சட்டநாதக் கரையாளர் எழுதிய “1941 திருச்சி சிறை” – படிக்க விரும்பும் புத்தகம்

சட்டநாதக் கரையாளர் சுதந்திரப் போராட்டத்தில் ஜெயிலுக்குப் போன தேசபக்தர். பின்னாளில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இன்று அவர் பெயரில் ஒரு கல்லூரி நடக்கிறது, அதைத் தவிர அவர் நினைவாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையத்தில் அவரது புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை.

ஜெயிலில் இருந்த அனுபவத்தை புத்தகமாக எழுதி இருக்கிறார். படிக்க ஆர்வமாக இருக்கிறது. பல மாதங்களுக்கு முன்னால் விகடனில் படித்த சில excerpts-ஐ மீள்பதித்திருக்கிறேன். ஜெயமோகன் தளத்திலும் இரண்டு கட்டுரைகளைக் கண்டுபிடித்தேன். அவற்றுக்கான சுட்டிகள் – 1, 2.

சிறையில் இருக்கும் சக்கரவர்த்தி

எல்.எஸ்.கரையாளர், எம்.எல்.ஏ.

rajaji

ராஜாஜி கைது செய்யப்பட்டபொழுது ஜெர்மன் ரேடியோ அந்தச் செய்தியை, ‘ராஜா ஆஃப் கோபாலபுரம் என்பவர் கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருஷம் தண்டனை விதிக்கப்பட்டு ஒரு சுரங்கத்தில் தள்ளப்பட்டார்!’ என்று அறிவித்தது.

ராஜா, ராஜாஜி, சக்கரவர்த்தி – எதுவாயினும் சரி – திருச்சி சிறையிலே அவர் உண்மையில் சக்கரவர்த்தியாகவே விளங்குகிறார். மேதாவிகளும் படிப்பாளிகளும் நிறைந்தது திருச்சி முகாம் ஜெயில். இவர்களெல்லோரும் ராஜாஜியிடம் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்கிறார்கள். காரணம்? அவருடைய சீரிய நடத்தைதான்!

ராஜாஜிக்கு 62 வயதாகிறது. காலை 5.30 மணிக்கு ஒரு நாளும் அவரைப் படுக்கையில் காணமுடியாது. காப்பி சாப்பிட்டு முடிந்ததும். வால்மீகி வகுப்பு ஆரம்பமாகிவிடும். 10 மணி வரை நடக்கும். பிறகு சாப்பிடும் இடத்திற்கு ஒரு கையில் பீங்கான் தட்டுடனும் மற்றொரு கையில் உட்காருவதற்குரிய சிறிய கோரைப் பாயுடனும் புறப்படுகிறார். எல்லோருடனும் இருந்து சாப்பிடுகிறார்.

பகல் 12 மணி முதல் 1 மணி வரை ஷேக்ஸ்பியரும், உருது வகுப்புகளும் நடத்துகிறார். உஷ்ணம் அதிகரிக்கவே ராஜாஜி நீல நிறக் குட்டை ஒன்றைத் தண்ணீரில் நனைத்துத் தலையில் கட்டிக் கொள்வார். ஏனெனில் ஐஸ், மின்சார விசிறி போன்றவை ஜெயிலில் அனுமதிக்கப்படுவதில்லை. சரியாக 3 மணிக்கு ‘கிளாசரி’ (glossary) வகுப்பு. பௌதிகம், பூகோளம், ரஸாயனம் இவை போன்ற எல்லா சாஸ்திரங்களிலுமுள்ள ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியான தமிழ்ப் பதங்கள் கண்டுபிடிப்பது இந்த வகுப்பின் வேலை.

அப்பால் சாப்பாட்டு மணி அடிக்கும் வரை குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், பாரதியார் பாட்டுக்கள் இவைகளைக் கொண்ட சில வகுப்புகள் நடக்கும். சாப்பிட்ட பின் ஆங்கிலக் காவியங்கள், காளிதாசன், சாகுந்தலம், உபநிஷதங்கள் இவைகளில் ஒன்றிரண்டு நடைபெறும். இத்தனை வகுப்புகளிலும் ராஜாஜி கலந்து கொள்கிறார் என்பது மாத்திரமில்லை; அவ்வளவையும் அவரே நடத்தி வருகிறார்.

ராஜாஜி முதலில் கைது செய்யப்பட்டது 1921, டிஸம்பர் மாதம். ஜெயிலில் கைதிகளின் சரித்திரத்தைக் குறித்து வைக்கும் கடுதாசிக்கு ‘ஹிஸ்டரி போர்டு’ என்று பெயர். ராஜாஜியின் ஹிஸ்டரி போர்டில் அதிகாரிகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

ரிஜிஸ்டர் நம்பர் – 8398
அனுமதித்த தேதி – 21.12.21
அப்பீல் செய்ய மறுத்த தேதி – 24.12.21
பெயர் – ஸி. ராஜகோபாலாச்சாரி, இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக் காரியதரிசி.
படிப்பு – ஸி.

‘ஸி’ என்றால் எழுதப் படிக்கத் தெரியாது என்று அர்த்தம்!

“இந்தியாவில் மிகவும் முக்கியமான அரை டஜன் மனிதர்களில் ராஜாஜியும் ஒருவர்” என்கிறார் ஜான் கந்தர் என்ற புகழ்பெற்ற பத்திரிகை நிருபர். இதே ராஜாஜியைத்தான் எழுதப் படிக்கத் தெரியாத கைதி என்றார் வேலூர் சிறை அதிகாரி. நமக்கு என்ன தோன்றுகிறது? அந்த வேலூர் சிறை அதிகாரியைப் பார்த்து, ராஜாஜி எழுதியுள்ள ‘தம்பீ வா!‘, ‘இதையும் படி‘ என்ற புஸ்தகங்களைப் படிக்கச் சொல்லலாம் போல் தோன்றுகிறது.

(இந்தக் கட்டுரை, சென்னை நவயுகப் பிரசுராலயத்தார் தயாரித்திருக்கும் ‘திருச்சி ஜெயில்’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்டிருக்கிறது.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் கட்டுரை 1, 2.