அசோகமித்திரனின் “யுத்தங்களுக்கிடையில்”

asokamithranபுத்தகம் புத்தக கண்காட்சியில் வாங்கியது. கடலூர் சீனுவிற்கும், சாமிற்கும் தெரியும் நான் அ.மியின் முதன்மை வாசகி என்று. கண்டிப்பாக வாங்கிருங்க என்றார்கள். நர்மதாவில் போய் கேட்டோம். சிப்பந்திக்கு அப்படி ஒரு புத்தகம் இருப்பதே தெரியவில்லை. அவரை விடாமல் தொடர்ந்து ஒரு வழியாக வாங்கினோம். இவ்வாரம் சொல்வனத்தில் வந்திருக்கும் நேர்காணலில் நாவல்கள் பற்றி அ.மி இப்படி சொல்கிறார்:

நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு. அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது

arunaநாவல் சார்ந்த வடிவத்தைப் பற்றிய அ.மியின் கருத்து அவர் எழுதும் நாவல்களில் பிரதிபலிக்கிறது. இந்த நாவல் 159 பக்கங்களில் அடங்கி விடுகிறது. விலை 60 ரூபாய்.

ஒரே குடும்பத்தின் கதையை வேறு வேறு உறுப்பினர்களே திரும்பத் திரும்ப நினைவு கூறும் தொடர் உத்தியில் சொல்லப்படும் நாவல். எளிதாக புரிய வைக்க வேண்டும் என்றால் தமிழில் ஆய்த எழுத்து சினிமாவில் பயன்படுத்தியது போன்ற உத்தி. முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அ.மி விட்டுச் செல்லும் ரொட்டித் துண்டின் தடத்தை பின் தொடர்ந்தால் சட்டென்று நமக்கும் புரிந்து விடுகிறது. உறவுகளின் நூல். ஒரு கிராமத்தில் படிப்பை மட்டுமே நம்பி பிழைக்கும், ரொம்ப சாமர்த்தியம் எல்லாம் இல்லாத 16 குழந்தைகள் பிறந்த, 8 குழந்தைகளே தங்கிய ஒரு கீழ் மத்திய தர பிராமண குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களின் மிகச் சாதாரணமான வாழ்க்கையை, பெரிதான உணர்ச்சி வெளிப்பாடுகளோ, மானுட தரிசனங்களோ எல்லாம் இல்லாமல் நினைவு கூர்கிறார்கள்.

வேறு ஒரு பேட்டியில் ஒரு கட்டத்தில் அ.மி.யின் அடக்கமான பதில்களில் பொறுமையிழந்து ஒரு நண்பர், “எழுத்து என்பது ஆன்மீகமான தேடல் அல்லவா?” என்று உணர்ச்சியுடன் கேட்டார். சற்றே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அ.மி

எனக்கு இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம் எப்படித் தேடறது

என்று சிரிக்காமல் சொன்னார். கேள்வி கேட்ட நண்பர் உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

Yuddhangalukkidaiyilஅவர் சித்தரிக்கும் வாழ்க்கையும் அதில் வரும் கதாபாத்திரங்களும் இந்த கருத்தையே முன் வைக்கிறார்கள். தம் வாழ்க்கையைப் பற்றி பிழைத்துக் கிடைக்கும் நோக்கில் மட்டுமே அணுகும் மனிதர்கள், சாதரணர்கள். அ.மி இப்புத்தகத்தின் முன்னுரையில் சொல்வது போல் இவ்வாழ்வும் யுத்தம்தான்.

ஆனாலும், தன் மேல் திருடன் என்ற பழி வந்து விடுமோ என்று பயந்து மூலையில் அமர்ந்து உயிரை விடும் இரண்டாவது அண்ணா, தன் கல்யாணத்தால் வீட்டை விட்டு வெளியேறும் மூத்தார் பையனுக்கு சொத்துக்களை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாதுகாக்கும், தன் அண்ணன் மகனை தத்தெடுத்து அவனுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கும் இளம் விதவை சீதா, தன் மகனை இழந்த நொடியில் தன் துஷ்ட அம்மாவின், அவள் இழப்பின் வலியை ஒரு நொடி நேரம் நினைக்கும் ராமேசன், தன் தம்பியை ஊருக்கு கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ராகவன், மொழியும், மனிதர்களும் அன்னியமான ஊரில் சென்றடைந்து அங்கே எளிய நட்பையும், பிழைக்க தையலையும், ஊறுகாய் போடும் வழிகளையும் எல்லாம் சத்தமில்லாமல் கண்டடையும் பெண்கள், தன் தம்பிகளுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து அவர்களை வழி நடத்தும் பாலு என பிழைப்பிற்காக புலம் பெயரும், இவ்வாழ்வில் பிழைப்பைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் அதிலும் சின்ன சின்ன லட்சியங்களை சுமக்கும், அதை லட்சியம் போன்ற வார்த்தைகளால் எல்லாம் நினைக்காத ஒரு தலைமுறையின் உழைப்பின், தியாகத்தின், பொறுப்பின் கதை.

நம் அனைவரின் வாழ்க்கையையும் திரும்பி பார்த்தால் நம் முந்தைய தலைமுறைக்காரர்களுக்கு இதே போல் ஒரு கதை இருப்பது நிச்சயம். அந்த வாழ்க்கையின் கதையை அவர்கள் மிகச் சாதாரணமாக தாண்டியும் செல்வார்கள். நாவலில் நுண்விவரங்களெல்லாம் பெரிதாக கிடையாது. அவர் வரைந்து காட்டுவது ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம். அதன் உள்ளே இருக்கும் அடர்த்தியான வாழ்க்கை நம் கற்பனைக்கே விடப்படுகிறது. சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நிறைய. அ.மியின் மெல்லிய, கூரிய நகைச்சுவை அவதானிப்புகள் நாவல் நெடுக.

முன்னும் பின்னுமாக சொல்லப்படுவதால் கொஞ்சம் கவனத்துடன் படித்தால்தான் நன்றாக புரியும். ஆனால் புத்தகத்தில் பெயர்கள் சில இடங்களில் தப்பாக அச்சிடப்பட்டிருப்பது முதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எடிட்டிங் இன்னும் நன்றாக அடுத்த பதிப்பிலாவது செய்யலாம்.

சிறு நாவல், கடகடவென்று படித்து விடலாம் தான். ஆனால் எல்லா அ.மியின் எழுத்துக்களையும் போல கூர்ந்து படித்தலும், மற்றொருமுறையும் படித்தலும்தான் அவர் சொல்லாமல் விடும் அனைத்தையும் உள்வாங்க உதவும்.


ஆர்வியின் குறிப்பு: அருணாவின் விவரிப்பைப் படிக்கும்போது எனக்கு என் அப்பா தலைமுறைக் குடும்பங்கள் – குறிப்பாக என் பெரியப்பா நினைவு வருகிறது. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பதிவுகள், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகம் பற்றி நண்பர் ரெங்கசுப்ரமணி
புத்தகம் பற்றி ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார் – அம்ஷன்குமாரும் ஆய்த எழுத்து திரைப்படத்தைப் பற்றி குறிப்பிடுவதும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும் என்று சொல்வதும் ஆச்சரியம்!