பொருளடக்கத்திற்கு தாவுக

சாண்டில்யன்

by மேல் மார்ச் 12, 2014

sandilyanசாண்டில்யனின் எல்லா புனைவுகளையும் படித்து டிக் மார்க் போட்டுவிட வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. தனியாக பதிவு போடும் அளவுக்கு வொர்த் இல்லாத புத்தகங்களைப் பற்றி இங்கே சிறு குறிப்புகள் எழுதி இருக்கிறேன்.

ராஜயோகம்: ராஜ யோகம், சேரன் செல்வி ஆகியவற்றோடு சேர்த்து ஒரு trilogy. தமிழில் இது அபூர்வமான முயற்சி. வாசப் என்ற (யுவன் சுவாங், மார்க்கோ போலோ, இபின் பதூதா மாதிரி) ஒரு சரித்திர ஆசிரியன் மற்றும் பயணி குலசேகரப் பாண்டியனுக்கு பின் எழுந்த வாரிசு சண்டையை பார்க்கிறான். பஸ்ஸில் படிக்கலாம். யார் இந்த வாசப்?

நிலமங்கை: மாலிக் காஃபூர் படையெடுத்த காலத்தில் பாண்டிய அரியணைப் போட்டியைப் பற்றிய கதை. வீரபாண்டியனை சேர அரசன் ரவிவர்மனின் மகள் நிலமங்கை பல அபாயங்களிலிருந்து காப்பாற்றி மணம் செய்து கொள்கிறாள்.

சேரன் செல்வி: மாலிக் காஃபூர் திரும்பினாலும் அமீர் குஸ்ரோ கான் இன்னும் தென்னிந்தியாவில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிக்கிறான். அவன் முயற்சிகளை முறியடிக்கும் சேரன் ரவிவர்மனின் சாகசங்கள். ரவிவர்மன் தன் மருமகன் வீரபாண்டியனோடும் இந்த முயற்சியில் போரிட வேண்டி இருக்கிறது.

அவனிசுந்தரி: கோவூர் கிழாரின் சில பாடல்களை வைத்து நலங்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் ஆகியோரை வைத்து ஒரு குறுநாவல். தவிர்க்கலாம்.

இந்திரகுமாரி: கதம்ப குல மன்னன் ரவிவர்மன் பலாசிகா நகரத்தைக் கைப்பற்றுகிறான். தவிர்க்கலாம்.

கடல் ராணி: கனோஜி காலத்தில் அரபிக் கடலில் நடந்த ஒரு சிறு போரை மையமாக வைத்து ஒரு கதை. டைம் பாஸ்.

கடல் வேந்தன்: கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்ற மன்னன் ஒரு கடல் போரில் யவனர்களை தோற்கடித்தானாம். அந்தப் பின்னணியில் ஒரு கதி. தவிர்க்கலாம்.

கவர்ந்த கண்கள்: ராமானுஜர் பற்றிய குருபரம்பரை கதைகளில் வில்லிதாசன் கதையும் ஒன்று. வில்லிதாசன் தன் மனைவி பொன்னாச்சியின் கண்களின் அழகில் மயங்கி இருந்தாராம்; ராமானுஜர் உனக்கு அதை விட அழகிய கண்களை காட்டுகிறேன் என்று அரங்கனின் கண்களைக் காட்டி, வில்லியை வைஷ்ணவ மார்க்கத்தில் திருப்பினாராம். இந்த legend-ஐ சாண்டில்யன் கதையாக எழுதி இருக்கிறார். டைம் பாஸ்.

மங்கலதேவி: கொஞ்சம் நீளமான கதை ஒன்று (மங்கலதேவி – பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் ஒரு கோட்டையை கைப்பற்றுகிறான்), கொஞ்சம் சின்னக் கதைகள் மூன்று (ஒன்று பாஜிராவ்-மஸ்தானி காதல் பற்றி, ஒன்று கதம்ப ராஜ வம்சத்தை ஸ்தாபித்த மயூர சன்மன் பற்றிய ஒரு தொன்மக் கதை, இன்னொன்று ஆமூர் மல்லனை ஒரு சோழ இளவரசன் வீழ்த்தியதைப் பற்றி நக்கண்ணையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை வைத்து எழுதியது). டைம் பாஸ்.

மாதவியின் மனம்: சமுத்திரகுப்தன் காஞ்சி பல்லவன் விஷ்ணுகோபன் மேல் படையெடுத்து வந்த வரலாற்றுப் பின்புலம். என்னவோ பிரமாத சதி என்று பில்டப் எல்லாம் கொடுத்து உப்பு சப்பில்லாத ஒரு சதியைக் கொடுத்திருக்கிறார்.

மோகனச் சிலை: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்த சம்பவத்தை வைத்து ஒரு சாகசக் கதை. டைம் பாஸ்.

மூங்கில் கோட்டை: மாந்தரஞ் சேரல் இரும்பொறை தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பினான் என்று ஏதோ ஒரு சங்கப் பாடல் இருக்கிறது. அதை கதையாக்கி இருக்கிறார்.

நாகதேவி: சாண்டில்யன் நல்ல நாளிலேயே தில்லைநாயகம். இதில் இரண்டு நாயகிகள். இரட்டைப் பிறவிகள். அவள் என்று நினைத்து இவளைத் தடவுவதும் இவள் என்று நினைத்து அவளைத் தடவுவதும் அவள் என்று சொல்லிக் கொண்டு இவள் வருவதும் இதேதான் கதை பூரா. படுத்துகிறார்.

நீலரதி: களப்பிரர் காலம். அச்சுத விக்ராந்தன் ராஜா. அதைத் தவிர வேறு ஒரு வரலாறும் இல்லை. ஒரு கறுப்பு வெள்ளை எம்ஜிஆர் ராஜா ராணி படம் பார்ப்பது போல ஒரு கதை.

நீலவல்லி: முத்துக் களவை துப்பறியப் போகும் பாண்டிய இளவரசன் வீரநாராயணன் சேரன் மகளையும் சந்தித்து மணக்கிறான். நடுவில் இரண்டு மூன்று அத்தியாயம் அந்தக் காலத்துக்கு போர்னோவாக இருந்திருக்க வேண்டும்.

நீள்விழி: நந்திவர்ம பல்லவனுக்கும் பாண்டிய மன்னன் ஜடிலனுக்கும் பெண்ணாகடத்தில் போர் நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கமான கதை. தவிர்க்கலாம்.

பல்லவபீடம்: பல்லவ அரசன் சிவஸ்கந்தவர்மனின் சாகசங்கள். தவிர்க்கலாம்.

பல்லவ திலகம்: பல்லவ அரசன் தந்திவர்மன் நான் வளர்ந்த கிராமம் ஒன்றின் அருகே மிகப் பெரிய ஏரி ஒன்றை வெட்டியவன். அதனால் அவனைப் பற்றி கொஞ்சம் தேடிப் பிடித்து படித்திருக்கிறேன். ராஷ்டிரகூடர்களிடம் அவன் தோற்றது வரலாறு. ஆனால் சாண்டில்யனின் கதாநாயகன் தோற்கலாமா? அதனால் தந்திவர்மன் வென்றதாகவும் ஆனால் ராஷ்டிரகூட அரசனிடம் நீயே ஜெயித்ததாக கல்வெட்டு வெட்டிக் கொள் என்று சொன்னதாகவும் எழுதி இருக்கிறார். மனிதர் ரூம் போட்டு யோசித்திருக்கிறார்!

ராஜபேரிகை: சந்தாசாஹிப் நாயக்கர் வம்ச கடைசி ராணி மீனாட்சியை பொய் சத்தியம் செய்து கொடுத்து ஏமாற்றினார் என்று சொல்வார்கள். ராணியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரன் அவனைப் பழிவாங்குவதாக கதை. பின்புலத்தில் ராபர்ட் கிளைவ், டூப்ளே, ஆங்கில அரசு அமைவதின் முதல் படி. ராணி மீனாட்சியின் ஆவி கிளைவுக்கு உதவுவதாக கதையை அமைத்திருக்கிறார். ரொம்ப பேச்சு. எல்லாரும் என்னவோ டீக்கடைப் பேச்சு போல அடிவெட்டு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில்தான் உள்ளே போவது ரொம்ப சிரமம் என்று கப்பலைப் பற்றி நாயகன் பேச படிப்பவர்களுக்கு எங்கே உள்ளர்த்தம் புரியாமல் போய்விடப் போகிறதோ என்று நாயகி வெட்கப்படுவாள். டைம் பாஸ்.

ராஜதிலகம்: பல்லவர் சாளுக்கியர் போர்கள் மிகவும் குழப்பமானவை. புலிகேசி தான் மகேந்திரவர்மனைத் தோற்கடித்தேன் என்றும் மகேந்திரவர்மன் தான் புலிகேசியைத் தோற்கடித்தேன் என்றும் கல்வெட்டி இருக்கிறார்கள். புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் மகேந்திரவர்மனின் பேரன் பரமேஸ்வரவர்மன் போரும் இப்படித்தான் இருவருமே வென்றதாக இருக்கிறது. சாண்டில்யன் முதலில் விக்ரமாதித்தன் வென்றான், பிறகு பரமேஸ்வரவர்மன் என்று தன் கதையை எழுதி இருக்கிறார். விறுவிறுப்பாகப் போகிறது. தொடர்கதையாக நிச்சயம் படிக்கலாம்.

ராஜ்யஸ்ரீ: ஹர்ஷர் தன் தங்கை ராஜ்யஸ்ரீயின் கணவர் கிருகவர்மனை வஞ்சகமாகக் கொன்றவர்களை பழி தீர்த்து வட இந்தியாவின் சக்ரவர்த்தி ஆனார் என்பது சரித்திரம். முக்கால்வாசி நேரம் கிருகவர்மன் ராஜ்யஸ்ரீயைத் தடவுவதை விலாவாரியாக விவரிக்கிறார், கடைசி கால் பாதியில் சரித்திரத்தை சேர்த்து முடித்து விடுகிறார். தவிர்க்கலாம்.

சித்தரஞ்சனி: கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களின் தலைவனான நாகபாணனை வென்று சாதவாகன அரசை நிறுவினான் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு கதை. சுமார்.

துறவி: தவிர்க்கலாம். ராஜா-ராஜா சண்டை, அவ்வளவுதான்.

வசந்தகாலம்: பெருஞ்சேரல் இரும்பொறை அதியமான் நெடுமான் அஞ்சியைத் தோற்கடித்தான் என்ற பின்னணியை வைத்து போலி சாமியார் கோஸ்வாமி, ஒரு வழக்கமான காதல் எல்லாம் சேர்த்து கதையாக்கி இருக்கிறார்.

மதுமலர்: சாண்டில்யன் எழுதிய அபூர்வமான சமூகக் கதை. ஐம்பதுகளில் எழுதப்பட்டிருந்தால் நல்ல சினிமாக் கதையாக இருந்திருக்கும். ஜமீந்தார் பதவி+பணத்துக்காக மனைவியை மறக்கும் அப்பா, மூத்த தாரத்து மகன், இளைய தாரத்து மகன், இரண்டு பேரும் விரும்பும் ஹீரோயின் என்று சில ஸ்டாண்டர்ட் சினிமா காரக்டர்களை வைத்து எழுதப்பட்டது. இன்றைக்கு ஒரு curiosity value-வுக்காக மட்டுமே படிக்கலாம்.

நங்கூரம்: இன்னொரு சமூகக் கதை. ஸ்டீரியோடைப் பாத்திரங்கள். தவிர்க்கலாம்.

புரட்சிப்பெண்: தீவிரவாதி சரபசாஸ்திரி, காந்தி பக்தர்கள், சுதந்திரப் போராட்டப் பின்னணியில் ஒரு சமூகக் கதை. ஒரே ஆச்சரியம் இதற்கு சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதிப் பாராட்டித் தள்ளி இருப்பதுதான். சத்தியமூர்த்தியின் ரசனை இவ்வளவு மோசமாக இருக்க வேண்டாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திரப் புனைவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
சாண்டில்யனின் “ஜலதீபம்”
சாண்டில்யனின் “கன்னி மாடம்”
சாண்டில்யன் நூற்றாண்டு

8 பின்னூட்டங்கள்
 1. சில சாண்டில்யன் கதைகள் ரஃபேல் சபாடினி நாவல்களின் காப்பி என்பது தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் !

  Like

 2. யாரு சார் அது ரஃபேல் சபாடினி நமது மன்னர்கள் பற்றி கதை எழுதியிருப்பது? சாண்டில்யன் போரடிக்காமல் போவதற்கு காரணம், சுவாரஸ்யம், சாகசம். பொன்னியில் செல்வனை விட கடல்புறாதான் டாப் என்று சொன்னவரை இன்றும் வியந்து கொண்டிருக்கின்றேன். அப்படி ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கின்றார். நாகதேவியை நூலகத்திலிருந்து எடுத்துவந்து படித்த உடனேயே திருப்பி தந்துவிட்டேன். வேறு யாராவது படித்தால் உதை நிச்சியம் என்ற பயம். அது போன்று பயந்த கதை ஜெ.கா ரிஷிமூலம் மட்டும்தான். கதையிலுள்ள மொத்த சரித்திர உண்மைகளை எழுதினால் நமது போனில் ஒரு பக்கம் வரும். பெண்களை எடுத்துவிட்டால், நமது ஸ்கீரினில் ஒரு பத்து பக்கம் மிஞ்சும். அது கதை.

  Like

  • ரெங்கசுப்ரமணி, // யாரு சார் அது ரஃபேல் சபாடினி நமது மன்னர்கள் பற்றி கதை எழுதியிருப்பது? // 🙂

   Like

 3. பிருந்தாபன் permalink

  சாண்டில்யன் கதைகளை டிக் போடுகிறேன் என்று வானதி பதிப்பக நூல்களை மட்டுமே டிக் போடுகிறீர்கள் போல இருக்கிறது. பாரதி பதிப்பகமும் அவர் புத்தகங்கள் ஒரு ஐந்தாறு பதித்திருக்கிறார்கள். விஜயமஹாதேவி, நீல ரதி, கடல் வேந்தன் போன்றவை. அவற்றையும் டிக் செய்து விடுங்கள்.

  Like

  • பிருந்தாபன், நீலரதி, கடல் வேந்தன், விஜயமகாதேவி மூன்றும் இருக்கிறது, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. மீண்டும் புரட்டியாவது பார்த்தால்தான் எழுத முடியும்…

   Like

 4. Bhargavi permalink

  Hi, Do you know which years the novel ‘Kadal Rani’ was serialized?

  Like

  • பார்கவி, கடல் ராணி எப்போது தொடர்கதையாக வந்தது என்று கேட்டிருந்தீர்கள். எண்பதுகளில் கல்கியில் வந்தது என்று நினைவு, ஆனால் நிச்சயமாகத் தெரியவில்லை.

   Like

Trackbacks & Pingbacks

 1. தமிழின் டாப் டென் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: