டின்டின் காமிக்ஸை ரசித்துப் படிக்கும் வயது எட்டு ஒன்பது வயதுதான். ஆனால் இன்றும் நான் அவற்றைப் படிப்பதுண்டு. அந்த சித்திரங்களின் பரம ரசிகன் நான்.
டின்டின் கதைகள் மேலோட்டமானவைதான். அதுவும் Duex ex machina (அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள்) இந்த மாதிரி எங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. தப்பிக்கவே முடியாத அபாயம் என்று வந்தால் அடுத்தபடி ஒரு அதிசயத் தற்செயல் நிகழ்ச்சி, பிழைத்துவிடுவான். எல்லா கதைகளும் – அதுவும் காலத்தால் முற்பட்ட கதைகள் – ஒரு நாட்டை ஸ்டீரியோடைப் செய்கின்றனதான். Tintin in Congo ஒரு நல்ல உதாரணம். காலனீய மனப்பான்மை நன்றாகவே தெரியும். கறுப்பர்கள் நாகரீகம் அற்ற பழங்குடிகள், ஐரோப்பியர்கள், அதுவும் மிஷனரிகள் நல்லவர்கள் என்ற மாதிரி நிறைய வரும். ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் படித்தால் நன்றாக இருக்கும். அன்றைய அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி (கம்யூனிச ரஷியா, ஜப்பான் சீனாவை ஆக்கிரமிப்பது, எண்ணெய் கம்பெனிகளின் அரசியல், தென்னமரிக்க நாடுகளின் “புரட்சிகள்”) ஐரோப்பிய பொது புத்தி என்ன நினைத்திருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய எல்லா புத்தகங்களும் தரமானவை, படிக்கக் கூடியவை.
நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் Tintin in America, Cigars of the Pharaoh, Blue Lotus, Broken Ear, Black Island, King Ottokar’s Sceptre, Crab with the Golden Claws, Shooting Star, Secret of the Unicorn, Red Rackham’s Treasure, Land of Black Gold, Destination Moon, Explorers on the Moon, Calculus Affair, Red Sea Sharks, மற்றும் Tintin in Tibet. ஒன்றிரண்டு புத்தகங்கள்தான் படிக்க முடியுமென்றால், Tintin in America, Blue Lotus, Explorers on the Moon மற்றும் Tintin in Tibet-ஐ பரிந்துரைக்கிறேன்.
காலத்தால் முந்தைய புத்தகங்கள் கறுப்பு வெள்ளையாக வரையப்பட்டவை, பிற்காலத்தில் வண்ணம் சேர்க்கப்பட்டது. பல கதைகளை இணையத்தில் படிக்க முடிகிறது.
டின் டின் உருவான பின்புலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் தீவிர டின் டின் விரும்பிகளுக்கு மைக்கேல் ஃபார் எழுதிய Tintin Companion புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.
கீழே புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்புகள்.
Tintin in the Land of the Soviets (1929–30) முதல் புத்தகம். இந்தப் புத்தகம் இது வரை வண்ணம் சேர்த்து வெளியிடப்படவில்லை. கம்யூனிசத்திற்கு பத்து வருஷம் முன்னால்தான் மாறிய ரஷியாவைப் பற்றி அன்று மற்ற ஐரோப்பிய நாடுகளில் என்ன நினைத்திருப்பார்கள் என்று ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.
Tintin in the Congo (1930–31) இன்று politically incorrect ஆகத் தெரியலாம். ஆனால் ஆஃப்ரிக்கர்கள் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள் என்பது அந்தக் காலத்து பொது புத்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
Tintin in America (1931–32) இந்தப் புத்தகத்திலிருந்து இந்த சீரிஸைப் படித்தால் போதும் என்று நான் நினைக்கிறேன். டின்டின் கதைகளின் ஃபார்முலா சரியாக உருவாகிவிட்டது. இதில் அமெரிக்காவில் சிகாகோவின் மாஃபியா, செவ்விந்தியர்கள், எண்ணெய்க் கிணறுகள், ரயில்கள் என்று எல்லாவற்றையும் கோட்டுச் சித்திரமாகக் காட்டுகிறார்.
Cigars of the Pharaoh (1932–34) புத்தகத்தில்தான் துப்பறியும் “நிபுணர்கள்” தாம்ப்சன் மற்றும் தாம்சன் அறிமுகம் ஆகிறார்கள். இந்தியா எத்தனை தூரம் ஸ்டீரியோடைப் (யானைகள், மாய மந்திரப் பக்கிரிகள், ராஜாக்கள்) ஆகிறது என்பதை நான் ரசித்தேன்.
Blue Lotus (1934–35) புத்தகத்தில் ஓபியம் விற்கும் கும்பல் ஒன்றை சீனாவில் எதிர்க்கும் டின்டின். ஜப்பானியர்களை ஆக்கிரமிப்பு சக்தியாக சித்தரித்திருப்பது உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது.
Broken Ear (1935–37) பல சமகால சம்பவங்களை கோடிட்டுக் காட்டுகிறது. எண்ணெய்க் கம்பெனிகளான ஷெல் ஆயில் மற்றும் ஸ்டாண்டர்ட் ஆயில் பொலிவியாவுக்கும் பராகுவேக்கும் இடையில் ஒரு போரைக் கிளப்பியது, சர் பேசில் ஜஹராஃப் என்ற ஆயுத விற்பனையாளன் இரண்டு தரப்புக்கும் ஆயுதங்களை விற்பது எல்லாம் குறிப்பிடப்படுகிறது.
Black Island (1937–18) லாக் நெஸ் மான்ஸ்டர் பின்புலத்தில் எழுதப்பட்டது. ஸ்காட்லாந்துக்கு அருகே ஒரு தீவில் இருக்கும் ஒரு கொரில்லா – ஏதோ பயங்கர மிருகம் என்று அக்கம்பக்கத்தில் பீதியைக் கிளப்புகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் வில்லன்கள்…
King Ottokar’s Sceptre (1938–39) இன்னும் ஒரு சிறந்த புத்தகம். ஒரு தென்கிழக்கு ஐரோப்பிய நாடு, அதை ஆக்கிரமிக்கும் நினைக்கும் பக்கத்து நாடு; ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமிக்கும் தருணத்தில் எழுதப்பட்ட புத்தகம்.
Crab with the Golden Claws (1940–41) காப்டன் ஹடாக் இந்தப் புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகிறார். ஓபியம் கடத்தலைத் துப்பறியும் டின்டின் கப்பல், படகு, விமானம், சஹாரா பாலைவனம் என்று அலைகிறான்.
Shooting Star (1941–42) வண்ணப் படங்களோடு வெளியான முதல் புத்தகம் இதுதான். ஆர்க்டிக் பகுதியில் எங்கோ ஒரு பெரிய விண்கல் விழுகிறது. அதைப் பற்றி ஆராய டின்டின் குழு செல்கிறது.
Secret of the Unicorn (1942–43) கேப்டன் ஹடாக்கின் முப்பாட்டன் ஒரு பொக்கிஷத்தைப் பற்றிய ரகசியமாக எழுதி வைத்திருக்கும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். ஹடாக் பிற்காலத்தில் வாழும் மார்லின்ஸ்பைக் மாளிகை இந்தப் புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகிறது. இதன் தொடர்ச்சியான Red Rackham’s Treasure (1943) புத்தகத்தில் பொக்கிஷத்தைத் தேடிப் போகிறார்கள். கால்குலஸ் அறிமுகம் ஆவது இந்தப் புத்தகத்தில்தான்.
Seven Crystal Balls (1943–46) புத்தகம் எகிப்திய பிரமிட்களில் நுழைந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் மீது ஒரு சாபம் இருந்தது என்ற நம்பிக்கையை பெருவின் இன்கா நாகரீகத்துக்கு கொண்டு செல்கிறது. ஏழு ஆராய்ச்சியாளர்கள் கோமாவில் விழுகிறார்கள். கால்குலஸ் பெருவுக்கு கடத்தப்படுகிறார். இதன் தொடர்ச்சியான Prisoners of the Sun (1946–48) புத்தகத்தில் கால்குலசை மீட்க டின்டின்னும் ஹடாக்கும் பெரு செல்கிறார்கள். அங்கே அவர்களை பலி கொடுக்கப் போகும்போது கிரகணம் வரப்போவதை தங்கள் வேண்டுகோளுக்கு சூரியனே பணிகிறது என்கிற மாதிரி காட்டி தப்பிக்கிறார்கள்.
Land of Black Gold (1948–50) ஒரு பெட்ரோலிய அரபு நாட்டின் ஷேக்குக்கு உதவி செய்யும் டின்டின்.
Destination Moon (1950–52) இதன் தொடர்ச்சியான Explorers on the Moon (1952–53) புத்தகத்தில் நிலாவுக்குப் போகிறார்கள். என்னுடைய ஃபேவரிட் புத்தகம் இதுதான். வார்த்தை விளையாட்டு கலக்கலாக இருக்கும்.
Calculus Affair (1954-56) புத்தகத்தில் கால்குலஸ் கடத்தப்படுகிறார், அவரை மீட்கிறார்கள். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஜோல்யான் வாக் அறிமுகம் ஆவது இதில்தான்.
Red Sea Sharks (1956-58) புத்தகத்தில் ராஸ்டாபொபுலோஸ் மீண்டும் வருகிறான். அடிமை வியாபாரம் செய்யும் அவன் முகமூடியைக் கழற்றுகிறார்கள், ஆனால் அவன் தப்பிவிடுகிறான்.
Tintin in Tibet (1958-59) புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நேபாளம் அருகே விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் சாங்கை ஒரு yeti- பனி மனிதன் – காப்பாற்றுகிறது/கிறான். வழக்கமான சாலையில் படுத்துக் கிடக்கும் மாடு போக்குவரத்தை நிறுத்துவது போன்ற காட்சிகளும் உண்டு.
Castafiore Emerald (1961–62) புத்தகத்தில் வில்லன்களே கிடையாது!
Flight 714 (1966–67) மீண்டும் ராஸ்டாபொபுலோஸ். வேற்று கிரகவாசிகள் வேறு.
Tintin and the Picaros (1975–76) புத்தகத்தில் டின் டினின் ஆடை மாறுகிறது! பெல்பாட்டம் அணிந்து வருகிறான். தென்னமெரிக்காவில் வழக்கம் போல புரட்சிகள்…
Tintin and Alph-Art (1986) – முழுமை பெறாத புத்தகம். ஒரு வழியாக ராஸ்டாபொபுலோஸ் இதில் இறக்கிறான்…
Tintin and the Lake of Sharks டின்டின் சீரிசில் இடம் பெறாத, ஒரு திரைப்படத்துக்காக எழுதப்பட்ட கதை. சுமாராக இருக்கும்.
இவற்றைத் தவிர Le Thermozero என்று ஒரு கதையை ஆரம்பித்து நிறுத்திவிட்டாராம்.
சமீபத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில கதைகளை ஒன்றிணைத்து திரைப்படமாகவும் வந்தது.
தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...