அஞ்சலி – வாண்டு மாமா மறைந்தார்

சிறுவர்களுக்கான புத்தகங்கள் பதிவிலிருந்து:

என் வாழ்க்கையின் முதல் ஸ்டார் எழுத்தாளர் வாண்டு மாமாதான். அவருடைய கதைகள் எல்லாவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவும் நூலகத்தில் இருந்த காட்டுச்சிறுவன் கந்தன் புத்தகம் எனது ஃபேவரிட். கந்தனின் சித்தப்பா ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டு கந்தனை விரட்டிவிட, கந்தன் காட்டில் வளர்வான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கும். பல மிருகங்கள் அவனுக்கு உதவி செய்யும். சித்தப்பா செய்யும் கொடுமைகளை எதிர்ப்பதும், மக்களுக்கு உதவி செய்வதும்தான் கதை. இன்று கிடைத்தால் நாஸ்டால்ஜியாவுக்காகவே வாங்கி வைப்பேன்.

அப்புறம் கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போது வரும். அதற்கு அவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அதை விரும்பிப் படித்தேன். பலே பாலு என்ற ஒரு காமிக்ஸ் சீரிஸ் வரும். படங்களும் கதையும் ரொம்பவே பிடிக்கும். அதில் வந்த மந்திரக் கம்பளம் என்ற புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.

சில காமிக்ஸ்களையும் – ரத்னபுரி ரகசியம், சர்க்கஸ் சங்கர், பவழத்தீவு, திகில் தோட்டம், ஓநாய்க்கோட்டை, கரடிக் கோட்டை, கழுகு மனிதன் ஜடாயு, மரகதச்சிலை, பூதத்தீவு, கனவா நிஜமா என்று சில பேர்கள் நினைவு வருகின்றன – எழுதி இருக்கிறார். புலி வளர்த்த பிள்ளை என்ற காமிக் புத்தகம் Indiana Jones and the Temple of Doom! இவற்றில் சிறந்தது “நந்து-சுந்து-மந்து” – ஒரு குரங்குக் குட்டியின் கலாட்டாக்கள். Curious George-ஐ நினைவுபடுத்தும் புத்தகம். மந்திர தந்திர காமிக்ஸில் இன்னும் நினைவிருப்பது மூன்று மந்திரவாதிகள். இன்னுமொரு சீரிஸ் – அனுஷ் மற்றும் ஹரீஷ் துப்பறியும் “துப்பறியும் புலிகள்” சிறுகதைகள் ஓரளவு படிக்கக் கூடியவை. சின்னச் சின்ன மர்மங்கள், அவற்றுக்கான விடை கதையில் இருக்கும், அல்லது சுலபமாக யூகிக்கக் கூடியவை, படிப்பவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். சில நல்ல விடுகதை தரத்தில் இருக்கும்.

அப்பா அப்பா கதை சொல்லு புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்தன.

வாண்டு மாமாவைப் பற்றி தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் ஒரு விவரமான பதிவு இருக்கிறது. (ஃபோட்டோவும் அங்கே கிடைத்ததுதான்) அவர் எழுதிய எல்லா புத்தக விவரங்களும் அங்கே இருக்கின்றன.

வாண்டு மாமாவின் இன்னொரு அவதாரம் கௌசிகன். கல்கி குழுமத்தில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் தொடர்கதைகளாக எழுதிய பாமினிப் பாவை மற்றும் சுழிக்காற்று ஆகியவை இன்னும் நினைவிருக்கின்றன. பாமினிப்பாவை விஜயநகரப் பேரரசின் கடைசி நாட்களைப் பற்றிய சரித்திர நாவல். சூழிக்காற்று மூன்றாம் வரிசை ஆங்கில மர்ம நாவல்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் எழுதப்பட்டது. அப்படிப்பட்ட தமிழ் மர்ம நாவல்கள் எழுபதுகளில் மிக அபூர்வம். ஆனால் இரண்டுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்கள் அல்ல.

நல்ல சிறுவர் எழுத்தாளர்கள் இல்லாதது தமிழின் துரதிருஷ்டம். வாண்டு மாமாவின் சிறுவர் புத்தகங்களின் தரம் எனிட் ப்ளைடன் மாதிரிதான், அதனால் அவரை ரொம்பவும் புகழ்வதற்கில்லை. ஆனால் என் சிறு வயதில் (எழுபதுகளில்) அவர் ஒரு தேவையை பூர்த்தி செய்தார். இன்றும் நான் விடாமல் படிப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவரை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பதிவுகள்:
வாண்டு மாமா பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம்

9 thoughts on “அஞ்சலி – வாண்டு மாமா மறைந்தார்

  1. வாண்டு மாமா சிறுவர்களுக்கு அறிவியலை அற்புதமாக வழங்கியவர். அவரது மெழுகு மாளிகை, புதையல் வேட்டை, விண்வெளி வாழ்க்கை எல்லாம் மிகவும் சிறப்பானவை (சிறுவர்களுக்கு). சித்திரக் கதைகளிலும் மன்னன். எனவே அவரை Enid Blyton உடன் ஒப்பிடுவது சரியா என்று தெரியவில்லை. Enid Blyton வெறும் கதைகளே எழுதியதாக நினைக்கிறேன்.

    Like

  2. வாண்டு மாமாதான், படக்கதையிலிருந்து அடுத்த கட்ட கதைகளை வாசிக்க உதவியவர். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலம் போன்றவைதான் வாசிப்பை விட்டுவிடாமல் வைத்தது. முன்பு சிறுவர்மலர் (தினமலர்) இதழில் பல கதாபாத்திரங்கள் வரும், பலமுக மன்னன் ஜோ, சோனி பையன், ஜாக்பாட் ஜாக்கி. அந்த வரிசையில் பூந்தளிரில் வந்த கபீஷ் நன்றாக நினைவில் இருக்கின்றது. அக்குரங்கு மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சித்திரமும் வந்து போகின்றது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.