விந்தன்

விந்தனுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சின்ன இடம் உண்டு என்றுதான் நினைத்திருந்தேன். நான் படித்த வரையில் எந்தப் புத்தகமும் தேறவில்லை. அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் footnote ஆகக் கூட இடம் பெறும் தகுதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தவிர்த்துவிடுங்கள் என்று எச்சரிக்கவே இந்தப் பதிவு.

படித்த பிராமணர்கள், தமிழ் பரிச்சயம்+பாரம்பரியம் உள்ள செட்டியார்கள், பிள்ளைமார், முதலியார் மாதிரி எந்த பின்புலமும் இல்லாமல் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக ஆரம்பித்து எழுத்தாளராக மாறியதாலோ என்னவோ சமூக இழிவுகள் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பற்றி கிழி கிழி என்று கிழிக்க முயற்சித்திருக்கிறார். அதில் அவர் வெற்றி பெறவில்லை. எழுத்துக்கு வேண்டிய எந்த வித நுட்பமும் நயமும் அவருக்கு கைகூடவில்லை. குறைந்த பட்சத் தேவையான சுவாரசியம் கூட இல்லை. அவருக்கு இலக்கியம் கை வரவில்லை, அவ்வளவுதான். நேர்மையாக முயற்சித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். கல்கி அவ்வப்போது பாராட்டி இருக்கிறாரே என்றுதான் இவரைப் படித்தேன். கல்கி இவரை ஊக்குவித்தது இவரது blue-collar பின்புலத்துக்காகத்தான் இருக்க வேண்டும், எழுத்தின் சிறப்புக்காக இருந்திருக்க முடியாது. ஜெயமோகன் எச்சரித்த பிறகும் இவரைப் படித்தது என் முட்டாள்தனம்தான்.

அவரது நாவல்களில் சிறந்தது என்று சொல்லப்படும் பாலும் பாவையும் எல்லாம் ஒரு நாவலே இல்லை. முட்டாள்தனமான கதை. அந்தக் காலத்தில் பெண் தானாகச் சென்று ஒரு ஆணிடம் ஏறக்குறைய “என்னை வச்சுக்க” என்று சொல்வது புரட்சியாக இருந்திருக்க வேண்டும். தெரியாத்தனமாக அதை நான் படிக்க நேர்ந்தது என் துரதிருஷ்டம். கண் திறக்குமா?, மனிதன் மாறவில்லை எல்லாம் வேஸ்ட். ஒரு போலியான தமிழ் பேராசிரியரை வில்லனாக வைத்து கதை எழுதி இருக்கிறார். சுயம்வரம், காதலும் கல்யாணமும் எல்லாம் பேப்பருக்குப் பிடித்த கேடு. அவரது சிறுகதைகள் (ஒரே உரிமை, முல்லைக்கொடியாள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் மாதிரி பல தொகுதிகள்) எதுவும் எனக்குத் தேறவில்லை.

அன்பு அலறுகிறது என்ற நாவலில் அவர் சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். ஜெயகாந்தன் முதல் சில அத்தியாயங்களை விந்தன் எழுதியதாகவும் பிற அத்தியாயங்களை விந்தனுக்காக தான் ghost-write செய்தததாகவும் ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தனாலேயே இந்த நாவலைக் காப்பாற்ற முடியவில்லை.

விந்தன் கட்டுரைகள் புத்தகத்தில் பாரதியைப் பற்றிய கட்டுரையைப் படிக்கலாம். மற்றவை எதுவும் சுகமில்லை.

விந்தன் மனிதன் என்று ஒரு இதழை நடத்தி இருக்கிறார். அந்த இதழை தொகுத்திருக்கிறார்கள். சு.ரா., ஜெயகாந்தன், வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். எனக்கு எதுவும் தேறவில்லை என்றாலும் ஆவணம், அதனால் இங்கே pdf சுட்டியைக் கொடுத்திருக்கிறேன்.

பரமசிவம் என்ற விந்தன் பக்தர் அவரது திரையுலக அனுபவங்களைப் பற்றி “திரையுலகில் விந்தன்” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். இது இந்தப் படத்திற்கு வசனம் எழுதினார், இந்தப் பாட்டை எழுதினார் என்று வழக்கமாகப் போடும் லிஸ்ட் மட்டுமே. அவரது திரையுலகப் பங்களிப்பு முக்கியமானதும் இல்லை, வெற்றியும் பெறவில்லை.

அவர் “எழுதிய” புத்தகங்களில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது எம்.ஆர். ராதாவை பேட்டி கண்டு தொகுத்ததுதான். அதற்குக் காரணம் எம்.ஆர். ராதாவின் வெளிப்படையான பேச்சுதான், இவர் இல்லை.

மொத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய எழுத்தாளர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்