ஆளை விடுங்கடா சாமி என்று பெருமாள் முருகனே களத்திலிருந்து போய்விட்டாலும், எனக்குத் தெரிந்த சில ஹிந்துத்துவர்கள் கடையை மூட மறுக்கிறார்கள். நண்பர் ராஜன் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை தடை செய்திருக்கக் கூடாது, பெ. முருகன் விவரித்திருக்கும் சர்ச்சைக்குரிய திருவிழா ஹிந்து மதத்தின் நெகிழ்வைக் காட்டுகிறது என்று ஆரம்பித்த ஜடாயு கூட இப்போது கட்சி மாறிவிட்டது போலத் தெரிகிறது. உண்மையான அறிவுஜீவி, scholar என்று நான் மதிக்கும் அரவிந்தன் நீலகண்டனும் பெ. முருகன் ஆதாரம் தரவேண்டும் என்று நினைக்கிறார்.
எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள்:
- வயது வந்த ஒரு பெண் (adult) – உடல் சுகத்துக்காகவோ, பிள்ளைப்பேறுக்கோ, எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் – தான் விரும்புபவனோடு படுப்பது தவறா? அப்படிப் படுத்தால் அது அவள் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்துகிறதா?
- கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் இந்த சர்ச்சைக்கு அர்த்தமே இல்லை. கேவலப்படுத்தும் என்றால் அடுத்த கேள்வி. அந்த adult ஆணாக இருந்தால் அது அவன் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்தாதா?
- கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் பெண் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், ஆணுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று நினைப்பவர் நீங்கள் என்பது தெளிவு. உங்களுக்குப் பெண் என்பவள் சொத்து. அவளைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறீர்கள். நம் வீட்டு/ஜாதி/ஊர்ப் பெண் அவள் இஷ்டப்படி வேறொருவனுடன் உறவு கொள்வதா என்று பொங்குவீர்கள், அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. நம்ம வன்னியப் பொண்ணு திவ்யாவை இளவரசன் மாதிரி ஒரு தலித் மணப்பதா என்று கிளம்பியவர்களுக்கும் உங்களுக்கும் கருத்தளவில் வித்தியாசம் இல்லையே?
- அதுவும் கேவலம்தான் என்று நினைத்தால் அடுத்த கேள்வி. ஏறக்குறைய அதே பக்கங்களில் ஊர்த் தேவடியாள்கள் இன்று யார் நம்மிடம் வருவார்கள் என்று அலுத்துக் கொள்கிறார்கள். திருச்செங்கோட்டில் தாசிகள் இருந்தார்கள், திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களுக்கு தொழில் நன்றாக நடக்கும் என்று பெருமாள் முருகன் எழுதி இருப்பது திருச்செங்கோட்டுக்குக் கேவலம் என்று ஏன் உங்கள் குரல் எழவில்லை? ஒருவருக்குக் கூட – ஒரு கவுண்டருக்குக் கூட, ஒரு திருச்செங்கோட்டுக்காரருக்குக் கூட, ஒரு ஹிந்துத்துவருக்குக் கூட அது ஊரைக் கேவலப்படுத்துகிறது என்று தோன்றாதது ஏன்?
- சரி என்னவோ தோன்றவில்லை, இப்போது நான் எடுத்துக் கொடுத்த பிறகு தோன்றிவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆதாரம், தரவு வேண்டும் என்று நிறைய ஹிந்துத்துவர்கள் எழுதி இருந்தார்கள். சரி. ஊரில் தாசிகள் இருந்ததற்கும் ஆதாரம் கேட்டால் பெ. முருகன் எங்கே போவார்?
- நாளை பெருமாள் முருகனுக்கு பதில் ஒரு சிவன் கணபதி பதினேழாம் நூற்றாண்டில் ராசிபுரத்தின் சமூக வரலாற்றை புனைவாக எழுதுகிறேன் என்று கிளம்பி அங்கே ஓரினச்சேர்க்கை நடைபெற்றது என்று எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்து ஓரினச்சேர்க்கை (ஆண்-ஆணாக இருந்தாலும் சரி, பெண்-பெண்ணாக இருந்தாலும் சரி) பற்றி தமிழில் எந்தக் குறிப்பும் கிடையாது. சங்கத் தமிழில், இடைக்காலத் தமிழில், அம்மானைகளில், சிந்துகளில், நாட்டுப் பாடல்களில், தமிழ் நீதி நூல்களில், கல்வெட்டுகளில், தமிழ்நாட்டு கோவில் சிற்பங்களில் எங்கும் கிடையாது. தமிழ்நாட்டிலேயே இல்லாத ஓரினச்சேர்க்கை ராசிபுரத்தில் இருந்ததாக எழுதி ராசிபுரத்தை கேவலப்படுத்திவிட்டாய், ராசிபுரத்தில் பதினேழாம் நூற்றாண்டில் நடந்ததற்கு ஆதாரம் காட்டு என்றால் என்ன செய்ய?
எத்தனையோ ஜாதி, ஊர்ப் பழக்க வழக்கங்கள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. எல்லா ஜாதியினருக்கும், எல்லா ஊருக்கும் ஒரு அ.கா. பெருமாள் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் பாலியல் உறவுகள் பற்றி சிலவற்றைத்தான் வெளிப்படையாக எழுதலாம் என்று ஒரு எழுதப்படாத விதி ஒன்று எப்போதுமே நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. அதற்காக பதிவு செய்யப்படாத எந்த விஷயமும் நடக்கவில்லை என்று நினைத்துக் கொள்ள முடியுமா? - தரவு தரவு என்றால் என்னதான் தரவு எதிர்பார்க்கிறீர்கள்? இது என்ன நடக்க முடியாத நிகழ்ச்சியா? வாய்மொழி வரலாறு, “சாமி கொடுத்த பிள்ளை” என்பதற்கு என்ன ரகசிய அர்த்தம் என்பதைப் பெரியவர்கள் சொன்னார்கள் என்கிறார். யார் அந்தப் பெரியவர்கள், சொல்லு சொல்லு என்றால் – கல்லூரிப் பேராசிரியர், ஹிந்துத்துவர்கள் எண்ணத்தில் (பொய் சொல்லியே) உலகமெல்லாம் பேரும் புகழும் பெற்றவர், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆதரவு பெற்றவர் – அவரே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார். சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அரசாங்கப் பிரதிநிதிகள் (கலெக்டரா தாசில்தாரா?) கூப்பிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது தகவல் கொடுத்த பல்லுப் போன கிழங்கள் யார் யாரென்று பெ. முருகன் அடையாளம் காட்டிவிட்டால் அந்தக் கிழங்களின் கதி என்ன? சரி அடையாளம் காட்டுகிறார் என்றே வைத்துக் கொள்வோம், அந்தப் பெரிசுகள் பயத்தில், ஜாதியினர், ஊர்க்காரர்கள் கொடுக்கும் அழுத்தத்தில் நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்துவிட்டால் பெ. முருகன் கதி என்ன? பெ. முருகன் முன்னெச்சரிக்கையாக ஆடியோ வீடியோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் பிழைத்தார்! வெறுமனே நோட்புக்கில் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்தால்? தன் ஞாபக சக்தியை மட்டுமே நம்பி இருந்தால்?
- புனைவுக்காக பெ. முருகன் அங்கும் இங்கும் மாற்றி இருக்கலாம். 1940களில் நடந்ததாக எழுதி இருக்கிறார், அது 1920களில் நடந்திருக்கலாம். திருச்செங்கோட்டில் நடக்காமல் பக்கத்து ஊரில் நடந்திருக்கலாம். இப்படி எல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாதிடுபவர்கள் இன்றும் திருச்செங்கோட்டிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கூவாகம் திருவிழாவில் என்ன நடக்கிறது என்று நினைத்துப் பார்த்தீர்களா? கூவாகம் பற்றியும் கல்வெட்டு கிடையாது, இலக்கியம் கிடையாது, ஒரு பத்து இருபது வருஷமாகத்தான் வெளியேவே தெரிகிறது. இந்த இன்டர்நெட் யுகத்தில், இன்றும் உயிரோடு இருக்கும் பழக்கத்துக்கே இவ்வளவுதான் ஆவணம் என்றால் ஒரு நூறு வருஷத்த்துக்கு முன்னால் நடந்த, இன்று மறைந்துபோன ஒரு பழக்கத்துக்கு என்ன ஆதாரம் எதிர்பார்க்க முடியும்?
- சரி பெ. முருகன் வாய்மொழி வரலாறு, சொன்ன பெரிசுகள் இவ்விவர்கள் என்று பட்டியலே தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தரவுகள் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?
- சரி இப்படி நடக்கவில்லை, இது முழுப்பொய், பெ. முருகன் திட்டமிட்டு பணம் வாங்கிக் கொண்டு திருச்செங்கோட்டைக் கேவலப்படுத்துகிறார் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். என்ன ஆதாரம்? ஆதாரம் கேட்பவர்களுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் தார்மீகக் கடமை இல்லையா? ஃபோர்ட்? அறக்கட்டளை மூன்று நான்கு லட்சம் தந்தது என்றால் போதுமா? (கல்லூரிப் பேராசிரியர்களின் மாதச்சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல் என்கிறார் நண்பர் ராஜன். அரை லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் பெ.மு.வின் ஆறேழு மாதச் சம்பளம்தான் இது.) பூமணி கூடத்தான் அதே அறக்கட்டளையில் நிதிக்கொடை பெற்று அஞ்ஞாடி எழுதி இருக்கிறார், அதற்கு சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்திருக்கிறது. பூமணியைப் பற்றியும் குற்றச்சாட்டா? இப்படி இந்த நிறுவனத்திலிருந்து நிதிக்கொடை பெறுவதே ஹிந்துத்துவர்கள் கண்ணில் தேசத்துரோகம் என்றால் எப்படி ஒரு தேசத்துரோகத்தை தூண்டும் நிறுவனத்தை நாட்டில் செயல்பட விட்டிருக்கிறீர்கள்? பெ.மு. பற்றி போடும் கூச்சலை விட நூறு மடங்கு அதிகமாக அல்லவா அந்த நிறுவனத்த்தை எதிர்த்துப் போராட வேண்டும்?
இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் அறக்கட்டளையில் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நிதிக்கொடையை பெ.மு. பெற்று அது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது தவறு என்று உங்களுக்குக்குத் தோன்றினால் அறக்கட்டளை பற்றிய சட்ட திட்டங்களை மாற்றுங்கள். பெ.மு. செய்த தவறு என்ன?
தரவாக சொல்லப்படுவது தொண்ணூறு வயதுப் பெரியவர் ஒருவர் (ஒரே ஒருவர்தான்) இப்படி எதையும் கேள்விப்படவில்லையாம். அந்தப் பெரியவரும் community leader-ஆம். எந்தக் community முன்னின்று எதிர்க்கிறதோ, அந்தக் community-யின் பெருசு ஒருவர் சொன்னால் போதும், இது பொய் என்று நிரூபணம் ஆகிவிடுகிறது! - அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் பெ. முருகனிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டியதால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது.
- என் முப்பாட்டன் தன் முப்பாட்டன் சொன்னது என்று என்னிடம் சொல்வதை வரலாற்றுத் தரவு என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சமூக வரலாற்றுப் புனைவு என்பதற்கு அது போதும். என் உறவினர் ஒருவர் சொன்னது – 1967 தேர்தலில் ராஜாஜி மயிலாப்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் “என் பூணூலை பிடிச்சிண்டு சொல்றேன், நீங்கள்ளாம் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கோ” என்று அங்கே நிரம்பி இருந்த பிராமணர்களைக் கேட்டுக் கொண்டாராம். நாட்டுக்கே தலைவரான ராஜாஜி ஒரு ஜாதியின் தலைவராகத் தன்னை குறுக்கிக் கொண்ட நிகழ்ச்சி என்றே நான் அதைக் காண்கிறேன். அதை நான் என் பேத்திக்குச் சொல்லலாம். இன்னும் நூறு வருஷம் கழித்து ராஜாஜியைப் பற்றி ஒரு புனைவில் அந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்படலாம். ஆதாரம் கேட்டால் என் பேத்தி என்ன செய்வாள்?
- ஒரு புறம் தஸ்லிமா நஸ் ரீனுக்கும் சல்மான் ருஷ்டிக்கும், சார்லி ஹெப்டோவுக்கும் ஆதரவு. இன்னொரு பக்கம் பெ. முருகனுக்கு எதிர்ப்பு. இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டை எப்போது ஹிந்துத்துவர்கள் உணரப் போகிறார்கள்?
பின்குறிப்பு: இதை தமிழ் ஹிந்துவில் பிரசுரிப்பீர்களா என்று ஜடாயுவிடம் கேட்டேன். (எனக்கு கொஞ்சம் இங்கிதம் குறைவு). எதிர்பார்த்தபடியே அவர் மறுத்துவிட்டார். 🙂
தொடர்புடைய சுட்டிகள்:
இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது
மீண்டும் பெருமாள் முருகன்