மீண்டும் பெருமாள் முருகன்

perumal_muruganமாதொருபாகன் புத்தகத்தை நான் படிக்கவில்லை. அதில் எவ்வளவு தூரம் வரலாறு, எவ்வளவு தூரம் உண்மை என்று பெருமாள் முருகன் விளக்கி இருக்கிறாரா என்றெல்லாம் நான் அறியேன். அவர் விளக்கம் கொடுத்திருந்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் என் புரிதலில் மாற்றம் இருக்காது என்பதால் இதை எழுதுகிறேன்.

பெ. முருகன் திருச்செங்கோடு பற்றி எழுதியதற்கு தரவுகள் வேண்டும் என்று பலர் – குறிப்பாக ஹிந்துத்துவர்கள் – கேட்டிருப்பது அங்கும் இங்கும் கண்ணில் பட்டது. எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.

என்ன மாதிரி தரவு எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. கல்வெட்டில் திருவிழா அன்று எந்தப் பெண்ணும் யாருடனும் படுக்கலாம் என்று இருக்க வேண்டுமா? இல்லை என்றால் ஏதாவது புத்தகத்தில் பதித்திருக்க வேண்டுமா? வாய்மொழியாக ஆயிரம் விஷயம் கேட்கிறோம், அது கதைக்களத்தில் இடம் பெறுவது அத்தனை ஆச்சரியமா? ஊரில் பெரிசுகள் மலக்காட்டுப் பக்கம் ஒதுங்கும்போது ஆயிரம் பேசிக் கொள்வார்கள், அதைக் கேட்டு பெ. முருகன் எழுதி இருக்கலாம். அட மொத்தமும் அவர் கற்பனையாகவே இருக்கலாம். அதனால் என்ன?

சரி அவர் பணம் வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே திருச்செங்கோட்டையும் கவுண்டர்களையும் கோவில் திருவிழாவையும் “கேவலப்படுத்தவே” இப்படி எல்லாம் எழுதினார் என்றே வைத்துக் கொள்வோம். பிடித்திருப்பவனோடு உறவு கொள்வது பெண்ணுக்குக் கேவலமா? இதே திருச்செங்கோட்டில் தாசி வீட்டில் கவுண்டன் விழுந்து கிடந்தான் என்று எழுதினால் அதற்கும் ஆதாரம் கேட்பீர்களா? அப்போது கேவலம் இல்லையா? நம் வீட்டுப் பெண்கள், நம்ம ஜாதிப் பெண்கள், நம்ம ஊர்ப் பெண்கள் புனைவில் கூட “கற்பு” நிலை தவறிவிடக் கூடாது அவர்கள் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், இதெல்லாம் மாறவே மாறாதா?

முன்னூறு நானூறு பக்கம் புத்தகத்தில் மூன்று நான்கு பக்கத்துக்கு மட்டும் தரவு கொடுத்தாக வேண்டும், மிச்ச இருநூத்தி சொச்சம் பக்கத்துக்குத் தரவு வேண்டாமா? சரி தரவு தந்தார் என்றே வைத்துக் கொள்வோம், அது திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?

இலக்கியத்துக்கு, புனைவுக்கு என்ன தரவு? எப்படித் தர? இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்களா? கண்ணெதிரில் கூவாகத்தில் வருஷாவருஷம் பாலியல் உறவுகள் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கின்றன என்று கேள்வி. அப்படி நடப்பதற்கு என்ன ஆதாரம் தர முடியும்? என்ன கல்வெட்டில் பதித்திருக்கிறார்களா இல்லை சங்க காலப் பாடல் இருக்கிறதா? எத்தனை வருஷமாக கூவாகத்தில் இப்படி நடக்கிறது என்று கூட சொல்வது கஷ்டம்.

என் சிறு வயதில் நான் கேள்விப்பட்ட ஒரு சமாசாரம் – ஆசாரமான மாமிகள் எல்லாம் வீட்டில் ஆவக்காய் ஊறுகாய் போடும்போது அம்மணமாக நின்று கொண்டுதான் போடுவார்களாம், அப்போதுதான் அதில் மணம் குணம் காரம் எல்லாம் சரியாக வருமாம். அதாவது போடும்போதே மானம் போய்விட்டால் பிறகு ஊறுகாய் சரியில்லை என்று மானம் போகாதாம். (என் சின்ன வயதில் கிளுகிளு விஷயம் என்று யாரோ சொன்னது, அதைக் கேட்ட பிறகு கொஞ்ச நாள் ஆவக்காய் ஊறுகாயா? உவ்வே என்று அந்தப் பக்கமே போகாமல் இருந்ததுதான் மிச்சம்.)  சிவசங்கரி பாலங்கள் என்ற நாவலில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். அவரிடமும் என்னிடமும் ஆதாரம் கேட்டால் எங்கே போவது? யார் சொன்னது என்று கூட நினைவில்லை. வாய்மொழி வரலாற்றுக்கெல்லாமா ஆதாரம் கேட்பீர்கள்?

வம்ச விருக்‌ஷா பிராமணர்களைத் “தவறாகப்” பிறந்தவர்கள் என்று அடையாளப்படுத்துகிறது, தலைமுறைகள் செட்டியார்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று அடையாளப்படுத்துகிறது என்று கிளம்புவீர்களா? அடப் போங்கய்யா!

அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் அவரிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டினால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான்.

அறிவுஜீவி ஹிந்துத்துவர்களிடமிருந்து (அ.நீ., அருணகிரி…) போன்றவர்கள் எல்லா விஷயங்களையும் தங்கள் அரசியல் அஜெண்டா மூலம் பார்க்காமல் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. நல்ல வேளை ஜடாயு ஆயிரம் ஆனால்களை போட்டுக் கொண்டாலும் புத்தகத்தைத் தடை செய்யக் கோருவது தவறு என்று சொல்லி இருக்கிறார். நண்பர் ராஜன் ஊரில் இல்லை, அதனால் அவரின் கருத்துக்கள் தெரியவில்லை. ஒரு பக்கம் தஸ்லிமா நஸ் ரீனைப் பற்றி புலம்பிக் கொண்டே இன்னொரு பக்கம் பெ.முருகனுக்கு எதிராகப் பேச மாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது

14 thoughts on “மீண்டும் பெருமாள் முருகன்

 1. நீங்கள் கூறுவது உண்மையாக புரியவில்லை. கற்பனையாக ஒரு ஊரைப் பற்றி அதிலும் அந்த ஊர் பெண்கள் “ஒரு நாள் தேவடியாள்” என ஒருவர் எழுதுவார், நீங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் என்பது மிக மிக அதிகம். அவர் வேண்டுமானால் தனது வீட்டில் அவ்வாறு செய்தார்களாம் என எழுதட்டும். அதை விடுத்து இவ்வாறு எழுத எந்த உரிமையும் இல்லை, இல்லை, இல்லை.

  Like

 2. // கற்பனையாக ஒரு ஊரைப் பற்றி அதிலும் அந்த ஊர் பெண்கள் “ஒரு நாள் தேவடியாள்” என ஒருவர் எழுதுவார், //
  கணவனைத் தவிர்த்து வேறு யாருடன் உறவு கொண்டாலும் – பணத்துக்காக அல்ல, சுகத்துக்காகவோ, பிடித்திருக்கிறது என்பதற்காகவோ, பிள்ளை வேண்டும் என்பதற்காகவோ – அந்தப் பெண் தேவடியாள் என்று நினைக்கிறீர்கள். பிற பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களைப் பற்றி எழுதினால் இதே போலத்தான் உங்களுக்கு கோபம் வருமா?

  Like

   1. எதற்கு ஆம் என்று சொல்கிறீர்கள் என்று சின்ன குழப்பம்.

    கணவனைத் தவிர்த்து வேறு யாருடனும் உறவு கொள்பவள் தேவடியாள் என்று நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பொன்னகரம் சிறுகதையை பரிந்துரைக்கிறேன். கற்பு என்பது ஆணாதிக்க சமூகத்தின் விழுமியம் என்பது என் உறுதியான கருத்து.

    பிற பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களும் “தேவடியான்”களே என்று நினைக்கிறீர்கள் என்றால் அந்தப் புத்தகத்தில் தாசிகள் பற்றி எழுதி இருக்கிறாராம். தாசிகள் இன்னிக்கு நம்மகிட்டே எவன் வருவான் என்று அங்கலாய்க்கிறார்களாம். இப்படி தாசிகள் என்று ஒரு அமைப்பு இருந்ததோ, காம வேட்கையைத் தணித்துக் கொள்ள அவர்களிடம் ஆண்கள் போனதோ ஏன் திருச்செங்கோட்டை கேவலமாக சித்தரிக்கிறது என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? அதைப் பற்றி உங்களையும் சேர்த்து ஒரு குரல் கூட எழவில்லையே? பெண் பெய்யெனைப் பெய்யும் மழை இருந்தால் போதும், ஆணுக்கு ஒரு மண்ணும் தேவையில்லை, அவன் கற்பு நெறியோடு நடக்காததில் ஒரு கேவலமும் இல்லை என்று நினைக்கிறீர்கள்!

    Like

   2. நான் எழுத்தாளர் இல்லை. உங்களைப் போல் எழுத தெரியவில்லை. பலரும் இருப்பது இவ்வாறுதான்.— கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் உண்மையாய்,(உங்கள் வார்த்தைகளில் கற்புடன்)இருக்க வேண்டும் என்பது தான். எனக்கு தெரிந்து பலரும் உள்ளார்கள். எனக்கு இப்புத்தகத்தில் உடன்பாடு இல்லை. நான் தி.நகரில் இந்த புத்தகத்தை வாங்கி இருந்தாலும், இனிமேல் காலச்சுவடு பதிப்பித்த புத்தகம் வாங்குவதில்லை என உறுதி கொண்டுள்ளேன். இதுவரை நேரம் செலவழித்து உரையாடியதிற்கு நன்றி. இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.

    Like

   3. அன்புள்ள பரமசிவம்,

    உங்களைப் புண்படுத்தும் நோக்கம் துளியும் இல்லை. ஆனால் பெண் பாலியல் “விதிகளை” மீறினாள் என்றதும் வருத்தப்படும் உங்கள் கண்களுக்கு அதே புத்தகத்தில் – அதே பக்கத்தில் – ஆண் பாலியல் விதிகளை மீறுவது புலப்படவே இல்லை என்பதைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    Like

 3. மகாபாரத்தில் இதைவிடக் கேவலமாக பெண்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கர்ணன் மகாபாரதத்தில் வேறு ஆண்களுக்கு பிறந்தவர்களே. பாஞ்சாலி பல கணவர்களை மணந்த பின் பத்தினி என
  எப்படிக் கூற முடியும். இதிகாசங்களை உண்மை என நம்புபவர்கள் பெருமாள் முருகன் எழுதினால் அந்த புத்தகங்களை ஏன் எரிக்க வேண்டும். திருதராஷ்டிரனும்
  பாண்டுவும் யாருக்குப் பிறந்தார்கள். பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்த்தை தமிழ்ப் பத்திரிக்கை உலகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மதவாதிகளுக்கு உரிமை வேண்டும் என்றால் அவர்களுக்கு வேண்டியதை அவர்களே எழுதிக்கொள்ள வேண்டியதுதான்.

  Like

  1. அன்புள்ள செல்வராஜ், பல ஆண்களோடு ஒரு பெண் உறவு கொள்வது கேவலம் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என் பெற்றோர் கூட அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் அது கேவலம் என்று நான் கருதவில்லை. உங்கள் பல கடிதங்களை இன்னும் பிரசுரிக்க கை வரவில்லை. விரைவில்…

   ரங்கன், ஊர் இழிவுபடுத்தப்படுகிறது என்று கோபப்படுகிறீர்கள். ஒரு இழிவும் இல்லை என்பதுதான் என் கட்சி.

   ரமேஷ், மத நிந்தனை என்றல்ல, ஊர் நிந்தனை என்றுதான் போராடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

   Like

 4. அன்பர்களே
  ஹிந்து மதத்தை பல பேர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதில் அல்ல இப்போது பிரச்னை. ஒரு ஊரை தரக்குறைவாக பேசுவது என்பதுதான் பிரச்னை. நான் திருச்செங்கோட்டில் இருந்திருக்கிறேன். இந்த மாதிரி எதுவும் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. யாராவது தைர்யம் இருந்தால் மேல் விஷாரத்திலோ அல்லது வேளான்கன்னியிலொ இப்படியெல்லாம் நடந்தது என்று எழுதுங்களேன். அப்புறம் உங்களுடைய முற்போக்கு வாதம் எப்படி போகும் என்று பார்க்கலாமே.

  Like

  1. அன்புள்ள ரங்கன்,

   // நான் திருச்செங்கோட்டில் இருந்திருக்கிறேன். இந்த மாதிரி எதுவும் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. //
   புனைவு நீங்கள் பார்த்ததையும் கேள்விப்பட்டதையும் வைத்து மட்டுமே எழுதப்பட வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் என்ன கடவுளா?

   // மேல் விஷாரத்திலோ அல்லது வேளான்கன்னியிலொ இப்படியெல்லாம் நடந்தது என்று எழுதுங்களேன் //
   உயிர் போனாலும், என்ன மிரட்டினால்ய்ம் தொடர்ந்து எழுதுவோம் என்றுதான் நடந்து கொண்டிருக்கிறதே! சார்லி ஹெப்டோ, சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன், ஹெ.ஜி. ரசூல் யாரைப் பற்றியும் கேள்விப்பட்டதே இல்லையா? அப்புறம் நான் கேள்விப்படாதைப் பற்றி எழுதக் கூடாது என்று அர்த்தம் வரும் மாதிரி போன வரி!

   Like

 5. இந்த கதை நான் எப்போதோ படித்திருக்கிறேன். படித்தபோதே மத நிந்தனை போல துளியும் எனக்கு தோன்றவில்லை. மேலும் இது வரலாற்று ஆவணமோ அல்லது சரித்திரக் கதையோ அல்ல. குழந்தை அற்ற தம்பதியின் மன அவஸ்த்தையை சொல்வதாகவே இருக்கிறது. அந்த பெண் பாறை ஒன்றின் மேல் வழிபாடு செய்வதில் இருக்கும் தீவிரமும். குழந்தைக்காக ஏங்கும் மன நிலையும் சொல்லப்பட்டிருக்கும். இது வழக்கத்தில் உள்ளதுதானே என்று வீட்டுப் பெரியவள் சொல்லி கன்வின்ஸ் செய்துதான் அவளை திருவிழாவுக்கு அனுப்புவதாக இருக்கும். ஒரு பெண்தான் மற்றொரு பெண்ணை இதற்கு சொல்லி அனுப்புகிறாள். வலி தெரிந்தவரால்தனே அது முடியும். செவி வழியாக அறிந்ததை வைத்து கூட புதினங்கள் எழலாம். தரவுகள் எதற்கு? மதமே எப்போது தோன்றியது என்பதை தரவுகளை வைத்தா கல்வெட்டுகளை வைத்தா அறிகிறோம்? பிற மதக் கோவிலை வைத்து எழுத முடியுமா என்று கேட்பது அர்த்தமற்றது. ஏனென்றால் எழுதியதின் நோக்கம் மதம் குறித்து அல்ல. பிள்ளையின்மை குறித்து. அது ஊரின் பெயரில் இருந்து விட்டதுதான் விஷயமாகிப் போகிறது. அப்படியே வேறு மதக் கோவில் பற்றி எழுதினால் அது சரி என்று நாம் சும்மா இருந்து விடலாமா? இன்று விந்தணு கொடை என்று அறிவியல் செய்வதை இன்குபேட்டர் இல்லாத சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் மூலம் வைத்திருக்கலாம். தாவரம் முதல் விலங்கு வரை விருத்தி என்பதுவே உயிர்ப்பின் நோக்கம். (மனிதன் உயர்தர மிருகம்). மேலும் இந்து மதம் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என எல்லவாரிற்கும் இடம் தந்து வளர்ந்தது என்பது உலகமறிந்த விஷயம். ராவணனுக்கு பத்து தலை என்றால் அதெப்படி பத்து ? என்று பயலாஜிகலாக கேள்வி கேட்டு வாதம் செய்பவர் போல்தான் படைப்புகளுக்கு தரவுகள் கேட்பது. அப்படி அது அடிப்படையிலேயே தவறு என்று கருதினால் மறுத்து எழுதப்படும் மற்றொரு புத்தகம்தான் அதற்கு தீர்வு. கருத்துகள் மோதிக் கொள்ளலாம். கைகள் அல்ல. சிக்கல் வேறெங்கோ இருக்கிறது.

  ஊர் பெயர் போடாமல் இருந்தால் பிரச்சனையை இருக்காது என்பதால் தானோ என்னவோ அக்காலத்தி ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று கதை சொல்ல கற்றிருக்கிறார்கள்.

  Like

 6. மாதொருபாகன் நாவல் பற்றி பெருமாள் முருகனின் கூற்றுக்களை விமர்சானம் செய்ய தகுதி, ஆய்வு, கள-அனுபவம் உடையவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை வீடியோ ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இதைப்பார்க்கவும். முற்போக்கு மாபியாவின் கூச்சலில் உண்மை இறந்துவிடாது..

  http://www.karikkuruvi.com/2015_04_01_archive.html

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.