பொன்னீலனின் “புதிய மொட்டுக்கள்”

பிரச்சாரக் கதைகள் எப்போதுமே அலுப்புத் தட்டுபவை. அதுவும் அதில் எழுத்தாளரும் புகுந்து புலம்ப ஆரம்பித்தால் சகிக்க முடியாமல் போய்விடும். கருணாநிதியின் எழுத்துக்கள், அனேக அண்ணாதுரை எழுத்துக்கள் எல்லாம் இதற்கு நல்ல உதாரணம். நா.பா. மாதிரி சிலர் ஒரு அலங்காரப் பூச்சு கொடுக்கிறார்கள். அந்தப் பூச்சு சில சமயம் குறுகிய கால வெற்றி அடையவும் செய்கிறது. குறிஞ்சி மலரும் பொன் விலங்கும் நல்ல உதாரணங்கள். இன்றோ அவற்றுக்கு ஒரு curiosity value மட்டும்தான் இருக்கிறது.

ஆனால் சில சமயம் அவை வெற்றி அடைகின்றன, அல்லது முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கின்றன. சோலை சுந்தரப் பெருமாள் மாதிரி சிலர் வரலாற்றின் ஒரு தருணத்தை ஆவணப்படுத்துகிறார்கள். அதனால் கதை இருக்கிறதோ இல்லையோ, நம்பகத்தன்மை இருக்கிறது, நாவலுக்கு ஆவண முக்கியத்துவம் கிடைக்கிறது. என் கண்களில் பொன்னீலனின் இந்த நாவல் வெற்றி அடைந்திருக்கிறது.

ponneelanபொன்னீலனின் புதிய மொட்டுக்களும் சாதாரண பிரச்சாரக் கதைதான். 1930-களில் பிறந்த இசக்கி கிராமத்தில் இயல்பாக நடக்கும் அநீதிகளை – தாழ்த்தப்பட்டவர்களை மரியாதையாக அழைப்பது, ஏமாற்றும் ஊர்ப் பெரிய மனிதரை எதிர்த்து தேர்தலில் தோற்பது – என்று பல விதங்களில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறான். அவனும் ஆதிக்க ஜாதிதான் என்பதால் அவனை ஒட்டுமொத்தமாக அழிக்க சில பல வருஷங்களாகிறது. (எழுபதுகளில் இறக்கிறான்.) முதலில் காங்கிரஸ், பிறகு ஈ.வே.ரா., கடைசியில் கம்யூனிச சார்புள்ளவனாக உருமாறுகிறான். சுதந்திரராஜன் என்று பெயர் மாறிவிட்ட அவனது சமாதியில் அவ்னைப் பற்றி அவனது பால்ய நண்பன் ஒருவன் நினைவு கூர்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

சில காட்சிகள் – சுதந்திரராஜன் சாமியாடுவது, அவன் இறக்கும்போது அவன் பிணத்தை எடுக்கக் கூடாது என்று மறிப்பவர்களிடம் ஒரு தொழிலாளி “உன் முதலாளி மறிச்சா நியாயம், அவன் உனக்கும் எனக்கும்தானேய்யா போராடினான்?” என்று கேட்கும் இடம் – அருமையாக வந்திருக்கின்றன.

இந்த மாதிரி கிராமங்களை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இந்த மாதிரி இளைஞர்களையும். வீட்டில் அம்மா அப்பா அவனோடு சேராதே என்று சொல்வார்கள், ஆனால் அவர்களைச் சுற்றி எப்போதும் இளந்தாரிகளின் கூட்டம் இருக்கும். நம்பகத்தன்மை அதிகமான புத்தகம்.

மொத்தத்தில் இந்தப் புத்தகம் பொன்னீலன் படிக்க வேண்டியவர் என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது. அவர் பேரிலக்கியங்கள் படைத்திருப்பார் என்று தோன்றவில்லைதான். ஆனால் “முற்போக்கு நாவல்” என்றால் கொஞ்சம் இளக்காரத்துடன் பார்க்கும் என்னையே அட! போட வைத்திருக்கிறார். சாஹித்ய அகாடமி விருது வேறு பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் புத்தகங்கள்