நான் பெருமதிப்பு வைத்திருக்கும் வாசகரும் எழுத்தாளருமான ஜெயமோகன் என் “இலக்கியக் கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்” பதிவுக்கு சிறப்பான எதிர்வினை புரிந்திருக்கிறார்.
தரம் பிரிக்காமல் படிக்க முடியாது என்று அவர் சொல்வதில் எனக்கு முழு சம்மதமே. நீங்கள் சரோஜா தேவி புத்தகங்கள் மட்டுமே படித்தாலும் அதிலும் உங்களுக்கு இதுதான் டாப், இது மகா மோசம் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்க முடியாது. படிப்பு, இசை, சினிமா, ஓவியம், சமையல் என்று ஆய கலை அறுபத்திநான்கில் எதுவாக இருந்தாலும் அதைத் தரம் பிரிக்காமல் ரசிப்பது சாத்தியமே இல்லை. என் பதிவிலும் நான் தரம் பிரித்தலைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்பதை கவனித்திருக்கலாம். சொல்லத் தேவையில்லை என்று விட்டுவிட்டேன், இப்போது படித்தால் அந்தப் பதிவு – குறிப்பாக அந்தத் தலைப்பு – இலக்கியக் கோட்பாடும் தேவையில்லை தரம் பிரிப்பதும் தேவையில்லை என்ற பொருள் தருகிறதோ என்று சந்தேகம் வருகிறது. தரம் பிரிப்பது தேவையா இல்லையா என்பதை விடுங்கள், தரம் பிரிக்காமல் படிப்பது சாத்தியமே இல்லை.
தரம் பிரிப்பதற்கு எது அடிப்படை என்பதுதான் எனக்கும் ஜெயமோகனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு. எனக்கு படிப்பவர் ஒவ்வொருவரும் அவரவரது சொந்த ரசனையை வைத்துத் தரம் பிரிப்பதே இயற்கையானது என்று தோன்றுகிறது. (நல்ல்) புத்தகத்தைப் படிக்கும்போது அந்தப் புத்தகத்தில் மூழ்கிவிடுகிறோம், அப்போது கோட்பாட்டைப் பற்றி எல்லாம் எப்படி யோசிக்க முடியும்? புத்தகத்தைப் படிக்கிறோம், பிடிக்கிறது/பிடிக்கவில்லை என்று ரசனையின் அடிப்படையில் முடிவு செய்கிறோம், தன்னிச்சையாகத் தரம் பிரிக்கிறோம். அதற்கப்புறம் வேண்டுமானால் இது முற்/பிற்போக்குப் புத்தகம், முன்/பின் நவீனத்துவம், சர்ரியலம்/சொரியலிசம் என்று பாகுபடுத்தலாம், அந்தந்த கோட்பாடு சரியாக வெளிப்பட்டிருக்கிறதா என்று யோசிக்கலாம். புத்தகத்தைப் படிக்காமல் கோட்பாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் புத்தகத்தை கோட்டை விட்டுவிடுவோம் என்றே நான் கருதுகிறேன்.
ஜெயமோகனும் அப்படித்தான் புத்தகங்களை அணுகுகிறார் என்றே நான் நினைக்கிறேன். இலக்கியக் கோட்பாடு என்பதே தனக்குப் பிடித்த புத்தகங்களில் உள்ள பொதுக் கூறுகள் என்னென்ன என்று யோசித்து அவற்றை synthesize செய்து தொகுப்பதுதான். ரசனைதான் கோட்பாட்டுக்கும் அடிப்படை என்றால் அது என் ரசனையாக இருப்பதுதான் எனக்கு சரிப்படும்.
ஜெயமோகனே கூட மாஸ்டர் கிரிஸ்டியன் என்ற புத்தகத்தைப் பற்றி – விமர்சகர்கள் ஒதுக்கும் புத்தகம் அது – சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். அது தன் கோட்பாட்டுக்கு ஒத்து வருகிறதா என்று யோசித்துக் கொண்டா அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்?
இன்னொரு விதமாகவும் யோசித்துப் பார்க்கலாம். படிப்பதில் ஆர்வமே இல்லாதவர் கூட ஷேக்ஸ்பியரையும் கம்பனையும் பற்றி கேள்விப்பட்டிருப்பான்(ள்). அவர்கள் பயன்படுத்தியதை விடப் பல நூறு மடங்கு வார்த்தைகளை அவர்களை ஆராய்ச்சி செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், கோட்பாடுகளை முன் வைப்பவர்கள் எழுதி இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? ஏன் நாம் மூல நூல்களையே தேடிப் போகிறோம்?
அவரது சில particular கருத்துக்களுகு எதிர்வினைகள் கீழே. இவை என் சொந்த அனுபவங்களினால் உருவானவை. எனக்கும் என் சில நண்பர்களுக்கும் பொருந்துவதை நான் பொதுமைப்படுத்த முடியாதுதான். ஆனால் என் அனுபவங்கள் ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர் உதாரணஙகளாக இருக்கும்போது அவரும் பொதுமைப்படுத்த முடியாது இல்லையா?
இலக்கியக் கோட்பாடுகள், அழகியல் கொள்கைகள் எதற்காக? எந்த இலக்கியக் கொள்கையிலும் பயிற்சி இல்லாத இலக்கியவாசகர் என எவரும் இல்லை. சமகாலத்தில் எது மேலோங்கியிருக்கிறதோ, எது வெகுஜனப்புகழ் பெற்றிருக்கிறதோ அதை தன்னை அறியாமலேயே அவர் அறிந்து வைத்திருப்பார். முயற்சி செய்து இலக்கியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கற்காவிட்டால் தனக்கு தன்னிச்சையாகத் தெரியவந்த வாசிப்பு முறையையே முழுமையான ஒரே முறை என நம்பி பிற அனைத்தையும் நிராகரிக்கும் இடத்துக்குச் செல்வார். ஆகவேதான் இலக்கியக் கொள்கைகள் தொடர்ந்து விமர்சகர்களால் அறிமுகம் செய்யபப்டுகின்றன. எந்த இலக்கிய விமர்சனமும் வாசிபப்பதற்கான பயிற்சியே. பயிற்சி தேவையில்லை என்பவர் முன்னகர்வை மறுதலிக்கிறார். பயிற்சி எதுவானாலும் அதற்கு முடிவே இல்லை.
சமகாலத்தில் எது மேலோங்கி இருக்கிறதோ என்று ஜெயமோகன் சொல்லி இருப்பதை contemporary fiction என்று நான் பொருள் கொள்ளவில்லை. ஷேக்ஸ்பியர் காலத்தில்தான் கிரிஸ்டோஃபர் மார்லோவும் எழுதினார், ஆனால் இன்று சமகாலப் புகழ் பெற்றிருப்பதும் அன்றும் புகழ் பெற்றிருந்ததும் ஷேக்ஸ்பியர்தான். மார்லோவையும் படிக்க எனக்கும் ஆசைதான், ஆனால் நேரம் குறைவாக இருக்கிறது. மார்லோவைப் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க எனக்கு வேண்டியது என்னோடு ஒத்த ரசனை உள்ள ஒருவர் சொல்லும் பரிந்துரை – ஜெயமோகன் மார்லோவைப் படிக்கத் தவறாதீர்கள் என்று சொன்னால் கட்டாயம் படிப்பேன். மார்லோ நேர விரயம் என்று அவர் சொன்னால் மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
Wisdom of the Crowds எனக்குப் அந்நாளைய புத்தகங்களில் எதைப் படிக்கலாம் என்று சில அறிவுரைகள் தருகிறது. அவற்றைப் படிக்கவே நேரம் போதவில்லை. இருக்கும் நேரத்தில் கோட்பாடுகளைப் படிப்பதை விட, புத்தகங்கள் அந்தக் கோட்பாட்டுக்கு பொருந்துகின்றனவா என்று அறிந்து கொள்வதை விட, மூல நூல்களைப் படிப்பதேயே நான் விரும்புகிறேன். அதற்கு எனக்குத் தேவை ஒத்த ரசனை உள்ளவர்களின் பரிந்துரைகள் மட்டுமே. கோட்பாடுகள், விமர்சனங்கள், சில சமயம் விட்டுப் போகும் இடங்களை நிறைவு செய்கின்றனதான். ஆனால் என் கண்ணில் அவற்றின் Return on (Time) Investment குறைவுதான்.
ஒரு தமிழக ஓவிய ரசிகர் ரவிவர்மா பாணி ஓவியத்துக்குப் பழகியிருப்பார். அவர் வான்கா ஓவியத்தை பார்த்தால் அது பிழையாக வரையப்பட்டிருக்கிறது என்று நினைப்பார். தெளிவில்லாமல் இருக்கிறது என குற்றம் சாட்டுவார். அவருக்கு இம்பிரஷனிசம் பற்றி அறிமுகம் செய்து அதை புரிந்துகொள்ளும் மனநிலையும் அவருக்கிருந்தால் அதை அவர் ரசிக்க முடியும்.
நான், மற்றும் என் பல நண்பர்களைப் பார்த்த வரையில் இதெல்லாம் சும்மா. ரவி வர்மா ஓவியங்களைப் பார்த்து வளர்ந்த நாங்கள் பலரும் மோனே, ரஃபேல், மைக்கெலாஞ்செலோ, ப்ருகெல், வான் கா, ஜாமினி ராய், அம்ரிதா ஷெர்கில், ரெம்ப்ராண்ட், வெர்மீர், நார்மன் ராக்வெல், டாலி, கனலெட்டோ போன்றவர்களின் ஓவியங்களை முதல் முறை பார்த்தபோது அசந்துதான் போனோம். பிக்காசோவின் பல ஓவியங்கள் எனக்குப் புரிய்வில்லைதான், ஆனால் குயர்னிகாவை முதல் பார்வையிலேயே ரசிக்காத நண்பர்கள் யாரும் எனக்கில்லை. ஓவியங்களைப் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்தது ஓவிய வரலாறு பற்றிய புத்தகங்கள்தான். கியோட்டோவின் எந்த ஓவியமும் எனக்கு சிறப்பானதில்லை, ஆனால் கியோட்டோவின் இடம் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது.
வழக்கமான பாலகுமாரன் ராஜேஷ்குமார் கதைகளை வாசிக்கும் ஒருவர் நீல. பத்மநாபனை வாசித்தால் அவர் தேவையில்லாமல் சில்லறை விஷயங்களை பரப்பிச் சொல்லி கதையை விட்டுவிடுகிறார், கதை பரபரப்பாக இல்லை என்று நினைப்பார். அது இயல்புவாத எழுத்துமுறை, அதன் அழகியல் இப்படிப்பட்டது என அவர் அறிந்துகொண்டால் அந்த மனத்தடையை அவர் தாண்டமுடியும்.
என் அனுபவத்தில் இது முழுவதும் தவறு. சுஜாதா, கல்கி, ஜெயகாந்தனைத் தாண்டி தமிழ் இலக்கியம் இல்லை என்று நான் நினைத்த காலம் உண்டு. (இத்தனைக்கும் சிறு வயதிலேயே தலைமுறைகள், சாயாவனம் ஆகியவற்றைப் படித்திருந்தேன்.) புதுமைப்பித்தனையும், தி.ஜா.வையும், சுந்தர ராமசாமியையும், ஏன் ஜெயமோகனையும் முதல் முறை படித்தபோது ஆனந்தமாகத்தான் இருந்தது. இன்றும் எனக்கும் இலக்கிய விமர்சனத்தோடு அறிமுகம் இல்லை என்றுதான் சொல்வேன். அதனால் எந்த மனத்தடையும் உருவாவதாக எனக்குத் தெரியவில்லை. நீல. பத்மநாபனே பரபரப்பாக இல்லை என்று நினைப்பவர், இயல்புவாத எழுத்து முறை பற்றிய விளக்கங்களை எப்படிப் பொறுமையாகப் படிப்பார்?
மீண்டும் ஒரு முறை: தரம் பிரித்தலைத் தவிர்க்க முடியாது, அது மூச்சு விடுவதைப் போல. ஆனால் தரம் பிரிப்பதின் அடிப்படை உங்கள் தனிப்பட்ட ரசனையாக இருப்பதுதான் இயற்கையானது. இலக்கியக் கோட்பாட்டை வைத்துத் தரம் பிரிப்பது படித்து முடித்த பின்னால் மட்டுமே நடக்கக் கூடியது. அதில் ஒரு செயற்கைத்தனம் இருக்கிறது. அதை பேராசிரியர்களுக்கும் ஜெயமோகன்களுக்கும் விட்டுவிடுங்கள்!