தமிழ் புத்தகங்களின் விற்பனை

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக தமிழ்ப் புத்தகங்களின் வியாபாரம் என்பது அரசு நூலகங்களை நம்பியே இருக்கிறது. எனக்கு தெரிந்த எழுத்தாளர்கள், பேசிப் பழகக் கூடிய ஒரே (முன்னாள்) விற்பனையாளரான திலீப்குமார் எல்லாரும் இதை மாற்றி மாற்றி உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு பதிப்பு போட்டால் 1200 பிரதிகள் அச்சடிப்பார்களாம். நூலகங்கள் வாங்கினால் 600 பிரதிகள் விற்றுவிடுவாமாம். ஓரளவு பேர் வாங்கிய புத்தகமாக இருந்தால் மிச்சம் 600 பிரதிகளை விற்க இரண்டு மூன்று வருஷங்கள் ஆகலாம். வானதி பதிப்பகம் வெளியிட்ட பொன்னியின் செல்வன், ராஜாஜியின் எளிமைப்படுத்தப்பட்ட ராமாயண/மகாபாரதம், சில பல சாண்டில்யன் நாவல்கள் தவிர வேறு எதுவும் பத்து பதிப்புகள் கூட வந்து நான் பார்த்ததில்லை. புத்தகம் போட்டே சொத்தை அழித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் ஐநூறு பிரதிகளை முன்பதிவு செய்து விற்கவே படாதபாடு பட்டிருக்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு இருபது வருஷங்களுக்கு முன் பிரபலம் அடையத் தொடங்கியது. கல்கி, சுஜாதா என்று சிலரது புத்தகங்கள் விற்கும். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் செகந்தராபாத்தில் வாழ்ந்த காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வருஷாவருஷம் புத்தகக் கண்காட்சி நடத்துவார். எனக்குத் தெரிந்து விற்பனை எல்லாம் பிரமாதமாக இருந்ததில்லை. இதில் பத்து வருஷமாக நூலகங்கள் புத்தகங்களை வாங்குவதை நிறுத்திவிட்டார்களாம். (இப்போதாவது நிலைமை மாறி இருந்தால் சந்தோஷம்.) ஒப்பீட்டுக்காக இதையும் சொல்கிறேன் – கன்னட நண்பன் ஒருவன் பைரப்பாவின் புத்தகங்கள் சில (குறிப்பாக ஆவரணா) வருஷத்துக்கு பத்து பதிப்பு வரை போகின்றன என்று சொன்னான். கேட்கவே வயிற்றெரிச்சலாக இருந்தது.

badri_seshadriஇரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரியை சந்தித்தேன். அவர் சரியான மார்க்கெடிங் இருந்தால் தமிழ்ப் புத்தகங்களை 50000 பிரதிகள் வரைக்கும் கூட விற்கலாம் என்று சொன்னார். அவரால் அந்த இலக்கை அடைய முடிந்ததோ இல்லையோ, கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒருவர் நினைப்பதே தமிழ் புத்தகப் பதிப்பாளர்கள் உலகில் அதிசயம்தான். ஆனால் ஏழரைக் கோடி தமிழர்களில் 0.1 சதவிகிதம் பேர் புத்தகம் வாங்கினால் கூட 75000 பிரதி விற்க வேண்டும். இதெல்லாம் என்று மாறுமோ தெரியவில்லை. (வீட்டில் புத்தகம் வைக்க இடம் இல்லாததால் நானும் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டேன் என்பதை குற்ற உணர்வோடு பதிவு செய்கிறேன்.)

haran_prasannaகிழக்கு பதிப்பகத்தில் உயர் அதிகாரியாக பணி புரியும் ஹரன் பிரசன்னா புத்தக விற்பனை குறித்து தன்னுடைய impressions-ஐ இங்கே எழுதி இருக்கிறார். அவரது சில எண்ணங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆயிஷா புகழ் இரா. நடராசனின் புத்தகங்கள் 20000-30000 பிரதிகள் விற்கின்றனவாம். தமிழின் சூப்பர்ஸ்டார் என்று நான் நினைக்கும் சுஜாதாவின் பிரபலமான புத்தகங்களே வருஷத்துக்கு 6000 பிரதி விற்றால் அதிகமாம். அதிகமாக விற்கும் புத்தகம்? பொன்னியின் செல்வன் – வருஷத்துக்கு லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று அனுமானிக்கிறார். கல்கியின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று யூகிக்கிறேன். கல்கிக்கு அடுத்தபடி வைரமுத்துவின் புத்தகங்கள் விற்கின்றன என்று அவர் கருதுகிறார், எத்தனையோ மாணிக்கங்கள் இருக்க வைரமுத்துவை எல்லாம் யார் வாங்குகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவரது வார்த்தைகளில்:

இன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும்.

அவர் கனவு கை கூடவேண்டும் என்று நானும் கனவு காண்கிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

6 thoughts on “தமிழ் புத்தகங்களின் விற்பனை

  1. பாலகுமாரன் நூல்கள் நன்றாக விற்கிறது போல் இருக்கிறது. அவரே சன்-டிவி பேட்டியில் “நீங்கள் ஆசைப்பட்ட வசதி/வாழ்க்கை கிடைத்ததா?” என்ற கேள்விக்கு “மற்ற எழுத்தாளர் பற்றி எனக்குத் தெரியாது. என் புக் எல்லாம் நல்லா விக்குது. பணம் போதுமாக வருகிறது. சொந்த வீடு, இனோவா கார் என்று வாழ்கிறேன்” என்று சொன்னார். உடையார் ஏழெட்டு பதிப்புக்கு மேல் போகிறது இப்போது. கங்கை கொண்ட சோழன் கூட முதல் பாகம் இப்போதே மூன்றாம் பதிப்பைத் தொட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

    Like

  2. புத்தகங்கள் விற்காததற்கு முக்கிய காரணம்,அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. எங்கள் ஊரின் சுற்று வட்டாரத்தில் எங்கும் பாடபுத்தகங்களை தவிர மற்ற புத்தகங்கள் கிடைக்காது. வேண்டுமென்றால் மதுரை போக வேண்டும். மதுரையிலும் எத்தனை புத்தகக்கடைகள் உண்டு? எண்ணுவதற்கு கைகள் போதும்.

    இரண்டாவது, புத்தகக்கடைகள் இருந்தாலும், அங்கு நாம் தேடும் புத்தகம் கிடைக்காது, அல்லது நாமே தேடிக்கொள்ள வேண்டும். ஒரு வரிசை, ஒரு இன்டெக்ஸ் எதுவும் கிடையாது.ஒருமுறை சுஜாதாவின் புத்தகத்தை சமையல் வரிசையிலிருந்து எடுத்தேன், வேங்கடநாத விஜயம் என்னும் புத்தகம் ஓஷோ புத்தகங்களுடன் கிடந்தது.

    மூன்றாவது, கடைகளில் இருப்பவர்களின் புத்தக அறிவு. ஜவுளிக்கடையிலுருப்பவருக்கு துணிகளை பற்றி நன்றாக தெரிந்திருக்கும், அதே போலதான் மளிகை கடை, மருந்து கடை.ஆனால் புத்தக கடையில் வேலை செய்ய? அசோகமித்திரனின் சிறுகதை தொகுப்பு இருக்கா என்று தெளிவாக கேட்ட பின்னும், அங்கிருந்த பெண்மணிக்கு புரியவில்லை. கதையா சார் என்றார். பெங்களூர் புத்தக கண்காட்சியில், அனைத்து பதிப்பகத்திற்குள்ளும் சென்று வந்தேன். பெரும்பாலான கடைவாசிகள் பில் போடும் பணியை மட்டும் செய்தார்கள். காலச்சுவடில் மட்டும் நான் எடுத்த புத்தகத்தை பார்த்துவிட்டு, அதற்கு தொடர்பான சில புத்தகங்களை பரிந்துரை செய்தார்கள். அதே கடையில் ஒரு பெண்மணியை விரட்டி விரட்டி விளக்கி ஒரு பதினைந்து புத்தகங்களை வாங்க செய்தார்கள்.

    பரவலான புத்தக அறிமுகம். சிறுவயதிலிருந்து கண்டதையும் படித்துவரும் எனக்கு, அசோகமித்திரன் பெயரே சில வருடங்களுக்கும் முன்புதான் தெரியும். பதினெட்டு வயது வரை என் வாசிப்பு ராஜேஷ்குமார், பட்டுகோட்டை பிரபாகர், சுபா வரைதான். கல்கி, சுஜாதா, தி.ஜானகிராமன் என்று மெதுவாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இணைய பரிச்சியமே இதற்குகாரணம். இன்று இணையம் வந்தபின் இது எல்லாம் கொஞ்சம் குறைந்துள்ளது. பல எழுத்தாளர்கள் எழுதுகின்றார்கள், அவர்கள் பலரை அறிமுகம் செய்கின்றார்கள். புத்தகங்களை பற்றி பேசும், எழுதும் மக்கள் அதிகமாகியுள்ளனர். இப்போது கொஞ்சம் வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

    புத்தகங்களை வாங்குவதும் எளிதாகிவிட்டது. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் மூன்றுநாட்களில் கையில் கிடைக்கின்றது. நான் மாதம் ஒரு 500 என்று ஒரு பட்ஜெட் வைத்து கொண்டு வாங்கிவருகின்றேன். வீடு மாற்றும் போது பெரிய பிரச்சினை. இருக்கும் வீட்டிலேயே சண்டை போட்டு ஒரு ஷெல்பை வாங்கிவைத்துள்ளேன். அதனால், கொஞ்சம் பழைய, இனி படிக்க மாட்டேன் என்ற புத்தகங்களை கொஞ்ச கொஞ்சமாக எனது சொந்த வீட்டிற்கு கடத்த ஆரம்பித்துள்ளேன்.

    பலர் ஒரு புத்தகத்தின் விலை 400, 500 என்றால் மிரள்கின்றார்கள். இதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது.

    வைரமுத்து புத்தகங்கள் எல்லாம் தள்ளு தள்ளு என்று தலையில் கட்டி அனுப்பும் வகையறா.

    பலருக்கு புத்தகம் என்பது படித்தவுடன் ஒரு பலனளிக்க வேண்டும். எனது நண்பன் ஒருவனுக்கு போதனை புத்தகங்கள் மட்டுமே புத்தகங்கள். அர்த்தமுள்ள இந்து மதம், விவேகாநந்தரின் அறிவுரைகள். இது போல புத்தகங்கள். சுயமுன்னேற்ற புத்தகங்கள், எழுந்து ஓடு காலம் வரும், பயமே ஜெயம், பார்த்தல் பத்தும் நடக்கும் என்று தலைப்பில் யாராவது எழுதிதள்ளூவதை படிக்க பிடிக்கும். நாவல், சிறுகதை என்றால் ஓட்டம், எனக்கு அவன் படிக்கும் புத்தகங்களை படித்தால் வெறி வரும். ஆனால் இந்த உடனடி பலனாளர்களால் தான் கோபிநாத்தின் புத்தகங்கள் பலமாக விற்கின்றன.

    இன்னும் சிலருக்கு படித்தவுடன் புல்லரிகவேண்டும், கண்ணில் நீர்தளும்ப வேண்டும் அவர்களுக்காகவே ராஜூமுருகன் போன்றவர்களும், எஸ். ராவும் எழுதிதள்ளுகின்றார்கள். ராஜூமுருகன் யாராவது ஒரு அக்கா, அண்ணன் என்று எழுத, எஸ்.ரா. புல், பனி, மரம் செடி கொடி என்று உருக, படிப்பவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சி, வரவில்லையென்றால் சே, நாமெல்லாம் கல்மனம் படைத்தவர்களோ என்ற குற்ற உணர்வு வந்து, வலுவாக அந்த நெகிழ்ச்சி வந்துசேரும். இதுவும் அதிகம் விற்கும் வகையறா.

    Like

  3. ‘சொல் புதிது சுவை புதிது’ என்று தனது கவிதைகளைப் பற்றித் தானே சுய விளம்பரம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் பாரதி வாழ்ந்த மண் இது. தன் கவிதைகளை வெளியிட அவன் செய்த முயற்சிகள் வெறும் கனவாய் போனது நிதர்சனம். எனவே நமது எழுத்தாளர்கள் பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயல் ஒன்றையே செய்துகொண்டிருக்கும் இலட்சிய புருஷர்கள்! அவர்கள் எழுத்தைக் கொண்டாடும் ஒரு சிலரையும் வட்டம், கோஷ்டி என்று வகைப்படுத்தும் போக்கு நம் தமிழ் காலாச்சாரத்திற்கு ஒன்றும் புதிது அல்ல. நம் எழுத்தாளர்கள் சிலரும் அந்த வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொண்டு பூசல்களை உருவாக்கும் துரதிருஷ்டங்களும் நமக்குக் கைவந்த கலைதான். எனவே வாசகரிடையே எழுத்தாளர்களிடையே உள்ள இந்த மனப்பான்மை புத்தகங்களின் விற்பனையைத் தீர்மானிப்பதாகக் கருதுகிறேன். எனவே புத்தகங்களை பெருமளவில் வாசகர்களிடம் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும். இதற்காக நாம் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிப்பது நல்லது. அதனால் நமக்கு என்ன பலன் என்று பலர் கேட்கக்கூடும். ஒரே பலன்தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல புத்தகங்களைக் கொண்டு சேர்க்க முடியும்.

    Like

  4. மனிதர்களின் உண்மையான முகம் ஜாக்தம் என்னும் பகல் திரையினால் மூடப்ட்டு இருக்கிறது..
    ஆனால் இரவுக்கு அத்தகைய திரை ஏதும் கிடையாது…
    பகலின் வெளிச்சத்தால் உண்மைகள் ஒளிந்து கொள்கின்றன, இரவு அதை அம்மனமாக்கிவிடுகிறது, ஆக்ரோசமடைய செய்துவிடுகிறது..
    மனதின் ஆழத்தினில் உள்ள உண்மையை இரவினில் மறைக்க முடிவதில்லை.. தியானம், யோகா, தவம் போன்றவற்றால் கிட்டாத பரவச நிலையை..
    நித்திரையில்லா இரவுகள் நமக்கு அளித்துவிடுகின்றன…!!!

    கடைசி இரண்டு பகுதிகள் இல்லாமல் புத்தகத்தை நமக்கு அளித்திருந்தால்
    மனதினில் கணம் ஏறி, நிச்சயம் சித்தம் களைந்து காட்டினில் திரியவேண்டியிருக்கும்.!!!

    ——————நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்……………..

    ஜெயமோகன் என்னும் பிறவி..
    புவியில் பிறந்த பிறவியே அல்ல…
    காற்றாற்று வெள்ளத்தை உள்ளங்கையினில் தடுக்க முடியும் என்றால்
    ஜெயமோகனின் கற்பனையையும் அளக்க முடியும்…!!!

    ————————–தமிழ்————————–

    Like

  5. சமீபத்தில் இண்டியா டுடே இதழில் ஆங்கில நாவல்கள் சில பத்து லட்சம் பிரதிகள் 3 மாதத்தில் விற்பதாக தெரிவிக்கிறது. தமிழில் வரலாற்று நாவல்கள் பொன்னியின் செல்வன் லட்சம் பிரதிகள் விற்றிருக்கலாம். ஒரு பதிப்பு 1000 பிரதிகள் என்றாலும்
    லட்சம் பிரதிகள் விற்க பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் அந்த எழுத்தாளர் அந்த புகழோடு இருக்க மாட்டார். இதற்கு காரணம் என்ன என்று எழுத்தாளர்கள் யோசிக்க வேண்டும்.

    Like

  6. செல்வராஜ், ரெங்கசுப்ரமணி, கேசவமணி, நீங்கள் எல்லாரும் பல காரணங்களைச் சொன்னாலும் படிக்கும் பழக்கம் தமிழர்களிடம் குறைவு என்பதுதான் எனக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.