சீடர்கள்

பரசுராமர் அர்க்யத்தை முடித்துத் திரும்பும்போது அடிவாரத்தில் மூன்று உருவங்கள் நடந்து வருவது தெரிந்தது. வயது கூடிக்கொண்டே போனாலும் கண் பார்வை மங்கவில்லை என்று அவர் மனதில் ஒரு சின்ன பெருமிதம் ஏற்பட்டது. கிடுகிடுவென்று காட்டுக்குள்ளே நடந்துபோய் தன் கோடரியால் நிறைய கிழங்குகளைத் தோண்டினார். கொஞ்சம் பழங்களையும் பெரிய வாதாம் இலைகளையும் அறுத்தார். ஒரு காலத்தில் க்ஷத்ரிய ரத்தத்தை தீராத தாகத்துடன் குடித்த தனது கோடரி வயதான காலத்தில் கிழங்கு தோண்டத்தான் பயன்படுகிறது என்று ஒரு சின்ன வருத்தம் எழுந்தது.

தன் பர்ணசாலைக்குப் போய் கிழங்குகளை வாட்டினார். தேன், பழங்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டார். நான்கு வாதாம் இலைகளை கழுவி வைத்தார். வாசலில் போய் நின்றார். மூன்று உருவங்களும் நெருங்கிக் கொண்டிருந்தன. பரசுராமர் “வர வேண்டும், வர வேண்டும்” என்று அழைத்துக் கொண்டே அவர்களை நோக்கி நடந்தார். மூவரும் அவரை வணங்கினார்கள். பரசுராமர் அவர்களில் மூத்தவரை அணைத்துக் கொண்டார். “இன்று நல்ல நாள், நல்ல நாள்! எங்கோ மகேந்திரகிரியில் தனியாக நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கும் எனக்கு இன்று மூன்று அதிதிகள்! அதுவும் மூன்று பிராமண அதிதிகள்! அதுவும் யார்? வேத வியாசன், என் சீடன் துரோணனின் மைத்துனன் மற்றும் மகன்! வாருங்கள், சிறிது உணவு உண்டுவிட்டு இளைப்பாறிவிட்டு பிறகு பேசலாம்” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

“நான் மாமிச உணவை விட்டுவிட்டேன். மாமிசம் ரஜோகுணத்தை வளர்க்கிறது. பிராமணர்களுக்கு சைவ உணவுதான் சரி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். கிருபர் மெல்லிய புன்னகை பூத்தார். பரசுராமரும் கொஞ்சம் நகைத்தார். “21 தலைமுறை க்ஷத்ரியர்களைக் கொன்றுவிட்டு ரஜோகுணம் சத்வகுணம் என்று பேசுகிறேனே என்று பார்க்கிறாயா? வயதாகிறதே!” என்றார்.

உணவு முடிந்து நால்வரும் பர்ணசாலையின் பின்னால் சென்றனர். அங்கே பரசுராமர் நான்கு மரங்களை வெட்டி உட்கார ஆசனங்கள் செய்திருந்தார். அங்கே சாய்ந்து அமர்ந்து கொண்டனர். அஸ்வத்தாமன் “உங்கள் பரசு இப்பொதெல்லாம் மரம் வெட்டத்தான் பயன்படுகிறதா குருவே?” என்று கிண்டலாகக் கேட்டான். கிருபர் அவனை அடக்கினார். பரசுராமர் “அவன் கேட்டதில் தவறில்லை கிருபா! நம் நால்வருக்குமே சாவில்லை, நாம் சிரஞ்சீவிகள் என்பது உண்மைதான், ஆனால் நால்வருக்கும் முதுமை இல்லாமல் போகவில்லையே! நான் உங்கள் எல்லாரையும் விட மூத்தவன்; முதியவனும் கூட. நம் திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம், அஸ்வத்தாமா!” என்றார்.

வியாசர் ஆரம்பித்தார். “பரசுராமரே! நான் பாண்டவர் கௌரவர் சரித்திரத்தை ஒரு காவியமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். மகாபாரதம்! அதில் எனக்கு சில சந்தேகங்கள், உங்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவே வந்தேன்.” என்றார்.

பரசுராமர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார். “வியாசா! இதோ இந்த அஸ்வத்தாமனும் கிருபனும் நம்மவர்கள். நம்மைப் போன்றே சாவில்லாதவர்கள். நமக்கு இன்னும் இருக்கும் ஆயிரக்கணக்கான வெறுமையான ஆண்டுகளை இவர்கள் துணையோடுதான் கழித்தாக வேண்டும். அஸ்வத்தாமனும் கிருபனும் இரவில் பாண்டவர்களின் படையை வஞ்சகமாக அழித்தார்கள் என்று எழுதிவிடுவாயா? நம்மவர்கள் மீது நீயே பழி போடுவாயா?” என்று கேட்டார்.

வியாசர் சொன்னார் – “ஆம் பரசுராமரே, இதில் என்ன சந்தேகம்! காவியம் எழுத அமர்ந்தால் மனதுக்கு உண்மையாக இருக்க வேண்டாமா?”

“வென்றவர்கள் எழுதுவதுதான் வரலாறு. நீ உண்மையாக இவர்கள் சரித்திரத்தை எழுதிவிட முடியுமா?”

“பாண்டவர்கள் கௌரவர்கள் இருவருமே என்னவர்கள்தானே! என் ரத்தம்தானே! இதில் நான் எப்படி பொய் சொல்ல முடியும் பரசுராமரே!”

“அந்த மாயக் கண்ணனின் ஏமாற்று வேலைகளை எல்லாம் நீ எழுதிவிட முடியுமா? அவன் அனுமதிப்பானா?”

“எழுதத்தான் போகிறேன். பீஷ்ம வதை, ஜயத்ரத வதை, துரோண வதை, கர்ண வதை, துர்யோதன வதை ஆகியவற்றில் எல்லாம் அவன் ஆடிய ஆட்டத்தை விவரிக்கத்தான் போகிறேன். அவன் என்ன அனுமதிப்பது?”

பரசுராமர் யோசித்தார். வியாசர் காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து அவர் அஸ்வத்தாமன் பக்கம் திரும்பினார். “அஸ்வத்தாமா! நீ உன் புகழைப் பற்றி கவலைப்படாமலிருக்கலாம். ஆனால் திரௌபதியை துச்சாதனன் மானபங்கப்படுத்தியபோது உன் தந்தை மௌனமாக இருந்ததும் தெரிய வரும். அபிமன்யுவைக் கொன்றதில் அவர் வகித்த பங்கும் வெளிவரும். உனக்கு இதெல்லாம் பற்றி கவலை இல்லையா?” என்று கேட்டார்.

“அந்த கிருஷ்ணனின் அயோக்கியத்தனங்கள் வெளியே தெரிந்தால் அது எனக்குப் போதும். மற்ற எதைப் பற்றியும் எனக்கு அக்கறை இல்லை.” என்றான் அஸ்வத்தாமன்.

பரசுராமர் பெருமூச்செறிந்தார். “சரி கேள் வியாசா!” என்றார்.

“நீங்கள் க்ஷத்ரிய விரோதி என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்தப் போரில் ஒவ்வொரு பெரிய மகாரதியும் ஒன்று உங்கள் நேரடி சீடன் இல்லாவிட்டால் உங்கள் சிஷ்ய பரம்பரை. பீஷ்மனும் துரோணனும் கர்ணனும் உங்கள் சீடர்கள். அர்ஜுனனும் பீமனும் துரியோதனனும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் துரோணனின் சீடர்கள். சில வயதான மன்னர்கள் – துருபதன், சல்யன், பூரிஸ்ரவஸ் இத்யாதியினரைத் தவிர்த்து ஏறக்குறைய எல்லா க்ஷத்ரிய அரசர்களும் துரோணனின் சீடர்கள்தான். ஒரு மாபெரும் க்ஷத்ரிய யுத்தம் – அதில் ஏறக்குறைய எல்லாருமே உங்கள் சீடப் பரம்பரை என்பது ஆச்சரியமாக இருக்கிறதே!நீங்கள் க்ஷத்ரிய விரோதக் கொள்கையைக் கைவிட்டுவிட்டீர்களா? அப்படி என்றால் கர்ணனை ஏன் சபித்தீர்கள்? கர்ணன் க்ஷத்ரியன் என்பதை நீங்கள் உணரவில்லை, அவனால் உங்களை ஏமாற்ற முடிந்தது என்று என்னால் நம்பமுடியவில்லை. சரி அப்படியே அவன் உங்களை ஏமாற்றினான் என்றே வைத்துக் கொண்டாலும் பீஷ்மன் க்ஷத்ரியன் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமே? அவனுக்கு எப்படி போர்க்கலைகளை கற்றுக் கொடுத்தீர்கள்?” என்றார் வியாசர்.

பரசுராமர் சிரிக்க ஆரம்பித்தார். விடாத சிரிப்பு. அலை ஓய்ந்துவிட்டது என்று எண்ணும்போது மீண்டும் பெரிய அலை அடிப்பது போல மீண்டும் மீண்டும் சிரிப்பு. வியாசருக்கு என்ன செய்வதென்றே புரியாமல் பரசுராமரை ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து பரசுராமர் பேச ஆரம்பித்தார்.

“அன்றும் இன்றும் என்றும் க்ஷத்ரியர்கள் என் விரோதிகள்தான் வியாசா! பல தலைமுறைகளாகத் தொடர்ந்த வெறுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நானும் ஒரு காலத்தில் நினைத்தது உண்டு. அந்தத் தருணத்தில்தான் கங்கா என்னிடம் தேவவிரதனுக்கு அஸ்திரப் பயிற்சி அளிக்கும்படி கேட்டுக் கொண்டாள். என் மனதை மாற்றிக் கொண்டு நானும் அவனுக்கு ஆசார்யனாக இருந்து முழு மனதுடன் தனுர்வேதத்தை அவனுக்கு அளித்தேன். ஆனால் அவனிடம் அம்பாவை மணம் செய்து கொள் என்று நான் சொன்னபோது அவன் கேட்டானா? தந்தை சொன்னார் என்பதற்காக தாயின் கழுத்தை நான் வெட்டினேன் வியாசா! ஆனால் ஆசார்யனின் கட்டளையை மீற இந்த க்ஷத்ரிய அகங்காரி தயங்கவில்லை! அகங்காரம் என்பது க்ஷத்ரிய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது வியாசா! அவனுக்கு புத்தி புகட்டவே அவனோடு போரிட்டேன். ஆனால் அவன் இளமை என் வயதை வென்றது வியாசா! என்னிடமே தனுர்வேதத்தைக் கற்று என்னையே தோற்கடித்த இந்தத் திமிர் பிடித்த க்ஷத்ரியக் கூட்டத்தை மீண்டும் ஒழிப்பது என்று சபதமிட்டேன்!”

வியாசரின் குழப்பம் அவர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. “புரியவில்லையே! துரோணனை நீங்கள் சீடனாக ஏற்றபோது அவன் க்ஷத்ரியர்களின் மாபெரும் குருவாக உருவெடுப்பான் என்பதை நீங்கள் யூகிக்காமல் இருந்திருக்க முடியாது. க்ஷத்ரியர்கள் உங்கள் மூலம் அஸ்திர சஸ்திரங்களில் தேர்ச்சி பெறுவதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லையா?” என்று கேட்டார்.

“துரோணன் அன்று தனுர்வேதம் கற்க வேண்டும் என்று வரவில்லை வியாசா! தங்கத்தைத் தானமாகப் பெற வேண்டும் என்றுதான் வந்தான். தங்கம் தீர்ந்துவிட்டது, தனுர்வேதம் கற்றுக் கொள், பிறகு க்ஷத்ரியர்களின் குருவாகப் பணி புரிந்து உன் வறுமையைப் போக்கிக் கொள் என்று அவனுக்கு அறிவுரை சொன்னவனே நான்தான்.”

“அப்படி என்றால்? க்ஷத்ரியர்களை ஒழிக்க சபதம் பூண்டேன் என்கிறீர்கள், அவர்களுக்கு வில் வித்தையை சிறப்பாகக் கற்றுத் தர ஒரு குருவையும் தயார் செய்திருக்கிறீர்கள், ஒன்றும் புரியவில்லையே?”

“என்னால் அவர்களை நேரடியாக வெல்ல முடியாது என்பதை அந்த தேவவிரதன் என்னை முறியடித்தபோது உணர்ந்து கொண்டேன். துரோணனின் பண ஆசை அவனை எல்லாருக்கும் குருவாக மாற்றும் என்று யூகித்தேன். ஏறக்குறைய சம பலம் பொருந்திய பல க்ஷத்ரியர்கள் உருவானால் – அதில் ஒரு சிலராவது தேவவிரதன், துரோணன் அளவுக்கு திறமை பெற்றால் – அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்வார்கள், ஒருவரை ஒருவர் கொன்று கொள்வார்கள் என்று கணக்கிட்டேன். என் திட்டம் பலித்தது!”

“கர்ணன் விஷயம்?”

“கர்ணன் தான் பிராமணன் என்று பொய் சொன்னபோது அதை நம்பியதாக நடித்தேன். உடலில் கவசத்தோடு எந்த பிராமணன் பிறக்கிறான்? ஆனால் அவன் திறமை என்னை அச்சம் கொள்ள வைத்தது. இவன் கவசமும் திறமையும் இவனை யாராலும் வெல்ல முடியாதவனாக மாற்றும் என்று பயந்து அவன் பொய் சொன்னான் என்று ஒரு சாக்கு சொல்லி அவனை சபித்து அவனை பலவீனப்படுத்தினேன். அவ்வளவுதான்!”

வியாசரும் கிருபரும் அஸ்வத்தாமனும் சிலையாக ஸ்தம்பித்துப் போய் நின்றார்கள். “சகுனியையே மிஞ்சிவிட்டீர்களே!” என்று அஸ்வத்தாமன் முனகினான். வியாசர் பர்ணசாலையை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார். மற்ற இருவரும் தொடர்ந்தார்கள்.

பரசுராமர் பின்னாலேயே வந்து கூச்சலிட்டார். “முழு வெற்றி வியாசா! 18 அக்ரோணி சேனை போரிட்டு பத்தே பத்து பேர்தான் மிச்சம். அதில் இருவர் பிராமணர், மூவர் யாதவர், ஐவர் பிராமண ரத்தம்! – உன் ரத்தம்! இந்தத் தலைமுறை க்ஷத்ரியக் கூட்டமும் அழிந்தது! இதையும் எழுது உன் காவியத்தில்! இந்த அழிவு என் திட்டம் என்று எழுது வியாசா! பிராமணனின் புத்தி க்ஷத்ரியனின் கத்தியை விட கூர்மையானது என்று எழுது!”

மகேந்திரகிரி அடிவாரத்தில் அஸ்வத்தாமன் சொன்னான் – “வியாசரே! உங்கள் காவியம் முழுவதும் மனிதர்களின் வீழ்ச்சிதான் எழுதப்படப் போகிறது. பீஷ்ம, துரோண, கர்ண, அஸ்வத்தாம, கிருஷ்ண, அர்ஜுன, பீம, யுதிஷ்டிர வீழ்ச்சிதான் எழுதப்படப் போகிறது. வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த கொள்கைகளை காற்றில் பறக்கவிட்ட கதைதான் எழுதப்படப் போகிறது. இந்தப் பரசுராமரின் அச்சமும் சூழ்ச்சியும் வீழ்ச்சியும் சொல்லப்படத்தான் வேண்டுமா? ஆதி குரு; என் தந்தையின் குரு; மேலும் நம்மைப் போல ஒரு சிரஞ்சீவி; எல்லாவற்றையும் விட காவியத்தில் அவருக்கு சின்ன இடம்தான். யாராவது கவனிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? விட்டுவிடுங்களேன்! எதிர்காலத்தில் எப்படி க்ஷத்ரிய விரோதி பீஷ்மனுக்கு குருவானார், பாரதப் போரில் போரிட்ட அனேகரும் இவரது சிஷ்யப் பரம்பரையாக இருக்கிறதே, என் தந்தை க்ஷத்ரியர்களின் குருவாக மாறுவார் என்று இவருக்குத் தெரியாமல் இருக்குமா, உடலில் கவசத்தோடு பிராமணனா என்று கூட யோசனை வராதா என்று யாரும் சிந்திக்கப் போவதில்லை.”

வியாசர் பெருமூச்சுடன் தலையசைத்தார்.


ஜெயமோகன் இந்தக் கதையை பொருட்படுத்தி அதில் தான் குறைகள் என்று உணர்வதை ஒரு பட்டியல் போட்டிருந்தார். பிறருக்கும் உதவியாக இருக்கும் என்று அந்தப் பட்டியலை கீழே தந்திருக்கிறேன்.

உங்கள் கதையின் பிரச்சினைகளாக நான் உணர்வது

 1. மகாபாரதம் போன்றவை தொன்மங்கள். தொன்மங்கள் எல்லாமே ஆழ்படிமங்கள் அதாவது archetypes. அவற்றுடன் சில விழுமியங்கள் சில மதிப்பிடுகள் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன.
 2. ஆகவே தொன்மங்களை மறு ஆக்கம் செய்ய வேண்டுமென்றால் அந்த விழுமியங்களை மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் நோக்கம் இருக்கவேண்டும். தீவிரமான தேவை அதற்கு இருக்க வேண்டும்.
 3. உங்கள் கதை தொன்மங்களுக்கு ஓர் அன்றாடத் தன்மையை அளிக்க முயல்கிறது. அது பெரும்பாலும் அழகியல் வீழ்ச்சியை உருவாக்குகிறது. ஒரு கருவறை மூல விக்ரகத்தை வெயிலில் முற்றத்தில் எடுத்து வைத்தால் நிகழ்வது போல. இதுவே முதல் குறை.
 4. இந்தச் சிக்கல் எனக்கு கொற்றவையில் உருவானது. ’கண்ணகி முந்தானையை சரி செய்துகொண்டாள்’ என எழுதும்போது எனக்கே அபத்தமாகத் தெரிந்தது. ஆகவே நான் கதையை அந்த தொன்மத்தின் மனநிலை கொண்ட ஒரு கூறுமுறைக்குக் கொண்டு சென்றேன். முதல் வடிவத்தை 300 பக்கங்களுக்கு எழுதிய பின்பு!
 5. இத்தகைய கதைகளில் சித்தரிப்புகளுக்கு ஒரு வகையான மாயத்தன்மையைக் கொடுப்பது அவசியம் அது கதை அன்றாட தளத்திற்கு வராமல் தடுக்கும்.
 6. கடைசியாக, கதையின் முடிவு அல்லது மையம் ஒரு கருத்தாக, ஓர் எண்ணமாக மட்டுமே உள்ளது. ஒரு கண்டடைதலாக இல்லை. ஒரு புதிராக அல்லது கவித்துவ முடிச்சாக இல்லை.

பட்டியல் இத்தனை சின்னதாக இருப்பதுதான் எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். 🙂 அதுவும் ஜெயமோகனுக்கும் எனக்கும் தொன்மங்களை மறு ஆக்கம் செய்வதில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் மாயத்தன்மை இல்லாத தொன்ம மறு ஆக்கம் காலவிரயம் என்று கருதுகிறார். கதையின் முடிவு கவித்துவ முடிச்சாக இருக்க வேண்டும், ஒரு கேள்விக்கு விடை, ஒரு speculation என்று இருந்தால் அது நல்ல படைப்பு இல்லை என்றும் கருதுகிறார். என்னைப் பொறுத்த வரை பைரப்பாவும் ஐராவதி கார்வேயும் அந்தக் கண்ணோட்டம் முழுமையானது அல்ல என்று தங்கள் புத்தகங்கள் மூலம் நிறுவி பல வருஷங்கள் ஆகிவிட்டன. நான் பைரப்பா, கார்வே தரத்தில் எழுதவில்லை என்பது அந்தக் கண்ணோட்டத்தை முழுமையானதாக ஆக்கிவிடாது என்றே நான் உறுதியாகக் கருதுகிறேன்.


நண்பர் ஜடாயு தமிழ் ஹிந்து தளத்தில் இந்தக் கதையை பிரசுரிக்க மறுத்துவிட்டார். அவர் தன் காரணங்களை விளக்கி எழுதியது கீழே.

“மகாபாரதக் கதை” என்ற அளவில் சுவாரஸ்யமான கதைதான்… ஆனால் பிராமண-க்ஷத்திரிய பகை என்பது இந்தக் கதை இறுதியில் பரசுராமர் கெக்கலிப்பது போல அவ்வளவு கறுப்பு-வெள்ளைத்தனமானது அல்ல. அதில் பல grey areas உண்டு.

இந்தக் கதையைப் படித்த பின்பு வாசகர்கள் கதையை முழுசாக விட்டுவிடுவார்கள். பிராமண-அபிராமண அரசியல் விவாதங்கள்தான் கொடிகட்டிப் பறக்கும். அது ஒரு புளித்துப் போன விவாதம், ஆனால் தமிழ்ச்சூழலில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அத்தகைய ஒரு விவாதத்தில் வெறிகொண்டு மக்கள் ஈடுபடுவார்கள். இந்தக் கதை கல்லடிபட்ட நாய் போல ஒரு ஓரத்தில் கிடக்கும். எனவே இக்கதையை தமிழ்ஹிந்து தளத்தில் பிரசுரிக்கப் போவதில்லை.

நான் இன்னுமா பிராமண-அபிராமண சண்டை என்று ஆச்சரியப்பட்டேன். நானே வினவு தளத்தில் பல முறை சண்டை போட்டிருந்தாலும், இதெல்லாம் தமிழ் ஹிந்து தளத்தில் வராது, அங்கே ஹிந்து-மற்ற மதத்தினர்தான் 🙂 என்று நினைத்திருந்தேன். ஆனால் என் அம்மாவே மீன்வாசம் சிறுகதையைப் படித்துவிட்டு நீ புரோகிதர்களின் தராசில் தட்சிணைக்குத்தான் எடை அதிகம் என்று எழுதி இருக்க வேண்டாம் என்று சொன்னாள். அதுவே அதிகப்படி என்றால் பரசுராமர் சூழ்ச்சி செய்து க்ஷத்ரியர்களை அழித்தார் என்றெல்லாம் கதையை (கதைதான், வேறு எதுவுமில்லை) தமிழ் ஹிந்து தளத்தில் எங்கே பிரசுரிப்பது?


தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மகாபாரதச் சிறுகதைகள்: துரோண கீதை, கிருஷ்ணனைப் பிடிக்காதவன், மீன்வாசம், ஆயிரம் துச்சாதனர்

2 thoughts on “சீடர்கள்

 1. கதையை படிக்கும் போது ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது அது எனக்கே சரியாக புரியவில்லை. ஜெயமோகனின் கருத்தை படிட்த பின் அது எனக்கே தெளிவாகி விட்டது. தொன்மக்கதையில் நம் காலத்து சாயல் அடிப்பது. ஆனால் சுவாரஸ்யமான சிந்தனை.

  இன்னுமா பிராமன – அபிராமண சண்டை. இது தீராது.ஃபேஸ்புக்கில் இன்னும் திட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். நீங்கள் வினவில் என்றால் நான் விகடனில். தமிழ்பேப்பரில் இன்னும் அவாள்தான் அனைத்து பிரச்சினைக்கு காரணம் என்று பல திராவிட கழக மொழிபெயர்ப்புகளை காப்பி பேஸ்ட் செய்து “தீவிர”மாக விவாதித்து வருகின்றனர்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.