திரிபாதி இந்த சீரிஸில் மூன்று புத்தகங்களை – Immortals of Meluha (2010), Secret of Nagas (2011), Oath of the Vayuputras (2013) – எழுதி இருக்கிறார். இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றனவாம். ஐம்பது கோடி டர்ன்ஓவராம். இது வரை வெளிவந்த எல்லா தமிழ் புத்தகங்களிள் மொத்த விற்பனைத் தொகை ஐம்பது கோடி இருக்குமா என்று தெரியவில்லை.
புத்தகங்களின் களம் இந்தியக் கடவுள்கள், தொன்மங்கள். தட்சனின் மகள் சதி (தாட்சாயணி) சிவனை மணந்தது, சிவனுக்கும் தட்சனுக்கும் பிணக்கு ஏற்பட்டது, சதி தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கே உயிர் நீத்தது, சிவ-பார்வதியின் பிள்ளைகளாக பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது, சிவன் திரிபுரத்தை எரித்தது, முருகன் சூரனை வென்று தேவ சேனாதிபதி ஆனது எல்லாம் நம் தொன்மங்கள். அவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒரு pulp fiction-ஐ உருவாக்கி இருக்கிறார். பிருகு முனிவர்தான் வில்லன். பரசுராமரும் பகீரதனும் பிருஹஸ்பதியும் சிவனின் தோழர்கள்-பக்தர்கள். அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.
புத்தகத்தின் பலம் அவரது கற்பனை வளம். பிள்ளையாருக்கு யானை முகம் எப்படி வந்தது? காளிக்கு பல கைகள் எப்படி வந்தது? சரஸ்வதி நதி மறைந்தது எப்படி? இவற்றுக்கெல்லாம் சில சுவாரசியமான hypothesis-களை முன்வைக்கிறார். குறிப்பாக பிள்ளையாரின் யானை முகத்துக்கான காரணமாக அவர் சொல்வது நன்றாக இருக்கிறது.
புத்தகத்தின் பலவீனங்களோ பல. ஏறக்குறைய இன்றைய அறிவியல் அன்றே இருப்பதாக வைத்துக் கொள்கிறார். சரி இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அன்றைய மனிதர்களும் கிலோமீட்டர் மாதிரி இன்றைய அளவைகளைப் பயன்படுத்தினால் எப்படி? இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இன்றைய மாநிலப் பிரிவுகள் (ராஜஸ்தான், குஜராத் என்று அப்போதே பேசுகிறார்கள். ராஜஸ்தான் என்ற அமைப்பு உருவானதே 1950-களில்தான்.), இன்றைய மொழியே கதை மாந்தர்களால் பயன்படுத்தப்படுகிறது.
திரிபாதி இலக்கியம் படைக்கவில்லை. ஏறக்குறைய மார்வெல் காமிக்ஸ் போன்ற கதை அமைப்பை முன் வைக்கிறார். பதின்ம வயதினர்கள் ரசிக்கலாம். அவர்களுக்கு நம் தொன்மங்கள் பற்றி கொஞ்சம் அறிமுகம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு இது டைம் பாஸ்.
செகந்தராபாதில் தங்கி இருந்த காலங்களில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அங்கே வருஷாவருஷம் புத்தகக் கண்காட்சி நடத்துவார். அவருக்கு கூடமாட உதவி செய்யலாம் என்று தோன்றவே தோன்றாதது என் வாழ்க்கையின் நீங்காத வருத்தங்களில் ஒன்று. அங்கேதான் முதன்முதலாக “க்ரியா” பதிப்பகம் கொண்டு வந்த நேர்த்தியான புத்தகங்களைப் பார்த்தேன்.
அது வரையில் எனக்குத் தெரிந்த ஒரே பதிப்பகம் வானதி பதிப்பகம்தான். பத்து முறை புரட்டினால் பைண்டிங் பிரிந்து வந்துவிடும். அட்டை போட்டு, முடிந்தால் நாமே தனியாக பைண்ட செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில பேப்பர்பாக் புத்தகங்களின் கட்டுமானம் கூட இருக்காது. ஆனால் மற்ற பதிப்பகங்களோடு ஒப்பிட்டால் அவர்கள் வெகு உயரத்தில் இருந்தார்கள்.
“க்ரியா” பதிப்பகம் என் போன்ற பணம் அதிகமில்லாத இளைஞர்களும் வாங்கக் கூடிய விலையில் நல்ல புத்தகங்களை தரமான கட்டுமானத்தில் கொண்டு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த “தற்காலத் தமிழகராதி” இன்னும் பேசப்படுகிறது. க்ரியா புத்தகம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். கண்காட்சியில் வாங்கிய பிச்சமூர்த்தி கவிதைகள் ரொம்ப நாள் என்னிடம் இருந்தது. இரவல் வாங்கிப் போய்த் தொலைத்துவிட்ட என் அத்தை மகன் ஒழிக!
சரி மலரும் நினைவுகள் போதும் என்று நினைக்கிறேன். க்ரியா ராமகிருஷ்ணனின் பேட்டி ஒன்று இங்கே, கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
“அஞ்ஞாடி” நாவலுக்காக பூமணிக்குசாஹித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது. நாஞ்சில், ஜோ டி க்ரூஸ், பூமணி – பரவாயில்லையே, நல்ல எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்து தங்களை உயர்த்திக் கொண்டுள்ளார்கள். (இந்த முறை பரிந்துரைத்த குழுவில் இருந்தவர்கள் சிவசங்கரி, புவியரசு, ஈரோடு தமிழன்பன்.)
என்று “வெக்கை” நாவலைப் படித்தேனோ அன்று முதலே பூமணி என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்தான். இன்றும் “வெக்கை”யைத்தான் நான் அவரது சிறந்த நாவலாக மதிப்பிடுகிறேன். – “பிறகு” நாவலை விட.
இது வரையில் தகுதி உள்ளவர்களுக்கே கொடுக்கப்பட்டு வரும் விஷ்ணுபுரம் விருது அவருக்கு 2012-ஆம் வருஷம் வழங்கப்பட்டிருக்கிறது.
“அஞ்ஞாடி”யை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நான் நல்ல வாசகர்கள் என்று எண்ணும் சிலர் அதைக் குறையுள்ள நாவலாகவே கருதுகிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறேன்.
என் கண்ணில் சாஹித்ய அகாடமி விருது, ஞானபீட விருது ஆகியவை முக்கியமானவை. நல்ல தமிழ் எழுத்தாளர்களை பிற மாநிலத்தவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வார்கள்? எனக்குத் தெரிந்த பிற இந்திய மொழி எழுத்தாளர்கள் அனேகமாக இப்படி ஏதாவது விருது பெற்றவர்களே. அதனால் பூமணி போன்றவர்கள் விருது பெறும்போது நான் உண்மையிலேயே பூரிக்கிறேன். அகிலனுக்குஞானபீடம் என்றால் தலை குனிய வேண்டியிருக்கிறது.
ஆயிஷா புகழ் இரா. நடராசனுக்கு “விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் புத்தகத்துக்காக பால புரஸ்கார் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. யுவ புரஸ்கார் விருது ஆர். அபிலாஷுக்கு “கால்கள்” என்ற புத்தகத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் இமையம் இந்தப் புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். மொழிபெயர்ப்புக்கான விருது இறையடியானுக்கு – கன்னடத்தில் சங்கர் மோகாஷி புனேகர் எழுதிய அவதேஸ்வரி என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் – கிடைத்திருக்கிறது. அவதேஸ்வரியும் சாஹித்ய அகாடமி விருது பெற்ற நாவலே. மலையாளத்தில் திருவாசகத்தை மொழிபெயர்த்த உள்ளூர் எம். பரமேஸ்வரனுக்கும், அப்துல் கலாமின் “அக்னிச் சிறகுகள்” புத்தகத்தை மணிபுரியில் மொழிபெயர்த்த இபோசா சொய்பாமுக்கும் மொழிபெயர்ப்பு விருதுகள் கிடைத்திருக்கின்றன.
கீழே வருவது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அறிவிப்பு. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்றாலும் எனக்கே ஞானக்கூத்தனின் குசும்புக் கவிதைகள் புரிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
2014ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28-ம் தேதி கோவையில் நிகழ இருக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசக நண்பர்களால் 2009-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பில் உலகெங்கிலும் உள்ள நவீனத் தமிழலக்கிய ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சிந்தனையாளர்கள், இசைக்கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர் என பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். விருது வழங்குதல், கருத்தரங்குகள், வாசிப்பரங்கம், காவிய முகாம்கள், குறிப்பிடத்தக்க ஆளுமைகளுக்கான இணையதளங்களை நடத்துதல், மொழிபெயர்ப்புகள் ஆகிய இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறது.
விஷ்ணுபுரம் விருது
தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.1,00,000/- (ஒரு லட்சம்) ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் கோயம்புத்தூரில் நடைபெறும்.
இதுவரை விருது பெற்றுள்ளவர்கள்
2010-ஆம் ஆண்டு – ஆ. மாதவன்
2011-ஆம் ஆண்டு – பூமணி
2012-ஆம் ஆண்டு – தேவதேவன்
2013-ஆம் ஆண்டு – தெளிவத்தை ஜோசப் (இலங்கை தமிழ் எழுத்தாளர்)
ஞானக்கூத்தனுக்கு விருது
2014-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். ம.பொ.சி.யின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். எழுபதுகளில் வெளிவந்த இவரது அன்று வேறு கிழமை என்ற கவிதைத்தொகுதி ஒரு பெரிய அலையை கிளப்பியது. கூரிய அங்கதக் கவிதைகள் மூலம் தமிழ்க்கவிதையில் புதியபாதையை திறந்தார். சாரல் விருது, விளக்கு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஓப்பன் ரீடிங் ரூம்ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார், எனக்கு ஒரிஜினல் தமிழ்க் குறிப்புகளை அனுப்பி இருக்கிறார்.
வி.கனகசபை பிள்ளை
பிறப்பு:25-05-1855, இறப்பு:21-02-1906
பத்துப்பாட்டு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மூல ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து உ.வே.சா அவர்களின் அச்சுப்பணிக்கு கொடுத்துதவியவர். கலிங்கத்துப்பரணி, களவழி நாற்பது, விக்கிரம சோழன் உலா போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர், விஸ்வநாதன் கனகசபை பிள்ளை.
யாழ்பாணத்தில் மல்லாகம் எனும் ஊர். விரிந்த மார்பைக் கொண்ட மல்லர்கள் நிறைந்த ஊராக இருந்த காரணத்தால் அவ்வூருக்கு அப்பெயர் வர காரணம் ஆயிற்று. அங்கு வசித்து வந்தவர் விஸ்வநாதப் பிள்ளை எனும் தமிழ் பண்டிதர். அக்காலத்தில் பெர்சிவல் மற்றும் வின்ஸ்லோ ஆகிய பாதிரிமார்கள் தமிழ் அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளையை சென்னைக்கு படிக்க அனுப்பிய போது இவரையும் உடன் அனுப்பி வைத்தனர். அவ்வாறாக இங்கு வந்த விசுவநாதப் பிள்ளை பி.ஏ படித்தபின் இங்கேயே அரசு உத்தியோகமும் கிடைக்கப் பெற்று சென்னை கோமளேசுவரன் பேட்டையில் நிரந்தரமாக வசிக்க துவங்கினார். அவரது மகன் கனகசபை பிள்ளை. சிறு வயது முதல் தந்தையாரிடமே தமிழ் கற்று வளர்ந்த கனகசபை பின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தனது பி.ஏ. படிப்பையும் தொடர்ந்து சட்டப் படிப்பையும் முடித்தார். மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
1876ல் செல்லம்மாள் எனும் உறவுக்காரப் பெண்ணை மனைவியாக்கிக் கொண்டார். அக்காலத்தில் அவருக்கு இன்னொரு உறவும் கிட்டியது. அவர் சுப்ரமணிய ஐயர். அவர் மூலம் தமிழ் ஆர்வம் மீண்டும் கிளைத்தது. பழைய ஓலைச்சுவடிகளில் காணப்படும் பழைய இலக்கியங்களை தேடி ஓடலானார். இப்பணிக்கு அவர் பார்த்த வழக்கறிஞர் தொழில் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தபால்துறையில் அதிகாரியாகப் பதவியில் சேர்ந்தார். (முதல் வழக்கை வென்ற பிறகு தோற்றவர்களும் அவர்களது வக்கீலும் இவரை ஏசியதைப் பொறுக்க முடியாமல் வக்கீல் தொழிலை விட்டுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.) இப்பதவியில் பணிபுரிந்தபடி தன் தமிழ் சேவையை உற்சாகமாகத் துவங்கினார்.
ஊர் ஊராக ஏட்டு சுவடிகளை தேடி அலைந்தார். கிடைத்த சுவடிகளை எழுத்தில் படிவமாக்குவதெற்கென்றே தனியாக அப்பாவுப் பிள்ளை என்பவரை பணியில் அமர்த்திக்கொண்டார். கிட்டதட்ட இருபது வருடங்கள் அப்பாவு கனகசபை அவர்களுடனிருந்து சுவடிகளை பிரதி எடுக்கும் பெரும்பணி செய்தார்.
இப்படி தான் தேடி கண்டெடுத்த அரிய பொக்கிஷங்களை பிறர் கேட்டால் வேறு யாராக இருந்தாலும் தரத் தயங்குவர். ஆனால் கனகசபை பிள்ளை தன் முன் உ.வே.சா. அவர்கள் வந்து தான் சேகரித்த அரிய பொக்கிஷங்களை தன்னிடம் தருமாறு கேட்டதும் மறு பேச்சில்லாமல் எடுத்து கொடுத்தார். அன்று மட்டும் அவர் அப்படி கொடுத்திராவிட்டால் இன்று நமக்கு சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் புறநானூறும் கிடைத்திருக்குமா என்பது ஐயப்பாடே.
தன் 29ம் வயதில் தொடர்ந்து தன் தந்தை தாய் இரு குழந்தைகள் என அடுத்தடுத்து மரணங்களை சந்தித்த போதும் மனம் தளராமல் தொடர்ந்து தமிழ்ப் பணியில் ஈடுபட்டார். ஆங்கிலத்தில் புலமை மிக்க கனகசபை அவர்கள் Madras Review எனும் இதழில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடராக எழுதினார். தமிழர் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம். வாழ்க்கை முறை குறித்த மிக முக்கியமான ஆவணமாக அன்றைய காலத்தில் ஏற்கப்பட்டு பலரும் அவரை பாராட்டினர். இந்தக் கட்டுரைகள் பின்னாளில் The Tamils Eighteen Hundred Years Ago என்று தொகுக்கப்பட்டன. இன்றும் அத்தொகுப்பு தன் பெருமை குன்றாமல் தமிழர்தம் வரலாற்றுக்கு வளம் சேர்ந்த்து வருகிறது.
1905ல் மதுரைத் தமிழ் சங்கம் அவர்களது மாநாட்டுக்கு இவ்வறிஞரை தலைமை தாங்க அழைப்பு விடுத்து கவுரவித்தது.
பாரதியார் எழுதிய சிறுகதை ஒன்று – ஆறில் ஒரு பங்கு – பழைய சொல்வனம் இதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. உலக மகா சிறுகதைகளில் வராதுதான், இருந்தாலும் படிக்கக் கூடிய சிறுகதைதான். நேரடியாகச் சொல்லப்படும், நுணுக்கங்கள் இல்லாத முன்னோடி சிறுகதை. சரளமான, ரசிக்கும்படியான நடை. கல்கியின் எந்தச் சிறுகதையுடனும் ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்கிறது. நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட சிறுகதை என்பது இதற்கு ஒரு ஸ்பெஷல் கவர்ச்சியைத் தருகிறது.
இறந்துபோன காதலி உயிருடன் இருக்கலாம் என்று நாயகன் அறியும்போது அவன் உணர்ச்சிகளை
ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?
என்று சித்தரிக்கிறார். பிரமாதம்!
சிறுகதையில் நான் கவனித்த இரு விஷயங்கள்:
இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்
என்று எழுதுகிறார். பள்ளர், பறையர் எல்லோரும் பஞ்சமர் அல்ல, சூத்திரர் கூட அல்ல, வைசியர்! கதையிலும் இதை விளக்குகிறார் –
தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும்.
கதையின் நடுவில் ஒரு வாக்கியம் –
நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும்.
காஞ்சி சங்கர மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம் அல்ல, சிருங்கேரியின் துணை மடம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காலத்தில் தனி மடமாகப் பரிணமித்தது, ஆனாலும் இப்போது அந்த மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம்தான் என்று propaganda நடக்கிறது என்பதை கூட்டாஞ்சோறு பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சந்திரசேகரேந்திர சரஸ்வதி தலையெடுப்பதற்கு முன்னால் வாழ்ந்த பாரதியும் சங்கர மடத்துக்கு உதாரணமாய் காஞ்சி மடத்தைக் குறிப்பிடாமல் சிருங்கேரி மடத்தைக் குறிப்பிடுவது – Note the point, your honor!
சுந்தரம் பிள்ளையைப் பற்றிய பதிவில் மனோன்மணீயம் நல்ல நாடகம் இல்லை, முன்னோடி நாடகம் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தேன். ஏதோ ஒரு ஆர்வத்தால் நாடகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படித்ததெல்லாம் உரைநடை கதைச்சுருக்கமே, ஒரிஜினல் கவிதை இல்லை என்று தெரிந்தது. நல்ல நாடகம் இல்லை என்று சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், என் எண்ணம் மாறிவிட்டது.
கவிதையின் கற்பூர வாசனை எனக்குத் தெரிவதில்லைதான். ஆனால் தமிழின் ஆசிரியப்பா மாதிரி சிறந்த சந்தம் உள்ள ஒரு வடிவம் அபூர்வம். அசை பற்றியெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை. ‘தானனா தானா தானனா தானா’ என்ற ஆசிரியப்பா வடிவம் நேர்-நிரை, நேர்-நிரை, நேர்-நிரை, நேர்-நிரை என்ற அமைப்பில் இருப்பது அற்புதமான சந்தம். இந்த சந்தத்திலேயே 100, 120 பக்கத்துக்கு எழுதி இருக்கிறார், அபாரம்! ஒரு முறையாவது வாய்விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும்.
புதுக்கவிதை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால் இந்த சந்தத்தை, வெண்பாவின் வடிவ நேர்த்தியை புதுக்கவிதை மறக்கடித்துவிட்டதே என்ற வருத்தத்தை மனோன்மணீயம் ஏற்படுத்திவிட்டது. (எனக்கு கலிப்பா, வஞ்சிப்பா எல்லாம் பள்ளியில் படிக்கும்போதே ததிங்கிணத்தோம்.)
சில வரிகள் கீழே.
ஓவியந்தொழில் வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந்தொடத் தொடத் துலங்குதல் போல
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவு தோன்றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதாய் உறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே!
ஸ்டீரியோடைப் பாத்திரங்கள்தான். ஆனால் கச்சிதமாக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார். வடிவ கச்சிதத்துக்காகவே படிக்கலாம், கவிதையாக எழுதி இருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது. படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
திரைப்படத்தையும் மீண்டும் ஒரு முறை பரிந்துரைக்கிறேன். சுந்தரம் பிள்ளை பதிவிலிருந்து:
மனோன்மணீயம் மனோன்மணி என்ற பேரில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்து திரைப்படமாகவும் வந்தது. முழுத் திரைப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது. கே.வி. மஹாதேவன் இசையமைத்த முதல் படம் இதுதானாம். சின்னப்பா நல்ல குண்டாக இருந்தாலும் முதலில் வரும் கத்திச் சண்டை பயிற்சிக் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். வசனமும் நன்றாக இருக்கும், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
மனோன்மணீயம் எனக்குப் பிடித்த நாடகங்களில் ஒன்று. ஸ்டீரியோடைப் பாத்திரங்கள் என்றாலும் கச்சிதமாக எழுதப்பட்ட நாடகம். கவிதை என்றால் ஓடும் நானே அது ஆசிரியப்பா வடிவில் எழுதப்பட்டிருக்கிறது என்பதால்தான் அதை ரசிக்கிறேன்.
தமிழகத்தில் அங்கங்கே ராமாயணம் ஆரியர்கள் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து திராவிட அரசர்களான ராவணனை, வாலியை வென்று தங்கள் ஆதிக்கத்தை, ஜாதி முறையை நிறுவிய வரலாற்று நிகழ்ச்சி காவியமாக எழுதப்பட்டது என்று ஒரு தியரியை பார்க்கலாம். அதற்கு முன் திராவிடத்தில் ஜாதியே கிடையாது, ராமன் காலத்தில்தான் அது புகுத்தப்பட்டது என்பார்கள். அதை முதலில் சொன்னது பிள்ளைவாள்தானாம். குற்றாலத்தில் நண்பர்கள் நடுவே தானும் ராமபக்தன்தான், ஆனால் ராமாயணத்தின் உள்ளுறை கருத்து இதுவே என்று ஒரு முறை சொன்னாராம். ஆனால் அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு முன் இறந்துவிட்டாராம். அங்கே இருந்த வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் அதை பின்னாளில் பதித்திருக்கிறார். அப்புறம் அந்த தியரி அப்படியே வளர்ந்திருக்கிறது…
ஓப்பன் ரீடிங் ரூம்ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார், எனக்கு ஒரிஜினல் தமிழ்க் குறிப்புகளை அனுப்பி இருக்கிறார்.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
பிறப்பு:05-04-1855, இறப்பு:26-04-1897
“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” எனத் துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ் நல்லுலகிற்காக எழுதியவர். அப்பாடல் இடம் பெறும் மனோன்மணீயம் (1891) எனும் நாடக நூலின் ஆசிரியர். திராவிட ஆராய்ச்சித் தந்தை என்றும் எம்.ஏ. சுந்தரம் பிள்ளை என்றும் அழைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.
திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆலப்புழை எனும் ஊரில் பிறந்தவர். தந்தை பெருமாள் பிள்ளை, தாயார் மாடத்தி அம்மாள். ஆலப்புழையில் தொடக்கக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயின்ற பின் நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றவர் பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டப் படிப்பு படித்தார். 1876-இல் இளங்கலை படிப்பு முடிந்ததும், இவரது அறிவாற்றல் கண்டு கல்லூரி முதல்வர் அங்கேயே பணியாற்ற அழைக்க அவ்வழைப்பை ஏற்று அக்கல்லூரியில் ஆசிரியப் பணியும் செய்து கொண்டு உடன் அங்கேயே முதுகலையும் கற்று தேறினார். அப்பகுதியின் முதல் முதுகலை பட்டம் பெற்றவராதலால் அனைவரும் இவரை எம்.ஏ என்ற அடைமொழி சேர்த்து எம்.ஏ. சுந்தரம் பிள்ளை என்றே அழைக்க துவங்கினர்.
மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார்.
பிற்பாடு நெல்லைக் கல்லூரியிலும் பணியாற்றிய சுந்தரம் பிள்ளை வரலாற்றுப் பாடத் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து வரலாற்று ஆய்வுகளின்பால் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. கல்வெட்டறிஞர் கோபிநாத ராவுடன் இணைந்து கலவெட்டுகளைத் தேடிச் சென்றார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். தன் ஆய்வுகளைப் பயன்படுத்தி திருவாங்கூர் வரலாற்றையும் எழுதினார். திருவிதாங்கூர் மன்னர்களின் காலம், முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894), ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896), திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897) என்ற புத்த்கங்களை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து தமிழ் வரலாற்றை ஆய்வு செய்த சுந்தரம் பிள்ளை இத்தனை பாரம்பரரியம் மிக்க தமிழ் மொழியில் ஆங்கில மொழியில் உள்ளது போல நாடகமாக்கங்கள் இல்லையே என மனக்குறைபட்டு அக்குறை நீங்க தானே நாடகம் ஒன்றையும் எழுத துவங்கினார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் “பரமாத்துவித” என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தான் கற்ற பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் (1891) நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இவரது தமிழ்ப்பற்று, வரலாற்று ஆர்வம், தத்துவ நாட்டம் அனைத்தும் இணைந்து மனோன்மணீயம் நாடகத்தில் வெளிப்படுகின்றன.
குறிப்பாக தமிழ் மீதான இவரது பற்று நூலின் முதல் பாடலாக நீராரும் கடலுடுத்த எனத் துவங்கும் பாடலில் வெளிப்பட்டது. 1970ல் அப்போது தமிழக ஆட்சி பொறுப்பில் இருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சி காலத்தில்தான் இப்பாடல் தமிழகத்தின் பொது வாழ்த்துப் பாடலாக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மனோன்மணீயம் தவிர சாத்திர சங்கிரகம், சிவகாமியின் சபதம், ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளியெழுச்சி போன்ற நூல்களையும், நூற்றொகை விளக்கம் (1885, 1888), திருவிதாங்கூர் மன்னர்களின் காலம், நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு, பத்துப்பாட்டு (1891), திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி (1894), முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894), ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896), திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897) போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளியிட்டார். ஜீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892), மரங்களின் வளர்ச்சி (1892), புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892) ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.
1877-இல் சிவகாமி அம்மாளை மணந்தார். இவருடைய மகன் நடராஜப் பிள்ளை இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, தனது 34வது வயதினில் மகாராஜா-சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராஜப் பிள்ளை தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார். நடராஜப் பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
தமிழுக்கு தொண்டு செய்வோர் இரண்டு கடமைகளை மேற்கொள்ள வேண்டும், ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டும், இரண்டு புதிய துறைகளில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ள சுந்தரம் பிள்ளை சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட குழுவில் இருந்து தமிழ் வரலாறு, தத்துவம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கல்வித் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்.
சைவத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுந்தரனார் தனக்கு தத்துவம் பயிற்றுவித்த பேராசிரியர் ஹார்வி பெயரில் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டைக் கட்டி அந்த இடத்துக்கே ஹார்விபுரம் எனப் பெயர் உண்டாக்கித் தந்தார்.
ஆன்மிகத்தின் மேல் இவருக்கிருந்த நாட்டம் காரண்மாக பல துறவிகள் இவரை வந்து சந்தித்து அளவளாவியுள்ளனர். அவர்களுள் விவேகானந்தரும் ஒருவர். இவரிடம் படித்தவர்களில் முக்கியமானவர் மறைமலை அடிகள்.
ஆர்வியின் குறிப்பு: நீராரும் கடலுடுத்த பாடலை எழுதியவர், மனோன்மணீயம் என்ற நாடகத்தை எழுதியவர் என்பதுதான் இதற்கு முன் இவரைப் பற்றித் தெரியும். ஆனால் நல்ல பாய்ஸ் நாடகமாக உருவாகக் கூடிய படைப்பு. மனோன்மணீயம் லிட்டன் பிரபு என்பவரால் எழுதப்பட்ட Secret Way என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது. யார் இந்த லிட்டன் என்றே தெரியவில்லை. எட்வர்ட் புல்வர்-லிட்டனோ?
என்னைப் பொறுத்த வரையில் மனோன்மணீயம் நல்ல நாடகம் இல்லை, முன்னோடி முயற்சி மட்டுமே. (என் எண்ணம் மாறிவிட்டது) புத்தகத்தை இங்கே படிக்கலாம். நூற்றொகை விளக்கம் புத்தகத்தைப் பற்றிப் பார்த்தால் கலைக் களஞ்சியத்துக்கு முன்னோடியாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.
மனோன்மணீயம் மனோன்மணி என்ற பேரில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்து திரைப்படமாகவும் வந்தது. முழுத் திரைப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது. கே.வி. மஹாதேவன் இசையமைத்த முதல் படம் இதுதானாம். சின்னப்பா நல்ல குண்டாக இருந்தாலும் முதலில் வரும் கத்திச் சண்டை பயிற்சிக் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். வசனமும் நன்றாக இருக்கும், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
ஓப்பன் ரீடிங் ரூம்ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பாரதியாரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். பண்டித நடை. சிறந்த தமிழறிஞர் என்பது எனக்கே புரிகிறது, ஆனால் இவற்றைப் படிக்கவே தமிழ் இலக்கியத்தில் கொஞ்சம் பரிச்சயம் இருக்க வேண்டும்.
நாவலர் சோமசுந்தர பாரதியார்
பிறப்பு: 27-07-1879, இறப்பு: 14-09 1959
இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர் என போற்றுமளவிற்கு தன் இலக்கிய நோக்கிலும் ஆய்விலும் சமரசமற்று தெள்ளியராக செயல்பட்டவர்.பெரும் பணம் கொழித்த வழக்கறிஞர் தொழிலை துறந்து தமிழுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். மகாகவி பாரதியின் நண்பர். பாரதியின் பாடல்களை அவற்றின் எளிமை காரணமாக பண்டிதர்கள் புறக்கணித்தபோது அதனை மக்களிடத்தே கொண்டு சென்ற மகோன்னதர். நாவலர் என அன்புடன் அழைக்கப்பட்டவர் சோமசுந்தர பாரதியார்.
நெல்லை சீமையின் எட்டையபுரத்தில் பிறந்தவர். தந்தை சுப்ரமணிய நாயக்கர், தாயார் முத்தம்மாள். சுப்ரமணிய நாயக்கர் அக்காலத்தில் எட்டையபுரம் அரண்மனையில் மன்னர் முத்துசாமியின் அனபுக்கு பாத்திரமாக இருந்தவராதலால் அப்போதைய அரசவைக் கவிஞரான சங்கர சாஸ்திரியாரிடம் மகன் சோமசுந்தரனுக்கு தமிழ் வடமொழி ஆகிய இரண்டையும் பயிற்றுவித்தார். கல்வியுடன் கவிபாடும் ஆற்றலும் கைவரப் பெற்றார். இக்காலத்தில்தான் பிற்காலங்களில் மகாகவியென அறியப்பட்ட சுப்பிரமணிய பாரதியும் சிறுவனாக அரண்மனைக்குள் வந்தார். சுப்ரமணியனும் சோமசுந்தரனும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். அவர்களது நட்பை தமிழ் தாலாட்டியது.
ஒரு நாள் அவைக்கு வந்த யாழ்ப்பாணத்துப் புலவர் இருவருக்கும், ஈற்றடி ஒன்றை தந்து பாடல் புனையுமாறு பணிக்க அவர்களது பாடலைக் கண்டு வியந்த புலவர் அப்போதே இருவருக்கும் பாரதி என பட்டம் தந்தார். அது முதல் சோமுவுக்கும் சுப்ரமணியனுக்கும் பின்னால் பாரதி என்ற பட்டம் சேர்ந்துகொண்டது. இரண்டு பாரதிகளும் இலக்கியத்திலும், விடுதலை தாகத்திலுமாக இரண்டு சளைக்காத தமிழ் சூரியன்களாக பின்னாளில் தழைப்பார்கள் என்பதை அப்போது அந்த யாழ்பாணத்து புலவர் யோசித்திருந்திருக்க மாட்டார்.
பின் எட்டையபுரத்தில் துவக்க கல்வியும், நெல்லை சர்ச் மிஷன் பள்ளியில் உயர்நிலைகல்வியும் கற்று, சென்னை கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மாணவராகச் சேர்ந்தார். அங்கு மறைமலை அடிகள், மற்றும் பரிதிமாற்கலைஞர் ஆகியோரின் நிழல் மாணவரான இவர் மேல் விழுந்ததன் மூலம் தமிழின்பால் அபாரக் காதல்கொண்டார்.
பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்று அதிலும் தேர்ச்சியுற்று தூத்துக்குடியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த காலத்தில்தான் இவருக்கு வ.உ.சியின் நட்பு கிடைத்தது. அதன்பின் அவரது வழிகாட்டுதலின்படி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
தமிழ் இலக்கியத்தில் நுண்மாண் நுழைபுலமிக்க சோமசுந்தரர் பல ஆய்வு நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். மாரி வாயில் (1936), மங்கலக்குறிச்சி பொங்கல் நிகழ்ச்சி (1947) என்று செய்யுள் நூல்கள், தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926), திருவள்ளுவர் (1929), தொல்காப்பியப் பொருட்படலம் புதிய உரை (1942), பழந்தமிழ் நாடு (1955), நற்றமிழ் (1957), சேரர் தாயமுறை (1960), நான் கண்ட சுப்பிரமணிய பாரதி, தமிழும் தமிழரும், சேரர் பேரூர், அழகு போன்ற ஆய்வு நூல்கள் அவரது ஆளுமையை நமக்கு பறைசாற்றுகின்றன. இவற்றுள் தொல்காப்பியப் பொருட்படலத்தின் விளக்கக் கட்டுரைகள் அவரது மறைவுக்குப் பிறகு மதுரை சாம்பசிவனாரால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று தன் தாய்மொழிப் பற்றை வெளிப்படுத்திய சோமசுந்தரரை எப்படியாவது தன் அண்ணாமலை பல்கலைகழகத்தின் தமிழ் பேராசிரியராக நியமிக்க ஆவலுற்ற ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் அவரை வற்புறுத்தி வழக்குறிஞர் ஆடையை உதறச் செய்தார். அண்ணாமலை பல்கலைகழகத்தை பொறுத்தவரை இன்றும் சோமசுந்தரரின் காலமே பொற்காலம் என கூறுமளவிற்கு தன்னிடம் வந்தடைந்த பதவிக்கு முழு பெருமை சேர்த்தார்.
இவரது நாவன்மையை கண்டு வியப்புற்ற விபுலானந்த அடிகள் இவரை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து சொற்பொழிவாற்றச் செய்தார்.
பாரதியின் பாடல்களை அதன் பொருட்செறிவை, இலக்கிய நயத்தை மேடைதோறும் முழங்குவதையே தொழிலாக கொண்டிருந்தார்.
மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு சங்க தலைவராகவும் இருந்து தன் வாழ்க்கையை பெருமைக்குள்ளாக்கிக் கொண்டவர் என்பது கூடுதல் சிறப்பு.
ஆர்வியின் குறிப்பு: இந்தக் கட்டுரைக்கு முன்பு அ.ச. ஞானசம்பந்தம் தன் memoirs புத்தகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கச் சென்ற தன்னை தமிழ் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று தமிழறிஞரான தன் அப்பாவிடம் வற்புறுத்தி தன் படிப்புத் துறையை மாற்றினார் என்று குறிப்பிட்டிருந்தது மட்டுமே இவரைப் பற்றி நானறிந்திருந்த செய்தி. ரமேஷுக்கு நன்றி!
வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் செயலாளராகப் பணியாற்றி இருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்களில் நான் படிக்க விரும்புவது – “நான் கண்ட சுப்பிரமணிய பாரதி“. சிறு வயது நண்பரின் பார்வை குறிப்பிடும்படி இருக்கும் என்று தோன்றுகிறது. அவருடைய நூல்கள் சில (திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும் பாகம் 2, சேரர் தாயமுறை, சேரர் பேரூர்) ப்ராஜெக்ட் மதுரையில் படிக்கக் கிடைக்கின்றன. படிக்க கடினமான பண்டிதத் தமிழ். இவர் எழுத்தையும் பாரதி எழுதிய உரைநடையையும் ஒப்பிட்டால் பாரதி கொண்டு வந்த மாற்றம் எவ்வளவு மகத்தானது என்று தெளிவாகப் புரிந்துவிடும். நடை சரளமாக இருந்திருந்தாலும் நான் எந்தப் புத்தகத்தையும் பரிந்துரைக்க மாட்டேன். திருவள்ளுவர் புத்தகத்தில் திருவள்ளுவர் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று நிறுவுகிறார். தசரதன் குறை-கைகேயி நிறை புத்தகத்தில் கைகேயி அரச மரபுகளைக் காப்பாற்றவே ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆளவும் ராமன் காட்டுக்கு ஏகவும் வரம் கேட்டாள் என்று வலிந்து பிடிவாதம் பிடிக்கிறார். சேரர் தாயமுறை புத்தகத்தில் மருமக்கள் தாயமுறை சேரன் செங்குட்டுவன் காலத்திலேயே இருந்தது என்று வாதிடுகிறார். அவர் காட்டும் ஆதாரம் அம்மா பெயரும் பதிற்றுப்பத்தில் சொல்லப்படுவதுதான். எனக்கு இந்த ஆதாரமெல்லாம் பத்தாது. சேரர் பேரூர் புத்தகத்தில் எது சேரர்களின் தலைநகரம் என்று ஆராய்கிறார். பண்டிதர், பழைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் எழுதுவதும் பேசுவதும் நமக்காக அல்ல, பண்டிதர்களுக்காகவே.
ஓப்பன் ரீடிங் ரூம்ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
பிறப்பு: 08-01-1901, இறப்பு: 27-08-1980
இவரைப் போல இன்னொரு மகன் எனக்கு கிடைப்பானா என தமிழே ஏங்குமளவிற்கு ஆழ்ந்த அறிவும் புலமையும் பெற்று தன் பணிகளால் தமிழுக்கு பெருமையும் புகழையும் ஈட்டித் தந்தவர். பன்மொழிப் புலவர்,பல்கலை வித்தகர். சங்க இலக்கிய வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக படைத்தவர். தன் முப்பத்தி ஆறாம் வயதிலேயே பன்மொழிப் புலவர் எனும் பட்டம் ஈன்ற பெருமகனார் தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார்.
சென்னையை அடுத்த தென்பட்டினம் எனும் கடற்கரை கிராமத்தில் பிறந்தவர். தந்தையார் பொன்னுசாமி கிராமணியார். இவரே ஒரு பழுத்த அறிஞர், அஷ்டாவதானம் சுப்புராய செட்டியாரின் மாணவர். இதனாலேயே தனது குருவின் குருவான மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மீது இவருக்கு மாறாத காதல் கிளைத்தது. இதனாலேயே தனக்கு பிறந்த ஆண் மகவுக்கு மீனாட்சிசுந்தரம் என்றே பெயரிட்டார். இதன் காரணமாகவோ என்னவோ சிறுவன் மீனாட்சிசுந்தரத்துக்கும் தமிழின் மீது தணியாத காதல். அது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் பருவத்தில் அவரது தமிழறிவை வளர்க்க வடிவேலு செட்டியார், கோவிந்தராச முதலியார், மற்றும் திருமணம் செல்வகேசவராய முதலியார் போன்ற தமிழறிஞர்கள் பெரிதும் உதவினர்.
வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல் முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத் தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார். எதைக் கற்றாலும் அதில் முடி முதல் ஆழம் வரை கற்று அதில் புலமையும் வியத்தகு ஆற்றலும் அடையப் பெற்ற மீனாட்சியாரின் அறிவும் புலமையும் வேறொருவர் எளிதில் நெருங்க இயலாதது. அதன் காரணமாகவே பலவேறு துறைகளின் தலைமைப் பதவிகள் அவரைத் தேடி வந்து அரியணையிட்டு அமரச் சொல்லி கெஞ்சிக் கொண்டன.
எல்லாத் துறைதோறும் தலைவர் ஆவது என்பது எத்தனை சிரமம் மிக்கது என்பதை ஏதெனும் ஒருதுறையில் தலைவர் ஆகுபவரால் மட்டுமே உணர முடியும். அவர் எண்ணற்ற மொழிகளைக் கற்றிருந்தாலும் ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட மாறாத ஆர்வமும் மாசற்ற காதலுமே இதற்கு காரணம்.
1920ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., 1922ல் பி.எல். பட்டம், 1923ல் எம்.ஏ. பட்டம், பின் வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் தொடர்ச்சியான முதுகலைப் பட்டம் என தன் கல்விப் பயணத்தை சாதனைப் பயணமாக மேற்கொண்டவர்.
1924ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.
இவரது தமிழ்ப் புலமையால் மையல் கொண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக பணி செய்ய அழைப்பு விடுத்தார். 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார். மீண்டும் 1958ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அது மட்டுமல்லாமல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961ல் தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பேற்று தமிழுக்கு சிறப்பு சேர்த்தார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் “கூரியர்” என்னும் இதழ்க் குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை. மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளர வைத்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான்.
தமிழிலக்கிலக்கியம் குறித்து இவர் எழுதிய பல ஆய்வு நூல்கள் இன்றும் என்றும் தமிழுக்கு அழியா சொத்து ஆகும். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை “நாடகக் காப்பியம்” என்றும் “குடிமக்கள் காப்பியம்” என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.
ஆர்வியின் குறிப்பு: பத்மபூஷண் விருது பெற்றவர். ஒரு காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக இருந்த (பதிபக்தி, பம்பாய் மெயில், கதரின் வெற்றி மற்றும் பல நாடகங்களை எழுதியவர்) தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் இவரது அண்ணா.