பாலகுமாரனின் வெட்டிக் கதைகள்

balakumaranஇதுவும் தவிர்த்துரைதான். ஒரு காலத்தில் மாத நாவல் என்றால் பாலகுமாரன் முயற்சி செய்து எழுத வேண்டி இருந்தது. அப்போது வேறு வேறு தளங்களில் சில நல்ல கதைகளை எழுதினார். பிறகு அவர் என்ன எழுதினாலும் ஆஹா ஓஹோ என்று புகழும் ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டது. கொடுமையிலும் கொடுமையாக பல கதைகளை எழுதினார். அவற்றை தவிர்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கவே இந்தப் பட்டியல்.

அடுக்குமல்லி: இதய நோய் உள்ளவனின் ஏக்கங்கள். அவருக்கு கதையை எந்த திசையில் எடுத்து செல்வது என்று குழப்பம் இருந்திருக்க வேண்டும். வேஸ்ட். தவிர்க்கலாம்.

அம்மாவின் தற்கொலை: அப்பாவுக்கு ஒரு சிநேகிதி. சந்தேகத்தால் தற்கொலை செய்து கொள்ளும் அம்மா. மகன் சிநேகிதியைப் போய் பார்க்கிறான். குடவாயில் பாலசுப்ரமணியம் ஒரு பாத்திரமாக வருகிறார். தவிர்க்கலாம்.

அன்புள்ள மான்விழியே: புத்தகத்தின் சிறந்த விஷயம் ஒரு நல்ல பழைய பாட்டை தலைப்பாகப் போட்டிருப்பதுதான். ஏதோ அவசரக் கோலத்தில் எழுதி இருக்கிறார். கொஞ்சம் அசட்டு மாமா, முறைப்பெண், நடுவில் மாமாவை வளைக்க முற்படும் ஒரு பெண் என்று கதை போகிறது.

என் அன்புக் காதலா: ராஜீவ் காந்தி கொலை மாதிரி ஒரு சம்பவம். ஃபோட்டோகிராஃபர் சுரேந்திரபாபு ஸ்பாட்டிலேயே அவுட். காமிரா கடன் கொடுத்த ரவி இசகுபிசகாக மாட்டிக் கொள்கிறான். கதையை பாதியிலேயே முடித்துவிட்ட மாதிரி இருக்கிறது. தவிர்க்கலாம்.

என் அன்புள்ள அப்பா: வீட்டின் மூன்றாவது பையனை தத்துக் கொடுக்கலாமா என்று யோசிக்கிறார்கள். அவனுடைய மன உளைச்சல்கள்தான் கதை. தவிர்க்கலாம்.

ஏழாவது காதல்: சாகேதராமன் வாழ்க்கையில் ஏழு பெண்கள் வருகிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு டைப். என்னவோ wish fulfilment fantasy மாதிரி இருக்கிறது. டைம் பாஸ்.

ஞாபகச்சிமிழ், இதுதான் காதல் என்பதா, இதுதான் வயது காதலிக்க, இனிது இனிது காதல் இனிது (2 வால்யூம்கள்), கல்யாணத் தேர், நினைவுப் பறவை, தேடிக் கண்டுகொண்டேன், திருமணமான என் தோழிக்கு: பாலகுமாரன் கட்டுரைகளில் காதலை, கல்யாணத்தை படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார். உதாரணங்களில் எவ்வளவு நிஜம் எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

இனி என் முறை: பாலகுமாரன் க்ரைம் கதை மாதிரி ஒன்று முயற்சி செய்திருக்கிறார். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போடக் கூடிய தரத்தில் வந்திருக்கிறது. சுபா, ராஜேஷ்குமாரை விட நன்றாக எழுதி இருக்கிறார் என்று சொல்லலாம். அமிர்தசரஸ் பொற்கோவில் தாக்குதலில் பங்கு பெற்ற ஒரு சி.பி.ஐ. அதிகாரி. அவர் மனைவியை நிர்வாணமாக ஃபோட்டோ எடுக்கும் தீவிரவாதக் கூட்டம் என்று கதை. தவிர்க்கலாம்.

இரண்டாவது கல்யாணம்: கொடுமை. நானே இதை விட பெட்டராக எழுதுவேன்.

காதல் கிளிகள்: சபலம் தட்டுகிறது, ஆனால் நாயகன் சுதாரித்துக் கொள்கிறார்.

காதல் வரி: அரசு வேலையில் சேரும் புவனேஸ்வரிக்கு திருமணம் ஆவதில் பிரச்சினைகள். கடைசியில் ஒரு காதல், அவனும் ஏமாற்றுகிறான். தவிர்க்கலாம்.

காமதேனு: புடவை வியாபாரி. தண்டம்.

காசுமாலை: கமலக்கண்ணன் பணம் பண்ணும் ஆள். கப்பல்களுக்கு பர்சேஸ் ஆஃபீசராக இருக்கிறான். சைடில் நிறைய வருமானம். பாலகுமாரனுக்கு அவனை எப்படி சித்தரிப்பது என்று புரியவில்லை. முதல் பாதியில் அவனது drive-ஐ பற்றி நல்ல விதமாக எழுதுகிறார். இரண்டாவது பாதியில் அவன் திடீரென்று கெட்டவன் ஆகிவிடுகிறான்.

கல்யாண முருங்கை: பாலகுமாரனின் இன்னொரு obsession. திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் பெண்.

கொம்புத்தேன்: அண்ணாவி என்று ஒரு விளையாட்டு வீரர் ஒரு 25 வருஷத்துக்கு முன் ஏஷியாட் வரைக்கும் போய் மெடல் வாங்கினார் என்று நினைவு. இவர் அந்த அண்ணாவியை ஒலிம்பிக்குக்கு அனுப்புகிறார். தவிர்க்கலாம்.

மானச தேவி: கதையின் ஹீரோ பாலகுமாரன்தான். ரிஷிகேஷ் போகிறார், அங்கே முன் பின் தெரியாத ஒரு பெண் உங்களோடு உங்கள் அறையில் தங்கிக் கொள்கிறேன் என்கிறாள். நல்ல முடிச்சு, ஆனால் கதை சரியாக வரவில்லை. தவிர்க்கலாம்.

நான்காம் பிறை: குவைத்துக்கு வேலைக்குப் போகிறவர்களை பின்புலமாக வைத்து சகட்டு மேனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். பெரியசாமி என்கிற அவ்வளவாகப் படிக்காத, சமையல் வேலை செய்து முன்னேறுபவன்தான் ஹீரோ.

நல்ல முன்பனிக்காலம்: ஹோட்டலில் பேரராக இருக்கும் ஜெகன்னாதனுக்கும் ஹோட்டல் முதலாளி பெண் மனோகரிக்கும் காதல் உண்டாகிறது. வெட்டித்தனமாக கதை எழுதி இருக்கிறார்.

நெருப்புக்கோழி: பினாமி நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார். ஒரே கதையில் நாலு கதையை மிக்ஸ் பண்ணி கழுத்தறுக்கிறார். தவிர்க்கலாம்.

நேசமில்லாதவர்கள்: ஏ.சி. ரிப்பேர் செய்யும் ஒருவனின் போலிக் காதல். தவிர்க்கலாம்.

நிழல் யுத்தம்: பொருந்தாத கணவன் மனைவி, குழந்தைகளுக்காக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். தவிர்க்கலாம்.

பனிவிழும் மலர்வனம்: அக்கா தங்கைகள். யாருக்கும் மணம் ஆகவில்லை. பெண் பார்க்க வருபவனிடம் ஒரு கேம் ஆடுகிறார்கள். தவிர்க்கலாம்.

பூந்தோட்டம்: வழக்கம் போல genre-களை குழப்புகிறார். முதல் கணவனால் ஏமாற்றப்பட்ட வனிதாதேவி; இரண்டாவது கணவனும் வேறு ஒருத்தியை மணம் செய்து கொள்கிறான். இவள் ஆன்மிகம் என்று போகிறாள். தவிர்க்கலாம்.

போராடும் பெண்மணிகள்: இது எவ்வளவு தூரம் நிஜம், எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. பல பெண்களின் கதை. முத்து என்ற “கீழ்” ஜாதி, “பட்டிக்காட்டுப்” பெண் மருத்துவ கல்லூரியில் படும் அவமானங்கள் genuine ஆகத் தெரிந்தன. தவிர்க்கலாம்.

சரிகை வேட்டி: அமெரிக்கா மச்சினன் மன்னி பார்த்த பெண்ணை வேண்டாமென்று சொல்லி வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்கிறான். மன்னிக்கு அவமானமாக இருக்கிறது. புதுப் பெண்ணும் அலட்டல். கடைசியில் மச்சினன் இறந்துபோக, மச்சினன் குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். அமெரிக்காவிலிருந்து நிறைய பணத்தோடு வருபவர்களைப் பற்றி ஒரு வயிற்றெரிச்சல் தெரிகிறது.

செந்தூர சொந்தம்: கணவன் போய் சாமியாரியானியாக ஆகும் ஒருத்தி. தவிர்க்கலாம்.

சுழற்காற்று: மனைவி சி.பி.ஐ. அதிகாரி. கணவனுக்கு அவள் வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வர வேண்டும். தவிர்க்கலாம்.

தாழம்பூ: பெண்கள் நட்பு. கொடுமைப்படுத்துகிறார்.

தலையணைப் பூக்கள்: கூட்டுக் குடும்பம். பிரச்சினைகள், இத்யாதி. தவிர்க்கலாம்.

தங்கச்சுருள்: ரொம்ப நல்லவரு ஒருத்தர் ராமர் படத்தை தஞ்சாவூர் பாணியில் வரைகிறார். பாலகுமாரனுக்கு வெட்டி அரட்டை எல்லாம் கதை ஆகிவிடுகிறது.

வெள்ளைத்தாமரை: பதிப்பகம் நடத்தும் அண்ணன். அவனுக்கேற்ற மனைவி வருகிறாள். தங்கை பொறாமையால் துடிக்கிறாள். தவிர்க்கலாம்.

வெற்றிலைக் கொடி: திருவல்லிக்கேணி ஒண்டிக் குடித்தனத்தில், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பிரசாத் ராகவேந்திரா மடத்துக்குப் போய் ஏதோ சேவை செய்ய, அவன் வாழ்க்கை மெதுமெதுவாகத் திரும்புகிறது. பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

யானை வேட்டை: பாலகுமாரனுக்கு திருமணத்துக்கு வெளியே உறவு என்பது பெரும் கவர்ச்சி. இந்தக் கதையிலும் அதுதான். அதுவும் தி.ஜா. எழுதிய மரப்பசு தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. நாயகி ஆர்க்கியாலஜி துறையில் பணி புரிகிறாள். இஷ்டப்பட்டவனோடு படுக்கிறாள். கதை நடுவில் அக்காவின் காதல் முறிவு என்று கொஞ்சம் ramble ஆகிறது. ஒருவனோடு வாழ்கிறாள், குழந்தை என்றதும் இருவரும் மணக்கிறார்கள். பஸ்ஸில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்