தமிழறிஞர் வரிசை – 1. ஆறுமுக நாவலர்

14 தமிழறிஞர் பட்டியல் என்ற பதிவில் பல தமிழறிஞர்களின் பெயர்தான் தெரிகிறது, வேறு எதுவும் தெரியவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டேன். ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி உதவிக்கு வந்திருக்கிறார். அஜயன் பாலா சில அறிமுகங்களை தமிழில் எழுதினாராம், அதை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பல அரிய விஷயங்கள் தெரிய வருகின்றன. உதாரணமாக ஆறுமுக நாவலர்தான் நன்னூல், பெரிய புராணம், திருவாசகம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் புத்தகங்களைப் பதிப்பித்தார் என்பதை இந்த அறிமுகத்தைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். ஓவர் டு அஜயன் பாலா மற்றும் ரமேஷ்!

ஆறுமுக நாவலர்

பிறப்பு:18-12-1822
இறப்பு: 05-12-1879

aarumuga_naavalarஆங்கிலேயர் ஆட்சியில் அச்சகங்கள் நிறுவி ஆங்கில நூல்களை மட்டுமே அவர்கள் அச்சாக்கிக் கொண்டிருந்த சூழலில் பாழும் ஓலைச் சுவடிகளை கரையான் அரிக்க தமிழ் அழிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு வெந்து பொதும்பி பைந்தமிழ் இலக்கண இலக்கிய செல்வங்களை நூல்களாக பதிப்பிக்க வேண்டி அதன் பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். உரைநடைத்தமிழின் முன்னோடி. வசனநடை வல்லாளர் என போற்றப்பட்டவர்.

பிறந்தது இலங்கை யாழ்ப்பாணம்,நல்லூரில். தந்தை ஞானப்பிரகாச சுவாமிகள் மரபிலே வந்த கந்தசாமிப் பிள்ளை, தாயார் சிவகாமி. சகோதரர் நால்வர் உட்பட பரம்பரையே தமிழ் அறிஞர் குடும்பம். சிறுவயதில் தந்தை இறந்துபட அவரது மூத்த தமையனாரின் ஆலோசனையின் பேரில் சுப்ரமணியப் பிள்ளை மற்றும் சேனாதிராச முதலியார் ஆகியோரிடம் மூதுரை மற்றும் நிகண்டு ஆகியவற்றை தெளிவுறக் கற்று தமிழை தன் ஊனில் ஊனாக கரைத்துக் கொண்டார். பின் இக்காலத்தில் யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் கல்லூரியில் ஆங்கிலப் பாடம் கற்று இரு மொழி வித்தகனாக மாறினார். அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பொறும்பும் ஏற்றார். இக்காலத்தில் சைவமும் தமிழும் ஒன்றெனக் கண்டுகொண்ட நாவலர் டிஸம்பர் 31 1847-இல் வண்னார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் தனது முதல் சொற்பொழிவை நடத்தினார். பின் சைவத் தொண்டு நிமித்தம் ஆசிரியப் பணியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொண்டு அதே வண்ணார்பண்ணையில் பாடசாலை ஒன்றை உண்டாக்கினார். பாடசாலைகளுக்கு சைவத்தில் புத்த்கங்கள் தேவையாக இருந்தது. இதனால் ஓலைச் சுவடிகளில் இருந்த இலக்கியங்களை அச்சாக்குவதன் பொருட்டு சென்னையில் ஒரு அச்சுக்கூடம் ஒன்றை வாங்க வேண்டி தமிழகம் வந்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவைக் கண்டு வியந்து அங்கு இவருக்கு நாவலர் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுக்கவும் சொற்பொழிவாற்றி தமிழையும் சைவத்தையும் செழிக்கச் செய்தார். சென்னை தங்கசாலைத் தெருவிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழுக்கென பிரத்தியேக அச்சகங்களை நிறுவி எண்ணற்ற ஓலைச் சுவடிகளை நூலாகப் பதிப்பிக்கத் துவங்கினார். சூடாமணி, நிகண்டு, நன்னூல், பெரிய புராணம், திருவாசகம், திருக்கோவையார், பாலபாடம், ஆத்திச்சூடி, மற்றும் கொன்றைவேந்தன் போன்ற அரிய தமிழ்ச் செல்வங்களை புத்தகமாக்கினார். சிதம்பரத்தில் ஒரு பாடசாலை ஒன்றையும் தோற்றுவித்தார்.

இதே காலகட்டத்தில் தமிழகத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் இயற்றிய அருட்பா கோவில்களில் பாடப்பட அதனை எதிர்த்து அவை அருட்பா அல்ல மருட்பா என வாதிட்டார். ஆனால் அது வழக்காடுமன்றத்தில் தோல்வியுற்ற பின் வேதனை மிக்கவராக யாழ்ப்பாணம் திரும்பி தன் சைவத் தொண்டைத் தொடர்ந்தார். வர்ணாசிரம தர்மத்தை அவர் ஆதரித்த காரணத்தால் காலம் போகப்போக அவரது கருத்துக்கள் பிற்போக்குத்தன்மையுடையதாக கருதப்பட்டன. எனினும் தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டு காரணமாக வரலாற்றில் இன்னமும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அறிஞர்கள்

தொடர்புடைய சுட்டிகள்: நாவலரின் சைவ தூஷணப் பரிகாரம்

ராஜம் கிருஷ்ணன் – அஞ்சலி

rajam_krishnanஎழுத்தாளர்களுக்கு அஞ்சலி என்றால் அவர்கள் எழுத்தைப் பற்றித்தான் சொல்லியாக வேண்டும் என்று கருதுபவன் நான். ராஜம் கிருஷ்ணன் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும், இது வரை படிக்காத, எழுத்தாளர்களில் ஒருவர். குறிப்பாக அவரது பாதையில் படிந்த அடிகள் புத்தகம் கிடைக்குமா என்று தேடிய காலம் ஒன்றுண்டு. (இப்போது வீட்டில் இடம் உருவாக்காமல் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று ஒரு phase).

சம்பல் கொள்ளைக்காரர்கள், நீலகிரியின் பழங்குடிகள் (குறிஞ்சித் தேன்?) என்று பல பின்புலங்களைப் பற்றி கள ஆய்வு செய்து எழுதியவர் என்று புகழப்படுகிறார். வேருக்கு நீர் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. ஜெயமோகன் “பாதையில் படிந்த அடிகள்” புத்தகத்தை இரண்டாம் வரிசை இலக்கிய நாவலாகவும், குறிஞ்சித்தேன் மற்றும் வளைக்கரம் ஆகியவற்றை முக்கிய வணிக நாவல்களாகவும் தனது seminal பட்டியலில் குறிப்பிடுகிறார். எஸ்ரா கரிப்பு மணிகள் நாவலை தமிழின் 100 முக்கிய நாவல்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். “பெண்” எழுத்தாளர் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாதவர் என்று நினைக்கிறேன்.

அவருடைய கடைசி காலம் பொருளாதார ரீதியாகவும் வேண்டியவர் யாரும் இல்லாமலும் கஷ்டத்தில் கழிந்தது என்று தெரிகிறது. எங்கள் தலைமுறை எல்லாம் வயதான காலத்தில் ததிங்கிணத்தோம்தான் என்று தோன்றுகிறது.

இணையத்தில் கிடைத்த அவரது சிறுகதை ஒன்று இங்கே. இன்னொன்று இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள் பக்கம்

14 தமிழறிஞர் பட்டியல

14 தமிழறிஞர் பட்டியல் என்று ஒன்று பாஸ்டன் பாலா தளத்தில் கண்ணில் தென்பட்டது. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

இதில் ஏறக்குறைய எல்லா பேர்களும் கேள்விப்பட்டவையே. ஆனால் இவர்களில் பலர் தமிழுக்கு என்ன செய்தார்கள் என்று தெரியாது. எடுத்துச் சொல்ல எங்கள் சேதுராமனும் இல்லை. சரி எனக்குத் தெரிந்த வரை குறிப்புகள் எழுதுகிறேன்.

மு. வரதராஜன் (மு.வ.): ஒரு காலத்தில் பாப்புலராக இருந்து இப்போது யாருடைய பிரக்ஞையிலும் இல்லாத எழுத்தாளர். இவருடைய திருக்குறள் உரை இன்னும் பாப்புலராக இருக்கிறதா? ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் பிடித்தமானவை. சேதுராமன் எழுதிய அறிமுகம் இங்கே.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை: பேரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது வடமொழி கலப்பு இல்லாத தனித்தமிழ் வேண்டும் என்று முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. அவருடைய நல்வினை, இன்றைய பீட்டர் தமிழைக் கேட்பதற்குள்ளாகவே மறைந்துவிட்டார்.

ரா.பி. சேதுப்பிள்ளை: அலங்காரத் தமிழில் எழுதுவார், சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். ஆனால் தமிழில் என்ன ஆராய்ச்சி செய்தார் என்று தெரியவில்லை. தமிழுக்காக முதல் சாகித்திய அகாடமி விருது பெற்றவர் – தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக.

திரு.வி. கல்யாணசுந்தரம் (திரு.வி.க.): திரு.வி.க.வின் தமிழ் படிக்க சுகமானது. உண்மையிலேயே பெரிய மனிதர். தமிழ், அரசியல், தொழிலாளர் இயக்கம், பத்திரிகை உலகம் என்று பல துறைகளில் சாதித்தவர். அவருடைய வாழ்க்கை குறிப்புகள் படிக்க வேண்டிய புத்தகம். அவருடைய தமிழ்த் தொண்டு என்பது பத்திரிகைகள் (தேசபக்தன், நவசக்தி) மூலமும், தமிழ் நூல்களுக்கு உரை எழுதியதும் மட்டுமே என்று நினைக்கிறேன்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.): டி.கே.சி.யின் இதய ஒலி புத்தகம் குறிப்பிட வேண்டியது. தன் ரசனையை மட்டுமே அடிப்படையாக வைத்து கம்பனையும் முத்தொள்ளாயிரத்தையும் மற்றும் பல தமிழ் செய்யுள்களையும் சாதாரண வாசகனுக்கு புரிய வைத்தார். அவருடைய மிக பெரிய தொண்டு என்பது அவர் உருவாகிய வட்டம்தான். பல அறிஞர்கள் – ராஜாஜி, கல்கி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பாஸ்கரத் தொண்டைமான் இன்னும் நிறைய பேரின் மேல் அவரது தாக்கம் பெரியது. அது தமிழை முன்னே கொண்டுபோனது.

வித்துவான் தியாகராஜச் செட்டியார்: இவர் உ.வே.சா.வின் சம காலத்தவர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் என்று நினைவு. ஆனால் இவர் ஆற்றிய பணி என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆறுமுக நாவலர்: நாவலர் சைவத்தையும் தமிழையும் போற்றியவர். மிஷனரிகளினால் மனக் கொதிப்பு அடைந்து அவர்கள் பாணியிலேயே சைவத்தை பரப்ப முயற்சி செய்தவர். மிஷனரிகளை எதிர்த்து அவர் எழுதிய சைவ தூஷணப் பரிகாரம் சுவாரசியமான புத்தகம். ஆனால் இவர் என்ன செய்தார் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

நாவலர் சோமசுந்தர பாரதியார்: 1937-38-இல் ராஜாஜி அரசுக்கு எதிராக நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை. சுவாரசியமான விஷயம் – வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் செயலாளராக இருந்தாராம்.

பரிதிமாற் கலைஞர் தமிழ்ப்பற்றால் பேரை மாற்றிக் கொண்டார். தாங்க முடியாத சில புனைவுகளை (மதிவாணன்) எழுதி இருக்கிறார். அதைத் தவிர?

உ.வே. சாமிநாதையர்: உ.வே.சா.வைப் பற்றி நான் சொல்லித்தானா தெரிய வேண்டும்?

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்: செட்டியாரும் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை.

மறைமலையடிகள்: இருபது வருஷங்களுக்கு முன்பே படிக்க முடியாத பண்டிதத் தமிழில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவரையெல்லாம் அவரது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரிய தமிழறிஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். உ.வே.சா.வின். ஆசிரியர். சிறு காவியங்களை எழுதி இருக்கிறார். இவரது சீடர் சவேரிநாதப் பிள்ளைக்கு? இவரே அரிச்சந்திர புராணத்தை எழுதிக் கொடுத்தார் என்று சொல்வார்கள்.

பாண்டித்துரைத் தேவர்: மீண்டும் தமிழ்ச்சங்கத்தை ஸ்தாபித்தார் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

இவர்களில் பலரும் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்து தமிழில் ஆர்வும் உள்ள ஓரிரு தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது tangible பணியாக இல்லாமல் போகலாம், ஆனால் பெரிய பணிதான். இவர்களில் பலரை அவர்களது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு ராகவையங்கார்கள், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், ம.பொ.சி., அ.ச.ஞானசம்பந்தம், ஜேசுதாசன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் ஆகியோருக்கும் இப்படிப்பட்ட தாக்கம் இருந்திருக்கும்/இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பட்டியலில் முக்கியமான விடுபடல் சி.வை. தாமோதரம் பிள்ளை மற்றும் வையாபுரிப் பிள்ளை. அது என்னவோ உ.வே.சா.வுக்கு இருக்கும் புகழில் தாமோதரம் பிள்ளைக்கு பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனால் அவரது பணியும் உ.வே.சா. அளவுக்கு முக்கியமானதுதான். முதல் அகராதி வையாபுரிப் பிள்ளை பதித்ததுதான் என்று நினவு. அந்தக் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் இடைப்பட்ட காலத்தில் நா. வானமாமலை போன்றோரும் இப்போது அ.கா. பெருமாள், வேதசகாயகுமார், அ.இரா. வேங்கடாசலபதி (சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும்) ஆகியோரும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான களப்பணி புரிந்திருக்கிறார்கள்/புரிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

ஹாரி பாட்டர் எழுத்தாளரின் மர்ம நாவல்கள்

j_k_rowlingபுகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே. ரௌலிங் இப்போதெல்லாம் மர்ம நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தன் ஒரிஜினல் பெயரில் எழுதினால் வாசகர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும் என்பதால் ஒரு புனைபெயரில் – ராபர்ட் கால்ப்ரெய்த் – எழுதுகிறார். இது வரை இரண்டு நாவல்கள் வந்திருக்கின்றன – Cuckoo’s Calling (2013) மற்றும் Silkworm (2014). ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Cuckoo’s Calling.

நாவல்களின் நாயகன் ஸ்ட்ரைக் ஒரு துப்பறிபவன். ஆஃப்கானிஸ்தான் போரில் ஒரு காலை இழந்தவன் (டாக்டர் வாட்சனின் எதிரொலி!) வாட்சனும் ஹோம்ஸும் தற்செயலாக இணைவது போல இங்கே அவனது அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்ய வரும் ராபினும் ஸ்ட்ரைக்கும் ஒரு டீமாக பரிணமிக்கிறார்கள். ஆனால் ஏறக்குறைய சமமான பார்ட்னர்கள். ஸ்ட்ரைக் ஒரு பிரபல ராக் ஸ்டார் பாடகனுக்குப் பிறந்த மகன், ஆனால் மகனாக ஏற்றுக் கொள்ளப்படாதவன். அவனுக்கு ஒரு காதலி, ஆனால் அந்தக் காதல் அவனுக்கு கஷ்டங்களைத்தான் கொடுக்கிறது.

Cuckoo’s Calling நாவலில் பிரபல மாடல் லூலா லாண்ட்ரி இறக்கிறாள். அது தற்செயல் விபத்து என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது. லூலாவின் அண்ணன் ப்ரிஸ்டோ – ஒரு வக்கீல் – மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்ட்ரைக்கை தொடர்பு கொள்கிறான். தான் லூலாவின் மரணம் ஒரு கொலை என்று நம்புவதாகவும், அதைத் துப்பற்றிய வேண்டும் என்றும் ஸ்ட்ரைக்கை கேட்டுக் கொள்கிறான். ஒன்பது பத்து வயதில் இறந்து போன ப்ரிஸ்டோவின் அண்ணன் ஸ்ட்ரைக்கின் பள்ளி நண்பன், அதனால்தான் ப்ரிஸ்டோ ஸ்ட்ரைக்கைத் தேடி வந்திருக்கிறான். மர்மம் மெதுமெதுவாக அவிழ்கிறது. தற்காலிகமாக வேலை செய்ய வரும் ராபின் ஸ்ட்ரைக்குக்கு பல உதவிகள் செய்கிறாள், கடைசியில் செகரட்டரியாக சேர்ந்து விடுகிறாள்.

Silkworm நாவலில் ஒரு எழுத்தாளன் காணாமல் போகிறான். அவன் மனைவி அவனைக் கண்டுபிடிக்க ஸ்ட்ரைக்கை அணுகுகிறாள். அவன் கடைசியாக எழுதிய புத்தகத்தில் – இன்னும் வெளியிடப்படவில்லை – ஏழு நிஜ மனிதர்களை கேவலமாகச் சித்தரித்திருக்கிறான் – அவன் மனைவி, காதலி, அவனுடைய புத்தக ஏஜெண்ட், அவனுடன் ஒரு காலத்தில் போட்டியிட்ட சக எழுத்தாளன், பதிப்பாளன், பதிப்பகத்தின் தலைமை எடிட்டர் இப்படி. கடைசி பக்கங்களில் எல்லாரும் அவனை ஒரு டேபிள் மீது வைத்து அவனை வெட்டி சாப்பிடுவது போல ஒரு காட்சி. ஸ்ட்ரைக் அவனை அதே போல ஒரு டைனிங் டேபிளில் வெட்டப்பட்ட பிணமாக கண்டுபிடிக்கிறான். ஏழு பேரில் யார் கொலை செய்தார்கள் என்பதுதான் மர்மம்.

Career of Evil நாவலில் ஸ்ட் ரைக் மீது மரண கடுப்பில் இருக்கும் வில்லன் ராபினுக்கு ஒரு பெண்ணின் காலை வெட்டி அனுப்புகிறான். ஸ்ட் ரைக் மூன்று பேர் மேல் சந்தேகப்படுகிறான். யார் குற்றவாளி என்பதுதான் மர்மம்.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய துப்பறியும் நாவல்கள் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஹாரி பாட்டர் பக்கம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு (2014)

modiano2014 இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஃப்ரென்ச் எழுத்தாளர் பாட்ரிக் மோடியானோவுக்கு கிடைத்திருக்கிறது. நோபல் பரிசுக் குழு

The Nobel Prize in Literature 2014 was awarded to Patrick Modiano “for the art of memory with which he has evoked the most ungraspable human destinies and uncovered the life-world of the occupation

என்கிறது.

நான் மோடியானோவைப் பற்றி முன்னே பின்னே கேள்விப்பட்டதில்லை. யாராவது ஏதாவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

nhmbadri_seshadriசமீபத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது கிழக்கு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தமிழ் நாவல்களை பற்றிய ஒரு சுட்டி கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவற்றில் முக்கால்வாசியாவது தமிழின் முக்கிய நாவல்கள் பட்டியலில் இடம் பெறுபவை, அதிகமாக விற்காத இலக்கியப் புத்தகங்கள். இவை எல்லாம் பிரமாதமாக வியாபாரம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கிழக்கு பதிப்பகம் லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நிறுவனமோ, சாகித்ய அகாடமியோ, நேஷனல் புக் ட்ரஸ்டோ இல்லை. அப்படி இருந்தும் இதைச் செய்திருக்கும் பதிப்பகத்துக்கும் அதன் நிறுவனர் பத்ரி சேஷாத்ரிக்கும் ஒரு ஜே போட வேண்டுமென்று தோன்றியது, அதனால்தான் இந்தப் பதிவு.

தமிழ் படிக்கத் தெரியாத, படிக்கும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பரிசாக வாங்கிக் கொடுங்கள்!

மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் நாவல்களின் பட்டியல்: ஆங்கிலப் பெயர் அடைப்புக்குறிக்குள்.

சா. கந்தசாமியின் “சூர்ய வம்சம்” (Sons of the Sun)
இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்” (Surrendered Dreams)
கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”
இரா. முருகனின் “அரசூர் வம்சம்” (Ghosts of Arasur)
யூமா. வாசுகியின் “ரத்த உறவு” (Blood Ties)
இ.பா.
      Ashes and Wisdom
      சுதந்திர பூமி (Into this Heaven of Freedom)
      தந்திர பூமி (Wings in the Void)
      கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna)
சிவசங்கரி
      Deception
      பாலங்கள் (Bridges)
ஹெப்சிபா ஜேசுதாசனின் “புத்தம்வீடு” (Lizzie’s Legacy)
விஜயராகவனின் “Twice Born”
ஜெயகாந்தன்
      ரிஷிமூலம் (Rishimoolam)
      ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (Once an Actress)
      உன்னைப் போல் ஒருவன்
நீல. பத்மநாபனின்பள்ளிகொண்டபுரம்” (Where the Lord Sleeps)
அசோகமித்ரன்
      இன்று (Today)
      கரைந்த நிழல்கள் (Star-Crossed)
பி.எஸ். ஸ்ரீயின் “Temple Elephant” (சிறுவர் புத்தகம் என்று யூகிக்கிறேன்.)
ஆதவன்
      காகித மலர்கள் (Paper Flowers)
      என் பெயர் ராமசேஷன் (I, Ramaseshan)
வாசந்தியின் ஆகாச வீடுகள் (A Home in the Sky) – நன்றி, ஜடாயு!

கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”, விஜயராகவனின் “Twice Born” எல்லாம் தமிழ் நாவல்தானா? ஆசிரியரையும் புத்தகத்தையும் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

இ.பா.வின் “Ashes and Wisdom”, சிவசங்கரியின் “Deception”, வாசந்தியின் “A Home in the Sky” ஆகியவற்றுக்கு ஒரிஜினல் தமிழ்ப் பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

TamBrahm Bride மற்றும் Ashes and Wisdom இரண்டும் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்டவை, TamBrahm Bride சும்மா pulp என்று ஜடாயு தகவல் தந்திருக்கிறார். இவற்றைத் தவிர ஜெயமோகனின்காடு” (Forest) புத்தகமும் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

அசோகமித்ரனின் “இன்று”

asokamithranஇன்று ஒரு “சிறுகதை”த் தொகுப்பு. சில சிறுகதைகளைப் படிக்கும்போது சிறுகதைதானா இல்லை ஏதாவது கட்டுரையா என்று சந்தேகமாக இருந்தது. அசோகமித்ரன் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்தான், ஆனால் அதே சமயம் எனக்கு அவர் ஒரு challenging எழுத்தாளரும் கூட. எத்தனையோ முறை என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். குமுதத்தில் அவர் எழுதிய சிறுகதை ஒன்று (ஒற்றன் புத்தகத்தில் வரும் – பஸ்ஸுக்காக காத்திருப்பார், பஸ் அவருக்குப் பழகிய விதத்தில் இருக்காது.) பத்து வருஷங்களுக்குப் பிறகு தன்பாத் நகரத்தில் பஸ் தேடி ஒரு டிரக்கரில் ஏறிய நொடியில்தான் புரிந்தது. புகழ் பெற்ற காந்தி சிறுகதை எனக்கு சிறுகதையாகவே தெரிவதில்லை. ஆனால் புரியும்போது மண்டையில் டங் என்று அடி விழுகிறது, அந்த அனுபவத்துக்காகவே அவரை மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையின் பேர் “டால்ஸ்டாய்”. முதலில் டால்ஸ்டாயைப் பற்றி சம்பிரதாயமான ஒரு உரை. பிறகு இன்னொரு உரை. என்னடா எழவு இது என்று படித்துக் கொண்டே போனேன். கடைசி வரி –

“இந்த இரு உரைகளையும் சேர்த்துப் படித்தபோது அவனுக்கு சிரிப்பாக வந்தது. சிரித்து முடித்தபோது வருத்தமாகவும் இருந்தது.”

மனிதர் டால்ஸ்டாயைப் பற்றி எழுதவில்லை, இந்த உரைகளைக் கேட்கும் மனிதர்களைப் பற்றி, இந்த சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்! மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர். “நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற சிறுகதையில் எழுத்தாளர் ஹரிதாசனைப் பேட்டி காண்கிறார்கள். பேட்டி எடுப்பவர் ஹரிதாசன் எழுதிய கதை என்று எதையோ விவரிக்கிறார். அப்போதைய உரையாடல்.

இந்தக் கதையை நான் எழுதலே.
நீங்க எழுதலையா? ரொம்ப நல்ல கதை.
என்ன செய்யறது? நான் எழுதலை.”

Sarcasm கசப்பே இல்லாமல் வெளிப்படும் ஒரு அபூர்வ தருணம்!

குரூரமான நகைச்சுவையும் உண்டு. ஒரு ஆர்ப்பாட்டம், ஜனாதிபதி வருகை, ரகளை, போலீஸ், அப்பா, அம்மா, குழந்தைகள் உள்ள குடும்பம் பிரிந்துவிடுகிறது. குடும்பத் தலைவன் சுந்தரராமனின் மன ஓட்டம்

“எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியது நல்லதாகப் போயிற்று. ஒரேயடியாக மின்சார ரயிலில் ஏறி பரங்கிமலை போய்விடலாம். குழந்தைகளை கடவுள் காப்பாற்றுவார்.”

அடுத்த வரி –

“கடவுள் காப்பாற்றினார், ஒரு குழந்தையில் காலைத் தவிர.”

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த சிறுகதை(கள்) ஆக நான் கருதுவது “புனர்ஜென்மம்” மற்றும் அதன் தொடர்ச்சியான “இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?”. புனர்ஜென்மத்தில் முதிர்கன்னி சீதா, ஏற்கனவே மணமான ஒருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறாள். கசப்பும் மன அழுத்தமும் அதிகம் ஆக ஆக ஒரு நாள் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். இதே கருவை எம்.வி. வெங்கட்ராம்பைத்தியக்காரப் பிள்ளை” என்ற அற்புதமான சிறுகதையில் எழுதி இருக்கிறார். எம்.வி.வி.யின் அணுகுமுறைக்கும் அசோகமித்ரனின் அணுகுமுறைக்கும் எத்தனை வித்தியாசம்! எம்.வி.வி. ஒரு மாஸ்டர்பீஸைப் படைத்திருக்கிறார் என்பது புரியாதவர்கள் இருக்க முடியாது. அசோகமித்ரனின் சிறுகதையை நானே என் இருபதுகளில் படித்திருந்தால் என்ன அழுமூஞ்சிக் கதைடா என்று விசிறி அடித்திருப்பேன். அவரது subtlety புரிந்திருக்காது.

ஆனால் இந்த இரண்டு சிறுகதைகளையும் ஒன்றாக எந்த வயதில் படித்திருந்தாலும் இரண்டாம் பகுதிக்கு சிரித்திருப்பேன். அதுவும் என் இருபதுகளில் வாய்விட்டு கபகபகபகபவென்று சிரித்திருப்பேன். சீதாவின் தற்கொலையைப் பற்றி ஒரு பொதுக் கூட்டம் இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன என்று விவாதிக்கிறது. வரதட்சணை வாங்க மாட்டேன் என்று கையெழுத்து வாங்குவோம் என்று ஒருவர் ஆலோசனை சொல்கிறார். அதை இன்னொருவர் வரதட்சணைக் கொடுமை கையெழுத்துப் போடவும் இயலாத எழுத்தறிவில்லாதவர்களால்தான் வளர்க்கப்படுகிறது என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார். அமைப்பாளரின் தீர்வு – கையெழுத்துப் போட முடியாதவர்களிடம் கைநாட்டு வாங்கிக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை!

இவற்றைத் தவிரவும் இன்னும் இரண்டு நல்ல சிறுகதைகள் உண்டு. “ஒரு மனிதனுக்கு வேண்டிய நிலம் எவ்வளவு?” டால்ஸ்டாயின் சிறுகதையை நினைவுபடுத்தும் தலைப்பு. இங்கே ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி – தமிழர் – தன் கடைசி நாட்களை டெல்லியில் தன் சொந்தங்களிடமிருந்து வெகு தூரத்தில், வயதான தியாகிகள் வசிக்கும் ஒரு ஹாஸ்டலில் கழிக்கிறார். டால்ஸ்டாய் எழுப்பும் அதே கேள்விதான், ஆனால் முற்றிலும் வேறான விடை. “நடனத்துக்குப் பின்” சிறுகதையில் அவசர நிலையின்போது பல கஷ்டங்களை அனுபவித்த சோமு இன்று தன் பழைய அரசியல் நண்பன் ஒருவனைப் பார்க்க வருகிறான்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, விலை 50 ரூபாய்தான். ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டிருக்கிறார்கள். (மொழிபெயர்த்தவர் – சாந்தி சிவராமன்) அவர்களுடைய மார்க்கெட்டிங் blurb கீழே. நானே பரவாயில்லை, சிறுகதையா கட்டுரையா என்றுதான் குழம்பினேன். அவர்கள் ஒரு படி மேலே போய் இதை நாவலாக்கிவிட்டார்கள். 🙂

Today
Ashokamitran
ISBN:978-81-8368-384-5 Page :88 Rs. 100
Ashokamitran’s Today—translated from his Tamil novel Indru—is an avant garde departure from traditional forms of writing. The novel strings together a number of genres such as narrative fiction, poetry, lectures and a newspaper interview to produce a rare amalgam of fiction and recent history. The condition of freedom fighters in free India, social evils like dowry, corruption and crass commercialism, institutions like marriage and politics are highlighted as problems that occupy centre stage today. The period chosen for such delineation is immediately before and after the imposition of a national emergency by Prime Minister Indira Gandhi. Anger, persecution, lack of compassion and tolerance find their counterpoint in a father figure-perhaps a veiled reference to the Father of the Nation whose dreams lie shattered in the present. Today is also for all time. Its concerns are universal, its people are of flesh and blood. It raises serious questions about the validity of the value systems governing our lives in an increasingly complex world. It is without doubt a trailblazer in post-modern Tamil literature. Translated from Tamil by Shanti Sivaraman

சின்னப் புத்தகம், கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்