தமிழறிஞர் அறிமுகம் 4 – மஹாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தோற்றம்:06-04-1815, இறப்பு 01-02-1876

meenakshi_ sundaram_ pillaiஓலைச்சுவடி காலத்திலேயே ஒரு லட்சம் தமிழ் பாடல்களை மற்றவர் பாடக் கேட்டு மனப்பாடம் செய்து அறிவில் தேக்கி அடுத்த த்லைமுறைகளுக்கு கற்றுத் தந்தவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தமிழ் பற்றுக்கு காரணமாக இருந்த அவரது ஆசான். மகாவித்துவான் என அனைவராலும் ஆழைக்கப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

மதுரையில் பிறந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தந்தை சிதம்பரம் பிள்ளை. தாயார் அன்னந்தாச்சி. தந்தை சிதம்பிரம் பிள்ளையவர்கள் இயல்பில் தமிழ் ஆசானக இருந்ததால் வீட்டில் பாசத்தோடு தமிழும் சேர்ந்து அவரை வளர்த்தெடுத்தது. இளமையில் இவரது அபாரமான நினைவாற்றல் பாடல்களை படித்த வேகத்தில் மனதில் பதிய வைத்துக் கொண்டது கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

காஞ்சீபுரம் சபாபதி முதலியாரரிடம் புராணங்களையும் திருவேங்கடாசல முதலியாரரிடம் பாகவதம், பிரபந்தம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். ஆசான்கள் இறைவனுக்கு ஒப்பானவர்களாக கருதப்பட்ட அச்சு நூல்கள அற்ற அக்காலத்தில் தமிழ் கற்க பலரை ஊர் ஊராக தேடிக் கண்டு அவர்களைப் பாடச் சொல்லி அச்செய்யுள்களை முழுவதுமாய் மனப்பாடம் செய்து தன் அறிவில் மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கிக் கொண்டார். ஒரு முறை தண்டியலங்காரம் கற்ற ஒரு யோகி கஞ்சா பிடித்தபடி திருச்சி நகர வீதிகளில் அலைந்து திரிவது பற்றி கேள்விப்பட்டு அவரைத் தேடி இவரும் திருச்சி சென்றார். அங்கு இவரும் வீதிகளில் அலைந்து அவரை கண்டுபிடித்து அவருக்கு தேவையான கஞ்சா வாங்கி கொடுத்து தண்டியலங்காரத்தை பாடச் சொல்லி கேட்டு அதனை முழுவதுமாக மனப்பாடம் செய்துகொண்டார்.

இது மட்டுமல்லாமல் வித்துவான் அவர்கள் சிறு வயதிலேயே பாடல்புனையும் ஆற்றலையும் பெற்றிருந்தார். குறிப்பாக எண்ணற்ற அந்தாதி, பிள்ளைத்தமிழ், கோவை ஆகியவற்றை புனைந்து தன் பிறவிப் பெருமையை அடைந்து கொண்டார். இவ்வாறாக இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை 65.

திருவாவடுதுறை மகாசன்னிதானமாக இருந்த அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் மீது இவர் பாடிய கலம்பகம் அரங்கேற்றப்பட்டபோது மகாவித்துவான் எனும் பட்டம் இவருக்கு சூட்டப்ட்டது

பல மாணவர்களுக்கு தமிழ் கற்று தரும் நல்லதோர் ஆசானாக விளங்கியவர். தன்னிடம் படிக்கும் மாண்வர்களுக்கு இலவசமாக உணவு உடை இருப்பிடம் தந்து காத்துக் கொண்ட பேருள்ளம் படைத்த பெருமான் இவர். இவரிடம் படித்தவர்களூள் வித்துவான் தியாகராய செட்டியார் மற்றும் சதாவதனம் சுப்புராய செட்டியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

பிள்ளையவர்களின் சீடர்களுள் இன்னுமொருவரின் பெயர் பின்னாளில் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டது. அவர்தான் தமிழ்த் தாத்தா என அனைவராலும் அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாத அய்யர். அவரே தன் ஆசானை பற்றி ஒரு முறை என் தாயாரைக் காட்டிலும் அதிகமான பாசத்தை என் மேல் காட்டியவர் என புகழ்ந்து கூறியுள்ளார்.

தன் 69ம் வயதில் பிள்ளைவர்கள் இறக்கும் தருவாயில் தனது மாணாக்கன் உ.வே.சா.வை திருவாசகம் ஓதச் சொல்லி அதைக் கேட்டபடியே உயிர் நீத்தார்.

ஆர்வியின் குறிப்பு: உ.வே.சா.வின் ஆசிரியர் என்றே என் போன்றவர்கள் இவரை அடையாளம் கண்டுகொள்கிறோம். நீண்ட தமிழ்ப் புலவர் பரம்பரையின் கடைசிக் கண்ணி இவர்தான் என்று நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும் தமிழறிஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். இவருடைய சில படைப்புகளை ப்ராஜெக்ட் மதுரையில் தொகுத்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் பக்கம்