சிவசங்கரி

ஒரு காலத்தில் பிரபலமான வாரப் பத்திரிகை எழுத்தாளர். லக்ஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன் எல்லோருக்கும் பெண்களிடம் மார்க்கெட் இருந்தது/இருக்கிறது. ஆனால் எனக்கு சின்ன வயதிலிருந்தே இவர் மீது ஒரு aversion. அதுவும் போகப்போக என்ற ஒரு நாவலில் அருண் என்ற “ரொம்ப நல்லவரு” ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணுக்கும் தன் நண்பன் ஒருவனுக்கும் தானே கல்யாணம் செய்துவிட்டு தியாகச்சுடராக வாழ்வான். அப்படிப்பட்ட பாத்திரம்தான் அக்கம்பக்கத்து பெண்களுக்கு பிடித்திருந்தது, அவர்களிடம் கடலை போடுவதற்காகவே இவர் தொடர்கதை எல்லாம் மனதுக்குள் திட்டிக்கொண்டே படித்தேன். கடலை போடுவதில் வெற்றியும் பெறவில்லை என்பது சோகத்தை அதிகப்படுத்தியது.

இவரது ஒரு மனிதனின் கதை, பாலங்கள் இரண்டையும் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்கிறார். எனக்கு இரண்டுமே தொடர்கதையாக வந்தபோது பிடிக்கவில்லை. எனக்கு ஏற்கனவே இருந்த aversion காரணமாக இருக்கலாம். பாலங்களை மறுவாசிப்பு செய்தபோது நல்ல முயற்சி, ஆனால் வெற்றி பெறவில்லை என்று தோன்றியது. ஒரு மனிதனின் கதையில் சில நல்ல அம்சங்கள் இருந்தன, இருந்தாலும் பிரசார நெடி தூக்கல்.

இவற்றைத் தவிர அம்மா ப்ளீஸ் எனக்காக சிவசங்கரியின் நல்ல கதைகளில் ஒன்று. கச்சிதமாக எழுதப்பட்ட குறுநாவல். மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அம்மா, மகனை பிளாக்மெயில் செய்து அம்மா மூலமாக பாங்கை கொள்ளை அடிக்க ஒரு திட்டம். அப்புறம் வைராக்கியம் (1974) என்ற கதையை குறிப்பிடலாம். நாய்க்கு மாட்டுக்கறி போடும் பெண்மணி மாடுகள் கொல்லப்படும் விதத்தைப் பார்த்து அதை தவிர்க்க முயற்சித்து தோற்றுப் போகும் கதை. நன்

சிவசங்கரி நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு எதையும் எழுதவில்லை. ஆனால் சில முயற்சிகள் செய்திருக்கிறார். அனுராதா ரமணன் போன்றவர்களுக்கு பரவாயில்லை. நாசுக்கான, உயர் மத்திய வர்க்க வாழ்க்கையை ஓரளவு பதிவு செய்திருக்கிறார். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

அவரது சில பிரபலமான கதைகள்:

47 நாட்கள்: அமெரிக்கக் கணவன் விவரம் தெரியாத பெண்ணை ஏமாற்றும் கதை. படிக்கலாம். பின்னாளில் பாலசந்தர் இயக்கி சிரஞ்சீவி, ஜெயப்ரதா நடித்து திரைப்படமாக வந்தது.
நண்டு: பெண்களை அழ வைக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட நாவல். அந்த காலத்து மெகா சீரியல். கதாநாயகி சீதாவுக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டம். அப்பா சின்ன வயதில் போய்விடுவார். காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்ட புருஷனும் அவுட். அப்புறம் அவளுக்கும் கான்சர். அம்மா, அக்கா, தோழி, எல்லாரையும் ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த காலத்தில் பாப்புலரான தொடர்கதை என்று நினைக்கிறேன். சினிமாவாகக் கூட வந்தது – ஒரு ஹிந்தி பாட்டு வரும் – கைசே கஹூன் என்று ஆரம்பிக்கும், யாருக்காவது நினைவிருக்கிறதா?

போகப்போக: முன்னாலே சொன்னமாதிரி தியாகச்சுடர் அருண் தான் காதலிக்கும் நித்யா, நண்பன் விசுவின் காதல், கல்யாணம், விசு நோய்வாய்ப்பட்டிருக்கும்போது எக்கச்சக்க உதவி, கடைசியில் நித்யா கஷ்டம் தாங்க முடியலை என்று அருணிடம் வரும்போது மீண்டும் அவர்களை சேர்த்து வைப்பது என்று கல்யாணப் பரிசு சரோஜா தேவி ரேஞ்சில் தியாகம் செய்யும் கதை. அது எப்படி அந்தக் காலத்தில் எல்லாருக்கும், அதுவும் பெண்களுக்கு, இந்தக் கதை பிடித்தது என்று எனக்குப் புரிந்ததே இல்லை.

திரிவேணி சங்கமம்: எரிக் செகலின் Man, Woman and Child-ஐ தமிழ்ப்படுத்தி இருக்கிறார்.

மற்ற பல கதைகள் பற்றி சின்ன சின்னக் குறிப்புகள்:

அம்மா பிள்ளை: செல்லம் கொடுத்து பிள்ளையை குட்டிசுவராக்கும் அம்மா. தவிர்க்கலாம்.
அவர்களும் இவர்களும்: வேஸ்ட். எல்லாருக்கும் உதவி செய்து வாழும் பெண். புகுந்த வீட்டில் நல்ல பேர். ஆனால் புகுந்த வீட்டுக்காரர்கள் கொஞ்சம் சுயநலவாதிகள். பிறந்த வீட்டில் அப்பா இறக்கும்போது தன் சம்பளத்தை தம்பி தலையெடுக்கும் வரை அங்கே அனுப்ப வேண்டும் என்று இவள் சொல்ல, பிரிவு.

அடிமாடுகள் வேஸ்ட். தங்கச்சியையும் கட்டிக் கொண்டு அக்காவை அடிமாடாக நடத்தும் கணவன்.

ஏரிக்கடியில் சில கனவுகள்: இதுவும் வெறும் மெலோட்ராமா. பல எதிர்ப்புகளை மீறி அப்பா அம்மாவின் மனதை மாற்றி பல வருஷம் காத்திருந்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடி ஹனிமூன் போன இடத்தில் இறந்துவிடுகிறார்கள்.

எதற்காக: இதெல்லாம் வெறும் மெலோட்ராமா. குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண், பல வருஷம் தவம் இருந்து குழந்தை பெற்றதும் சில நாட்களில் இறந்து போய்விடுகிறாள்.

காளான்: இன்னும் சில வெட்டிக் கதைகள்.

காரணங்கள்: கலப்புத் திருமணம். இரண்டு அம்மாக்களும் கூட இருக்க வேண்டிய சூழ்நிலை. சம்பந்தி அம்மாக்களுக்குள் சண்டை, கணவன் மனைவி டைவர்ஸ் பற்றி பேசும் அளவுக்குப் போகிறது. இரண்டு அம்மாக்களும் என் பெண்/என் பையன் மேல்தான் தவறு, ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். நல்ல denouement .

காற்றுள்ளபோதே: மூன்று பெண்கள்; அவர்களுக்கு மணம் செய்தால் செலவாகுமே என்று தயங்கும் தகப்பன். வெட்டி.

காத்திருக்கிறேன்: வெட்டி சிறுகதைகள்.

கண் கெட்ட பின்: ரொம்ப ஆடி பின்னால் அவஸ்தைப்படும் பெண்கள். வெட்டி.

கப்பல் பறவை: ஏற்கனவே மணமான வாசுவுடன் காதல் வசப்படும் ஆர்கிடெக்ட் சுஜா. தவிர்க்கலாம்.

கிணற்றுத் தவளைகள்: அக்கா போதாமல் தங்கையையும் கட்டிக் கொள்ளத் திட்டமிடும் சவடால் பேர்வழி. தவிர்க்கலாம்.

கோழைகள்: மீண்டும் பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலாதான். பத்தினிக்கு பதில் குடும்பத்துக்காக உழைத்து ஓடாய்ப் போன விதவை அத்தை. கைவிட்ட கணவனை நினைத்தே வாழும் பத்தினி.

குட்டி: செகாவின் ஒரு நல்ல கதையைத் (Vanka) தழுவி எழுதி இருக்கிறார். திரைப்படமாகவும் வந்தது என்று நினைக்கிறேன்.

மெல்ல மெல்ல: பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும் என்ற சாஸ்வதமான பெண் எழுத்தாளர் ஃபார்முலாதான். ஏழைப்பெண் அகிலா உடல் ஊனமுற்ற பணக்கார ஸ்ரீதரனை மணக்கிறாள். மாமனாரின் முழு சப்போர்ட்டில் குடும்பத்தின் ஆணிவேராகவே ஆகிவிடுகிறாள். மாமனார் இறந்த பிறகு, இரண்டாவது மருமகள் கை ஓங்குகிறது. அகிலாவை ஸ்ரீதரன் உட்பட எல்லாரும் புறக்கணிக்கிறார்கள். அகிலாவுக்கு டிப்ரஷன், மூன்றாவது மகன் வந்து அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மெகாசீரியல் மாதிரி இருக்கிறது, ஒரு காலகட்டத்தில் வாரப் பத்திரிகைகளில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். என் கண்ணில் பட்ட ஒரு வரி – அகிலாவுக்கு முந்தைய ஜெனரேஷன் மாமி ஒருவர் தூரத்துக்கு தூரம் பிறந்த வீட்டுக்கு வந்துவிடுவாளாம்!

நான் நானாக: நாற்பது வயதுக்கு மேல் நடனம் கற்க விரும்பும் குடும்பப் பெண்மணி, இது அந்தஸ்துக்கு ஒத்து வராது என்று தடுக்கும் கணவன், மகன், அப்பா, அம்மா. பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

நதியின் வேகத்தோடு: அழகு, பணம் கொடுத்த திமிரில் தர்மாவின் வாழ்க்கை கொஞ்சம் தடுமாறுகிறது.

நப்பாசை: வரதன் காரியத்தில் கெட்டி. உதவி செய்வான், ஆனால் அதில் தனக்கு காசு வருமாறு பார்த்துக் கொள்வான். கதை நண்பன் கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது, நண்பனுக்கு கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் இதெல்லாம் சரியில்லை என்ற எண்ணம். கடைசியில் வரதனுக்கு பெரிய அளவில் அடி (வீடு திருட்டுப் போய்விடுகிறது) விழுவதோடு கதை முடிகிறது. தவிர்க்கலாம்.

ஓவர்டோஸ்: மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்று கணவன் விரும்ப, கடைசியில் மனைவி மகளையும் கணவனையும் விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் போய்விடுகிறாள். மகளை மிகுந்த கண்டிப்போடு வளர்க்க தாங்க முடியாமல் அவளும் ஓடிப் போய்விடுகிறாள். இரண்டுமே ஓவர்டோஸ் என்று கதை. தவிர்க்கலாம்.

பொய்: இன்னொரு பத்தினிக்கு இன்னல் வரும் கதை.

புல்தடுக்கி பயில்வான்கள்: வெட்டி சிறுகதைகள்.

சுறாமீன்கள்: மனைவிக்கு இன்டீரியர் டெகரேஷன் நன்றாக வருகிறது. மெதுமெதுவாக அவள் career மேலே போகிறது. கூட இருப்பவர்களின் சபலங்களை அவள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. கணவனோடு ஏற்படும் மனஸ்தாபங்கள் தீரும்போது எல்லாம் புரிந்துவிடுகிறது. தவிர்க்கலாம்.

தான் தன் சுகம்: வெட்டி.

தப்புக் கணக்கு: பணக்கார நண்பர் கூட்டம். சண்டை. பழி வாங்க ஆத்மா பாஸ்கரின் மனைவியை seduce செய்கிறான். தவிர்க்கலாம்.

தவம்: காயத்ரியின் காதலை நிராகரிக்கும் சுதாகர். சுதாகரின் மனைவி மறைந்த பிறகு அவன் வாழ்க்கையில் திரும்பி வரும் காயத்ரியை மணக்க விரும்புகிறான், காயத்ரி அவனை நண்பனாக மட்டுமே பார்க்கிறாள். தவிர்க்கலாம்.

வேரில்லாத மரங்கள்: ஹிந்து ஆண், கிருஸ்துவப் பெண் காதல், கல்யாணம். சின்ன சின்னப் பிரச்சினைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாமல் படும் தவிப்புதான் கதை. உப்பு பெறாத பிரச்சினைகள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மனநிலை இல்லாதபோது பெரிதாக வெடிப்பதை நன்றாக எழுதி இருக்கிறார், ஆனால் பாத்திரப் படைப்பு, கதை எல்லாம் ஸ்டீரியோடைப்.

வெட்கம் கெட்டவர்கள்: அக்காவை மணந்தவன் தங்கையையும் மடக்குகிறான். வெறுத்துப் போய் தனியாக வாழும் அக்காவின் பெண் அப்பனைப் பார்த்துக் காறித் துப்புகிறாள்.

ஏன்: ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத அம்மா, அப்பா, மகள் எல்லாரும் அன்புக்கு ஏங்குகிறார்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பாலங்கள்
ஒரு மனிதனின் கதை