழி, இலக்கியக் கல்வியை ஊதியம் பெறுவதற்கு வழி காட்டும் கல்வியாக மட்டுமே ஆக்கி விடாமல் இலக்கியத்தின் மீதான மெய்யான ஆர்வத்தையும் தாகத்தையும் வளர்த்தெடுக்கும் பட்டறைகளாக என் வகுப்பறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. மரபிலக்கியப் பயிற்சியோடு தேங்கிப்போய் விடாமல் சம கால நவீனத் தமிழிலக்கியங்களையும் விமரிசனங்களையும், திறனாய்வுகளையும் மாணவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் என்னால் இயன்ற வரையில் செய்திருக்கிறேன். பல்வேறு தன்னாட்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவில் இருந்தபோது சமகாலப்போக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வடிவமைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சரிவரப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். படைப்பாளிகளாகப் பரிணாமம் கொள்ளக்கூடிய மாணவர்களை இனம் கண்டு அவர்களது படைப்பாற்றல் மேம்படத் தூண்டுதல் அளித்திருக்கிறேன்.அவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும் முத்திரை பதித்திருக்கிறார்கள். பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஆற்றியதால், பெரும்பாலான நேரங்களில் பாடங்களோடு ஒருங்கிணைத்துப் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரியான புரிதலுடன் முன் வைப்பதற்கு ஏற்ற களமாக என் வகுப்பறையே எனக்கு அமைந்து போனது; அவற்றைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொண்டு பல பெண்ணியச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும், இயக்கப் போராளிகளும் கூட என் மாணவிகளிலிலிருந்து உருவாகி இருக்கிறார்கள்.
மாணவிகளோடு சில…
அனுபவம்-1
6 ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு!
“அம்மா… என்னை நினைவிருக்கிறதா? நான்தான் தேனம்மை…” என்றது அந்தக் குரல். ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்து வரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும். அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி – அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது.
ஆசிரியப் பணியில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருந்தாலும் பெயர்களையும், முகங்களையும் நினைவில் தக்க வைத்துக் கொள்ளும் கலையில் மட்டும் எப்போதுமே நான் சற்று சுமார்தான். ஆனால் தேனம்மை விஷயத்தில் அப்படி நேரவில்லை; நேரவும் வாய்பில்லை. காரணம் மாணவப் பருவத்திலேயே தேனம்மை என் மீது கொண்டிருந்த கள்ளமற்ற பாசம், பிடிப்பு. அதற்கெல்லாம் மேலாகத் தான் ஒரு வேதியியல் மாணவியாக இருந்தபோதும் தமிழ் வகுப்புக்களில் காட்டிய அதீத ஆர்வம். (வேறு வழியில்லாமல் தமிழிலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களை விட வேதியியல்,இயற்பியல்,விலங்கியல்,வணிகம் போன்ற துறைகளில் பயில்பவர்கள் தமிழை ஆர்வத்தோடு அணுகுவது நான் கண்டிருக்கும் அனுபவ உண்மை.)
சின்னச் சின்னத் தாள்களிலும் கையேடுகளிலும் கவிதைகளை எழுதி எழுதி என்னிடம் தந்தபடி என் ஒப்புதலை, விமரிசனத்தைப் பெறுவதற்காக சிறுபிள்ளை போலக் காத்திருக்கும் வற்றாத படைப்பிலக்கிய தாகம். கல்லூரி நூலகம் போதாதென்று என்னிடம் பல சமகாலப் படைப்புக்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம். இவை அனைத்தும் தேனம்மையை ஒரு விசேடமான மாணவியாக்கி என் நெஞ்சில் நிறுத்தி வைத்திருந்ததால் நினைவுகளுக்குள் துழாவிக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போயிற்று.
“தேனம்மையா! எப்படி இருக்கிறாய், எங்கே இருக்கிறாய், என் தொலைபேசி எண்ணை எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு போனேன். மதுரையில் அப்போது வசித்து வந்த தேனம்மை, பாரதி புத்தக நிலையம் சென்றதும் அங்கே இருந்த குற்றமும் தண்டனையும் மொழியாக்க நூலில் என் பெயரைக் கண்டு பதிப்பாளரிடம் கைபேசி எண்ணை வாங்கி உடனே என்னைத் தொடர்பு கொண்டதும் அப்போதுதான் தெரிந்தது.
கதை அதோடு முடிந்துவிடவில்லை. அந்த நூலை வாங்கி முழுவதும் படித்து விட்டுப் பெரியதொரு விமரிசனக் கடிதத்தையும் எழுதி எனக்குத் தபாலில் அனுப்புமளவுக்குத் தேனம்மையின் ஆர்வம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தை நானே தட்டச்சு செய்து என் வலைத் தளத்திலும் ஏற்றியிருக்கிறேன்.
அவையெல்லாம் கடந்த காலங்கள்! இந்த மூன்று ஆண்டுகளுக்குள் தன் தணியாத ஆர்வத்தால் இணையத்துக்குள் நுழைந்த என் மாணவி – தேனம்மை லெட்சுமணனாகி வலையுலகில் தனி முத்திரை பதித்தபடி, பல இதழ்களில் கவிஞராய், கதையாளியாய், கட்டுரையாளராய், மிகச் சிறந்த ஒரு வலைப் பதிவராய்ப் பாராட்டுக்களைக் குவித்து வருவதோடு ‘சாதனை அரசிகள்’என்ற தன் முதல் நூலையும் [இப்போது ‘ங்கா’, ‘அன்னப் பட்சி’ என்று இன்னும் இரண்டு கவிதை நூல்கள் – அன்னப் பட்சி எனக்கு சமர்ப்பணம்,அதற்கு அணிந்துரையும் தந்திருக்கிறேன்] வெளிட்டுச் சாதனை படைத்திருக்கும் தேனம்மை என்னைப் பெருமைப்படுத்துகிறார்.
பி.கு; எப்போதோ ‘80களில் நான் எழுதிய கடிதம் ஒன்றையும் தன் தளத்தில் பத்திரப்படுத்திப் போட்டிருக்கிறது அந்தப் பாசக்காரப்பெண்.
அனுபவம்-2
இலக்கியம் படிப்பவர்கள் – உண்மையாகவே அதில் தோய்ந்து கலப்பவர்கள் – வாழ்வின் இனிய தருணங்களானாலும், நெருக்கடியான சூழல்களானாலும் தங்களை இளைப்பாற்றிக் கொள்ளவும் களிப்பேற்றிக் கொள்ளவும் இலக்கியத்தின் துணையையே நாடுவதுண்டு;
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
[புண்ணை ஆற்ற வேண்டுமென்பதற்காக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். காரமான மருந்துகளை வைத்துக் கட்டுகிறார். நோயாளி, வலி தாங்காமல், எரிச்சல் பொறுக்காமல் கத்துகிறான்;துடிக்கிறான். ஆனாலும் அதற்காக மருத்துவரை ஒதுக்கி விட முடிகிறதா என்ன? காயம் முழுமையாக ஆறி அவன் பூரண குணம் பெறும் வரை, மீண்டும் மீண்டும் ‘மாளாத காதலுடன்’ அவன் நாடிப் போவது அந்த வைத்தியரைத்தான். இறைவனும் கூட ஒரு வகை வைத்தியன்தான்; பிறவிப்பிணிக்கு மருந்திடும் அற்புத மருத்துவன் அவன்.]
என்ற இந்தப் பாடலை முதலாம் ஆண்டு எம்.ஏ.தமிழ் மாணவியருக்கு அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் பாடல் சார்ந்த சுவாரசியமான-சற்றுத் துன்பமான நிகழ்வு ஒன்று அப்போது நேர்ந்தது. முதல் வரிசையில் அமர்ந்து இலக்கியப் பாடல்களை ரசித்துக் கேட்கும் மாணவி ஒருத்தி, சில நாட்களாய்க் கல்லூரிக்கு வரவில்லை.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் கூட இருந்தாள் அவள் என்று நான் கேள்விப்பட்டேன். திடீரென்று இரண்டு நாட்கள் சென்றபின் அவளிடமிருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு.(அது செல்பேசி இல்லாத பொற்காலம்)
“அம்மா! அந்த ‘வாளால் அறுத்துச் சுடினும்’ பாட்டைக் கொஞ்சம் சொல்லுங்கம்மா எழுதிக்கிறேன்” என்றாள் அவள்.
“அதிருக்கட்டும்.அப்பா எப்படி இருக்கிறார்?”- இது நான்.
“அதுதாம்மா. சக்கரையாலே காலிலே சீழ் வச்சுப் புண்ணா இருக்கு. டாக்டர் ‘ஆபரேஷன்’ செய்யணும்கிறார். அப்பத்தான் நான் டாக்டர்கிட்டே இந்தப் பாட்டைப் பத்திச் சொன்னேன். அவருக்குப் பாட்டை முழுசாத் தெரிஞ்சிக்கணுமாம். சொல்லுங்கம்மா” என்று தன் கோரிக்கையைத் தொடர்ந்தாள் அவள்.
தந்தைக்கு நேர்ந்திருக்கும் சிக்கல், மருத்துவமனைச் சூழல் என எல்லாவற்றையும் கடந்து – ஆனாலும் அதற்குள் தான் கற்ற இலக்கியத்தையும் முடிச்சுப் போட்டு மருத்துவரிடமும் அதைப் பகிரத் துடிக்கும் அந்தப் பெண்ணின் ஆர்வம். இத்தனை நாள் ஆசிரியத் தொழில் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும், வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதைவிட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது.
“துன்பம் நேர்கையில் …..தமிழில் பாடி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்ற பாரதிதாசனின் வரிகள் புதிய அர்த்தச் செறிவோடு மனதுக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்த அரிய நாள் அது.
தாள் திருத்தும்போது சில சுவாரசியங்கள்
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடைத்தாள் திருத்தப் போன இடத்தில் வாய்த்த வேடிக்கையான அனுபவம் ஒன்று. இலக்கணத்தில் எப்போதுமே தற்குறிப்பேற்றத்துக்குத் தனியான ஓரிடம் உண்டு. இயற்கையாக தன்னிச்சையாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குள் கவிஞன் புதிதான ஒரு அர்த்தப் பரிமாணத்தை ஏற்றிக் கூறுவதே தற்குறிப்பேற்றம். (தன் குறிப்பையும் அத்துடன் ஏற்றிக் கூறுதல்!) சிலம்பில் கண்ணகி கோவலனின் கரம் பற்றி முதன்முதலாக மதுரை நகருக்குள் நுழைகிறாள்.
மதிலின் உச்சியில் பறந்து கொண்டிருக்கும் வண்ணமயமான கொடிகள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கின்றன. மதுரைக்குள் நுழைந்தால் அவளுக்காகப் பேரின்னல் காத்திருக்கிறது என்பதால் அவளை வராதே என்று சொல்லுபவை போல அவை காற்றில் அசைந்தன என்று அதில் தன் குறிப்பை ஏற்றுகிறார் இளங்கோ.
போருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல மறித்துக் கை காட்ட
இது அழகான உவமைதான்; அற்புதமான கற்பனைதான். ஆனாலும் காலம் காலமாக வேறு எடுத்துக்காட்டுக்களே சொல்லப்படாமல் இந்தப் பாடல் வரிகள் மட்டுமே வகுப்பறைகளில் திரும்பத் திரும்ப வறட்டுத்தனமாக எடுத்தாளப்பட்டு வந்ததால் பொருளும், இலக்கணக் கோட்பாடும் புரிகிறதோ புரியவில்லையோ தற்குறிப்பேற்றம் என்றாலே இந்த வரிகளை உருப்போட்டு எழுதி விட்டால் போதும் மதிப்பெண் கிடைத்துவிடும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டுப் போயிருந்தார்கள் மாணவர்கள்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேதான் பொது விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருந்தபோது மாறுதலான ஒரு விடைத்தாள் கையில் சிக்கியது.
அந்தத் தாளில் தற்குறிப்பேற்றத்துக்குச் சான்றாகக் கீழ்க்காணும் கண்ணதாசனின் வரிகள் இடம் பெற்றிருந்தன.
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
இயற்கையாக மூடித் திறக்கும் காதலியின் விழிகள், பார் பார் என்று தன்னை அழைப்பது போலவும், காற்றில் பறக்கும் அவளது சேலை தன்னை அன்போடு அழைப்பது போலவும் காதலனுக்குப் படுகிறது என்று கூறும் இந்த வரிகளை மேற்கோளாகத் தந்திருக்கும் மாணவர் மேலே சொன்ன சிலம்பின் உதாரணத்தை மட்டுமே இயந்திரம் போல எழுதிவிட்டுப் போகும் வேறு எவரையும் விட அந்த இலக்கணக் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறாரென்று எனக்குப் பட்டதால் மானசீகமாக அவரது தனித்தன்மையைப் பாராட்டியபடி, முழு மதிப்பெண் வழங்கினேன்.
வழி வழி வந்த செக்குமாட்டுத் தனத்தில் ஊறிய நம் கல்வி அமைப்பு அதை அத்தனை சுலபமாக அங்கீகரித்து விடுமா என்ன? நான் திருத்தும் விடைத்தாள்களைப் பார்வையிடும் பொறுப்பிலிருந்த முதன்மைத் திருத்துநர் வினாக் குறியை முகத்தில் தேக்கியவாறு என்னை அழைத்தார்.
“என்னம்மா இது? சினிமா பாட்டை எழுதியிருக்கான், முழு மார்க்கைப் போட்டிருக்கீங்களே!” அந்தக் கேள்வியின் மிக மோசமான அபத்தத்தைத் தாங்கிக் கொண்டபடி நிதானமாகப் பதில் சொன்னேன்.
“அதில் தற்குறிப்பேற்றம் இருக்கிறதா இல்லையா பாருங்க சார்”
“அதுக்காக?”
அவர் ஏதோ பேச முற்பட்டார். அடுத்த அபத்தத்துக்கு ஆயத்தமாக இல்லாத நான், “இவ்வளவு நாளிலே இப்பதான் ஒரு மாணவர் தற்குறிப்பேற்றம்னா என்னன்னு சரியா விளங்கிக்கிகிட்டிருக்கார்னு நினைக்கிறேன். எனக்கு அதிகாரம் இருந்தா அவருடைய தனித்தன்மைக்காகவே இன்னும் கூட அதிகமா மார்க் போட்டிருப்பேன்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால் அவரது பரிசீலனைக்குப் பிறகு – நான் அந்த மாணவருக்கு வழங்கிய மதிப்பெண்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும் என்பது எளிதாக எதிர்பார்க்கக் கூடியதுதான்!
இது மிக மிகச் சாதாரணமான சராசரியான ஒரு சம்பவம்தான் என்றாலும் இத்தனை ஆண்டுகளின் நகர்வுகளுக்குப் பின்னும் இவ்வாறான நிலைகளில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை..என்பதோடு இன்னும் மோசமான சறுக்கல்களும் கூடச் சம்பவித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
கீழ் மட்டம் தொடங்கி உயர் பட்டம் பெறும் கட்டம் வரை, மாணவர்களின் சுயத்தை – தனித்துவமான சிந்தனைகளை அழிக்கும் பலிபீடங்களாகவே பெரும்பாலான கல்விக் கூடங்கள் இன்று வரையிலும் கூட விளங்கிக் கொண்டிருக்கின்றன என்கிற கசப்பான நிஜம் நெஞ்சைச் சுடுகிறது.
பேராசிரியர்களோடு
தமிழ்ப் பேராசிரியர்களை கோவை ஞானி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன் எனப் பலரும் கிழிகிழி என்று கிழிப்பதற்கு நான் வருத்தமே படுவதில்லை; ஒரே தரப்பில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவதான உறுத்தலும் இல்லை. உண்மை உண்மைதானே!! நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு வேற்று மதப் பேராசிரியர் எம் ஏ தமிழுக்குக் கம்ப ராமாயணம் கற்பித்து வந்தார். ஜெ சொல்லும் ஜேசுதாசன் போல அல்ல! இந்திரஜித் யாரென்று கூடச் சொல்லாமல் அந்த வகுப்பு தொடர துறைத் தலைவர் வரை செய்தி போய் பிறகு முதல்வர் வரை விசாரணை. அலட்டிக் கொள்ளாமல் அவர் சொன்ன பதில் இதுதான்!
“நான் ஒரு கிறிஸ்தவர். எனக்கு ஏன் அதெல்லாம் தெரிய வேண்டும்?”
இந்த அபத்தங்களுக்கு எங்கே போய் முட்டிக்கொள்வது? பேராசிரியராக இருந்தேன் என்று சொல்லக்கூட சமயங்களில் கூச்சமும் வெட்கமுமாகவே இருக்கிறது. திறமையானவர்கள், மாணவர்கள் மீது அக்கறை கொண்டு வாங்கும் சம்பளத்துக்கும் மனசாட்சிக்கும் உண்மையாக இருப்பவர்களும் இல்லாமல் இல்லை; ஆனால் மேலே சொன்னவர்களால் “மரத்தில் மறைகிறது மாமத யானைகள்”. என்னைப் பொறுத்தவரை முதல் நாள் வேலையில் அடியெடுத்து வைத்த மாதிரியே இறுதி நாள் வரை இருக்க வேண்டுமென மனதில் முடிந்து கொண்டேன்; ஓரளவு அப்படி இருந்திருக்கிறேன் என்பதன் சாட்சியங்களாக எங்கிருந்தோ என் மாணவிகள் சாட்சியம் அளித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அது போதும்…
இன்றைய தமிழாய்வுகள் குறித்த கோபம்
‘ஆய்தல்’ என்ற சொல்லுக்கு “உள்ளதன் நுணுக்கம்’ என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம். அப்படி நுணுகிப் போகாவிட்டாலும் கூடச் சரியான புரிதல் கூட இல்லாமல், எடுத்துக் கொண்ட பொருளை நுனிப்புல் மேய்ந்தபடி பட்டம் பெற முனையும் முனைவர்களும், அந்தப் படுபாதகத்துக்குத் துணைபோகும் வழிகாட்டிகளும் என்னைக் கோபப் படுத்துகிறார்கள். பதவி உயர்வுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தமிழாய்வு தரம் குன்றிப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாத என் மன உளைச்சலின் வடிகால்களே கீழே உள்ள கட்டுரைகள். [நன்றி; வடக்கு வாசல்]
கௌரி கிருபானந்தன் அன்பளிப்பு சிறுகதைத் தொகுதியை தெலுகில் மொழிபெயர்ப்பதற்காக அதில் என்னென்ன சிறுகதைகள் வெளியாகின என்று தேடிக் கொண்டிருக்கிறார், தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். கடைசியில் அவரே கண்டுபிடித்துவிட்டார். எப்படி? கு. அழகிரிசாமியின் மகன்களான திருவாளர்கள் சாரங்கராஜன் மற்றும் ராமச்சந்திரன் புத்தகத்தை இரவல் கொடுத்து உதவி இருக்கிறார்கள்!
சாதாரண விஷயம் என்று நான் நினைத்திருந்தது எத்தனை சிரமமான விஷயம் என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டுபிடிக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகி இருக்கிறது. கடைசியில் புத்தகத்தின் பிரதி அழகிரிசாமியின் மகன்களிடமிருந்துதான் பெறப்பட்டிருக்கிறது. இதற்கே இவ்வளவு கஷ்டம் என்றால் எங்கெங்கோ சிறுகதைகளைத் தேடி தட்டச்சிடும் சென்ஷே, அழியாச்சுடர்கள் மாதிரி ஒரு தளத்தை நடத்தும் ராம், ஓப்பன் ரீடிங் ரூம் நடத்தும் ரமேஷ், தொகுப்புகள் தளத்தை நடத்தும் சிங்கமணி இவர்களை எல்லாம் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களை விடுங்கள், இவர்களாவது டிஜிடல் யுகத்து உ.வே.சா.க்கள், ஊர் ஊராக அலைந்து திரிந்து புதுமைப்பித்தன் சிறுகதைகளைத் தேடி கையால் பிரதி எடுத்து பதிப்பித்த வேதசகாயகுமார், கிராமம் கிராமமாக அலைந்து நாட்டார் பாடல்களையும், கதைகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு செய்யும் நா. வானமாமலை, அ.கா. பெருமாள் போன்றவர்களுக்கு எல்லாம் கோவில்தான் கட்ட வேண்டும்!
டிஜிடல் யுகத்து உ.வே.சா.க்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி மேல் இணைக்கும் சிறுகதைக்களுக்காவது பதிப்பு விவரங்களை – எந்தப் பத்திரிகை/புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது, எந்தப் பதிப்பு, பதிப்பகம், வெளியான தேதி இத்யாதி – பதிவு செய்யுங்கள். எதிர்கால வேதசகாயகுமார்களுக்கு உதவியாக இருக்கும்.
அன்பளிப்பு புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் திருவல்லிக்கேணி தமிழ்ப் புத்தகாலயம் (இன்னும் இருக்கிறதா?) முதல் பதிப்பு 1967இல் வந்திருக்கிறது. நான் அன்பளிப்பு எல்லாம் ஐம்பதுகளில் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். (அழகிரிசாமி எப்போது இறந்துபோனார்?)
திரு கு. அழகிரிசாமி அவர்களின் 9வது கதைத் தொகுதி இது. தமிழில் 9 கதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
திரு. அழகிரிசாமி எழுதியுள்ள கதைகள் எண்ணிக்கையில் மட்டும் அதிகம் அல்ல. தரத்திலும் மிக உயர்ந்தவை. அவருடைய கதை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒரு உண்மையைத் தெளிவாக விளக்கும் ஆற்றல் படித்தவை. வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பலகோணங்களில் நின்று கவனித்தும் பல்வேறுபட்ட கதைகளைப் படைத்துள்ளார். இத்தொகுதில் அடங்கியுள்ள ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு போன்ற கதைகள் அவருடைய சிறந்த படைப்புகள். இரண்டு பெண்களுக்கு இணையான கதை தமிழ் மொழியில் அபூர்மாகவே கிடைக்கும்.
இந்த நல்ல தொகுதியை வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியருக்கு நன்றி.
பின்குறிப்பு: இங்கே இருப்பது கௌரி அவர்களின் அறுபதாம் கல்யாண புகைப்படம். படு ஜோராக இருக்கிறது! தம்பதியருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
புத்தகம் புத்தக கண்காட்சியில் வாங்கியது. கடலூர் சீனுவிற்கும், சாமிற்கும் தெரியும் நான் அ.மியின் முதன்மை வாசகி என்று. கண்டிப்பாக வாங்கிருங்க என்றார்கள். நர்மதாவில் போய் கேட்டோம். சிப்பந்திக்கு அப்படி ஒரு புத்தகம் இருப்பதே தெரியவில்லை. அவரை விடாமல் தொடர்ந்து ஒரு வழியாக வாங்கினோம். இவ்வாரம் சொல்வனத்தில் வந்திருக்கும் நேர்காணலில் நாவல்கள் பற்றி அ.மி இப்படி சொல்கிறார்:
நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு. அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது
நாவல் சார்ந்த வடிவத்தைப் பற்றிய அ.மியின் கருத்து அவர் எழுதும் நாவல்களில் பிரதிபலிக்கிறது. இந்த நாவல் 159 பக்கங்களில் அடங்கி விடுகிறது. விலை 60 ரூபாய்.
ஒரே குடும்பத்தின் கதையை வேறு வேறு உறுப்பினர்களே திரும்பத் திரும்ப நினைவு கூறும் தொடர் உத்தியில் சொல்லப்படும் நாவல். எளிதாக புரிய வைக்க வேண்டும் என்றால் தமிழில் ஆய்த எழுத்து சினிமாவில் பயன்படுத்தியது போன்ற உத்தி. முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அ.மி விட்டுச் செல்லும் ரொட்டித் துண்டின் தடத்தை பின் தொடர்ந்தால் சட்டென்று நமக்கும் புரிந்து விடுகிறது. உறவுகளின் நூல். ஒரு கிராமத்தில் படிப்பை மட்டுமே நம்பி பிழைக்கும், ரொம்ப சாமர்த்தியம் எல்லாம் இல்லாத 16 குழந்தைகள் பிறந்த, 8 குழந்தைகளே தங்கிய ஒரு கீழ் மத்திய தர பிராமண குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களின் மிகச் சாதாரணமான வாழ்க்கையை, பெரிதான உணர்ச்சி வெளிப்பாடுகளோ, மானுட தரிசனங்களோ எல்லாம் இல்லாமல் நினைவு கூர்கிறார்கள்.
வேறு ஒரு பேட்டியில் ஒரு கட்டத்தில் அ.மி.யின் அடக்கமான பதில்களில் பொறுமையிழந்து ஒரு நண்பர், “எழுத்து என்பது ஆன்மீகமான தேடல் அல்லவா?” என்று உணர்ச்சியுடன் கேட்டார். சற்றே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அ.மி
எனக்கு இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம் எப்படித் தேடறது
என்று சிரிக்காமல் சொன்னார். கேள்வி கேட்ட நண்பர் உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள்.
அவர் சித்தரிக்கும் வாழ்க்கையும் அதில் வரும் கதாபாத்திரங்களும் இந்த கருத்தையே முன் வைக்கிறார்கள். தம் வாழ்க்கையைப் பற்றி பிழைத்துக் கிடைக்கும் நோக்கில் மட்டுமே அணுகும் மனிதர்கள், சாதரணர்கள். அ.மி இப்புத்தகத்தின் முன்னுரையில் சொல்வது போல் இவ்வாழ்வும் யுத்தம்தான்.
ஆனாலும், தன் மேல் திருடன் என்ற பழி வந்து விடுமோ என்று பயந்து மூலையில் அமர்ந்து உயிரை விடும் இரண்டாவது அண்ணா, தன் கல்யாணத்தால் வீட்டை விட்டு வெளியேறும் மூத்தார் பையனுக்கு சொத்துக்களை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாதுகாக்கும், தன் அண்ணன் மகனை தத்தெடுத்து அவனுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கும் இளம் விதவை சீதா, தன் மகனை இழந்த நொடியில் தன் துஷ்ட அம்மாவின், அவள் இழப்பின் வலியை ஒரு நொடி நேரம் நினைக்கும் ராமேசன், தன் தம்பியை ஊருக்கு கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ராகவன், மொழியும், மனிதர்களும் அன்னியமான ஊரில் சென்றடைந்து அங்கே எளிய நட்பையும், பிழைக்க தையலையும், ஊறுகாய் போடும் வழிகளையும் எல்லாம் சத்தமில்லாமல் கண்டடையும் பெண்கள், தன் தம்பிகளுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து அவர்களை வழி நடத்தும் பாலு என பிழைப்பிற்காக புலம் பெயரும், இவ்வாழ்வில் பிழைப்பைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் அதிலும் சின்ன சின்ன லட்சியங்களை சுமக்கும், அதை லட்சியம் போன்ற வார்த்தைகளால் எல்லாம் நினைக்காத ஒரு தலைமுறையின் உழைப்பின், தியாகத்தின், பொறுப்பின் கதை.
நம் அனைவரின் வாழ்க்கையையும் திரும்பி பார்த்தால் நம் முந்தைய தலைமுறைக்காரர்களுக்கு இதே போல் ஒரு கதை இருப்பது நிச்சயம். அந்த வாழ்க்கையின் கதையை அவர்கள் மிகச் சாதாரணமாக தாண்டியும் செல்வார்கள். நாவலில் நுண்விவரங்களெல்லாம் பெரிதாக கிடையாது. அவர் வரைந்து காட்டுவது ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம். அதன் உள்ளே இருக்கும் அடர்த்தியான வாழ்க்கை நம் கற்பனைக்கே விடப்படுகிறது. சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நிறைய. அ.மியின் மெல்லிய, கூரிய நகைச்சுவை அவதானிப்புகள் நாவல் நெடுக.
முன்னும் பின்னுமாக சொல்லப்படுவதால் கொஞ்சம் கவனத்துடன் படித்தால்தான் நன்றாக புரியும். ஆனால் புத்தகத்தில் பெயர்கள் சில இடங்களில் தப்பாக அச்சிடப்பட்டிருப்பது முதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எடிட்டிங் இன்னும் நன்றாக அடுத்த பதிப்பிலாவது செய்யலாம்.
சிறு நாவல், கடகடவென்று படித்து விடலாம் தான். ஆனால் எல்லா அ.மியின் எழுத்துக்களையும் போல கூர்ந்து படித்தலும், மற்றொருமுறையும் படித்தலும்தான் அவர் சொல்லாமல் விடும் அனைத்தையும் உள்வாங்க உதவும்.
ஆர்வியின் குறிப்பு: அருணாவின் விவரிப்பைப் படிக்கும்போது எனக்கு என் அப்பா தலைமுறைக் குடும்பங்கள் – குறிப்பாக என் பெரியப்பா நினைவு வருகிறது. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.
என் பதின்ம வயதின் high points-களில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் கல்லூரியில் சிவகுருவும் நானும் இந்தப் படங்கள் வந்தால் விடாமல் போய்ப் பார்ப்போம். திரைப்படங்கள் மூலமாகத்தான் நான் பாண்ட் நாவல்களை படிக்கத் தொடங்கினேன்.
திரைப்படங்களோடு ஒப்பிட்டால் நாவல்கள் கொஞ்சம் low-keyதான். என்னதான் வர்ணனை செய்தாலும் உர்சுலா ஆண்ட்ரஸ், ஹாலே பெர்ரியின் அழகை எல்லாம் காகிதத்தில் கொண்டு வர முடியுமா என்ன? எனக்குப் பொதுவாக வில்லன்களோடு பாண்ட் விளையாடும் விளையாட்டுகள் – மூன்ரேக்கரின் பிரிட்ஜ் ஆட்டம், கோல்ட்ஃபிங்கருடன் கோல்ஃப் போன்றவைதான் வில்லன்களுடன் போராடுவதை விட சுவாரசியமாக இருக்கும்.
அந்தக் காலத் தமிழ்த் திரைப்படங்களில் வீடுகளில் அழகான சிவப்புக் கம்பளங்கள், இரண்டு பக்கமும் வளைந்து போகும் மாடிப்படிகள், பல வித சாப்பாட்டு வகைகள் நிறைந்த சாப்பாட்டு மேஜை என்று பலவும் காட்டப்படும். பார்ப்பவர்களுக்கு ஒரு vicarious மகிழ்ச்சி. ஜேம்ஸ் பாண்டின் ஒரு காலக் கவர்ச்சிக்கும் இது மாதிரி vicarious மகிழ்ச்சி ஒரு முக்கிய காரணம். Martini, shaken but not stirred, சாப்பாடு, கார், மது வகைகள், கூப்பிடக் கூட வேண்டாம் பார்த்த உடன் படுக்கத் தயாராக இருக்கும் அழகிய பெண்கள் மாதிரி ஒரு சுகபோக வாழ்க்கை – பல வித வில்லன்களை முறியடிக்கும் (எம்ஜிஆர் டைப்) சாகசங்கள் இதெல்லாம் பற்றிப் படிப்பது, அந்தக் கால சென்சார்கள் எவ்வளவு அனுமதிப்பார்களோ அவ்வளவு தூரம் அவிழ்க்கும் நாயகிகள் வரும் திரைப்ப்டங்களைப் பார்ப்பது எல்லாம் அறுபது, எழுபதுகளின் பதின்ம வயதினருக்கு செம த்ரில்லாக இருந்திருக்கலாம். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி ஜேம்ஸ் பாண்ட கதைகளைத் தான் விரும்பிப் படிப்பேன் என்று சொன்னதும் இவை பிரபலமானதுக்கு ஒரு காரணம். ஆனால் எண்பதுகளில் இதை விட நல்ல சாகசக் கதைகள் பலவற்றை அதே நேரத்தில் படித்ததாலோ என்னவோ பாண்ட் கதைகள் என்னை எப்போதும் பெரிதாகக் கவர்ந்ததில்லை. இன்று இத்தனை pretentiousness இல்லாத மாடஸ்டி ப்ளெய்ஸ் காமிக்ஸ் இதை விடப் பிடிக்கின்றன. இருந்தாலும் சாகசக் கதை உலகத்தில் ஒரு footnote அளவுக்காவது ஜேம்ஸ் பாண்டுக்கு இடம் உண்டுதான்.
Casino Royale (1953) முதல் புத்தகம். நல்ல பாண்ட் புத்தகம் கிடையாது. பிரமாத திரில்கள் எதுவும் கிடையாது. ஆனால் வெளியானபோது அது சுஜாதாவின் நைலான் கயிறு போல ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய amoral ஒற்றன் (புத்தகத்தின் இறுதியில் பாண்டுக்கு மனசாட்சி உறுத்தினாலும்), காமிக் புத்தகங்களை விட நம்பகத்தன்மை நிறைந்த வில்லன், சம்பவங்கள், நாயகி இதெல்லாம் ஒரு மாற்றமாக இருந்திருக்க வேண்டும்.
இதைத் தவிர 13 பாண்ட் புத்தகங்களை இயன் ஃபிளெமிங் எழுதி இருக்கிறார். இப்போதே புத்தகங்கள் போரடிக்கத் தொடங்கிவிட்டன. திரைப்படங்கள் வருவதால் மட்டும்தான் இந்தப் புத்தகங்கள் நினைவு கூரப்படும். Moonraker (1955), From Russia With Love (1957), Dr. No (1958), Goldfinger (1959), Thunderball (1961) போன்றவற்றைப் படிக்கலாம். படிக்கக் கூடிய ஒரு காட்சியாவது இருக்கும். மூன்ரேக்கரில் வில்லன் ஹ்யூகோ ட்ராக்ஸோடு பாண்ட் பிரிட்ஜ் விளையாடும் காட்சி. ஃப்ரம் ரஷியா வித் லவ் புத்தகத்தில் ரயில் பயணம். டாக்டர் நோவில் உயிர் பிழைக்க பல அபாயங்கள் நிறைந்த ஒரு obstacle course வழியாக பாண்ட் போக வேண்டி இருக்கும் காட்சி. கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப் விளையாட்டு. தண்டர்பாலில் சானடோரியத்தில் லிப்பேயுடன் நடக்கும் தகராறு.
ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் டாக்டர் நோவைத்தான் பரிந்துரைப்பேன். அது Moonraker, From Russia With Love, Goldfinger, Thunderball ஆகியவற்றோடு ஒப்பிட்டால் first among equals.
ஃப்ளெமிங் இறந்த பிறகும் ஜேம்ஸ் பாண்ட் என்பது நன்றாகத் தெரிந்த ஒரு ட்ரேட்மார்க் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகங்களுக்கான ஜேம்ஸ் பாண்ட் ட்ரேட்மார்க் (திரைப்படங்களுக்கான ட்ரேட்மார்க் பல ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரித்த ப்ரோக்கோலி குடும்பத்திடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.) இயன் ஃப்ளெமிங் பப்ளிகேஷன்ஸ் என்று நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனமே பிற எழுத்தாளர்களை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் எழுத அழைத்திருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் கிங்ஸ்லி அமிஸ் (கர்னல் சன் (1968) என்ற ஒரு புத்தகம்), மற்றும் ஜான் கார்டினர் (16 புத்தகங்கள்), ரேமண்ட் பென்சன் (9 புத்தகங்கள்), செபாஸ்டியன் ஃபாக்ஸ் (1), ஜெஃப்ரி டீவர் (1) ஆகியோர் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். நான் கார்டினர் எழுதிய ஒரு புத்தகத்தைப் (On Special Services, 1982) படித்திருக்கிறேன். இந்தத் தொடர்ச்சியை விட ஒரிஜினல்கள் எவ்வளவோ பரவாயில்லை.
இவற்றைத் தவிர சார்லி ஹிக்சன் பதின்ம வயது பாண்டை நாயகனாக வைத்து சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.
ஜேம்ஸ் பாண்டை ஒரு icon ஆக மாற்றியதில் ஷான் கானரிக்கு பெரிய பங்குண்டு. ஆகச் சிறந்த ஜேம்ஸ் பாண்டாக அவரைத்தான் சொல்வேன். இன்றைய பாண்ட் டேனியல் க்ரெய்க். ஷான் கானரிக்குப் அடுத்தபடி அவரைச் சொல்லலாம். ரோஜர் மூர் நடித்தவை எல்லாம் பொம்மைப் படம் மாதிரி இருக்கும். அவர் நடித்த படங்களில் சிறந்தது காசினோ ராயேல். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு (இரு வல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன்…) நான் எட்டு வயதில் பெரிய ரசிகன். நானும் சிவகுருவும் பதினெட்டு பத்தொன்பது வயதில் அந்தக் காலத்தில எங்க தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் மோட்டார்சைக்கிள்ள வருவார் பாரு என்று nostalgia வசப்பட்டிருக்கிறோம்!