பெருமாள் முருகன் வெறுத்துப் போய் நான் எழுதறதையே விட்டுடறேன் ஆளை விடுங்கடா சாமி என்று அறிவித்திருக்கிறார். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது இல்லையா?
யார் மனதும் புண்படவே கூடாது என்றால் “வாலைக் குழைத்து வரும் நாய்தான் அதுதான் மனிதர்க்குத் தோழனடி பாப்பா” என்று பாப்பாவுக்குக் கூட சொல்லித் தர முடியாது. அது என்ன தோழன்? தோழிகள் என்னானார்கள் என்று இரண்டு பெண்ணியவாதிகள் கிளம்புவார்கள். புத்தகம் பிடிக்கவில்லையா வாங்காதீர்கள். இல்லை காசு கொடுத்து வாங்கி கொளுத்துங்கள். அதை விட்டுவிட்டு அவர் மீது இப்படி அழுத்தம் கொடுப்பது அற்பத்தனம்.
என் குரல் எங்கும் கேட்கப்போவதில்லை என்று நான் அறிவேன். இதனால் பெ. முருகனுக்கு பைசா பிரயோஜனமில்லை என்றும் நான் உணர்கிறேன். ஆனால் இந்த சமயத்தில் நான் குரல் எழுப்பவில்லை என்றால் மாய்ந்து மாய்ந்து புத்தகங்களைப் பற்றி இத்தனை பதிவு எழுதுவதில் அர்த்தமே இல்லை.
பெ. முருகன் எழுதுவதை நிறுத்தினால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை விட தமிழுக்கு ஏற்படும் நஷ்டம் அதிகம். நிழல் முற்றம் தமிழ் நாவல்களில் ஒரு கிளாசிக். கூளமாதாரி முக்கியமான இலக்கிய முயற்சி. தோழி அருணா கங்கணம் புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். அடுத்த சாஹித்ய அகாடமி விருது அவருக்குக் கிடைக்கும் என்று எண்ணி இருந்தேன்.
கல்லூரி காலத்தில் எனக்கு நிறைய கவுண்டர் ஜாதி நண்பர்கள் ஏற்பட்டனர். ஒருவன் திருச்செங்கோட்டில்தான் வாழ்கிறான். (அவனைப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்.) என்னால் முடிந்தது அவர்களிடம் பேசப் போகிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்
3 thoughts on “இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது”