தமிழறிஞர் அறிமுகம் 7 – மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணீயம் எனக்குப் பிடித்த நாடகங்களில் ஒன்று. ஸ்டீரியோடைப் பாத்திரங்கள் என்றாலும் கச்சிதமாக எழுதப்பட்ட நாடகம். கவிதை என்றால் ஓடும் நானே அது ஆசிரியப்பா வடிவில் எழுதப்பட்டிருக்கிறது என்பதால்தான் அதை ரசிக்கிறேன்.

தமிழகத்தில் அங்கங்கே ராமாயணம் ஆரியர்கள் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து திராவிட அரசர்களான ராவணனை, வாலியை வென்று தங்கள் ஆதிக்கத்தை, ஜாதி முறையை நிறுவிய வரலாற்று நிகழ்ச்சி காவியமாக எழுதப்பட்டது என்று ஒரு தியரியை பார்க்கலாம். அதற்கு முன் திராவிடத்தில் ஜாதியே கிடையாது, ராமன் காலத்தில்தான் அது புகுத்தப்பட்டது என்பார்கள். அதை முதலில் சொன்னது பிள்ளைவாள்தானாம். குற்றாலத்தில் நண்பர்கள் நடுவே தானும் ராமபக்தன்தான், ஆனால் ராமாயணத்தின் உள்ளுறை கருத்து இதுவே என்று ஒரு முறை சொன்னாராம். ஆனால் அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு முன் இறந்துவிட்டாராம். அங்கே இருந்த வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் அதை பின்னாளில் பதித்திருக்கிறார். அப்புறம் அந்த தியரி அப்படியே வளர்ந்திருக்கிறது…

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார், எனக்கு ஒரிஜினல் தமிழ்க் குறிப்புகளை அனுப்பி இருக்கிறார்.

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

பிறப்பு:05-04-1855, இறப்பு:26-04-1897


“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” எனத் துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ் நல்லுலகிற்காக எழுதியவர். அப்பாடல் இடம் பெறும் மனோன்மணீயம் (1891) எனும் நாடக நூலின் ஆசிரியர். திராவிட ஆராய்ச்சித் தந்தை என்றும் எம்.ஏ. சுந்தரம் பிள்ளை என்றும் அழைக்கப்பட்ட மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

manonmaneeyam_sundaram_pillaiதிருவனந்தபுரம் அருகிலுள்ள ஆலப்புழை எனும் ஊரில் பிறந்தவர். தந்தை பெருமாள் பிள்ளை, தாயார் மாடத்தி அம்மாள். ஆலப்புழையில் தொடக்கக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயின்ற பின் நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றவர் பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டப் படிப்பு படித்தார். 1876-இல் இளங்கலை படிப்பு முடிந்ததும், இவரது அறிவாற்றல் கண்டு கல்லூரி முதல்வர் அங்கேயே பணியாற்ற அழைக்க அவ்வழைப்பை ஏற்று அக்கல்லூரியில் ஆசிரியப் பணியும் செய்து கொண்டு உடன் அங்கேயே முதுகலையும் கற்று தேறினார். அப்பகுதியின் முதல் முதுகலை பட்டம் பெற்றவராதலால் அனைவரும் இவரை எம்.ஏ என்ற அடைமொழி சேர்த்து எம்.ஏ. சுந்தரம் பிள்ளை என்றே அழைக்க துவங்கினர்.

மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார்.

பிற்பாடு நெல்லைக் கல்லூரியிலும் பணியாற்றிய சுந்தரம் பிள்ளை வரலாற்றுப் பாடத் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து வரலாற்று ஆய்வுகளின்பால் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. கல்வெட்டறிஞர் கோபிநாத ராவுடன் இணைந்து கலவெட்டுகளைத் தேடிச் சென்றார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். தன் ஆய்வுகளைப் பயன்படுத்தி திருவாங்கூர் வரலாற்றையும் எழுதினார். திருவிதாங்கூர் மன்னர்களின் காலம், முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894), ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896), திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897) என்ற புத்த்கங்களை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழ் வரலாற்றை ஆய்வு செய்த சுந்தரம் பிள்ளை இத்தனை பாரம்பரரியம் மிக்க தமிழ் மொழியில் ஆங்கில மொழியில் உள்ளது போல நாடகமாக்கங்கள் இல்லையே என மனக்குறைபட்டு அக்குறை நீங்க தானே நாடகம் ஒன்றையும் எழுத துவங்கினார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் “பரமாத்துவித” என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தான் கற்ற பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் (1891) நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இவரது தமிழ்ப்பற்று, வரலாற்று ஆர்வம், தத்துவ நாட்டம் அனைத்தும் இணைந்து மனோன்மணீயம் நாடகத்தில் வெளிப்படுகின்றன.

குறிப்பாக தமிழ் மீதான இவரது பற்று நூலின் முதல் பாடலாக நீராரும் கடலுடுத்த எனத் துவங்கும் பாடலில் வெளிப்பட்டது. 1970ல் அப்போது தமிழக ஆட்சி பொறுப்பில் இருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சி காலத்தில்தான் இப்பாடல் தமிழகத்தின் பொது வாழ்த்துப் பாடலாக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மனோன்மணீயம் தவிர சாத்திர சங்கிரகம், சிவகாமியின் சபதம், ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளியெழுச்சி போன்ற நூல்களையும், நூற்றொகை விளக்கம் (1885, 1888), திருவிதாங்கூர் மன்னர்களின் காலம், நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு, பத்துப்பாட்டு (1891), திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி (1894), முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894), ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896), திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897) போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளியிட்டார். ஜீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892), மரங்களின் வளர்ச்சி (1892), புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892) ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

1877-இல் சிவகாமி அம்மாளை மணந்தார். இவருடைய மகன் நடராஜப் பிள்ளை இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, தனது 34வது வயதினில் மகாராஜா-சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராஜப் பிள்ளை தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார். நடராஜப் பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

தமிழுக்கு தொண்டு செய்வோர் இரண்டு கடமைகளை மேற்கொள்ள வேண்டும், ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டும், இரண்டு புதிய துறைகளில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ள சுந்தரம் பிள்ளை சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட குழுவில் இருந்து தமிழ் வரலாறு, தத்துவம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கல்வித் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்.

சைவத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுந்தரனார் தனக்கு தத்துவம் பயிற்றுவித்த பேராசிரியர் ஹார்வி பெயரில் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டைக் கட்டி அந்த இடத்துக்கே ஹார்விபுரம் எனப் பெயர் உண்டாக்கித் தந்தார்.

ஆன்மிகத்தின் மேல் இவருக்கிருந்த நாட்டம் காரண்மாக பல துறவிகள் இவரை வந்து சந்தித்து அளவளாவியுள்ளனர். அவர்களுள் விவேகானந்தரும் ஒருவர். இவரிடம் படித்தவர்களில் முக்கியமானவர் மறைமலை அடிகள்.

நீராரும் கடலுடுத்த பாடலின் முழு வரிகள் கீழே:

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

ஆர்வியின் குறிப்பு: நீராரும் கடலுடுத்த பாடலை எழுதியவர், மனோன்மணீயம் என்ற நாடகத்தை எழுதியவர் என்பதுதான் இதற்கு முன் இவரைப் பற்றித் தெரியும். ஆனால் நல்ல பாய்ஸ் நாடகமாக உருவாகக் கூடிய படைப்பு. மனோன்மணீயம் லிட்டன் பிரபு என்பவரால் எழுதப்பட்ட Secret Way என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது. யார் இந்த லிட்டன் என்றே தெரியவில்லை. எட்வர்ட் புல்வர்-லிட்டனோ?

என்னைப் பொறுத்த வரையில் மனோன்மணீயம் நல்ல நாடகம் இல்லை, முன்னோடி முயற்சி மட்டுமே. (என் எண்ணம் மாறிவிட்டது) புத்தகத்தை இங்கே படிக்கலாம். நூற்றொகை விளக்கம் புத்தகத்தைப் பற்றிப் பார்த்தால் கலைக் களஞ்சியத்துக்கு முன்னோடியாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

மனோன்மணீயம் மனோன்மணி என்ற பேரில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்து திரைப்படமாகவும் வந்தது. முழுத் திரைப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது. கே.வி. மஹாதேவன் இசையமைத்த முதல் படம் இதுதானாம். சின்னப்பா நல்ல குண்டாக இருந்தாலும் முதலில் வரும் கத்திச் சண்டை பயிற்சிக் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். வசனமும் நன்றாக இருக்கும், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விக்கி குறிப்பு
தமிழ் ஹெரிடேஜ் குறிப்பு
தென்றல் பத்திரிகை குறிப்பு (Registration Required)
மனோன்மணி திரைப்படம் பற்றி ராண்டார்கை

8 thoughts on “தமிழறிஞர் அறிமுகம் 7 – மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

 1. இதற்கான பின்னூட்டமல்ல. ஆர்விக்கு மட்டுமானது!

  அன்புள்ள ஆர்வி,

  எனது முதல் தொகுதி உங்களுக்கு கிடைத்தால் படிக்கவேண்டுமென்று எழுதியிருந்தீர்கள். எனது முழுத்தொகுதி ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ இன்னும் பத்துநாளில் வந்துவிடும். அதை உங்களுக்கு அனுப்புவது தான் சீண்டரம் பிடித்த வேலை. இந்தியாவிலிருந்து வரும் உங்கள் நண்பர்களிடம் சொல்லி, என்னிடமிருந்து ஒரு பிரதி வாங்கிக்கொள்ளமுடியுமா? உங்கள் வாசிப்பு என்னை பிரமிக்கவைக்கிறது.

  புள்ளிகள் பற்றியும் ஒரு விரிவான விமர்சனம் எழுதுங்களேன்!

  அன்புடன்,

  பாரதிமணி

  Like

 2. மணி சார், நீங்கள் இந்தத் தளத்தை படிக்கிறீர்கள் என்பதே எனக்கு கௌரவம். என் புத்தகத்தைப் படித்துப் பார் என்று நீங்கள் சொல்வது பெரிய கௌரவம்!

  அருணா (வெங்கடாசலம்) உங்களைப் பற்றி நிறைய பேசுவதுண்டு. உங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ரொம்ப ஆசைதான், இன்னும் காலம் வரவில்லை.

  எனக்கு மட்டும் தனியாக ஏதாவது எழுத வேண்டுமென்றால் rv dot subbu at gmail dot com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

  நண்பர் திருமலைராஜன் இப்போது இந்தியாவில் இருக்கிறார், அவரிடம் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டிருக்கிறேன். எல்லாம் கைகூடி வர வேண்டும்.

  Like

 3. அருணாவுடன் எப்போதாவது பேசமுடிகிறது. வரும் 21-ம் தேதி வம்சி என் புத்தக வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்திருக்கிறது. திருமலை சென்னை வந்தால் சந்திக்கச்சொல்லுங்கள். புத்தகம் கொடுத்தனுப்புகிறேன்! உப்பிலிக்கும் நான் மிகவும் கடமைப்பட்டவன். உங்கள் எல்லோருடைய அன்பும் என்னை பிரமிக்கவைக்கிறது!

  God bless you!

  Like

  1. பாரதி மணி சார்,
   புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்திருக்கும். ஊரில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.