ஞானக்கூத்தனுக்கு 2014 விஷ்ணுபுரம் விருது

கீழே வருவது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அறிவிப்பு. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்றாலும் எனக்கே ஞானக்கூத்தனின் குசும்புக் கவிதைகள் புரிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

gnaanakkootthan2014ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28-ம் தேதி கோவையில் நிகழ இருக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசக நண்பர்களால் 2009-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பில் உலகெங்கிலும் உள்ள நவீனத் தமிழலக்கிய ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சிந்தனையாளர்கள், இசைக்கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர் என பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். விருது வழங்குதல், கருத்தரங்குகள், வாசிப்பரங்கம், காவிய முகாம்கள், குறிப்பிடத்தக்க ஆளுமைகளுக்கான இணையதளங்களை நடத்துதல், மொழிபெயர்ப்புகள் ஆகிய இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறது.

விஷ்ணுபுரம் விருது

தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.1,00,000/- (ஒரு லட்சம்) ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் கோயம்புத்தூரில் நடைபெறும்.

இதுவரை விருது பெற்றுள்ளவர்கள்
2010-ஆம் ஆண்டு – ஆ. மாதவன்
2011-ஆம் ஆண்டு – பூமணி
2012-ஆம் ஆண்டு – தேவதேவன்
2013-ஆம் ஆண்டு – தெளிவத்தை ஜோசப் (இலங்கை தமிழ் எழுத்தாளர்)

ஞானக்கூத்தனுக்கு விருது

2014-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். ம.பொ.சி.யின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். எழுபதுகளில் வெளிவந்த இவரது அன்று வேறு கிழமை என்ற கவிதைத்தொகுதி ஒரு பெரிய அலையை கிளப்பியது. கூரிய அங்கதக் கவிதைகள் மூலம் தமிழ்க்கவிதையில் புதியபாதையை திறந்தார். சாரல் விருது, விளக்கு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், கவிதை பக்கம்