அகிலனின் கயல்விழி

akilanஅகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. பின்னே என்னங்க, இரண்டு பெரிய படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராட தயாராக இருக்கிறதாம், அப்போது நடுவே ஒரு பெண் ஓடி வந்து போரை நிறுத்தி விடுகிறாளாம். காதில் பூ சுத்துவதற்கும் ஒரு எல்லை வேண்டும். ஆனால் கயல்விழிக்கு அந்தக் காலத்தில் நிறைய விசிறிகள் இருந்தார்கள். போடா நீ சின்னப் பையன் உனக்கு இதெல்லாம் புரியாது என்பார்கள். சிறந்த வாசகரான ஜெயமோகன் கூட இந்த நாவலை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் வைக்கிறார். எனக்கு நாலு வார்த்தை எழுதவே அலுப்புத் தட்டுகிறது. இதெல்லாம் நாற்பதுகளின் மிகை மெலோட்ராமா நாடகம், ஐம்பதுகளின் சிவாஜி கணேசன் சினிமாதான். இந்தப் பதிவுக்காக மீண்டும் படிக்கும்போது சிவாஜி, பத்மினி, தங்கப்பதுமை சினிமா மாதிரி ஒரு பிம்பம் தோன்றிக் கொண்டே இருந்தது.

பிற்காலத்தில் எம்ஜிஆர் இதை “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” என்ற திரைப்படமாக எடுத்தார்.

ஒன்று சொல்ல வேண்டும். இந்த நாவல் எனக்கு நா.பா.வை அடிக்கடி நினைவுபடுத்தியது. மீண்டும் மீண்டும் இது நா.பா. எழுத்து இல்லை, அகிலனுடையது என்று நினைவுறுத்திக் கொண்டேன்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

படித்த மிச்சப் புத்தகத்துக்கு எல்லாம் தனித்தனியாக பதிவு எழுதுவதற்கில்லை. சகோதரர் அன்றோ என்று சிறுகதைத் தொகுதியில் ஒன்று கூட எனக்குத் தேறவில்லை. பொன்மலர் என்ற நாவலும் வழக்கமான புலம்பல்தான். சிநேகிதி எல்லாம் வாசகர்களை அதிர்ச்சி அடையவே எழுதப்பட்டவை. வயதான கணவன் தந்தை ஸ்தானத்தில் நின்று இளம் மனைவியை காதலனோடு சேர்த்து வைக்கிறானாம். எதுக்கு கல்யாணம் செய்து கொண்டு பிறகு சேர்த்து வைக்க வேண்டும்? திருமணத்தைத் தவிர்த்திருக்க வேண்டியதுதானே?

ஜெயமோகன் பரிந்துரைகளில் உள்ள எல்லா நாவல்களையும் – வணிக நாவல்களையும் சேர்த்துத்தான் – படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு விபரீத ஆசை உண்டு. டிக் மார்க் போட என்றாவது பாவை விளக்கு, பெண் எல்லாம் படிக்க வேண்டுமென்று நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படி ஜெயமோகன் இந்த மாதிரி எழுத்தை எல்லாம் ஒரு seminal பட்டியலில் சேர்த்தீங்க? ஏதாவது ஒரு விஷயமாவது இருக்க வேண்டாமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
வேங்கையின் மைந்தன்
சித்திரப்பாவை
அகிலனைப் பற்றி அவரது மகன்