மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் பெரிய அறிஞர் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. இந்தப் புத்தகம் அந்த நினைப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அவர் 1932-இல் ஆதி சங்கரரைப் பற்றி ஆற்றிய சில உரைகள் – இல்லை இல்லை உபன்னியாசங்கள் இந்தப் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆதி சங்கரரின் குரு பரம்பரை, அவருடைய சுருக்கமான வரலாறு அவர் படித்திருக்கும் புத்தகங்கள், மேற்கோள் காட்டும் முறை எல்லாம் அவரது scholarship-ஐ தெளிவாகக் காட்டுகின்றன. அனேகமாக சமஸ்கிருதப் புத்தகங்களாக இருப்பதால் மேற்கோளைப் பற்றி அவர் விளக்கினால்தான் புரிகிறது. 🙂 அவர் மேற்கோள் காட்டும் புத்தகங்களை எல்லாம் பதிக்க முயற்சி செய்தாரா என்று தெரியவில்லை, அப்படி செய்திருந்தால் அது உ.வே.சா.வுக்கு சமமாக சொல்லப்பட வேண்டிய முயற்சி ஆக இருக்கும்.
குறிப்பாக ஆதி சங்கரரின் காலம் பற்றி அவர் எல்லாருக்கும் புரியும் வகையில் தன் கருத்துக்களை முன் வைக்கிறார்.
சமஸ்கிருதப் புத்தகங்கள் மட்டுமல்ல, கம்ப ராமாயணமும் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று தெரிகிறது. அதையும் மேற்கோள் காட்டுகிறார்.
இரண்டு விஷயங்களைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். ஆதி சங்கரரின் எதிரில் ஒரு “சண்டாளன்” வர, விலகிப் போ என்று அவர் சொன்னதாகவும், யாரை விலகச் சொல்கிறீர்கள், இந்த உடலையா, ஆத்மாவையா என்று வேதாந்தமாக அவன் கேட்க, இப்படிப்பட்ட ஞானம் உள்ளவன் யாராக இருந்தாலும் அவன் என் குருவே என்று அவன் அடி பணிந்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இன்றும் ஹிந்து apologists, குறிப்பாக ஹிந்துத்துவர்கள் அதை ஹிந்து மதத்தில் யாரையும் ஒதுக்குவதில்லை என்று அந்தக் கதையை மேற்கோள் காட்டுவார்கள். (அவர் தள்ளிப் போ என்று சொன்னாரே, அப்படி என்றால் அப்படி ஒதுக்குவதுதானே அந்தக் காலத்தில் பழக்கமாக இருக்கும் என்பதை வசதியாக கண்டு கொள்ள மாட்டார்கள்.) இவரும் அந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்; சீர்திருத்தக்காரர்கள் அதை மேற்கோள் காட்டுவதையும் குறிப்பிடுகிறார்; ஆனால் அவரது முடிவு இந்த நிகழ்ச்சி தீண்டாமை கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற கட்சியை வலுப்படுத்துகிறது என்பதாகும்! வர்ணாசிரம தர்மம் (அப்படி என்றால் அவர் எண்ணத்தில் பிறப்பு வழி ஜாதிதான்) நிலவ வேண்டும் என்று அங்கங்கே வலியுறுத்துகிறார்.
இரண்டாவதாக, ஆதி சங்கரர் நான்கு மடங்களை நிறுவினார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்; அவர் காஞ்சிபுரத்தில் சர்வக்ஞர் பட்டம் ஏற்றார் என்பதையும் குறிப்பிடுகிறார். ஆனால் ஆதி சங்கரர் காஞ்சி மடத்தை நிறுவியதாக சொல்லவே இல்லை. இந்த omission முக்கியமானது என்று கருதுகிறேன்.
சந்திரசேகரர் பெரிய scholar, ஆனால் பழைய நம்பிக்கைகளை அப்படியே தொடர வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறார் என்ற என் எண்ணத்தை இந்தப் புத்தகம் வலுப்படுத்துகிறது. அந்த scholarship-க்காக படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்
தொடர்புடைய பதிவு: சந்திரசேகரரை விட ஜெயேந்திரரே மேலானவர்!
மின்னூலுக்கு நன்றி. இது இரண்டாம் பாகம் என்று போட்டிருக்கிறதே….முதல்பாகம் உள்ளதோ… கிடைக்குமோ?
LikeLike
ஆர்வியுடன் புத்தக விஷயங்களில் ஒத்து போகும் எனக்கு, அவரது இந்து மதம் பற்றிய சில கருத்துகளுடன் ஒத்து போகாது. இருந்தும் இது எனக்கு சரியாக படும் கருத்தே. காஞ்சி பெரியவர், ஒரு அறிஞர், ஒரு முனிவராக வாழ்ந்தவர். அவர் பழைய விஷயங்களை மாற்றவில்லை, மாற்ற விட வில்லை என்று கூறினாலும், அது சாத்தியமில்லாத விஷயம் என்பதை உணர்ந்தே அவர் விட்டிருப்ப்பார் என்றுதான் தோன்றுகின்றது.
ஒரு மடத்தின் தலைவராக அவர் செய்தது ஏராளம். ஆனால் அவரை ஒரேடியாக சிவனின் அவதாரம் என்று உயர்த்தி வைப்பது பலருக்கு வசதியாக இருக்கின்றது. அவர் சொல்வதை எல்லாம் கேட்கத்தேவையில்லையே. அவர் காட்டிய வழி கடவுளால்தான் முடியும் என்று சுலபமாக கடந்து போய்விடலாம். அவரை பற்றி பலர் கூறும் அற்புத செயல்கள் உண்மையாகவே இருக்கலாம், அவருக்கு பல சக்திகள் இருந்தும் அவர் மேற்கொண்ட வாழ்க்கையை ஒரு முன்மாதிரியாக எடுத்து கொள்ள யாருக்கும் முடியாது.
அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை கேட்டு கண்ணீர் உகுத்து, உள்ளம் உருகி பக்தி பெருகி வழியும் மனநிலையில், அதன் பின்னால் அவருக்கு இருந்த பரிவு, பக்தி, கனிவு, மனிதநேயம், எளிமை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர். அவரை படித்து உருகும் எத்தனை பேருக்கு அவரது நேர்மையையும், எளிமையும், பரிவும் வந்துள்ளது. எனக்கு சந்தேகம்தான். வெறும் புல்லரிப்புதான் மிச்சம். பட்டுபுழுவை கொன்று எடுக்கும் பட்டு கூடாது என்று சொன்னதை கூட செயல் படுத்த முடியாது.
எனக்கு அவர் கடவுள் என்பதை விட, ஒரு தலைசிறந்த மனிதர், ஒரு துறவு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டிய முனிவர் என்பதே வசதியாக இருக்கின்றது. அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு போவதை விட, அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்று கொள்வதே மேலானது.
LikeLike
இணைப்பிலிருந்த கூட்டாஞ்சோறு சண்டை நன்றாக இருந்தது. அப்போது இந்த தளம் பற்றி தெரியாமல் போனதே, தெரிந்திருந்தால் வந்து நானும் உங்களை திட்டியிருக்கலாம் 🙂
LikeLike
Very informative and a fair assessment.
Ramanan Thamizh people need their Freedom Thamizhargalin Thaagam Thamizh Eazha Thayagam
–
LikeLike