ராமானுஜன் – மான் ஹூ ந்யூ இன்ஃபினிட்டி

மனித இனத்தின் அதிசயங்களுக்கு எல்லையே இல்லை. அதிலும் சில மனிதர்களின் மூளையின் wiring வேறு மாதிரி இருக்கிறது. அது தரும் sense of wonder விவரிக்க முடியாதது.

இருந்தாலும் விவரிக்கத்தானே இந்தப் பதிவுகள்! இப்படி சொல்கிறேனே, என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் எத்தனை முயன்றாலும் அவர்களின் வீச்சை நெருங்க முடியாது. வேறு விதமான வளர்ப்பும் பயிற்சியும் படிப்பும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் என்னால் கண்ணதாசன் மாதிரி பாட்டு எழுத முடியலாம்; கல்கி மாதிரி கதைகள் எழுத முடியலாம்; இன்னும் எக்கச்சக்கமாக உழைத்தால் காந்தியையும் ஜெயமோகனையும் கூட தொட முடியலாம். (நான் தஞ்சை ராமையாதாஸ் தரத்தில் கூட எழுதப் போவதில்லை என்பது வேறு விஷயம்). ஆனால் எந்த நாளும் ராமானுஜனை நெருங்கக் கூட முடியாது.

முதன்முதலாக ராமானுஜனின் ஒரு பேப்பரைப் படிக்கும்போது எனக்கு பதினெட்டு வயது இருக்கலாம். ஒன்றுமே புரியவில்லை. என் கணித அறிவு பதினேழு பதினெட்டு வயதுக்குப் பிறகு அதிகரிக்கவில்லை, அதனால் இன்றும் புரியாது என்றுதான் நினைக்கிறேன். Partitions என்ற கருத்தைத் தவிர வேறு எதுவும் புரியாது, அதிலும் அவரது தேற்றங்கள் புரியப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.

ramanujanராமானுஜனின் வாழ்க்கை ஒரு அதிசய romanceதான். எங்கோ ஈரோடில் பிறந்து, கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து, மிக அடிப்படையான கணிதத்தை மட்டுமே கற்று, அன்றைய நவீன கணிதத்தின் பெரும் பகுதியைத் தானே உருவாக்கி, தான் உருவாக்கியது என்ன என்று புரிந்துக் கொள்ளக்கூட சக்தி இல்லாத மனிதர்கள் நடுவே உழன்று, ஏதோ சாப்பாட்டுக்கு வழி செய்யுங்கள், நான் பாட்டுக்கு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எல்லாரிடமும் கெஞ்சி, அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். அன்றைய முக்கிய கணித ஆராய்ச்சியாளர்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் தன் திறமையின் சான்றாக அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டிருக்கும் தேற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லை. சில தேற்றங்கள் தவறு! g_h_hardyஏதோ கிறுக்கன் எழுதிய பொய்யான கடிதங்கள் என்று எல்லாரும் தூக்கிப் போட்டுக் கொண்டிருக்க ஹார்டி மட்டும் இவை தவறான தேற்றங்களாக இருக்கலாம், ஆனால் இவற்றை யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது என்று உணர்கிறார். இங்கிலாந்துக்கு வந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து ராமானுஜனை அங்கே அழைத்து வருகிறார். ஆனால் இந்தியாவில் ஒரு ஆச்சார பிராமணக் குடும்பத்தில் பிறந்த ராமானுஜனுக்கு அங்கே கணிதத்தில் மூழ்கி இருக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் நரகமாக இருக்கிறது. முதல் உலக்ப் போர் ஆரம்பித்துவிட்டதால் நரகம் நாலைந்து வருஷம் நீடிக்கிறது. ராமானுஜனின் உடல்நிலை கெடுகிறது, 32 வயதில் இறப்பு.

இதைக் கதையாக எழுதினால் கொஞ்சம் கூட நம்பகத்தன்மை இல்லை என்று நானே அலுத்துக் கொள்வேன்.

robert_kanigelரகமி எழுதினால் கூட இந்த romance-ஐக் கெடுக்க முடியாது. ராபர்ட் கனிகெலோ சிறந்த முறையில் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார். ஆனால் ஆய்வு அங்கங்கே கொஞ்சம் dry ஆகிவிடுகிறது.

man_who_knew_infinityஇது ராமானுஜனின் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கான புத்தகம் இல்லை. அதனால் எல்லாரும் தைரியமாகப் படிக்கலாம்.

ராமானுஜன் மாதிரி மனிதர்கள் பிறக்கிறார்கள். உருவாவதில்லை. அதைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகங்கள் உதவுகின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்