எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூலின் இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.
ஏழு வருஷத்துக்கு முன் சிலிகன் ஷெல்ஃப் இல்லை, ரசூலின் எந்தப் படைப்பையும் நான் இன்னும் படிக்காததால் இந்த அடக்குமுறை செய்தி “பெருமாள் முருகன் மாதிரி ஒரு சிறந்த எழுத்தாளரை இப்படி ஒழிக்கறாங்களே” மாதிரி உணர்வுகளை என்னுள் எழுப்பவில்லை, பெ. முருகனைப் பற்றி நீட்டி முழக்கி எழுதும்போது ரசூலின் பேரையும் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அந்த உண்மைகள் எல்லாம் ஒரு லெவலில் சப்பைக்கட்டுகளே. காலம் தாழ்ந்தாவது இந்த ஜமாத்தை எதிர்த்து என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
ரசூலின் குரல் கீழே.
பெருமாள் முருகனுக்காக பொங்கியவர்களின் மேலான கவனத்துக்கு…..
++++++++++++++++++++++++++++++++++++++++++++
2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காஃபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ணகடூரமாக வீசியது.
என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.
நான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர்.
எழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன?
இந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.
— எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல்
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள
இதைத் தான் நிதியமைப்புகளின் பின்புலம் என்று சொல்கிறேன். இதே ரசூல் ஏதுனும் ஓர் அமைப்புக்காக அந்தக் கட்டுரையை எழுதியிருந்தால், அவரின் நிலைமையே வேறாயிருக்கும். இன்று சல்மான் ருஷ்டி அளவுக்கில்லாவிட்டாலும் ஓரளவு புகழுடன் இருந்திருப்பார். நாமும் தொண்டை கிழிய அன்றே கத்தியிருப்போம்.
LikeLike