வல்லிக்கண்ணன் – அந்தக் காலத்து சிலிகன் ஷெல்ஃப்?

vallikkannanவல்லிக்கண்ணனுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் நிச்சயமாக இடமில்லை. ஆனால் அவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்!

அவரது முக்கியத்துவம் தமிழ் இலக்கிய வரலாற்றை ஓரளவுக்கு ஆவணப்படுத்தியதுதான் என்று நினைக்கிறேன். நிறையப் படித்திருக்கிறார் (குறிப்பாக ஐம்பதுகள், அறுபதுகள் வரை வந்த க்ளாசிக் தமிழ் புத்தகங்கள்), அதை எளிமையாக, கோர்வையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். வாசகர்கள், விமர்சகர்கள் மற்றும் பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை (1981) புத்தகங்கள் எனக்கு ஓரளவு பிடித்திருந்தன. நான் எழுதும் அறிமுகம் போலத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரியாத விஷயம் என்று எதுவுமில்லை, இருந்தாலும் சரளமான நடையில் தமிழ் எழுத்தாளர்கள், சிறுகதைகள், பத்திரிகைகள், நாவல்கள், கவிதைகள், என்று பல்வேறு தொடர்புள்ள தளங்களின் trend-களை விவரிக்கின்றன. சிலிகன் ஷெல்ஃபை முப்பது நாற்பது வருஷத்துக்கு முன் தொடங்கி இருந்தால் எனக்கும் சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்குமோ? 🙂 இரண்டு புத்தகங்களையும் மின்னூலாக இணைத்திருக்கிறேன்.

ஆனால் அவர் எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாஹித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம்) (1977), எழுத்தாளர்கள்-பத்திரிகைகள், சரஸ்வதி காலம், தீபம் யுகம், தமிழில் சிறு பத்திரிகைகள் ஆகியவை எனக்கு சுவாரசியப்படவில்லை. எனக்குப் பத்திரிகைகள், புதுக் கவிதை ஆகியவற்றில் எல்லாம் பெரிய interest கிடையாது. விரும்பிப் பார்த்தது சி.சு. செல்லப்பாவைப் பற்றிய ஒரு தொகுப்பு. அதில் அனேகமாக எழுத்து பத்திரிகையில் வந்த பல கட்டுரைகள், கதைகள் எல்லாம்தான். எழுத்து பத்திரிகையைப் பற்றி நானெல்லாம் கேள்விப்பட்டதோடு சரி, பார்த்தது கூட இல்லை. பார்க்க விரும்புபவர்களுக்காக இங்கே இணைத்திருக்கிறேன்.

போராட்டங்கள், மற்றும் நிலை பெற்ற நினைவுகள் இரண்டும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள். மனிதர் அங்கே சைவாள் ஹோட்டலில் சாப்பிட்டேன், இங்கே தண்ணீர் குடித்தேன் என்று எக்கச்சக்க விவரம் கொடுக்கிறார் – யார் படிப்பது? சின்ன வயதில் ராஜவல்லிபுரத்தில் இருந்து சென்னை வரை நடந்து வந்ததைத் தவிர வாழ்க்கையில் சுவாரசிய நிகழ்ச்சி எதுவும் தெரியவில்லை.

ஆனால் சாஹித்ய அகாடமிகாரர்களை உதைக்க வேண்டும். என்ன நினைத்துக்கொண்டு இவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார்கள்? கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாதவர்கள். (க.நா.சு.வுக்கே “இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்” என்ற புத்தகத்துக்காகத்தான் சாஹித்ய அகடமி விருது கிடைத்தது என்று ஞாபகம்.) விருது பெற்ற எழுத்தாளராயிற்றே, ஏதாவது இருக்கும் என்ற நப்பாசையில் நான் ஒரு டஜன் படைப்புகளைப் படித்தேன். படித்த எந்த சிறுகதை, நாவல், நாடகமும் எனக்குத் தேறவில்லை. அதுவும் விடியுமா என்ற நாடகம் டிபிகல் தி.மு.க. நாடகம் மாதிரி இருக்கிறது. குஞ்சாலாடு கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் பாதிப்பில் எழுதப்பட்டதாம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான். துணிந்தவன் (1959), அன்னக்கிளி, சுதந்திரப் போராட்டப் பின்னணி உள்ள நாவலான வீடும் வெளியும், சரித்திரக் கதையான விடிவெள்ளி மாதிரி நாவல்களை விட ஆறு வயதுக் குழந்தை நல்லதாக ஒரு கதை சொல்லும்.

வல்லிக்கண்ணன் நல்ல இலக்கியம் படைக்கவில்லை. நல்ல இலக்கியம் படைத்த பலரோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது, அவ்வளவுதான். இலக்கிய முயற்சிகளுக்கு அவர் ஒரு பார்வையாளராக இருந்திருக்கிறார், அந்த முயற்சிகளை ஆவணப்படுத்தி இருக்கிறார். ஆவணம் என்றால் memoirs டைப் ஆவணம்தான், சிறந்த ஆய்வு என்றெல்லாம் இல்லை. அவரது முக்கியத்துவம் அவ்வளவுதான்.

பிற்சேர்க்கை: ஜெயமோகன் வல்லிக்கண்ணனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று தேடிப் பார்த்தேன். “இலக்கிய வாசகர்களுக்கு அவர் ஒரு சென்ற காலக் கறை” என்று தீர்மானமாகச் சொல்கிறார். வல்லிக்கண்ணனின் “சிவப்புக் கல் மூக்குத்தி” என்ற ஒரு சிறுகதை ஜெயமோகன் தேர்ந்தெடுத்த தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பழ. அதியமானின் அஞ்சலி
திருப்பூர் கிருஷ்ணனின் அஞ்சலி
வல்லிக்கண்ணன் பற்றி வெங்கட் சாமிநாதன்

எழுத்து: சி.சு. செல்லப்பா – மின்னூல்
வாசகர்கள், விமர்சகர்கள் – மின்னூல்
பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை – மின்னூல்