ரொம்ப நாளாச்சு முதல் நாள், முதல் காட்சி பார்த்து. விடுமுறை நாள், எனக்கும் என் மனைவிக்கும் ஏதாவது தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று தோன்றியதால் இங்கே சான் ஹோசேயில் ஒரு தியேட்டரில் காவியத் தலைவனைச் சென்று பார்த்தோம்.
படத்தின் களன் – இருபது, முப்பதுகளின் நாடக உலகம் – நிறைய ஸ்கோப் உள்ள உலகம். ஜெயமோகன் போன்ற ஒரு ஜீனியசிடம் இந்த மாதிரி களன், ஒரு திரைக்கதையை உருவாக்கு என்றால் பிரித்து மேய்ந்துவிடுவார் என்று எதிர்பார்த்தேன். திரைக்கதை சொதப்பிவிட்டது. என் மனைவி என்னைப் பிரித்து மேய்ந்ததுதான் மிச்சம்.
பிரித்விராஜ் அருமையாக நடித்திருக்கிறார். அதுவும் அவருக்கு சித்தார்த்தின் முன்னேற்றத்தைக் கண்டு ஏற்படும் ஆதங்கம் உறுத்தலாக, பின்னால் பொறாமையாக, பின்னால் அசூயையாக மாறுவதை அருமையாகக் காண்பித்திருக்கிறார். ராவணனா, சூரபத்மனா, அந்த ஓவியம் அவருடைய மாற்றத்துக்கு ஏற்ப இன்னும் இன்னும் முழுமையாக மாறுவது (shades of Dorian Gray!) நல்ல காட்சி அமைப்பு. சித்தார்த் என்றால் அழகான சாக்லேட் பாய், அவ்வளவுதான் என்று எனக்கு ஒரு எண்ணம் இருந்தது, அவரிடம் இவ்வளவு தூரம் நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. சில காட்சிகள் – சிஷ்யனை சபிக்கும் குரு, குருவை சபிக்கும் சிஷ்யன், உன்னிடம் மோதித்தான் என் நடிப்பை வளர்த்துக் கொண்டேன் என்று சித்தார்த் சொல்லும் இடம் – நன்றாக இருந்தன. பல குறைகள் உறுத்தினாலும் (தொப்புள் தெரிய லோ-ஹிப் புடவை மற்றும் தாவணி, நவீன உடைகளாக அணியும் சித்தார்த், அன்னியத் துணி எரிப்பின் போது கூட கதர் அணியாத போராளிகள், டூயட்டில் ஓகே என்பது), நாடக சபா சூழல் முதல் பாதியில் தெரிய வருகிறது. பாய்ஸ் நாடகம் என்றாலே மிகை நடிப்புதான் என்று நினைத்திருந்த எனக்கு அதற்கு வேறொரு பக்கமும் இருந்தது என்று நம்பும்படியாக சித்தரித்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையின் வழக்கமான பாதை, முற்றிலும் யூகிக்கக் கூடிய “திருப்பங்கள்”, சுவாரசியமே இல்லாத இரண்டாம் பகுதி எல்லாம் இவை அத்தனையையும் விரயப்படுத்திவிடுகின்றன.
நாடக நடிகர்களிடம் பெண்கள் மயங்குவது அன்று அபூர்வ நிகழ்ச்சி அல்லதான். இருந்தாலும் சித்தார்த்தும் ஜமீந்தார் பெண்ணாக நடிப்பவரும் நீ ஹீரோ, நான் ஹீரோயின், வா காதலிப்போம் என்கிற மாதிரிதான் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். சித்தார்த் ஜமீந்தார் மாளிகைக்கு சர்வசாதாரணமாக தினமும் இரவு வந்து போகிறார். காவலாள் இல்லை என்றாலும் வீட்டில் வேறு ஒருவருமேவா இருக்க மாட்டார்கள்? குடிப்பழக்கத்தால் ஐந்து வருஷம் ஆள் அட்ரசே இல்லாமல் இருந்த சித்தார்த் பத்து நாள் ராஜபார்ட் போட்டவுடன் குடியை மறந்து தொழிலிலும் தேசபக்தியிலும் மும்முரமாகிவிடுகிறார். என்னவோ கேப் துப்பாக்கி சுடுவது போல முப்பதுகளின் இன்ஸ்பெக்டர் விடாமல் சுட்டுக் கொண்டே இருக்கிறார். அந்தக் காலத் திரைப்படங்களில் சாவதற்கு முன்னால் முழ நீளம் வசனம் பேசுவார்கள். சித்தார்த்-பிரித்விராஜ் சம்வாதம் ஒன்று அப்படி நடக்கிறது. வசனம் அந்தக் காட்சியில் நன்றாக இருந்தாலும் முதுகில் குண்டு பாய்ந்த சித்தார்த் எப்படிய்யா இவ்வளவு தெளிவாக வசனம் பேசுகிறார் என்று யோசனை போகிறது. சங்கரதாஸ் ஸ்வாமிகளைத்தான் சிவதாச ஸ்வாமிகள் ஆக்கி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதுதான், அதற்காக ஒரு காட்சியில் பாத்திரத்தின் பெயரையே சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆக்கிவிட்டால் எப்படி? பொதுவாகத் திரைக்கதையில் பல ஓட்டைகள் தெரிகின்றன, அவை நிறைய உறுத்தவும் செய்கின்றன்.
மற்ற நடிகர்களில் வேதிகா ஸ்த்ரீ பார்ட் போட்டுப் பார்க்கும் காட்சியில் நன்றாக நடித்திருந்தார். நாசர் வழக்கம் போல நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா மைனாவில் நடித்த பாத்திரத்தை எப்போதுதான் தாண்டப் போகிறாரோ தெரியவில்லை, எல்லாப் படத்திலும் ஒரே பாத்திரத்தைத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் பொன்வண்ணனும் மன்சூர் அலி கானும் நிற்கிறார்கள்.
என்னால் வடிவு பாத்திரம் கே.பி. சுந்தராம்பாளையும் சிவதாச ஸ்வாமிகள் பாத்திரம் சங்கரதாஸ் ஸ்வாமிகளையும் மூலமாக வைத்து படைக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.
ஜெயமோகன் தனக்குப் பிடித்தமான ஆடிப்பிம்பம் கருவை பயன்படுத்தி இருக்கிறார். அதை இன்னும் கொஞ்சம் விரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வசனம் ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை. திரைக்கதை சரியாக இருந்தால்தானே வசனம் எல்லாம்? போர்வாளை பென்சில் சீவ பயன்படுத்தி இருக்கிறார் வசந்தபாலன்.
சுருக்கமாகச் சொன்னால் வசந்தபாலன் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் திரைப்படம் நன்றாக வந்திருக்கும். இப்போது ஏதோ முயற்சி செய்திருக்கிறார், அவ்வளவுதான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்