இது படிப்புக்காகவே உருவாக்கப்பட்ட தளம். என் நேரம், இங்கெல்லாம் வந்து அரசியல் நிலை பற்றி எழுத வேண்டி இருக்கிறது.
ஜோ டி க்ரூஸ் பா.ஜ.க. மற்றும் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதனால் அவர் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட மாட்டோம் என்று நவயானா பதிப்பகம் ஒதுங்கி இருக்கிறது.
நவயானா பதிப்பகம் எதை வெளியிட விரும்புகிறது, எதை விரும்பவில்லை என்பதெல்லாம் அவர்களுடைய உரிமை. ஆர்.எஸ்.எஸ். தன் பதிப்பகத்தில் பெந்தேகோஸ்த் பிரசுரங்களை அச்சடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா என்ன? ஆனால் ஒப்பந்தம் போடப்பட்டபோது எங்கள் அரசியல் நிலை இது, அந்த அரசியல் நிலைக்கு எதிரான கருத்து உள்ளவர்களோடு நாங்கள் தொழில் செய்யமாட்டோம் என்று டி க்ரூசுக்கு தெளிவாகச் சொல்லவில்லை, அது ஒரு ஒப்பந்த ஷரத்தாக இல்லை என்றுதான் தெரிகிறது. (என் யூகம்தான்; அப்படி ஒரு ஷரத் இருந்தால் டி க்ரூசும் சரி, என் போன்றவர்களும் சரி, பொத்திக் கொண்டு போக வேண்டியதுதான்.) At will cancellation என்று ஏதாவது ஒரு clause இருந்தால் கூட டி க்ரூஸ் இதை எதிர்த்து வழக்கு தொடர வேண்டும், இந்தப் பதிப்பகம் டி க்ரூசுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்.
நவயானா பதிப்பகம் தங்களின் லட்சியமாக குறிப்பிடுவது ஜாதி எதிர்ப்பு மட்டுமே. டி க்ரூஸ் ஏதேனும் ஒரு ஜாதிக்கு ஆதரவு நிலை எடுத்திருந்தால் – அட எதிர்ப்பு நிலை எடுத்திருந்தால் கூட – நவயானா பதிப்பகம் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளலாம். இது கேவலமாக இருக்கிறது.
நான் மோடிக்கு இந்த நாட்டின் பிரதமராக வர – குஜராத் முதல்வராக இருக்கக் கூட – தார்மீக உரிமை இல்லை என்று உறுதியாகக் கருதுபவன். ஹிந்துத்துவம் என்ற கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்ப்பவன். ஆனால் மற்றவர்களும் அதே போல நினைக்க ஒரு அவசியமும் இல்லை என்றும் உணர்ந்திருக்கிறேன். டி க்ரூஸ் தான் யாரை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்ல அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. அவரது அரசியல் நிலையால் அவருக்கு காங்கிரசில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லை என்றால் சரி. ஒரு பதிப்பகம் இப்படி பின்வாங்குவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
டி க்ரூசுக்கு எதிராக, இந்தப் பதிப்பகத்துக்கு ஆதரவாக, குரல் எழுப்பும் இடதுசாரி சார்பு உள்ள பலரும் எம்.எஃப். ஹுசேனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். அதே போல இன்று இந்தப் பதிப்பகத்தை எதிர்த்து குரல் எழுப்பப் போகும் வலதுசாரி, பா.ஜ.க./மோடி சார்பு உள்ள பலரும் ஹுசேன் எப்படி சரஸ்வதி படத்தை வரையலாம் என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி இருப்பார்கள். எப்படிய்யா? Logical consistency என்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லையா? நண்பர்கள் ஜடாயு, ராஜன், ஏன் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் என்ன சொல்லப் போகிறார்கள், ஹுசேனை எதிர்ப்பது சரிதான் என்று சப்பைக்கட்டு கட்டுவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பின்குறிப்பு: இந்தப் பதிவை ஏப்ரல் 15 அன்று வெளிவருமாறு ஏற்பாடு செய்திருந்தேன். ஜெயமோகனது கட்டுரை சில மணி நேரங்களுக்கு முன் வந்திருக்கிறது. ஒரு இடதுசாரி “மாஃபியா” இங்கே செல்வாக்குடன் விளங்குகிறது, அதற்கு ஒத்து ஊதினால் விருதுகளும் அங்கீகாரமும் சல்லிசாகக் கிடைக்கும், தெரியாத்தனமாக “வலதுசாரி/ஹிந்துத்துவ” சார்புடைய டி க்ரூசுக்கு பரிசு கொடுத்துவிட்டு தவிக்கிறார்கள் என்று எழுதி இருக்கிறார். Truth is stranger than fiction, இருந்தாலும் இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜோ டி க்ரூஸ் பக்கம்
அந்தப் பசங்களுக்கு மதம் பிடித்து ஆட்டுகிறது. குறிப்பிட்ட கும்பல் ஜாதி மதம் பிரச்சினை ஈரம் காயாமல் பார்த்துக்கொள்கிறது. யாருக்கும் அவருடைய கருத்தை வெளியிட உரிமை உள்ளது. அவர் கருத்துக்காக அவரை விலக்குபவர்களை அடிப்படைவாதிகளின் பிரதிவாதியாகவே பார்க்க வேண்டும்
LikeLike
பாண்டியன், நான் யாரோடு தொழில் செய்ய வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அதை தெளிவாக முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்.
LikeLike
ஜோ டி க்ரூஸ் புத்தகம் பற்றியும் ஹூசைன் அவர்கள் ஓவியம் பற்றியும் ஒன்றாக இணைக்காதீர்கள். மோடி பற்றி ஆதரவு கருத்து கூறியதற்காக, ஒப்பந்தம் போடப்பட்ட பதிப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ஹுசைன் அவர்கள் இந்துக்கள் வழிபடும் பெண் தெய்வங்களை நிர்வாணமாக ஓவியம் தீட்டி உள்ளார். இரண்டையும் ஒன்றாக எவ்வாறு பார்க்க முடிகிறது என தெரியவில்லை. வருத்தமாக உள்ளது.
LikeLike
பரமசிவம், ஹுசேன், டி க்ரூஸ் இருவருடைய கருத்து/படைப்பு சுதந்திரமும் அவர்களது வாழ்வு/தொழிலைப் பாதிக்கிறது இல்லையா?
LikeLike