தமிழறிஞர் வரிசை – 2. ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நாட்டார் எழுதிய ‘வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி‘ என்ற புத்தகத்தை மட்டுமே படித்திருக்கிறேன். மு. ராகவையங்கார் எழுதிய ‘வேளிர் வரலாறு‘ என்ற புத்தகத்தில் அவர் தமிழகத்தின் வேளிர் மன்னர்கள் துவாரகையிலிருந்து குடியேறிய யாதவ வம்சாவளியினர் என்று வாதிடுகிறார். இந்தப் புத்தகம் அதை மறுக்கிறது. நடை பழைய பண்டித நடை. அதைத் தாண்டிப் படித்தால் நல்ல எதிர்வாதம் என்று தெரிகிறது.

சோழர் வரலாறு சங்ககால சோழர்களைப் பற்றி இலக்கிய மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. நக்கீரர் நல்ல தொகுப்பு. நாட்டார் சிறந்த அறிஞர், ஆனால் அவரது புத்தகங்களைப் படிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தமிழறிஞர் அறிமுகங்களைத் தொடர்கிறேன்..

ந.மு. வேங்கடசாமி நாட்டார்

பிறப்பு:12-4-1884, இறப்பு:28-03-1944

na_mu_venkatasami_naattarஇலக்கிய உலகில் இவருக்கிணையானவர் உளரோ என ஐயுறும் அளவுக்குத் தன் பணிகளால் தமிழை மிளிரச் செய்தவர். மகாகவி பாரதிக்கு சிலப்பதிகாரத்தில் ஒருமுறை ஐயம் ஏற்பட்டபோது தெளிவு கொள்ள அவர் தேர்ந்தெடுத்த நபர் இவரே. நீதி நூல்கள் முதற்கொண்டு சங்கபாடல்கள் வரை பல செய்யுள்களுக்கு உரை எழுதியுள்ளார். பண்டிதர். நாவலர் எனப் பட்டங்கள் பெற்றவர் நடுக்காவேரி முத்துசாமி வேங்கடசாமி நாட்டார்.

தஞ்சாவூரில் திருவையாறை அடுத்த நடுக்காவேரியில் பிறந்தவர். தந்தை வீ. முத்துசாமி நாட்டார். தாயார் தைலம்மாள். சிறு வயதிலேயே புலமைப் பித்து அதிகம் இவரை பீடித்துக் காணப்பட்டது. ஒரு முறை இவரது தந்தையாரை பார்க்க வந்த ஒரு அறிஞர் செய்யுள் ஒன்றை பிரிக்க முடியாமல் ஐயப்பட்டு நின்றபோது சிறுவனாக இருந்த நாட்டார் உடனடியாக அதனை உடைத்து அவ்வறிஞருக்கு பொருளை உணர்த்தினார்.

குடும்பச் சூழல் காரணமாகவும் வேளாணமை தொழில் காரண்மாகவும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த நாட்டார் தன் ஆவல் மிகுதியால் நன்னூல் இலக்கண நூலையும் சிற்றிலக்கியங்களையும் கற்றுத் தேறினார். பகல் முழுக்க வயலில் விவசாயமும் இரவு முழுக்க அறிவு விவசாயமுமாக இவரது நாட்கள் கழிந்தன. இந்நிலையில் அப்போது மதுரையில் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கிய வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் தமிழ் கல்வியில் பண்டிதர் தேர்ச்சி பெற மூன்று விதமாக படிப்புகளை வகுத்திருந்தார். அவை முறையே பிரவேச பண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் என்பவை. ஒவ்வொன்றூம் இரண்டாடாண்டுகள் படிக்க வேண்டியது. இப்படிப்பில் சேர்ந்து பண்டிதராக விரும்பிய நாட்டார் ஆறு ஆண்டு படிப்பை மூன்றே ஆண்டுகளில் படித்து முடித்து வள்ளல் பாண்டித்துரை அவர்களையே வியப்பில் ஆழ்த்தினார். நாட்டாரின் புலமையை உணர்ந்த பாண்டித்துரைத் தேவர் அவருக்கு தங்கத் தோடு அணிவித்து பெருமைப்படுத்தினார்.

நாட்டார் துவக்கத்தில் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியிலும், பிற்பாடு கோவை மைக்கேல் உயர்நிலைப் பள்ளியிலும் பணிபுரிந்தார். பிற்பாடு அண்ணாமலைப் பல்கலைகழக்த்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.

நாட்டார் அவர்கள் தொடர்ந்து பல இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதையும் அதற்காக அர்ப்பணித்துக்கொண்டார். மு.இராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு எனும் நூலைப் படித்து அதிலுள்ள தவறுகளை கண்டு மனம் குமைந்து அதற்கு மாற்றாக இன்னொரு வேளிர் வரலாற்றை (1915) எழுதி நூலாக கொண்டுவந்தார். அது மட்டுமல்லாமல் கள்ளர் சரித்திரம் (1923), மற்றும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கற்பும் மாண்பும் (1924), நக்கீரர் (1921), கபிலர் (1923) போன்ற ஆய்வு நூல்களையும் பின் நீதிநெறி நூல்களான ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, வெற்றி வேற்கை, இன்னாநாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது போன்றவற்றுக்கு தனித்தனியாக விளக்க உரைகள் எழுதினார்.

மேலும் இவற்றோடு நிற்காத இவரது தமிழ்க் காதல் அகநானூறு, மணிமேகலை,சிலப்பதிகாரம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்களுக்கும் உரை எழுதி தமிழுக்கு அள்ப்பரிய தொண்டினை செய்துள்ளார். தனியொருவராக இத்தனை நூல்களுக்கு உரை எழுதுதல் என்பது அத்தனை எளிதான காரியமன்று. அளப்பரிய காதலும் அதி தீவிர மொழி பற்றுமில்லாது தமிழுக்கு இத்தகைய அணிகலன்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இந்நூல்களை அச்சிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புகழகம் அட்டையின்மேல் மு.வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியது என அனைத்து நூல்களிலும் கொட்டை எழுத்தில் அச்சிட்டு விற்பனை செய்திருப்பது ஒன்றே மக்களிடம் அவரது நூல்களுக்கு இருந்த வரவேற்புக்கு சான்று.

இவரது தமிழ்ப்பணிக்கு பரிசாக சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் இவருக்கு நாவலரெனும் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கிபீடியா குறிப்பு