அமெரிக்காவில் கார் லைசன்ஸ் தேர்வுக்குப் போனபோது சொதப்பிவிட்டேன். காரை விட்டு இறங்கும்போது தேர்வாளர் நான் நல்ல பாம்பைப் பார்த்திருக்கிறேனா என்று கேட்டார். பார்ப்பதாவது, நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிடித்து அடித்திருக்கிறோம் என்று சொன்னேன். சிறு வயதில் வயல்களில் உள்ள கிணறுகளில் குளிக்கப் போவோம், செங்கல் சுவர்களில் பாம்புகள் இருப்பது சாதாரணம், பாம்பு எங்களைப் பார்த்து பயந்து ஓடுவதும், நாங்கள் பாம்பைப் பார்த்து பயந்து ஓடுவதும் அவ்வப்போது நடக்கும், சில தைரியசாலிகள் சட்டையை கையில் சுற்றிக் கொண்டு பாம்பைப் பிடித்து மேலே கொண்டு வருவார்கள், மாட்டிக் கொண்ட பாம்பை கல்லால் அடிக்க எல்லாரும் முன்வருவோம் என்றெல்லாம் விளக்கினேன். நான் சொன்ன கதை இந்தியாவைப் பற்றிய அவரது exotic பிம்பத்தை வலுப்படுத்தி இருக்க வேண்டும். லைசன்ஸ் கொடுத்துவிட்டார். 🙂 கரடியைப் பார்த்த கலிஃபோர்னியர்கள் உண்டு, கலிஃபோர்னியா ஒரு exotic இடம் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.
ஒரு நாட்டு மக்களைப் பற்றிய எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றன? நேரடி அனுபவம், சொல்லித் தெரிந்து கொள்வது, புத்தகங்கள், திரைப்படங்கள் மூலம்தான். அவை ஒரே ஒரு பிம்பத்தை மேலும் மேலும் வலியுறுத்தினால் என்னாகும்? அதன் அபாயத்தைப் பற்றி நைஜீரிய எழுத்தாளர் சிமமண்டா அடிசி இங்கே சிறப்பாக விளக்கி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
அடிசி Purple Hibiscus (2003), Half of a Yellow Sun, The Thing Around Your Neck (2009) மற்றும் Americanah (2013) என்று நான்கு புத்தகங்களை எழுதி இருக்கிறார். Half of a Yellow Sun பற்றி முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்துப் பார்க்க வேண்டும்.
அடிசி நாடுகளைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனால் அது மதம், ஜாதி, மாநிலம் என்று எந்தக் குழுவுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஒரு ஒற்றைப்படை பிம்பம் உருவாகிவிட்டால் அதை வலியுறுத்தும் செய்திகளை மட்டும் நம் மனம் கவனிக்கிறது. Sterotyping bias! நண்பர் ஒருவர் எல்லா முஸ்லிம்களும் சட்டைப்பையில் வெடிகுண்டோடுதான் அலைகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார். 🙂
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
தொடர்புடைய சுட்டி: அடிசியின் சிறுகதை – இதைத்தான் Half of a Yellow Sun நாவலாக விரிவுபடுத்தினாராம்.