பக் குங்குரு பாந்து மீரா நாச்சி ரே என்று தொடங்கும் ஒரு மீரா பஜன் உண்டு. அதைக் கேட்கும்போதெல்லாம் இப்படி ஒரு பித்துப் பிடித்த நிலை எப்படி உருவாகிறது என்று மனதுக்குள் ஒரு இழை ஓடிக் கொண்டே இருக்கும்.
விஷ் கா ப்யாலா ராணாஜி நே பேஜா பீவத் மீரா ஹாஜி ரே! என்று எப்படி வாழ முடிந்தது? கண்ணனைக் கோவிலில் கும்பிட்டால் என்ன அரண்மனையில் வணங்கினால் என்ன? விஷத்தை அருந்தவும் தயார், ஆனால் கண்ணன் விக்ரகம் முன்னால் பாடாமல் இருக்க மாட்டேன் என்று என்ன ஒரு அசட்டுப் பிடிவாதம்? அப்பா, அம்மா, கணவன், குடும்பம் எதுவும் வேண்டாம் என்று இது என்ன பித்து நிலை? எதைத் தேடினாள்? என்ன கிடைத்தது? எனக்கு கொஞ்சமும் புரிவதில்லை. புரியாத விஷயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்று இத்தனை எளிமையாக தன் உறுதியை வெளிப்படுத்தும் நயத்தை, மெட்டின் இனிமையை, எம்.எஸ்ஸின் குரலை ரசித்துவிட்டு நகர்ந்துவிடத்தான் முயற்சி செய்கிறேன், ஆனாலும் சில சமயம் மண்டை காய்ந்து போகிறது.
அதையும் மிஞ்சும் கிறுக்குத்தனம் நம்மூர் ஆண்டாளிடம்தான்.
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் காண் மன்மதனே!
என்றெல்லாம் ஒரு பெண்ணுக்குத் தோன்றுமா? கண்ணன் கர்ப்பக்கிரகத்திலிருந்து இறங்கி வந்து தன்னை மணப்பான் என்று உண்மையிலேயே அந்தப் பெண் நினைத்திருந்தாளா? ஏதாவது hallucinatory நோயா? பெரியாழ்வார் ஏதோ கண்ணனைக் குழந்தையாக நினைத்து நாலு பாட்டு பாடினேன், என் பெண் இப்படி கிறுக்காகிவிட்டாளே என்று துக்கித்திருக்க மாட்டாரா? கண்ணனை சபித்திருக்க மாட்டாரா? தன் பெண் காலத்தால் அழியாத கவிதை எழுதி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் கொஞ்சம் துக்கம் குறைந்திருக்குமா?
மீராவுக்காவது வழிபடும் தெய்வம், நீண்ட பாரம்பரியம் என்று நிறைய இருக்கிறது. ஆண்டாள் கண்ணனை மணக்க வேண்டும் என்று வெறியோடு இருந்திருக்கிறாள். ஆனால் ஒரு விக்ரகத்தை – பொம்மையை – இழக்க முடியாமல் ரங்கநாதர் பின்னால் அலைந்த துலுக்க நாச்சியாரை எப்படிப் புரிந்து கொள்வது?
எனக்கு தர்க்க ரீதியாக சிந்திப்பதுதான் இயல்பாக வருகிறது. இது மாதிரி உணரும், இது போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் அதிருஷ்டம் எனக்கில்லை. என் சிறு வயதில் என் அம்மா கோவில், சாமி என்று மணிக்கணக்காக விக்ரகத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பாள். அதனால் சாமி, பூஜை என்று அலையும் சில மாமா மாமிகளை பார்த்திருக்கிறேன். நடிக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது. வெளியே சொன்னால் அம்மா சோறு போடமாட்டாள் என்று கம்மென்று இருப்பேன். கண்ணன் என் தெய்வம், கண்ணன் என் காதலன், கண்ணன் என் விளையாட்டு பொம்மை என்ற எண்ணங்களிலேயே பித்துப் பிடித்துப் போகிறவர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எனக்குப் பிடிபடுவதெல்லாம் ஓவியம் வரைய வேண்டுமென்று தன் 40 வருஷ வாழ்க்கையை விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கும் ஸ்ட்ரிக்லாண்ட் வரைதான்.
ஆனால் ஜெயமோகன் தற்போது எழுதி வரும் மகாபாரதத் தொடர் – நீலம் – இது மாதிரி பித்து நிலையை கொஞ்சம் புரிய வைக்கிறது. நீருக்கு வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்கும் பாறையைப் போல. எனக்கு பிடிபடுவது மேலே தெரியும் சின்ன இடம்தான். ஆனால் கீழே பூதாகாரமான பாறை இருக்கிறது என்ற பிரக்ஞையாவது இருக்கிறது. ராதையின் பாத்திரப் படைப்பு, பர்சானபுரியின் பிச்சி என்ற பட்டம் அற்புதமாக இருக்கிறது.
இத்தனைக்கும் இது வரையில் வந்தவற்றில் நீலம் மட்டுமே எனக்கு கொஞ்சம் சுமாரான பகுதி. எனக்கு அரைகுறையாகவே பிடிபடும் இந்தப் பித்து நிலை என்னை இந்தப் பகுதியோடு முழுமையாக ஒட்டவிடாமல் செய்கிறது. முன்னால் வந்த வண்ணக்கடல், மழைப்பாடல், வெண்முரசு எல்லாவற்றிலும் நான் முழுகிப் போயிருக்கிறேன். பீஷ்மரும் துரோணரும் பீமனும் சகுனியும் எனக்கு எப்போதுமே நான் அடிக்கடி போக முடியும் உலகத்தின் மனிதர்கள். அவர்களை இன்னும் அருகில் பார்த்தது போல இருந்தது. இந்தக் கண்ணனோ எனக்கு அந்நியமானவன். எல்லாரையும் கஞ்சா அடித்தது போன்ற ஒரு நிலையில் ஆழ்த்துகிறான். ஜெயமோகன் கண்ணனுக்கும் எனக்கும் உள்ள தூரத்தை அதிகரித்திருக்கிறார்.
வண்ணக்கடலும் மழைப்பாடலும் வெண்முரசும் சிறந்த படைப்புகள்தான். ஆனால் யயாதியும் ரெண்டாமூழமும் பர்வாவும் அதே ரேஞ்சில் உள்ள படைப்புகள். நீலம் மாதிரி ஒரு படைப்பைப் பார்ப்பதரிது. தனித்துவம் நிறைந்த படைப்பு. (unique) என்னை மாதிரி ஆட்கள் கவித்துவமான உரைநடை என்று சொல்வார்கள். கவிதைகளைப் புரிந்து கொள்பவர்கள் உரைநடையில் எழுதப்படும் கவிதை என்பார்கள் என்று நினைக்கிறேன். கவிதைக்கும் எனக்கு ரொம்ப தூரம், அதனால்தான் என்னால் முழுதாக ஒன்ற முடியவில்லையோ என்னவோ. ஒன்ற முடிகிறதோ இல்லையோ, தவற விடாதீர்கள், கட்டாயம் படியுங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், ஜெயமோகன் பக்கம்
நான் நினைப்பதை எழுதியிருக்கின்றீர்கள். முன்னால் வந்த மூன்று புத்தகங்களும் மிகவும் நெருக்கமாக இருந்தன. ஆன்லைனில் படிப்பத்தாலும் படிக்க முடிந்தது. இது கையில் புத்தகமாக கொண்டு, இரவில் அமைதியாக படித்தால்தான் உள்ளே செல்ல முடியும். மொழி நடை, ஒவ்வொரு வரியையும் கூர்ந்து படிக்க வேண்டிய கவனத்தை கோருகின்றது. அவர் வேறு யோக நூல், அன்னமய கோசம் என்றெல்லாம் பீதியை கிளப்புகின்றார். அதை மறந்துவிட்டுதான் நான் படிக்க வேண்டும். அதை மனதில் கொண்டால், எம்.டி.எம் ஜிகர்தண்டா பார்த்தமாதிரி ஆகிவிடும்.
LikeLike
RV,
அண்மையில்தான் ஜெயமோகனரைப் படிக்க ஆரம்பித்தேன்.
நீலத்தில் மனம் பறிக்கின்றார்.
கண்ணன் மோகனம் சொல் மொழியும், பொருளும் ஊற்றாய்ப் பொங்குகின்றார்.
அவரே மறுத்தாலும், அவருக்கே கண்ணன்மேல் பித்தோ எனத்தோன்றுகிறது.
மீராவும், ஆண்டாளும் கொண்ட பித்தின் தாக்கம் இவரையும் தாக்கியதோ?
பித்தின் மருவல்தான் பக்தியோ?
உங்கள் சுட்டிகளுக்கும், கருத்துகளுக்கும் நன்றிகள்.
நிறைய படிக்க ஆர்வன் தூண்டுகிறீர்கள்.
நன்றி
டில்லி துரை
LikeLike
+1
LikeLike
ரெங்கசுப்ரமணி, உங்களுக்கும் எனக்கு ஒத்த கருத்து இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? 🙂
டில்லி துரை, என்ன உங்களை இட்ஸ்டிஃப் பக்கமே காணவில்லையே?
LikeLike