தமிழறிஞர் வரிசை – 3. பாண்டித்துரைத் தேவர்

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

பாண்டித்துரைத் தேவர்

பிறப்பு: 21-03- 1867, இறப்பு: 02-12-1911

panditthurai_thevar

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலேயே தமிழ் அழிந்துபட்டு வருவதைக் கண்டு மனம் கலங்கி தன் முயற்சியால் நான்காம் தமிழ் சங்கத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். தமிழ்த்தொண்டுக்கு அறிவு மட்டுமல்ல பொருளும் தேவை என்பதை உணர்ந்து அதற்காக வாரி வழங்கிய அருட்கொடையாளர், பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்.

மதுரையை அடுத்த பாலவநத்தம் எனும் ஊரில் பிறந்த பாண்டித்துரைத் தேவர் அவர்களின் தந்தை பொன்னுசாமித் தேவர், தாய் பர்வதவர்த்தினி. இருவருக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் பாண்டித்துரைத் தேவர். சிறு வயதில் தமிழறிஞர் மு. ராகவையங்காரின் தகப்பனாரான சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் கமபராமாயணத்தை முழுவதுமாக கற்றவர், பின் மதுரை வித்துவான் ராமசாமி பிள்ளையவர்களிடம் பழந்தமிழ் நூல்களையும், ஸ்ரீ பழனி குமார தம்பிரான் அவர்களிடம் சைவ சித்தாந்த நூல்களையும் கற்றார்.

ஒரு சமயம் வள்ளல் சொற்பொழிவாற்ற மதுரைக்கு வந்தபோது கமபராமாயணம் மற்றும் திருக்குறள் நூல்களை வாங்கி வரச் சொல்ல, உதவியாளர்கள் எங்கு தேடியும் அந்நூல்கள் அவர்களுக்குக் கிட்டவில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கா இந்த நிலை என மனம் வெதும்பிய பாண்டித்துரைத் தேவர் அக்கணமே தமிழ் வளர்க்க முடிவெடுத்தார். 14-9-1901-ஆம் நாளில் பகல் 1.30 மணிக்கு மேல் மதுரை  சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் வைத்து நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினார். அதே நாளில் செந்தமிழ் கலாசாலை, சேதுபதி புத்தகசாலை, நூலாராய்ச்சி சாலை போன்றவற்றை அடுத்தடுத்த கட்ட்டிடங்களில் நிறுவினார். பல தமிழறிஞர்கள் நிர்வாக பொறுப்புகளில் ஈடுபடுத்தப்ப்ட்டனர். தமிழ் பயிற்றுவித்து மாணாக்கர்களுக்கு பாராட்டும் பத்திரமும் பரிசும் வழங்க முடிவெடுத்து செயல்திட்டம் உடனடி அமுலுக்கு வந்தது. சோழவந்தான் அரசன் சண்முகனார், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் தமிழகமெங்குமிருந்தும் இந்த நான்காம் தமிழ்ச் சங்க பள்ளிக்கூடத்துக்கு வந்து சொற்பொழிவாற்றினர். இதற்காகவே செந்தமிழ் எனும் இதழை துவக்கி அதில் பலரையும் எழுத வைத்தார்.

அது போல தமிழறிஞர்கள் நலிவுற்றபோது பாண்டித்துரைத் தேவரின் உதவிக் கரங்கள் சடுதியில் நீண்டு அவர்களை தாங்கிக் கொண்டது. உ.வே.சாமிநாதய்யரின் அருந்தொண்டை அறிந்து அவரை அழைத்து மணிமேகலை பிரசுரிக்க தேவையான பொருளுதவிகளை செய்தார். அதே போல சிங்காரவேலு முதலியார் அவர்கள் தொகுத்த அபிதான சிந்தாமணி எனும் நூல் உருவாக காரணமாகவும் இருந்தவர் இவரே.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பல் வாங்குவதற்காக தனியொருவராக ஒன்றரை லட்சம் தந்தவர். (விக்கிபீடியா ஒரு லட்சம் என்கிறது.)

ஒரு முறை அரைகுறையாக தமிழ் கற்ற ஆங்கிலப் புலவர் ஸ்காட் என்பவர் திருக்குறளில் எதுகை மோனை பொருந்தவில்லை என “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”  எனும்  முதல் குறளை “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி சிகர முதற்றே உலகு”  எனத் திருத்தி சுகாத்தியர் திருக்குறள் என அச்சிட இதனை அறிந்த தமிழறிஞர் அரசன் சண்முகனாருக்கு உள்ளம் கொந்தளித்தது. இதை பாண்டித்துரைத்தேவரிடம் சொல்ல அவரை சமாதானம் செய்த பாண்டித்துரை தேவரவர்கள் ஸ்காட் வெளியிட்ட அந்த அனைத்து நூல்களையும் மொத்தமாக காசு கொடுத்து வாங்கி குழியிலிட்டு எரித்தார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் பக்கம்